Saturday, April 12, 2014

செய்த பாவங்களிலிருந்து தப்பிப்பது எப்படி. . . .


செய்த பாவங்களிலிருந்து ஒருக்காலும் தப்பிக்க முடியாது. ஆனால் பாவங்களினால் உண்டாகப் போகும் தாக்கத்தை ஒருவர் நினைத்தால் குறைத்துவிட முடியும். ஏன் பாவங்களே செய்யாமல் ஒருவரால் வாழ முடியும். அதற்குமுன் பாவச் செயல்களாக கருத்தப்படும் சில:

1.பொய் பேசுதல் 
2.பிறர் மனம் புண்படும்படி பேசுதல்
3.துரோகம் 
4.விபச்சாரம் 
5.பிறர் மனைவியை அடைய நினைத்தல் 
6.ஒழுக்ககேடான பாலியல் உறவுகள் 
7.கொலை, திருட்டு
8.அளவுக்கு மீறிய ஆசை 
9.சோம்பேறித்தனம் 
10.பொறாமை 
11.பிறர் துன்பத்தில் மகிழ்தல் 
12.பிறர் உழைப்பை சுரண்டி வாழ்தல் 
13.அளவுக்கு மீறிய செல்வம் 

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பாவம் என்பதற்கு பின்வருமாறு வரையறை கூறுகிறார். ' தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உள்ளத்திற்கோ - எண்ணம், சொல், செயல் இவற்றால் துன்பம் அளித்தால் அது பாவம்'. இதை கடைபிடிக்க முடியுமா என சிலர் சந்தேகப்படலாம். 


ஒரு மனிதன் சிந்திக்கிறான்; பேசுகிறான்; செயல்புரிகிறான். இவை எண்ணம், சொல், செயல் எனப்படுகிறது. ஒருவர் தன் மனத்தில் மோசமான எண்ணங்களையே உருவாக்கி பழகி வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அது யாருக்கு தெரியப் போகிறது வெறும் எண்ணம்தானே என்று நினைத்துக்கொள்வார். ஆனால் உண்மை அதுவல்ல. எந்த ஒரு எண்ணமும் உடலில் ஒருவித அதிர்வலைகளை உண்டாக்கி அதற்குரிய ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. இந்த ரசாயன மாற்றங்கள் உடல் செல்களில் (ஜீன்களில்) பதிந்து விடுகின்றன. முரணான இந்த எண்ணப் பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் உடல் நோயாகவோ, மன நோயாகவோ வெளிப்படலாம். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும், படித்திருந்தாலும் இயற்கையின் இந்த நியதியை தடுக்க முடியாது.மேலும் ஒருவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அவர் அறிந்தோ அறியாமலோ - அவரது எண்ணமானது பேச்சிலும் செயலிலும் பிரதிபலித்து விடுகிறது. இது தவிர்க்கவே இயலாத மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படிமுறையாகும். எனவே ஒருவரின் சிந்தனையின் தன்மைகேற்ப (அது நன்மையோ தீமையோ) - அது அவரின் சொல் மற்றும் செயலை குறிப்பிட்ட அளவு மாற்றி அமைத்து விடுகிறது.


ஒரு மனிதன் சமூகத்திற்குள்ளாகவே புழங்க வேண்டியிருப்பதால் - அவன் பேச்சை கேட்கும் செயலை கண்ணுறும் சமூகத்தினர் அதாவது அவனின் நண்பர்கள், உறவினர், குடும்பம் மற்றும் உடன்பணிபுரிபவர்கள் இவர்கள் மனத்தில் அக்குறிப்பிட்ட மனிதனைப்பற்றி ஒரு வலுவான அபிப்ராயம் உருவாகி விடுகிறது . தெளிவாக கூறினால், ஒரு மனிதன் தன்னுடைய சிந்தனை மற்றும் செயல்கள் மூலமாகவே தன்னைச் சுற்றி - தனக்கு ஸாதகமாகவோ பாதகமாகவோ ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுகிறான். ஒருவன் தன் மேலான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலமாக இணக்கமான சூழ்நிலையை சமூகத்தில் உருவாகியிருந்தால்  - வாழ்வில் மிக எளிதில் பிறர் ஒத்துழைப்புடன் உயர்ந்து விடுவான். மாறாக, கீழான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மோசமான சூழ்நிலையை உருவாக்கி அதன் தொடர்விளைவாக சமுதாயத்தில் முன்னேற முடியாத நிலையில் இடர்பாடுகளுடன் சிரமப்படுவான்.


ஆகையால் ஒரு மனிதன் தன்னுடைய எண்ணம், சொல், செயல் வாயிலாகவே தன்னுடைய விதியை உருவாகிக் கொள்கிறானேயன்றி, எங்கோ இருந்து கொண்டு கடவுள் அருள்பாலிக்கிறார் என்பதோ அல்லது நம் பாவக் கணக்கை சரிசெய்கிறார் என்பதோ இல்லை. இந்த தத்துவப் பின்னனியின் அடிப்படயிலேயே ஒருவ்ர் தன் வாழ்வின் நிலையையும், பாவ புண்ணியங்களையும் அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.

என்பது திருவள்ளுவர் வாக்கு.1 comment:

  1. அருமையான சிந்தனையை அழகாக வடிவமைத்துத் தந்த தம்பி லிங்கேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...