Thursday, February 2, 2012

என்ன வாழ்க்கை இது?

மனிதனாக வாழும் வாழ்கையில் ஒருசில இன்பங்கள் உண்டென்றாலும், ஊன்றி ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கை பெரும்பாலும் துன்பங்களும், துயரங்களும், போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. மனித வாழ்கையே தண்டனை போலத்தான் உள்ளது.  உலகம் ஒரு சிறை.  அதிலும் இந்திய போன்ற நாடுகளில் பிறப்பது சத்தியமாக ஒரு சாபம்தான். எங்கேயாவது ஒரு ஆறுதல் உண்டா? ஏதோ ஒரு இருபது வயது வரை கஷ்டங்கள் தெரிவதில்லை. அதன்பிறகு ஆட்டம் துவங்குகிறது. ஒரு இன்ஜினீரிங் மாணவன் வேலை பெறுவதற்கோ, மேலே படிப்பதற்கோ ஜீவ-மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஒரு மருத்துவ மாணவர் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு முப்பது வயதுக்கு மேல் ஆகி விடுகிறது. அதாவது பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது.  மருத்துவமனையிலாவது ஆறுதலாக பேசுகிறார்களா என்றால், பதில் எல்லோருக்கும் தெரியும். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலே அடிவயிற்றை கலக்குகிறது. மூச்சு பிடிக்கிறது. சித்த வைத்தியத்திலும் போலி ஆசாமிகள் நுழைந்து  ஒழித்து விட்டார்கள். சித்தர்கள் என்று கூறுவதற்கே கூச்சமாக இருக்கிறது. லேகியம் என்றாலே ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.  தமிழில் பேசினால் நாயைப் பார்ப்பது போல் பார்கிறார்கள். தூய தமிழில் பேசினால் சொறி நாயை பார்ப்பது போல பார்கிறார்கள். ஆங்கிலத்தில் நாலெழுத்து கெட்ட வார்த்தையில் திட்டினால் கூட பவ்யமாக உபசரிக்கிறார்கள். இளைஞர்கள் காட்டுத்தனமாக பைக் ஓட்டுகிறார்கள். நிறுத்தி மொகரையில் அறைய வேண்டும் போலிருக்கிறது. அடிபட்டு எலும்பு முறிந்தால் அப்படியே அள்ளிக்கொண்டு பொய் ஆர்த்தோ ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். டாக்டர் கம்பியோ, பிளேட்டோ வைத்து நொறுங்கிய எலும்புகளை இணைத்து விடுகிறார். இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிக் கொள்ளலாம்.  இன்றைய இளம்பெண்கள் மிகவும் அழகாகி விட்டார்கள். அதாவது அப்படி நினைத்து கொள்கிறார்கள். அடிக்கடி வெளியே தலைகாட்டினால், கற்பை சூறையாடி விடுவார்களாகையால், வீட்டுக்குளேயே செல்போனுடன் பதுங்கி விடுகிறார்கள். செல்போனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருக்கும் தெரியாது அல்லவா?   காதல் என்பது பயன்படுத்தவே கூடாத வார்த்தை. ஒழுக்க மீறலாம்.   1991 உலகமயமாக்கலுக்கு  பிறகு மனிதர்களின் குனாதியசங்களில் ஏக மாற்றங்கள். சரி, சங்கீதம் கேட்டாவது  மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால் , அதன் நிலையோ பரிதாபம். தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே டியுனில் எல்லா படத்திலும் எல்லா பாடல்களையும் போடுகிறார். யுவன் ஷங்கர் ராஜா  தனது தந்தை இளையராஜா  கீழே தவற விட்டதை எடுத்து இடையிடையே ஒயே ஒயே என்று கத்துகிறார்.  விஜய் ஆண்டனி இரண்டே இரண்டு டியுன்கள் தான்.  ஹாரிஸ் ஜெயராஜ் பரவாயில்லை. ஐந்து டியுன்கள் வைத்திருக்கிறார். எல்லா படத்திற்கும் அவையேதான். ஏ.ஆர்.ரகுமான் இசையே உலக இசை. அதாவது உலகத்திலுள்ள  அத்தனைவித இசையையும் ஒரு சாப்டவேருக்குள் உள்ளிட்டு வெளியே எடுக்கும்போது அற்புதமான இசையாக வெளிவருகிறது. யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. அவ்வளவு நேர்த்தியாக கலக்குகிறார் போலும். தப்பி தவறி திருக்குறள் ஒன்று கூறினால் பைத்தியக்காரன் என்றே நினைத்து விடுகிறார்கள். ஆர்.டி.ஒ. ஆபிசில் கலெக்டர் தோரணையில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார், பார்த்தால் சாதாரண பிரேக் இன்ஸ்பெக்டர் ஆம்.  டிராபிக்  போலிஸ்கள்  கடுமையான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல், வேடிக்கை பார்த்துகொண்டே அழகான பைக்குகளில் நகர்வலம் வருகிறார்கள்.  சாலைகளும்  
பொந்துகளாக இருக்கின்றன. பொந்துகளிலும் குழிகளிலும் வண்டி ஒட்டி ஒட்டி கை கால்கள் நோகின்றன. டாக்டர் வலி நிவாரணி தருகிறார்.  தமிழகமெங்கும்  டாடா சுமோக்களில் மாமிச மலைகள் உலா வருகின்றன. அவர்களின் வீடுகளை  நடுநிசியில் முகம் நிறைய பவுடர் பூசிய பைங்கிளிகள் ஸ்கூட்டிகளில் வட்டமடிக்கின்றன. அர்த்தராத்திரி முழுக்க ஒரே அல்லோகலம்தான். அரசாங்கமும் வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுகிறது. ஒரே கையெழுத்தில் ஓராயிரம் பேரின் தலைஎழுத்து மாறுகிறது. தரையில் படுத்து கையை காலை ஆட்டி ஆட்டி அழுதாலும் பயனில்லை. இந்திய ஒரு பிச்சைக்கார நாடு (யாரும் கோபப்படாதீர்கள்).  அரசாங்க விதிகளை உற்று நோக்குங்கள். ஜனநாயகமா இது? படிக்காத ஒரு தொழிலாளி என்ன செய்வான்?  கஞ்சிக்கே வழியில்லாத நாட்டில்  சட்டதிட்டங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை. அந்நிய முதலீடு ஐந்பத்தியொரு சதவீதமாம். எல்லாம் மக்கள் நலனுக்காம். நல்ல நியாயம் ஐயா? அரசியல்வாதிகள் கோடிகளில் புரள்கிறார்கள். நான் பார்ப்பது தெருக்கொடி தான்.  யாரு ஐயா இலவசம் கேட்டது?  யாரிடமும் கையேந்தாமல்  மானத்துடன் பிழைக்க வேலைதானே வேண்டும்?  நிலத்தை கூறு கூறாக விலைக்கு விற்கிறார்கள். காம்பியரிங் பெண்கள். கட்டக் கடைசியில், சேர்த்த பணத்தையெல்லாம்  கிட்னியை மாற்றுவதற்கும், இதய ஆபரேஷனுக்கும் செலவழித்து சுடுகாட்டில் சாம்பலாகி விடுகிறார்கள்.  யார் நண்பர் யார் விரோதி என்றே தெரியவில்லை. எல்லோருமே நல்லவர்கள் போலவே பேசுகிறார்கள். யாரிடமும் நம்பி மனம் விட்டு பேச முடிவதில்லை. போட்டு குடுக்கிறார்கள். இல்லை பரப்பி விடுகிறார்கள்.  தத்துவஞானிகள் உலகமே ஒரு மாயை என்கிறார்கள். பரம்பொருள் மட்டுமே உண்மை என்கிறார்கள்.  நாமா பிறந்தோம்? நாமா சாகிறோம்? ஏன்   கடவுள் சும்மா இருக்க கூடாதா? நாம் என்ன அவரது விளையாட்டு பொருட்களா?   ஐந்து புலன்களை அடக்கி, அறிவை அறிந்தால் பேரின்ப வாழ்வையும் பேரமைதியையும் அடையலாம் என்கிறார்கள். முடியுமா?  கஷ்ட காலம். வாழ்க்கை வரமா? சாபமா?  அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.

1 comment:

  1. உண்மையை அதிகம் பேசாதீர்.. அது நல்லதுக்கு அல்ல..
    பேச வேண்டும் என்றால் இந்திய எல்லைக்கு அப்பால் பேசுங்கள்..

    ReplyDelete

நமது மண்டையை அலசும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள்....

மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை விமானத்திலுள்ள  Black Box  போன்று கருதுகிறார்கள். மூளையானது பலகோடி நியூரான் எனப்பட...