Wednesday, February 22, 2012

மேகமாய் தவழ்ந்து...



வானம் போல் சூழ்ந்து நின்றாய்..
மேகமாய் தவழ்ந்து வந்தாய்..
குளிர்ந்த மழையாக நெஞ்சில் இறங்கினாய்..
தொட  தொட விலகி,
கானல் நீராக மறைந்து போனாய்...!

லிங்கேஸ்வரன், 


Tuesday, February 21, 2012

ஜப்பானிய ஐந்து விதிகள்...



கடுமையான உழைப்புக்கு பெயர்போன ஜப்பானியர்கள், எந்த ஒரு காரியத்தையும்  நேர்த்தியாக செய்யவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி தடங்கலின்றி விரைவாக நடக்கவும், உற்பத்தி திறனை (Productivity) பெருக்கவும்  எளிமையான ஐந்து விதிகளை வகுத்து வைத்திருக்கிறார்கள்.  உலகெங்கும் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு  பெரிய பெரிய கம்பெனிகள் முதல் சிறுதொழிற்சாலைகள் வரை இவை  Japanese 5 s Principle என்ற பெயரில் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த ஆலைகளிலே அதிகம் பின்பற்றப்படுகிறது. இந்திய திருநாட்டில் தேனி என்ற ஊருக்கருகில் உள்ள ஒரு சிறு இரும்பாலையில் கூட நீங்கள்  5 s principle என்ற போர்டை காணலாம்.  எளிமையான அந்த ஐந்து விதிகளை அலுவலகத்திலும், வீட்டிலும் கூட நாம் அமுல்படுத்தலாம். அவை:

1. தேவையற்றவைகளை அகற்றினேன் (Seiri). 
2. தேவையானவைகளை சீரமைத்தேன் (Seiton).
3. தினமும் சுத்தம் செய்கிறேன் (Seiso).
4. விதிமுறைகளை  கடைபிடிக்கிறேன் - மேற்கண்ட மூன்று மற்றும் இன்னபிற (Seiketsu).
5. பயிற்சியுடன் தொடர் முன்னேற்றத்தை காண்கிறேன் (Shitsuke).


தமிழர்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு.   கையில் தங்கத்தை வைத்துக்கொண்டு வெள்ளிக்காக அலையும் மனோபாவம்தான் அது.   என்ன.....தங்கம் பொடியாக இருக்கிறது.  சற்றே சிரமப்பட்டால், ஆபரணமாக அணிந்து அழகு பார்க்கலாம். முடியாத காரியமா?  மேற்கண்ட  ஜப்பானிய விதிகள் ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பல்ல. சாதாரணமாக சிந்தித்தால் பொது அறிவுக்கு எட்டக் கூடியதுதான். நாம் கொஞ்சம் முந்திக்கொண்டிருந்தால்  Tamilian 5 s principle  என்றாயிருக்கும்.  திருக்குறள் என்றாலே ஸ்ஸப்பா என்கிறார்கள்.  மணிமேகலையில்  Evolution of universe -ஐ பற்றி பத்து வரிகளில் (கடைசி அத்தியாயங்களில்)ஒரு குறிப்பு உள்ளது.  MBA -ல் கற்றுக்கொடுக்கப்படும்  .Halo effect.-ஐ  ' உருவு கண்டு எள்ளாமை வேண்டும்'  என்ற குறளிலும்,  Delegation of authority- ஐ  ' இதனை இதனால் இவன்முடிக்கும் '  என்ற குறளிலும் வள்ளுவர் எழுதி வைத்திருப்பது, ஆங்கிலத்தை மட்டும் சிலாகிக்கும்  .sms  தமிழர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Sunday, February 19, 2012

காதலில் சொதப்புவது எப்படி...




காதல் என்பதற்கு பல வரையறைகள் வைத்திருக்கிறார்கள். ஹார்மோன்களின் கலவரம், அன்பின் வெளிப்பாடு, ஆதியுணர்வு என் ஒவ்வொருவரும் ஒருவாறு விளக்குகிறார்கள். சிலர் காதல் என்றே ஒன்று இல்லை என அரிவாளைப் போடுகிறார்கள்.  ஒரு மெகா சைஸ் யானையை ஒருபக்கமாக தொட்டு விளங்கிக்கொள்வது மாதிரி  ஒவ்வொருவர் கூறுவதிலும் உண்மையின் கீற்று இருக்கவே செய்கிறது. அவற்றுள் சிக்மன்ட் பிராய்ட் சொன்னதே உண்மைக்கு அண்மையில் வருகிறது. ' காதல் என்பது சுயநலத்தின் வெளிப்பாடு, சுயநலமே காதலில் முதன்மையானது...' என பிராய்ட் சொன்னதை சற்று Extrapolation  செய்தால் காதலின் வரையறை முழுமை பெற்றுவிடும். ஒருவரின் சுயநலம் பூர்த்தியாவதில் இன்னொருவரின் சுயநலம் பூர்த்தியாவது அடங்கியிருப்பதும், அந்த உறவில் இருவருக்கிடையேயான நம்பகத்தன்மையும், சங்கடங்களை புரிந்துகொண்டு சகித்துக்கொள்வதும், ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக காதல் எனும் இயற்கை வகுத்த அற்புத அமைப்பை யதார்த்தமாக புரிந்துகொள்வதும் - காதலுக்கான வரையறையை முழுமையும், புனிதமும் பெறச்செய்கிறது.


இந்த இடத்தில்தான் இன்றைய, மெல்லாமலேயே உணவை அவசரமாக விழுங்கும், இளைஞர்கள்/இளைஞிகள் வழுக்கிவிடுகிறார்கள் (நியாயம்: உணவு ருசிக்கு அல்ல, பசிக்கு).  படிப்பினால் பெற்ற விழிப்புணர்வும் முக்கியமாக பொருளாதார சுதந்திரமும் Exposure -ம், காலங்காலமாக அடங்கிக்கிடந்த பெண்களை, அசட்டு துணிச்சல் பெறச்செய்து, சப்பை காரணங்களுக்கெல்லாம், வக்கீல் நோட்டிஸ் வரை வந்துவிடுகிறார்கள். உடலில் ரத்தம் விறுவிறுவென ஓடும்போது என்ன கவுன்சிலிங் கொடுத்தாலும் கோர்ட்டுக்கு வெளியில் அடம்பிடிப்பார்கள். நாற்பது வயதுக்கு பிறகு  சாய்ந்துகொள்ள தோள் தேவைப்படுகையில் இருப்பது வெறித்துப் பார்க்க விட்டமும், விலையுர்ந்த சோபாவும்தான். கடைசியில் ஒரு குடிகாரன் கிடைப்பான், Hepatitis C இலவச இணைப்போடு. ஆண்களுக்கும் இது பொருந்தும்.


காதலில் சொதப்புவது எப்படி என்று ஒரு படமே எடுத்துவிட்டார்கள். படத்தில் ஒரு சூப்பர் சீன் (வளையோசை கலகல) வருகிறது.  இன்று எவர் காதலையாவது சொதப்ப நினைத்தால் அது மிக சுலபமான காரியம்.  ஒன்றும்  செய்ய தேவையில்லை, அவர்களை அப்படியே விட்டுவிட்டால் போதும்.  தாங்களாகவே உழட்டிக்கொண்டு காதல் பூட்ட கேஸாகிவிடும்.


காதல் என்பது ஒரு இயற்கை உபாதை. அதற்கு பலமட்டங்களில் சமூக-பொருளாதார சம்மதங்கள்  தேவைப்படுகிறது.  சங்க இலக்கியங்களில் ' களவு ஒழுக்கம்' என்றொரு வார்த்தை தென்படுகிறது.  இந்த வார்த்தை இன்று நாம் பேசும் காதலையே குறிக்கிறது என யூகிக்கிறேன். காதல் என்பதே ஒரு திருட்டுத்தனம்தான். அதில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.  மோப்பம் பிடிக்கலாம், இளநீர் குடிக்கலாம்(உதடு), உப்பு மூட்டை போகலாம் ஆனால் கடைசியில் பெற்றோர் ஒப்பந்தத்துடன் தாலி கட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் களவு ஒழுக்கம் என்கிறார்கள். இல்லையெனில் குளிரும் காயவேண்டும், நெருப்பும் சுடக்கூடாது என்ற கதையாகிவிடும்.


போன ஜென்மத்தில் (1999) நானும் ஒரு பெண்ணும் காதலித்தபோது எங்கள் காதல் சுர்க்கி கலவையால் கட்டப்பட்ட அணை மாதிரி படுகெட்டியாக இருந்தது. விரிசல் விழுகவே ஏழு வருடங்கள் ஆனது.  கல்லூரியில் நான் படிக்கையில் நானும் என்னுடைய ஜூனியர் ஒருத்தியும் நண்பர்களாக இருந்தோம். மற்ற பெண்களை போல் அண்ணா, தம்பி (பாதுகாப்பாம்) என்று ஜல்லியடிக்காமல் லிங்கேஸ் இங்க வாங்க போங்க என்று மென்மையாக கூப்பிடுவாள். சரியான சொதப்பல் பார்ட்டி. நான் அவளைவிட சொதப்புவேன்.  தமிழ் தேசிய தீவிரவாதம் என்றெல்லாம் சீரியசாக அவளிடம் பேசுவேன்.  கொஞ்சங்கூட டென்ஷனாகாமல் காமெடியாக எடுத்துக்கொள்வாள். இதில் விசேஷம் என்னவென்றால், இருவரும் ஒரே நேரத்தில் சொதப்பலாக எதையும் செய்ய மாட்டோம், பேச மாட்டோம் என்பதுதான். கடைசியாக  அவள் ஒன்று என்னிடம் எதிர்பார்த்தாள். பலவருடங்கள் கழித்து அந்த விஷயம் எனக்கு புரியவந்த பொழுது அவளுக்கு திருமணமாகி இருந்தது.....!





Friday, February 10, 2012

Inception - கனவு வேட்டை...







ஒரு வருடத்திற்கு முன்பு  Inception என்றொரு ஆங்கிலப் படம் வெளிவந்தது. உயிர்மை பத்திரிகையில் சாரு நிவேதிதா Inception- ஐ குடலாப்பரேஷன் பண்ணியிருந்தார். பயந்து போய் அதை படிக்கவே இல்லை. கடந்த புத்தாண்டு தினத்தில் HBO  சேனலில் அத்திரைப்படத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படம் முடியும்போது அசந்து, சோர்ந்து விட்டேன். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பொளந்து கட்டியிருக்கிறார். இன்செப்ஷன் திரைப்படம்  ஒரு குழப்பமான, சிக்கலான, ஆர்வத்தை தூண்டும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையாகும். திரைக்கதையை உருவாக்குவதற்கே நோலன் பல மாதங்கள் உழைத்திருக்கிறார். மூன்று தடவை பார்த்த பிறகுதான் கதை முழுதாக புரிந்தது ( அப்படித்தான் நினைக்கிறேன்).  ஆனால் முதன்முறையிலேயே படத்தின்  Bottom line  புரிந்துவிட்டது. ஓரளவு உளவியல் கற்றவர்களுக்கும், ஆன்மீக அறிவு பெற்றவர்களுக்கும் புரியக்கூடிய கதைதான். ஆதாரமாக பார்த்தால், இன்செப்ஷன் ஒரு Psychology based  மூவிதான்.  பார்வையாளர்களுக்கு ஒரு சவால் போன்றே இப்படம் தெரிகிறது. ஈர்ப்புடன் கூடிய சுவாரசியமான சவால்.






படத்தின் முழுக்கதையை இங்கு நான் கூறவில்லை. கதையை பற்றி சில குறிப்புகள் மட்டும் கொடுத்து விட்டு, அதோடு தொடர்புடைய  சில உளவியல் சங்கதிகளை மட்டும் எழுதி விட்டு விலகிக்கொள்கிறேன். படத்தின் கதாநாயகன் காப் (லியோ, டைட்டானிக்) ஒரு திருடன். இதயத்திருடன் அல்ல. உள்ளத் திருடன். ஒருவர் தூங்கும்போது  அவரது நடுமனதிற்குள் (Sub-conscious mind ) புகுந்து , அந்த தளத்தில் சம்பந்தப்பட்ட நபரோடு கனவுத்தோற்றங்களை உருவாக்கி, நிஜம்போலவே நம்ப வைத்து, அவரது மனதில் பதிந்துள்ள ரகசியங்களை கண்டறிந்து, பிறகு அப்படியே வெளியே வந்துவிடும் ஓர் அபூர்வ கலையில் வல்லவர்.  இக்கலையை காப் பாரீசில் ஒரு குருவிடமிருந்து கற்றுக்கொண்டு மேன்மேலும் தேர்ச்சி பெற்றுவிடுகிறார். இந்நிலையில் ஒரு பெரிய பிசினஸ் மேன்  காப்பிற்கு  மிகவும் ரிஸ்க்கான அசைன்மெண்டை தருகிறார். இழந்த தன்னுடைய குழந்தைகளை மீட்க காப் அதை ஏற்றுக்கொள்கிறார். அதாகப்பட்டதாவது ,  ஒருவரின் மனதில் அவருக்கே தெரியாமல் நுழைந்து குறிப்பிட்ட ஒரு எண்ணத்தை விதைத்துவிட (Inception) வேண்டும். அது சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒருவரின் உள்ளுணர்வு  ஒரு அயல் உணர்வை எளிதில் அடையாளம் கண்டு அதை தடுத்து நிறுத்த முயலும்.  எனவே உள்ளுணர்விற்கு டேக்கா கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு எண்ணத்தை சம்பந்தப்பட்ட நபரின் சொந்த எண்ணம் போலவே தோன்ற செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் விதைக்கப்பட்ட எண்ணம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து உடலையும் மனதையும் முற்றாக ஆக்ரமிக்கும். கடினமான இக்காரியத்தில் காப் சில கூட்டாளிகளுடன் (ஒரு சிறிய பெண்) இறங்குகிறான்.  துளி கூட கதையில் ஆபாசமில்லை. இதுதான் கதை என்று நான் சொன்னால் அது தவறு. படத்தை பொறுமையாக முழுமையாக பாருங்கள், புரியும். முதல் தடவை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உத்தமம்.






மனித மனதின் சில ' சாதாரண ரகசியங்களை ' இந்நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது இன்செப்ஷன் திரைப்படத்தை எளிதில் புரிந்து கொள்ள உதவும்.
ஒவ்வொரு மனிதனின் மனமும் பேராற்றல் வாய்ந்தது என நண்பர்கள் யாரிடமாவது கூறினால் கொட்டாவி விடுகிறார்கள். உண்மையில் மனித மனமானது  புனிதமான, களங்கமற்ற, எங்கும் ஊடுருவும் ஒரு பாய்மப் பொருளாகும். எந்த நேரத்திலும் எந்த வடிவத்தையும் எடுக்கக்கூடிய காந்த அலையே மனித மனமாகும். கண்ணாடியில் அழுக்கு சேருவதை போல, களங்கமான எண்ணங்களால் மனமானது தன் உண்மை தன்மையை தானே மறைத்துக்கொள்கிறது.



மனதின் வியத்தகு இயல்புகளில் ஒன்று கனவுகளாகும். ஒவ்வொருவரின் மனதிலும் உத்தேசமாக ஐந்து கோடி எண்ணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். மனதில் நல்ல எண்ணங்களும் இருக்கலாம், தீய எண்ணங்களும் இருக்கலாம். தீய எண்ணங்களை யாரும் வெளிக்காட்டுவதில்லை. இருந்த போதிலும் அனைத்து எண்ணங்களும் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நினைவுக்கு எட்டாத வகையில் சில எண்ணங்கள் ஆழ்மனதில் உறங்குகின்றன. எந்த வகையான எண்ணமாக இருந்தாலும் கனவுகள் அவற்றை விரித்துக் காட்டி விடுகின்றன. உளவியல் மேதை சிக்மாண்டு பிராய்ட், ' கனவுகள் ஆழ்மனதிற்கு வழிகாட்டும் ராஜபாதை' என்று வர்ணிக்கிறார்.  உதாரணமாக, நீங்கள் கனவு காண்கிறீர்கள், கனவில் நீங்கள் , உங்கள்
அப்பா, அம்மா , தம்பி  நால்வரும் பேசிக்கிகொண்டு irukkireergal . கனவில் உண்மை போலவே தெரிகிறது. விழித்தவுடன் தான் கனவு எனத்தெரிகிறது. கனவு காண்பது நீங்கள்தான். மற்ற மூன்று பிம்பங்கள் யார்?   அதுவும் நீங்கள் தான். உங்களின் ஒரே மனமே ,ஒரே நேரத்தில் நான்கு வடிவங்களை எடுக்கிறது. இன்னும் எத்தனை வடிவங்கள் வேண்டுமானாலும் எடுக்கும். அதுதான் மனதின் பேராற்றலாகும்.



மனிதனின் எண்ணத்திற்கு இன்னொரு விசித்திரமான ஆற்றல் உண்டு. உங்கள் வீட்டில் ரோஷினி என்ற ஒரு பாப்பா இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அது ஸ்கூலுக்கு போனவுடன், அதே பாப்பா உங்கள் முன்னால் இருப்பதை போல உங்களால் கற்பனை செய்ய முடியும். அது வெறும் கற்பனை என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த பாப்பா உங்கள் கண்ணுக்கு தெரிவது உண்மைதானே? உங்கள் எண்ணத்திற்கு இன்னும் வலுவை கூட்டினால் அதே பாப்பா பிறர் கண்ணுக்கும் புலனாகலாம். இன்னும் வலிமை அதிகரித்தால் கண் முன்னே உலவ விடலாம்.  இன்செப்ஷனில் இந்த கான்செப்ட் வருகிறது. ஆனால் மன நல மருத்துவர்கள்  இதை மாய தோற்றங்கள் அல்லது பிரமை என்பார்கள்.



தெய்வமே அறிவாக மனதில் அமர்ந்திருப்பதால் அதற்கு தெரியாமல் யாரும் எந்த காரியத்தையும் செய்துவிட முடியாது.  தவறு செய்த ஒருவர் சமுதாயத்தின் பார்வையிலிருந்தும், சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பி விடலாம். ஆனால் எப்போதும் விழித்திருக்கும்  உள்ளுணர்வு விடாது. செய்த தவறை உள்ளுணர்வு சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும்.  நாமே மறந்து விட்டதாக நினைத்துக்கொண்டாலும் குற்றவுணர்ச்சி நம்மை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.  கனவிலும், நினைவிலும் உறக்கத்திலும் கூட இது தொடரும்.  ' தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'  என்ற  திருக்குறளை தாராளமாக  இன்செப்ஷன் திரைப்படத்தில் பொருத்திப் பார்க்கலாம்.


நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ ஒருமுறை மனதில் பதிந்து விட்டால் அவ்வளவுதான். அவ்வளவு எளிதில் ஒரு எண்ணத்தை மனதில் இருந்து விலக்கிவிட முடியாது. மனமானது தன்னுடைய சுழலும் தன்மையால் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து ஒரு எண்ணத்தின் வலுவை கூட்டிக்கொண்டே இருக்கும்.  விதைக்கப்பட்ட எண்ணம் காலப்போக்கில் வளர்ந்து மிகப்பெரிய வலை போல மனதை ஆக்கிரமித்து விடும்.  எனவே நல்ல எண்ணங்களையே மனதில் பழக்கபடுத்திகொள்வது  இயற்கையின் நியதிப்படி சரியானதாகும்.


இன்செப்ஷன் படத்தை பார்த்து விட்டு முழுதாக கதை புரிந்தவர்கள் எனக்கு ஒரு சேதி அனுப்பவும்.   யூகலிப்டஸ்  தைல புட்டியும்,  மன சாந்தி அளிக்கும் ரிஹானா மெலடிப்பாடல்கள் (நன்றி: மகாலட்சுமி) அடங்கிய காசெட்டும் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு உங்களுடையது.

Thursday, February 2, 2012

என்ன வாழ்க்கை இது?

மனிதனாக வாழும் வாழ்கையில் ஒருசில இன்பங்கள் உண்டென்றாலும், ஊன்றி ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கை பெரும்பாலும் துன்பங்களும், துயரங்களும், போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது. மனித வாழ்கையே தண்டனை போலத்தான் உள்ளது.  உலகம் ஒரு சிறை.  அதிலும் இந்திய போன்ற நாடுகளில் பிறப்பது சத்தியமாக ஒரு சாபம்தான். எங்கேயாவது ஒரு ஆறுதல் உண்டா? ஏதோ ஒரு இருபது வயது வரை கஷ்டங்கள் தெரிவதில்லை. அதன்பிறகு ஆட்டம் துவங்குகிறது. ஒரு இன்ஜினீரிங் மாணவன் வேலை பெறுவதற்கோ, மேலே படிப்பதற்கோ ஜீவ-மரண போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஒரு மருத்துவ மாணவர் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு முப்பது வயதுக்கு மேல் ஆகி விடுகிறது. அதாவது பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது.  மருத்துவமனையிலாவது ஆறுதலாக பேசுகிறார்களா என்றால், பதில் எல்லோருக்கும் தெரியும். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தாலே அடிவயிற்றை கலக்குகிறது. மூச்சு பிடிக்கிறது. சித்த வைத்தியத்திலும் போலி ஆசாமிகள் நுழைந்து  ஒழித்து விட்டார்கள். சித்தர்கள் என்று கூறுவதற்கே கூச்சமாக இருக்கிறது. லேகியம் என்றாலே ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்.  தமிழில் பேசினால் நாயைப் பார்ப்பது போல் பார்கிறார்கள். தூய தமிழில் பேசினால் சொறி நாயை பார்ப்பது போல பார்கிறார்கள். ஆங்கிலத்தில் நாலெழுத்து கெட்ட வார்த்தையில் திட்டினால் கூட பவ்யமாக உபசரிக்கிறார்கள். இளைஞர்கள் காட்டுத்தனமாக பைக் ஓட்டுகிறார்கள். நிறுத்தி மொகரையில் அறைய வேண்டும் போலிருக்கிறது. அடிபட்டு எலும்பு முறிந்தால் அப்படியே அள்ளிக்கொண்டு பொய் ஆர்த்தோ ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகிறார்கள். டாக்டர் கம்பியோ, பிளேட்டோ வைத்து நொறுங்கிய எலும்புகளை இணைத்து விடுகிறார். இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிக் கொள்ளலாம்.  இன்றைய இளம்பெண்கள் மிகவும் அழகாகி விட்டார்கள். அதாவது அப்படி நினைத்து கொள்கிறார்கள். அடிக்கடி வெளியே தலைகாட்டினால், கற்பை சூறையாடி விடுவார்களாகையால், வீட்டுக்குளேயே செல்போனுடன் பதுங்கி விடுகிறார்கள். செல்போனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருக்கும் தெரியாது அல்லவா?   காதல் என்பது பயன்படுத்தவே கூடாத வார்த்தை. ஒழுக்க மீறலாம்.   1991 உலகமயமாக்கலுக்கு  பிறகு மனிதர்களின் குனாதியசங்களில் ஏக மாற்றங்கள். சரி, சங்கீதம் கேட்டாவது  மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால் , அதன் நிலையோ பரிதாபம். தேவி ஸ்ரீ பிரசாத் ஒரே டியுனில் எல்லா படத்திலும் எல்லா பாடல்களையும் போடுகிறார். யுவன் ஷங்கர் ராஜா  தனது தந்தை இளையராஜா  கீழே தவற விட்டதை எடுத்து இடையிடையே ஒயே ஒயே என்று கத்துகிறார்.  விஜய் ஆண்டனி இரண்டே இரண்டு டியுன்கள் தான்.  ஹாரிஸ் ஜெயராஜ் பரவாயில்லை. ஐந்து டியுன்கள் வைத்திருக்கிறார். எல்லா படத்திற்கும் அவையேதான். ஏ.ஆர்.ரகுமான் இசையே உலக இசை. அதாவது உலகத்திலுள்ள  அத்தனைவித இசையையும் ஒரு சாப்டவேருக்குள் உள்ளிட்டு வெளியே எடுக்கும்போது அற்புதமான இசையாக வெளிவருகிறது. யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. அவ்வளவு நேர்த்தியாக கலக்குகிறார் போலும். தப்பி தவறி திருக்குறள் ஒன்று கூறினால் பைத்தியக்காரன் என்றே நினைத்து விடுகிறார்கள். ஆர்.டி.ஒ. ஆபிசில் கலெக்டர் தோரணையில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார், பார்த்தால் சாதாரண பிரேக் இன்ஸ்பெக்டர் ஆம்.  டிராபிக்  போலிஸ்கள்  கடுமையான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல், வேடிக்கை பார்த்துகொண்டே அழகான பைக்குகளில் நகர்வலம் வருகிறார்கள்.  சாலைகளும்  
பொந்துகளாக இருக்கின்றன. பொந்துகளிலும் குழிகளிலும் வண்டி ஒட்டி ஒட்டி கை கால்கள் நோகின்றன. டாக்டர் வலி நிவாரணி தருகிறார்.  தமிழகமெங்கும்  டாடா சுமோக்களில் மாமிச மலைகள் உலா வருகின்றன. அவர்களின் வீடுகளை  நடுநிசியில் முகம் நிறைய பவுடர் பூசிய பைங்கிளிகள் ஸ்கூட்டிகளில் வட்டமடிக்கின்றன. அர்த்தராத்திரி முழுக்க ஒரே அல்லோகலம்தான். அரசாங்கமும் வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுகிறது. ஒரே கையெழுத்தில் ஓராயிரம் பேரின் தலைஎழுத்து மாறுகிறது. தரையில் படுத்து கையை காலை ஆட்டி ஆட்டி அழுதாலும் பயனில்லை. இந்திய ஒரு பிச்சைக்கார நாடு (யாரும் கோபப்படாதீர்கள்).  அரசாங்க விதிகளை உற்று நோக்குங்கள். ஜனநாயகமா இது? படிக்காத ஒரு தொழிலாளி என்ன செய்வான்?  கஞ்சிக்கே வழியில்லாத நாட்டில்  சட்டதிட்டங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை. அந்நிய முதலீடு ஐந்பத்தியொரு சதவீதமாம். எல்லாம் மக்கள் நலனுக்காம். நல்ல நியாயம் ஐயா? அரசியல்வாதிகள் கோடிகளில் புரள்கிறார்கள். நான் பார்ப்பது தெருக்கொடி தான்.  யாரு ஐயா இலவசம் கேட்டது?  யாரிடமும் கையேந்தாமல்  மானத்துடன் பிழைக்க வேலைதானே வேண்டும்?  நிலத்தை கூறு கூறாக விலைக்கு விற்கிறார்கள். காம்பியரிங் பெண்கள். கட்டக் கடைசியில், சேர்த்த பணத்தையெல்லாம்  கிட்னியை மாற்றுவதற்கும், இதய ஆபரேஷனுக்கும் செலவழித்து சுடுகாட்டில் சாம்பலாகி விடுகிறார்கள்.  யார் நண்பர் யார் விரோதி என்றே தெரியவில்லை. எல்லோருமே நல்லவர்கள் போலவே பேசுகிறார்கள். யாரிடமும் நம்பி மனம் விட்டு பேச முடிவதில்லை. போட்டு குடுக்கிறார்கள். இல்லை பரப்பி விடுகிறார்கள்.  தத்துவஞானிகள் உலகமே ஒரு மாயை என்கிறார்கள். பரம்பொருள் மட்டுமே உண்மை என்கிறார்கள்.  நாமா பிறந்தோம்? நாமா சாகிறோம்? ஏன்   கடவுள் சும்மா இருக்க கூடாதா? நாம் என்ன அவரது விளையாட்டு பொருட்களா?   ஐந்து புலன்களை அடக்கி, அறிவை அறிந்தால் பேரின்ப வாழ்வையும் பேரமைதியையும் அடையலாம் என்கிறார்கள். முடியுமா?  கஷ்ட காலம். வாழ்க்கை வரமா? சாபமா?  அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...