Monday, August 20, 2012

விண்ணை தாண்டி வருவாயா...


அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.  என் அம்மாவும், சிறிய தாயாரும் என்னை ஒரு திரைப்படத்திற்கு அழைத்து சென்றார்கள். சிறுவயதில் என் சிறிய தாயாரின் செல்லப்பிள்ளையாகவே நான் வளர்ந்தேன். அந்த திரைப்படத்தில் புதிதாக ஒரு ஹீரோயின் அறிமுகமாகுவதாகவும், அவள் அவ்வளவு அழகு என்றும் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். படம் துவங்கி சில மணித்துளிகளில் அந்த இளம் நாயகி திரையில் தரிசனம் தந்தாள். கழுத்தில் ராதிகா என்று பொறித்த ஒரு செயின் தொங்கியது. வெள்ளை வெளேரென தங்கச்சிலை போல இருந்தாள். இத்தனை அழகா என வியந்தேன் நான்.(வயது 10 !). படத்தின் பெயர் வருஷம் 16. ஹீரோயின் குஷ்பூ.


சிறுவயதில் கதை புரியவில்லை. ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மீண்டும் தெளிவாக அந்த படத்தை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. பொறுக்க முடியாமல் என் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு போன் போட்டு..."என்னோட வாழ்க்கைல நடந்தத எல்லாம் பாசில் படமா எடுத்திருக்கிராருடா...." என்றேன். (டென்ஷனான என் நண்பர்) சில நொடிகள் மௌனம் காத்து பிறகு, "டேய்...நல்லா யோசிச்சு பாரு...உன்னோட சம்பவங்கள பாசில் படமா எடுத்ருக்றாரா, இல்ல நெறைய குடும்பங்கள பொதுவா நடக்றத எடுத்ருக்றாரா..."  என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு உறைத்தது.


வருஷம் பதினாறு ஒரு காதல் கதையல்ல. அனேக கூட்டு குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இந்தப்படம். ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சம்பிரதாய சென்டிமென்ட் குழப்பத்திற்கிடையில் ஊடாடும் ஒரு அற்புதமான காதலும், முடிவில் காதல் என்னவாயிற்று என்பதுவுமே கதை. கார்த்திக்-குஷ்பூ காதல் காட்சிகளில் இளையாராஜாவின் பின்னணி இசை ஆன்மாவை மீட்டுகிறது. படத்தின் நாயகன் கார்த்திக் படம் முழுக்க குஷ்பூவை கிண்டல் செய்து கொண்டும், சீண்டிக்கொண்டும் இருப்பார். குஷ்பு அதை மறுக்கவும் மாட்டாமல், சரி என்று சொல்லாமலும் மையமாக வெட்கப்பட்டு, போலிக்கோபம் கொண்டும் ஓடிக்கொண்டே இருப்பார். இதை சாதகமாக எடுத்துக்கொள்ளும்  கார்த்திக் ஒரு கட்டத்தில் குஷ்பூ குளிக்கும்போது முன்னதாக சென்று குளியலைறையில் ஒளிந்து கொள்வார். அப்போதும் குஷ்பூ அவரை காட்டிக்கொடுக்காமல் தப்பிக்கவைக்க முயல்வார். ஆனால் அதற்குள் கார்த்திக் உறவினர்களிடம் வசமாக மாட்டிகொண்டு பெரிய பஞ்சாயத்தாகிவிடும். குடும்பத்தில் பெரிய மனக்கசப்பு வந்துவிடும். அதன் பிறகே, கார்த்திக்-குஷ்பூ காதல் பூக்க துவங்கும். படம் முழுக்க குஷ்பூ கார்த்திக்கை கண்ணத்தான், கண்ணத்தான் (கண்ணன் அத்தான்) என் விளித்துக்கொண்டே இருப்பார். கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.


வருஷம் பதினாறு படத்தில் வரும் சம்பவங்களுக்கும், என் வாழ்க்கைக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருந்தன. என் அத்தை மகள் என்னை மாமா,மாமா என வாய் நிறைய கூப்பிடுவாள். என்னை மாமா என் அழகாக அழைத்த முதல் பெண் அவள்தான். வெட்கப்படும்போது அவளைப்போல அழகி கிடையாது. வெட்கத்துடன் மையமாக தலையாட்டிக்கொண்டே இருப்பாள். எவ்வளவு சீண்டினாலும் பொறுத்துக் கொள்வாள். வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ இரண்டும் அவள் சொன்னதில்லை. இந்நிலைமையில் ஒருநாள் ,விதி எங்கள் இருவரின் அத்தியாத்திற்கு முற்றிப்புள்ளி வைத்தது. குளியலறையில் போய் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு துணிச்சல் வரவில்லை. அதைவிட, சற்றே குறைவான ஒரு தப்பு காரியம் செய்துவிட்டேன். அவ்வளவுதான், சோலி முடிந்தது. உறவினர்கள் மொத்தமாக சேர்ந்து அம்மிவிட்டார்கள். ஒரு மரோ சரித்ரா தடுக்கப்பட்டது.


கார்த்திக் எனக்கு பிடித்தமான நடிகர். குண்டாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் அளவான உடல்வாகு உடையவர். துறுதுறுவென நடிப்பார். என்னுடைய உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லையே  என்ற மனக்குறை எனக்கு எப்போதும் உண்டு. சிறிது எடை கூடினாலும் மன அழுத்தம் அதிகமாகும்போது எடை மீண்டும் குறைந்துவிடுகிறது. என் நண்பரின் தாயார் ஒருவர், " உனக்கு நல்ல அழகான முகவெட்டு இருக்குப்பா....ஐந்தாறு கிலோ எடை கூடினால் நீ அழகான பையனாகிவிடுவாய்" என்பார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் வெளிவந்தது. அதுவரை பலபடங்களில் விரலை ஆட்டி மொன்னை பிளேடு போட்டுக்கொண்டிருந்த  சிம்பு அந்த  படத்தில் தன்னுடைய ஸ்மார்ட்டான நடிப்பை வெளிப்படுத்தினார். அதில் சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் கார்த்திக் என்பது பலருக்கு நினைவிருக்கலாம். ஹீரோயின் பெயர் சொல்லவே தேவையில்லை. ஸ்மார்ட்டாக இருப்பதற்கும், கார்த்திக் என்ற பெயருக்கும் ஏதோ பந்தம் உள்ளது போல. எல்லாம் சரி...விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கும், உன் வாழ்க்கை சம்பவங்களுக்கும் ஏதும் தொடர்புள்ளதா என யாரும் என்னை கேட்டு விடாதீர்கள். 

ஆகஸ்ட் 20, 2012.
திண்டுக்கல்.

1 comment:

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...