Thursday, August 1, 2013

Freudian Psychology - Conscious, Sub-conscious and Unconscious Mind.


உளவியல் பேரறிஞர் சிக்மண்ட் ப்ராய்ட் மனதின் செயல்பாடுகளையும், மனக் கோளாறுகளையும்(Psychological disorders) ஆராய்வதற்காக மனதை மூன்று பகுதிகளாக பிரித்தார். அவை பின்வருமாறு:


1. புறமனம் அல்லது வெளி மனம் (Conscious mind or peripheral mind)
2. நடுமனம் அல்லது வெளிமனம் (Sub-conscious or pre-conscious mind)
3. ஆழ்மனம் அல்லது அடிமனம் (Unconscious mind)

இதில் புறமனம் என்பது புலனுணர்வு செயல்களையும் (Sensory actions), புலன் உணர்வுகளையும் குறிக்கும். உதாரணமாக, சாப்பிடும்போது சுவை உணர்தல், கேள்விகளுக்கு பதில் கூறுதல், திரைப்படங்களை பார்த்தல் போன்றவை. புலன்கள் மூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபடுவதும், அதன் மூலமாக பல்வேறு உணர்வுகளையும்  அனுபவங்களையும் (Feelings and Experiences) பெறுவதும் பபுறமனத்தின் மூலமேயாகும். ஒரு மனிதன் கருத்துகளை (Concepts and Ideas)உருவாக்கி கொள்வது புறமனதில்தான்.


ஆழ்மனம் என்பது புலன் உணர்வு செயல்களில் பெறப்படும் அனுபவங்கள் பதிந்திருக்கும் இடமாகும். புற மனதில் உணரப்படும் அனைத்து அனுபங்களையும் (ஐம்புலன் அனுபவங்கள் : சுவை, ஒளி, ஒலி, ஊறு, வாசம்) ஒரு துளியளவு கூட விட்டு விடாமல் அனைத்தையும் இழுத்து சுருக்கி ஆழ்மனம் தன்னுள் வைத்துக்கொள்கிறது. தன்னுடைய மனமே ஆனாலும் ஆழ்மனதில் உள்ள அனுபவப்பதிவுகளை எவ்வளவு திறமைசாலியானாலும் ஒருவரால் நினைவுகூறவோ, கணிப்பதோ என்பது மிகக் கடினமான காரியமாகும். ப்ராய்ட் மனித ஆழ்மனதை " இருண்ட குகை" என வர்ணிக்கிறார். பிராய்டுக்கு முன்பு வாழ்ந்த தத்துவ-உளவியல் மேதைகள் புற மனதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த காலத்தில் - உண்மை அதுவல்ல என்றும், மனதில் ஒரு ரகசியபகுதி உண்டென்றும், அது மனிதனின் வாழ்கையை பெரும்பங்கு தீர்மானிக்கிறது என்றும் தன் ஆய்வுகள் வாயிலாக அழுத்தம் திருத்தமாக உலகிற்கு எடுத்துரைத்தார்.


நடுமனம் என்பது ஓரளவு முயற்சி செய்தால் நினைவு கூறத்தக்க எண்ணப்பதிவுகள் உள்ள இடமாகும். நடுமனம் என்பது ஆழ்மனதிற்கும், வெளிமனதிற்கும் இடையே ஒரு பாலம் போல அல்லது ஒரு தடுப்பு போல விளங்குகிறது. புற மனதிலிருந்து ஆழ்மனதிற்கு பயணிக்கும் எண்ணங்கள் (அனுபவங்கள்) நடுமனத்தில் சிறிது நின்றே செல்கின்றன. அதேபோல், ஆழ்மனதிலிருந்து கிளர்ந்து எழும் எண்ணங்கள் புறமனதிற்கு செல்லும் முன் நடுமனதால்  தடுக்கப்படுகின்றன. இன்னும் தெளிவாக கூறுமிடத்து, சிந்தனை செயல்பாடு (Thinking process) நடைபெறும் இடம் Sub-Conscious mind ஆகும்  அதாவது நடுமனமானது  
1. சமூக பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் .
2. எப்போதும் தன்னை கண்காணித்துக் கொண்டே இருக்கும் மனசாட்சி 
3. ஆழ்மனதிலிருந்து கிளர்ந்து எழும் தேவைகள்.
இவை மூன்றையும் அனுசரித்து செயல்பட வேண்டியிருக்கிறது.  இந்த உண்மை புறமனதிற்கும் அப்படியே பொருந்தும்.  புறமனமும் நடுமனமும் எப்போதும் ஒன்றையொன்று  சார்ந்தும் ஒட்டியும் (Interwoven and Dependant)  செயல்படுகின்றன. 


உளவியல் சரித்திரத்தில் சிக்மண்ட் ப்ராய்ட் மிகவும் போற்றதக்கவர் ஆவார். பணம் குறித்து சிறிது கூட பேராசை இல்லாமல் மனித குலத்தின் நன்மைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். மனிதகுலத்தை பற்றி அவருக்கு எப்போதும் கவலை இருந்தது. தன் கடைசி காலத்தில் ஒரு பக்கம் ஹிட்லரின் படைகளின் தொல்லை , இன்னொருபக்கம் வாயில் ஏற்பட்ட புற்றுநோய் இரண்டாலும் அவதிப்பட்டு வந்தார். ப்ராய்ட் தன்னுடைய ஆய்வுகளில் மிகத் தெளிவாக (Accuracy in the purpose of research)  இருந்தார்.  மூன்று கோணங்களில் எப்போதும் ஆராய்ச்சி செய்து வந்தார். 
1.  தன் சொந்த அனுபவங்களை,  கனவுகளை ஆராய்வது.  குழந்தைப் பருவத்திலிருந்து திரண்டு உருக்கொண்ட தன் அனுபவங்களை எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுவு நிலையோடு ஆராய்வது.
2. தன்னை நாடி வந்த நோயாளிகளை ஆழ்ந்து ஆராய்வது.
3. சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, கட்டுப்பாடுகள் மற்றும் சமுதாயம் உருவாக்கிய அறநெறிகள்.
இம்மூன்று கோணங்களிலும் அவர்கண்ட முடிவுகள் துல்லியமாகவும், உலகம் முழுக்க (Universal applicability)  பொருந்துவதாகவுமே அமைந்தது.


மனதை புற மனம், இடைமனம், ஆழ்மனம் என பிரித்து ஆராய்ந்து வந்த ப்ராய்ட் அவரால் நாளடைவில் மனதின் நோய்க்குறிகளையும் (Symptoms), மனக் கோளாறுகளையும் (Mental Disorders) புரிந்து கொள்ளவும், சரி செய்யவும் இக்கட்டமைப்பு போதவில்லையென உணர்ந்தார். மனம் தளராமல் தொடர்ந்த அவர், மனதின் மற்றுமொரு கட்டமைப்பை உலகின் முன் வைத்தார். அவை பின்வருமாறு:

1.  Id
2.  Super Ego
3.  Ego.

புற மனம்-ஆழ்மனம்-இடைமனம் என்ற கருத்துக்களோடு  Id, Super Ego, Ego என்பதையும் சேர்த்து (Integrated Understanding)  விளங்கி கொண்டால்தான் மனம், மனநோய்கள், நோய்க்குறிகள், அவற்றின் காரணங்கள் இவற்றை சரியாக கண்டறிய முடியும் என்று எடுத்துரைத்தார். அவற்றை அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.

ப. லிங்கேஸ்வரன் 

1 comment:

  1. சிறப்பான பதிவு.அடுத்த பதிவையும் தொடர்ந்து இடவும்.வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete

நமது மண்டையை அலசும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள்....

மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை விமானத்திலுள்ள  Black Box  போன்று கருதுகிறார்கள். மூளையானது பலகோடி நியூரான் எனப்பட...