Friday, December 23, 2011

தயங்கி நிற்கும் அறிவியல்...
படித்தவர்களின் கவனம் இப்போது சிறிது சிறிதாக ஆன்மிகம் பக்கம் திரும்பி கொண்டிருக்கிறது. ஆன்மீக பயிற்சிகளெல்லாம் உண்மையில் ஒரு வகையான சைக்கோதெரபி போன்ற சிகிச்சை முறைகள்தான். ஆன்மீக தத்துவக் கருத்துக்களை ஓரளவு அறிவியல் ரீதியில் விளக்கினால் படித்தவர்கள், பகுத்தறிவுவாதிகள், அறிவாளிகள் இவர்களெல்லாம் நம்ப வாய்ப்புண்டு. ஆன்மீக பயிற்சிகள் அனைத்திலும் முக்கியமாக வலியுறுத்தப்படுவது மனிதனின் மனம் தான். அதனால்தான் பி.ஹெச்.டி படித்தவர்கள் கூட ஆன்மீகவாதிகளிடம் தஞ்சம் அடைகிறார்கள். நித்யானந்த சுவாமிகள் போன்றவர்களிடம் ஆன்மிகம் சிக்கிக் கொள்ளும்போதுதான் ஆன்மிகம் கடுமையான கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கப்படுகிறது. உள்ளபடி ஆன்மிகம் அல்லது தத்துவம் என்பதே உண்மையை தேடுவது அல்லது நான் என்று அறிவதே ஆகும். நான் என்று ஒருவர் தேடும்போதுதான் மனம் அமைதியடைய துவங்குகிறது. மனம் போன போக்கிலேயே செயல்பட்டால் ஆரம்பத்தில் இன்பம் போல தோன்றினாலும், பிறகு சலிப்பும் சோர்வுமே மிஞ்சும்.


உண்மையில் அறிவியல் என்பதும் , ஆன்மிகம் எனபதும் இரண்டும் ஒன்றுதான். ஒரு நீளமான கயிற்றை நினைத்துக்கொண்டால் அதன் கண்ணுக்கு புலப்படும் பகுதி வரை போன்றது அறிவியல் . அதற்கு அப்பால் கட்புலனாகாத பகுதியை போன்றது ஆன்மிகம். ஆன்மீகமும் அறிவியலும் ஒரே கோர்வையாகவே உள்ளது. நமது கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டதாதால் ஆன்மிகம் மூடநம்பிக்கை என்று கருதிவிடுகிறோம். அறிவியல் எங்கே முட்டி நிற்கிறதோ அங்கேதான் தத்துவம் துவங்குகிறது. அறிவியலைக்கொண்டு ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தைக்கொண்டு அறிவியலையும் புரிந்து கொள்வதுதான் புத்தியுடைமையாகும். இந்தக்கட்டுரையை படிக்கும் நண்பர்கள் பலதரப்பட்ட கல்வி பின்புலத்தை கொண்டிருக்கக் கூடும் எனபதால், ஒரு மிக எளிமையான் உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன்.


நாம் கண்ணுறும் அனைத்து பொருட்களையும் பொதுவாக இரண்டு வகைகளில் பிரித்து விடலாம். அவை ஒன்று உயிரினங்கள் , மற்றொன்று உயிரற்ற சடப்பொருட்கள் . உயிரினங்களில் ஒரு செல் உயிரி, வண்டுகள், பூச்சிகள்,பறவைகள், விலங்குகள், மனிதன் போன்றவை அடக்கம். சடப்பொருட்களில் பேப்பர், பேனா, கம்ப்யுட்டர், கல், மண், கோள்கள் என உணர்வற்ற அனைத்தும் அடக்கம். இவ்விரண்டு வகைகளில் எதுவானாலும் அதாவது உயிரற்றவகையாக இருந்தாலும், உயிர்பெற்றவகையாக இருந்தாலும் - அவை பலவகைப்பட்ட தனிமங்களால் ( கார்பன், நைட்ரஜன், மக்னீசியம் போன்றவை) ஆனவை. தனிமங்கள் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை. அணுக்களோ எலெக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியுட்ரான் எனும் அடிப்படை துகள்களால் ஆனவை. இவையனைத்தும் அறிவியலால் நிரூபிக்கப்பட்டவை. இதுவரை சொன்னவற்றை தொகுத்துப் பார்த்தால்,

உயிருள்ள ஜீவன்கள் / உயிரற்ற சடப்பொருட்கள்
தனிமங்கள்
மூலக்கூறுகள்
அணுக்கள்
எலெக்ட்ரான் / புரோட்டான் / நியுட்ரான்
என்று முடிகிறது.அணுவை பிளந்து அலசி ஆராயும் விஞ்ஞானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் தேங்கியும், தயங்கியும் நிற்கிறது. உதாரணத்திற்கு எலெக்ட்ரான் துகளை எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்பில் பெரிதாக்கி பார்த்துக்கொண்டே வந்தால், என்ன நடக்கிறது என்றல், எலெக்ட்ரான துகளானது மங்கலாகி ஒரு கட்டத்தில் இருட்டோடு இருட்டாகி விடுகிறது. எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் இந்த மூன்று துகள்களும் எங்கிருந்து உருவாயின, அவை சுழல்வதற்கு ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. உலகிலுள்ள அனைத்தும் இந்த மூன்று துகள்களால் ஆனவையே என்றாலும் எவ்வாறு கோடிக்கணக்கான வண்ணங்கள், சுவைகள், தோற்ற பேதங்கள் உருவாகின்றன என்பது இன்னும் விஞ்ஞானத்திற்கு எட்டவே இல்லை. சுருங்க கூறினால், எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் இவற்றின் தோற்றம், இயக்கம் அவை ஒன்றோடு ஒன்று கூடி தரும் பலகோடி விளைவுகள் -இந்த முக்கிய வினாக்கள் விடையளிக்கப்படாமலே இருக்கின்றன.


ஆன்மீக பயிற்சிகளில் மனதை மையமாக வைத்து செய்யப்படும் தியானப்பயிற்சியே முக்கியமானதாகும். தியானம் மூலம் - வெளியிலேயே அலையும் மனதை - அகம் நோக்கி திருப்பி - மனதின் வேகத்தை படிப்படியாக குறைத்து பெறப்படும் மனதின் உள்ளுணர்வு நிலையிலேயே அணுவின் ரகசியங்களை அறிந்து கொள்ளமுடியும் என்கின்றனர் தத்துவஞானிகள். சித்தர்கள் பாடல்கள், இந்திய தத்துவங்களான நியாய-வைசேடிகம், ஜைனத் தத்துவம் போன்றவற்றில் அணுவை பற்றி விரிவாக அலசப்படுகிறது. இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைத்து நோக்கும் ஒரு பரந்த மனப்பான்மையுடன் கூடிய அறிவும் ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவானது தனிமனிதனுக்கும், நாடுகளுக்கும் ஒட்டு மொத்த உலகிற்குமே அமைதியெனும் அக ஒளியை ஏற்றி வைக்கவல்லது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், அடிமைப்பட்ட மக்கள், பிழைக்க வழியில்லாமல் பசியில் வாடும் பிச்சைக்காரர்கள், நோயாளிகள் என ஒவ்வொருவருமே இன்றைய உலகின் பொருளாதார, சமூக , அரசியல் குழப்பங்களால் சொல்லயியலாத துயரங்களில் வாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆன்மீக அறிவே மனிதகுலத்தை துன்பங்களிலிருந்து விடுவிக்கும் வழியாகும். மிகவும் மெதுவான வழிதான் என்றாலும், இதைத்தவிர பொருத்தமான், உறுதியான வழியொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

2 comments:

  1. Whatever it is.. Science need an explanation only. not assumption.

    ReplyDelete
  2. Super...good article...keep sharing

    ReplyDelete

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...