Wednesday, July 29, 2015

பேரதிர்ச்சி தந்த அப்துல் கலாம் அவர்கள் மறைவு . .


ஒரு சிலரின் மரணம்தான் பேரிடியாக மனதில் இறங்கும். அதற்கு காரணம், 
உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் நம் மனம் ஒன்றி விடுவதுதான்.  அப்படிப்பட்ட ஒரு நெருக்கமான உறவு எனக்கும் , அப்துல் கலாம் அவர்களுக்கும் - அக்னி சிறகுகள் - புத்தகம் வாயிலாக இருந்தது.  நானும் என் மனைவியும் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்த ஒரு நாள்  மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.  அன்று  இரவு உணவை தனியாக அமர்ந்துகொண்டு, அக்னி சிறகுகள் நூலை பொறுமையாக படித்துக்கொண்டே சாப்பிட்டேன். பழைய நினைவுகள் ஓடின.  கல்லூரி விடுதியில் (1999 - 2003) தங்கிப் படிக்கும்போது இதே புத்தகத்தை படித்திருந்தேன்.  பெரும்பாலும்  தொழில்நுட்ப விஷயங்களையே கலாம் விவரித்திருந்தார்.  Aerodynamics, Gas  dynamics  போன்ற வார்த்தைகள் பொறியியல் சம்பந்தப் பட்டவையாக இருந்தாலும், எனக்கு அதில் பெரிய ஆர்வமும், புரிதலும் இல்லாதால் மனதில் படியவில்லை. அப்துல் கலாமின்  வாழ்க்கை குறித்த தத்தவார்த்த சிந்தனை அப்போதே என் மனதை கவர்ந்தது. அப்புத்தகத்தில்  படித்த சில வார்த்தைகளை உந்துதலாக கொண்டு  June 13 -ம் தேதி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். ( See  http://lingeswaran-ise.blogspot.in/2015/06/blog-post.html )ஒரு மனிதன் இப்படித்தான் வாழ்ந்து மரிக்க வேண்டும் என்பதற்கு அப்துல் கலாம் அவர்கள் ஒரு மிகச்சிறந்த சான்று ஆவார்.  இதன் பொருள், எல்லோரும் தக்கி முக்கி முயன்று ஜனாதிபதி ஆகவேண்டும் என்பதல்ல.  கடுமையான உழைப்பு, ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை, சுயநலமின்மை, எளிமை, கடைசி மூச்சுவரை  கடமை ஆற்றிய வியத்தகு குணம் இவையே அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. மனிதனாகப்  பிறந்த ஒருவனுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்? கலாம் அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டிருந்தார். அது நாம் வணங்கும் கடவுளர் உருவங்களல்ல.  அழகான இந்த பூவுலகம்,  வாரி இறைத்தது  போன்ற கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நிரம்பிய இப் பிரபஞ்சம் இவற்றையெல்லாம் கட்டிக்காக்கும் சர்வவல்லமை பொருந்திய ஆண்டவனையே அவர் குறிப்பிடுகிறார்.  நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், திருப்புமுனைகளும் ஆண்டவனின் அருளாலேதான் நடக்கின்றன என அப்துல் கலாம் தீர்க்கமாக நம்பினார்.  இந்த உறுதியான நம்பிக்கையே ஒவ்வொரு  தோல்வியிலிருந்தும் அவரை மீண்டு எழும் ஆற்றலை அளித்தன எனலாம்.  மெய்ஞானமும், விஞ்ஞானமும் முரண்பட்டதல்ல என்று அக்னி சிறகுகள் நூலில் ஓரிடத்தில் சுட்டிகாடுகிறார்.  நிர்வாக அறிவும், தனிமனித உளவியலும் நன்கறிந்தவர்.  அக்னி சிறகுகள் புத்தகத்தில் ஓரிடத்தில் - மானஜ்மென்ட்  துறையில்  பிரபலமான தியரியான, Maslow theory of needs - ஐ குறிப்பிடுகிறார்.  நான் அப்துல் கலாம்  அவர்களை நிச்சயம் ஒரு சிறந்த தலைவர் ( Leader ) என்றே கூறுவேன்.  ஒரு சிறந்த தலைவருக்குரிய பண்புகளான ( Habits of Effective Leaders ) : - குழுவாக பணியாற்றும் திறன் ( Team Spirit ),  தன்னுடன் பணிபுரிபவர்களை ஊக்கப் படுத்தும் பண்பு ( Motivating the subordinates ), யாரிடம் எந்த வேலையை ஒப்படைத்தால் அவ்வேலை சிறப்பாக முடியுமோ - அவர்களிடம் ஒப்படைத்தல் ( Delegation of authority ),  புண்படுத்தாமல் நாசூக்காக வேலை வாங்குதல்( Getting things done tactfully ),  குறிக்கோளை நோக்கி பிசகாமல் செல்லுதல் ( MBO ),  Synergizing போன்ற தலைமைப் பண்புகளை ஒருங்கே பெற்றவர் அப்துல் கலாம் அவர்கள்.
"எனது தாத்தா , எனது தந்தை , அப்துல் கலாமாகிய  நான் இவர்களின் ரத்தம் என்னோடு முடிந்துவிடலாம். ஆனால் ஆண்டவனின் கருணைக்கு என்றுமே முடிவில்லை. அது சாஸ்வதமானது. "  என உருக்கமாக அக்னிசிறகுகள் நூலை அப்துல் கலாம்  முடிக்கிறார். வாராது வந்த மாமணியே! ஐயா!  இறைவன் எனும் எல்லையற்ற பெருங்கடலில் அமைதியாக இளைப்பாறுங்கள்.


ப.லிங்கேஸ்வரன். 


No comments:

Post a Comment

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...