Thursday, March 28, 2013

கமல்ஹாசன் - நல்லவரா கெட்டவரா?


சார்...கமலை பார்த்தாலே  எனக்கு அருவருப்பாக இருக்கிறது என்றார் எனது மாணவி (உமா) ஒருவர். இந்த வாக்கியம் எனக்கு பெரிதாக அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனெனில், என் அத்தை மகள் ஒருமுறை கமலை ஒரு பொறுக்கி  என்றார்.  கமல் ஒரு பொறுக்கி என்பதாலே நதியா , விக்ரம் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். எனக்கு சிரிப்புதான் வந்தது.  இந்த கருத்துகளெல்லாம் மிக மேலோட்டாமானவை என்பதே அதற்கு காரணம்.பெரும்பாலான ஆண்களை போலவே கமலுக்கும் இளம்வயதில் ஸ்திரீ இச்சை அதிகமாக இருந்திருக்க கூடும்.  நான் இருபது வயதில் பெண்களை நோக்கிய மனநிலைக்கும், முப்பது வயதில் பெண்களை நோக்குவதற்கும் நிறையவே வேறுபாடு தெரிகிறது. 


கமலும் வயது கூடக்கூட அந்தந்த வயதிற்கே உரிய பக்குவத்துடனே செயல்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.  திருமண வாழ்க்கையில்  மனக்கசப்புகள், தவறான புரிதல்கள், பிறர் விளைவிக்கும் குழப்பங்கள் போன்றவை எல்லோருக்கும் பொதுவானவைதான்.  கமல்ஹாசனும் மனிதன்தானே?


கமலின் அவ்வை ஷன்முகியிலிருந்து  கவனித்தீர்களேயானால், ஒவ்வொரு படத்திலும், மனைவியை அல்லது காதலியை பிரிந்த ஏக்கம் ஒரு பாடலாக வெளிப்படும். அதை அவரே எழுதியிருப்பார்.  ஒரு படைப்பாளியின் மனதில் புதைந்து கிடக்கும் ஆசை, ஏக்கம், அனுபவங்கள் இவையே  படைப்புகளாக வடிவம் பெறுகின்றன.

காமப் பெருங்கடலில் 
சிக்கி 
தக்கை போலான 
உடம்பு 
போன போக்கில் 
மிதந்து செல்கிறது...!

இக்கவிதையை திருமணமான ஒருவரால் எழுத முடியுமா ?


உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல...... ( கமல், விருமாண்டி )

எவ்வளவு எளிமையான, வலிமையான வரிகள். ஒரு படைப்பாளி தன்  வலியை , நிராசையை படைப்பாக்கம் செய்யும்போது பார்வையாளனின் மனதில் நீங்காத தாக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது.  இயக்குனர்கள் பாலா, பாலு மகேந்திரா, சேரன்  போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.


இன்று விக்ரம், சூர்யா முதல் பல விசிலடிச்சான் குஞ்சுகள் வரை கமலின் இடத்தை பிடிக்க துடியாய் துடிக்கிறார்கள். மொட்டை அடித்தல், ஜட்டியுடன் ஓடுதல் என பலபல ஜாலவித்தைகளை செய்கிறார்கள்.  இந்திய நடிகர்களிலேயே கமல் தனியிடம் பெற்றிருக்க 
ஒரு முக்கிய காரணம் உண்டு.  கமலின் சமூக ஆர்வமும், சமூக அவலங்களை குறித்த அவரது கடும்கோபமும் தான் அவை.  கமலின் வசனத்தில், பாடல் வரிகளில் நீங்கள் அதை தெளிவாக கவனிக்கலாம்.  கமல் கடவுள்களை எதிர்க்க காரணம்,  மதத்தின் பெயரால் மனிதர்கள் மனிதர்களையே இழிவுபடுத்துவதுதான்.


கமல் பலதுறை அறிவை பெற்றவர். நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து சிந்திப்பவர். சமூகத்தை, உலகத்தை பற்றி சிந்திப்பவர் மட்டுமே பல்துறை அறிவை பெறமுடியும். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், மனோதத்துவம், அறிவியல், டெக்னாலாஜி, கம்யுனிச கோட்பாடுகள் என கணிசமான சகலதுறை அறிவை கமல் பெற்றுள்ளார்.  இந்த காரணங்களே கமலின் ஆளுமையில் தெரிந்தோ தெரியாமலோ ஊடுருவி - அபாரமான நடிப்பை  வெளிப்படுத்த செய்கிறது.


கமலின் தமிழ்ப்பற்று யாரும் அவ்வளவாக கவனியாதது. மன்மதன் அம்புவில், கமல் ஒரு காட்சியில் தமிழ் எங்காவது தெருப் பொறுக்கும் என்பார். அவ்வளவுதான் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது தமிழ் ஆர்வலர்களுக்கு.  இதில் என்ன ஐயா தவறு இருக்கிறது?  தமிழ் தெருவில் அல்லாடிக்கொண்டு தானே இருக்கிறது.  கமல் ஒருவர்தான் தமிழ் படங்களில் ஐயா என்ற வார்த்தையை நாகூசாமல் உபயோகிப்பவர்.  தசாவதாரத்தில் 
விஞ்ஞானி கமலுக்கும், விசாரணை அதிகாரியாக வரும் கமலுக்கும் நடக்கும் உரையாடலை ஒரு தமிழ் பற்றாளர் கவனிக்கலாம். கமல் தனது பேட்டிகளில் இடக்கரடக்கல் என்ற வார்த்தையை சாதாரணமாக பயன்படுத்துவார்.  கமலின் மணிப்பிரவாள நடை மிக அலாதியானது  (புத்திர பாக்கியம், விஸ்வரூபம்).


கமல் ஆங்கிலத்திலும் சளைத்தவர் அல்ல.  அடர்த்தியான சொற்களை  பயன்படுத்தி, உயர்தரமான ஆங்கிலத்தில்  சரளமாக பேசக்கூடியவர். Youtube - ல்  கமல்  .IIT, Bombay- ல்  பேசிய ஒரு ஆங்கில உரை காணக்கிடைக்கிறது.  அமெரிக்க ஆங்கிலத்தில் பேசி சிரிக்கவே வைக்கிறார்.  Basically, I love people என ஒரு பேட்டியில் கூறுகிறார்.  அந்த வாக்கியமே கமலின் உச்சரிப்பில்    (Classical Utterance)  அழகு பெறுகிறது.  தெலுங்கு சானல்களில் அவர் பேசும் படு லோக்கல் ஆங்கிலம் கமலின் இன்னொரு முகம்.


கமலின் படங்களை நன்றாக கவனித்தால், பெரும்பாலும் பாலியல் தொழிலாளிகள், கணவனை இழந்த விதவைகள்/கணவனை பிரிந்த பெண்கள்  இவர்களை திருமணம் செய்துகொள்வார். கமல் வாய்ச்சொல் வீரர் அல்ல.  இதை அவரது நிஜ வாழ்விலும் செய்து காட்டியவர். தன்னுடைய மகள்களின்  சான்றிதழ்களில் ஜாதி மதம் என்ற இடத்தில் எதையும்  நிரப்பாமல் விட்டுவிட்டாராம்.


கமல் தெய்வ நம்பிக்கை அற்றவர்.  ஆனால் மனிதர்களை நேசிப்பவர். ஆழ்ந்து சிந்தித்தால், தெய்வம் இல்லை என்று சொல்லுவதே - மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதன் மறுதலையே ஆகும்.  கமல் சாதி மதம் மொழி துவேஷ எல்லைகளை தாண்டி சிந்திக்க முயல்கிறார். அதற்கு அவருக்கு கிடைத்த  ஒரே வழி சினிமா தான்.


திரைப்படங்களில் கமலின் வசனகர்த்தா பங்களிப்புதான் மிக முக்கியமானது ஆகும். கமலின் வசனங்களில் அவரது தனிப்பட்ட அனுபவங்களும், சமூக பொதுநோக்கும், உலக நடப்பை கூர்ந்து கவனிக்கும் திறனும் இவை மூன்றும் கலந்தே வெளிப்படுகிறது. கமலின் சிந்தனை ஒவ்வொரு படத்திற்கொருக்க  முதிர்ந்து  கொண்டே வருகிறது. அந்தந்த சூழ்நிலைகளில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை அலசியே தன்  வசனங்களை உதிர்க்கிறார். கமல் ஒரு  சிறந்த சிந்தனையாளர் எனபதற்கு அவரது வசனங்களே சிறந்த சான்றுகளாகும்.  காலக்கிரமத்தில், கமலின்  எண்ணங்கள் பண்பட்டு கொண்டே வருகின்றன.  கீழ்காணும் வசனங்களையும் அவை கால ஓட்டத்தில் பெற்ற மாறுதல்களையும் உற்று கவனியுங்கள்.

குருதிப்புனல் 
                              வீரம்னா என்ன தெரியுமா?   பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது..

மன்மதன் அம்பு 
                               வீரத்தோட மறுபக்கமே மன்னிப்புதான்;  வீரத்தோட உச்ச கட்டம் என்ன தெரியுமா?  அகிம்சை.

விருமாண்டி 
                               மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்;  மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.

மும்பை எக்ஸ்பிரஸ்.
                                சாவுக்கு பயப்படுறவன் கோழை.

தசாவதாரம் 
                                எப்படியும் அதான (சாவு)  நடக்க போகுது...

இதுபோல நிறைய படங்கள்  உள்ளன. இவை சாம்பிள்தான்.


கமலின் பிறந்த தேதி கூட்டுத் தொகை  ஏழாம் தேதியாகும். ஏழில் பிறந்தவர்கள் கேது கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்.  இவர்களுக்கு உலகப்பற்று அவ்வளவாக இருக்காது.  எதற்கும் பேராசைபடாமல்  அப்போதைய  நிலைமைக்கேற்ப  திட்டமிட்டு வாழ்பவர்கள்.  கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்  ஆனால் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள். மரணத்திற்கு அஞ்சாதவர்கள்.  என் அப்பாவும் கூட்டுத்தொகை ஏழில் பிறந்தவர்.


தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி, தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளும் பண்பு, தோல்விகண்டு துவளாமை இவற்றிற்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்பவர்  கமல்.


உலகநாயகன் கமல் என்ற பட்டம் சில  அறிவுஜீவிகளால் பரிகசிக்கப்படுகிறது.  என்னைப் பொறுத்தவரை,  தான் தனது எனும் சுயநலத்தை ஒழித்து உலகத்தை பற்றி சிந்திக்கும் எவரும் உலகநாயகன் தான்.


28/03/2013, 
திண்டுக்கல்.

2 comments:

  1. superb linges. no such comparable master in any field in the contemporary period. some one can do even Phd for the content of the dialogues in his movies which are all multilayered now a days

    ReplyDelete
  2. சார் இன்னொரு வசனத்த விட்டுடிங்க.

    " பொய் எப்பவுமே தனியா வராது, கூட்டமாதா வரும்"

    ReplyDelete

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...