Friday, November 25, 2011

சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட் பிதாமகன் !


சச்சின் தனது நூறில் நூறாவது சதமடிக்க தொடர்ந்து திணறி வருகிறார். பத்திரிகை பேட்டிகளில் தனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை என்றே கூறுகிறார். எனினும் டென்ஷன் இருக்கத்தானே செய்யும். எப்படியும் நூறில் நூறு அடித்து விடுவார். ஆஸ்ட்ரேலியாவின் பிராடு மேன் ஒரு மேட்சில் நாலே நாலு ரன் அடித்தால் அவரது சராசரி நூறு ஆகிவிடும் என்றிருந்ததாம். ஆனால் அந்த போட்டியோடு தான் ஓய்வு பெறப்போவதாக முன்கூட்டியே அறிவித்து விட்டாராம். என்ன ஆனது தெரியுமா, பிராடு மேன் அந்த மாட்சில் டக் அவுட் ஆகிவிட்டார். எந்த சூழ்நிலையிலும் பதட்டமாகாமல் இருப்பது ஒரு திறமை.


நான் சிறுவனாக இருக்கும்போது டெண்டுல்கர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஓரிரு மேட்சுகளில் மண்டையில் அடிவாங்கினார். பிறகு, பந்துகள் (கிரிக்கெட் பந்துதான்! ) டெண்டுல்கரிடம் அடிவாங்கத் துவங்கின. பாகிஸ்தானுடன் ஒரு டெஸ்டில் 147 ரன்கள் விளாசி விட்டு, பேட்டை தரையில் ஸ்டைலாக ஊன்றி ,நின்று கொண்டுஇருந்தார். சுருண்ட முடியுடன் கூடிய வித்யாசமான தலைமுடி அவரை தனித்து அடையாளப்படித்தியது. இளம்வயதிலேயே விதி அவரை புகழேணியில் ஏற அனுமதித்தது.


சச்சின் 22 வயதிலேயே திருமாணமானவர். அவரைவிட ஐந்து வயது மூத்தவரான அஞ்சலி சச்சினிடம் I love you,sachin என்றாராம். அப்போதெல்லாம் Technology-ஐ விட மனிதர்களுக்கு மதிப்பிருந்தது. நான் சொல்லவருவது என்னவென்றால், முன்பு காதலித்தவர்கள் ஒருவர் மீதான நேசத்தை தங்கள் மனதில் முதலிடத்திலும், பணம் டெக்னாலஜி இவற்றை அடுத்த இடத்திலும் வைத்திருந்தார்கள் . இப்போது நிலைமை அப்படியே உல்டா. காதல், புனிதம் என்ற வார்த்தைகளை கேட்டாலே இளம்பெண்கள் ஜாக்கிரதையாகி விடுகிறார்கள். தயிர்சாதம், ஓ நீ அந்த Category-யா , பையன் ஜல்லியடிக்கிறான் என செல்போனில் ரிப்ளை பண்ணாமலே எஸ்கேப் ஆகிறார்கள். மீறிகேட்டால், பிசி என்று ஒற்றை வரியில் வெறுப்புஏற்றுகிறார்கள். அதற்கு மேலும் ஒரு பெண்ணுடன் பேச தன்மானம் குறுக்கே நிற்கிறது. சச்சின்-அஞ்சலி காதலித்தெல்லாம் அந்த காலம். ஐ லவ் யூ சொன்ன பெண்ணிடம் உருகிப்போய் II too love you, anjali என்றாராம். சச்சின்-அஞ்சலி ஜோடியைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. சச்சின் கிரிக்கெட்டில் திறமை குன்றாமலும், புகழின் உச்சியிலும் இருக்க காரணம் அவர் தனிமனித வாழ்வில் ஒழுக்கமாக இருப்பதாலோ என்னவோ என எண்ணத் தோன்றுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்திலிருந்து விலகிப்போன மலைகளுடன் இதை ஒப்பிட்டு பாருங்கள், தெளிவாகப் புரியும்.


சச்சின் பேட்டிங் செய்யும் ஸ்டைலே அழகாக, ஒரு அமைப்பாக இருக்கும். சச்சின் விளையாடுவதை பார்க்கும்போது ஒரு பெண்ணை இழுத்து அணைப்பது தான் எனக்கு நினைவுக்கு வரும். வேகமாக தன்னை நோக்கி வரும் பந்தை - காந்தம் ஈர்ப்பது போல - தன் பேட்டில் உள்வாங்கி அணைத்து பிறகு ஆன் சைடிலோ ,ஆப் சைடிலோ வேண்டிய திசையில் அடித்து விடுவார். Classical Batsman என்ற வார்த்தைக்கு சச்சின்தான் சரியான உதாரணம். தென்னாப்ரிக்கா, ஆஸ்ட்ரேலியா இவர்கள் மண்ணில் விளையாடும்போது ஸ்லிப்பில் நாலு பேர் நிற்பார்கள். பௌலிங் அசுர வேகத்தில் வீசுவார்கள், தொட்டாலே எகிறி ஸ்லிப்பில் கேட்சாகி விடும். ஆனால் சச்சினோ பேட்டின் பிளைடால் பந்தை லாவகமாக திசைதிருப்பி , இரண்டு ஸ்லிப்புகளுக்கிடையே உள்ள மிகக்குறுகிய இடைவெளியில் நுழைத்து விடுவார். பந்து பவுண்டரிக்கு ஓடும். ஸ்வீப் ஷாட் என்று ஒரு ஷாட் இருக்கிறது. மற்ற பேட்ஸ் மேன்கள் ஸ்வீப் ஷாட் அடிக்கிறேன் என்ற பேரில் தரையை கூட்டிவிட்டு , தூசு கிளப்புவார்கள். சச்சின் ஒருவர்தான் துல்லியமாக ஸ்வீப் ஷாட் அடிக்கத் தெரிந்தவர். பவுண்டரி அல்லது இரண்டு ரன்கள் உறுதி.


ஸ்கொயர் கட் (Square cut), ஸ்கொயர் டிரைவ் (Square drive), ஸ்டிரைட் டிரைவ் (Straight drive) என அனைத்துவித ஷாட்டுகளையும் நேர்த்தியாகவும், லாவகமாகவும் அடிக்கத் தெரிந்தவர் சச்சின் மட்டும்தான். ஸ்கொயர் டிரைவ் செய்வதற்கு மிகுந்த திறமை வேண்டும், ஸ்கொயர் டிரைவ் அடிக்கும்போது சொதப்பி விட்டால் பந்து ஆப் சைடில் அண்டையில் நிற்கும் பீல்டரின் கைகளில் தஞ்சம் புகுந்துவிடும். ஸ்கொயர் கட்டில் சொதப்பினால் பந்து லட்டுபோல பாயின்ட் அல்லது கல்லி பொசிஷன்களில் நிற்கும் பீல்டரிடம் கேட்சாகிவிடும்.ஒருமுறை தென்னாப்ரிக்காவுடன் விளையாடும்போது அசுர வேகத்தில் Pollack. வீசிய பந்தை சச்சின் ஸ்கொயர் கட் அடித்தார். பாயிண்டில் நின்று கொண்டிருந்த Cullinan அப்படியே தான் நின்றிருந்த இடத்திலிருந்து விலகிக்கொண்டார். பந்து அந்த அளவு கையில் தொட முடியாத வேகத்தில் வந்தது. வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் Excellent Shot என்று சொல்லி முடிப்பதற்குள் பந்து பவுண்டரியை தொட்டு விட்டது. எல்லோரும் திகைத்து விட்டார்கள்.ஷார்ஜாவில் ஆஸ்ட்ரேலியாவுடன் இரண்டு மேட்சுகளில் இந்தியா விளையாண்டது. அப்போதுதான் சச்சினின் விஸ்வரூபத்தை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். புயல்போல் சுழன்று நாலாபுறமும் பந்தை சிதறடித்த அவரது அன்றைய ஆட்டத்தை வியந்து எழுதாத ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.ஸ்டிரைட் டிரைவ் அடிக்கும்போது சச்சின் பிழையிழைத்து ஒருமுறை கூட நான் பார்த்ததேயில்லை. கால்களுக்கடியில் லெக் சைடில் பால் சிக்கினால் தொலைந்தது, ஆன் சைடில் பந்தை சுழட்டியடித்து விடுவார். ஸ்கொயர் லெக் போசிஷனிலிருந்து பீல்டர் லொங்கு லொங்கென்று ஓடிவர வேண்டியதுதான். எந்த ஒரு வீரரும் ஆன்சைடிலோ ஆப்சைடிலோ எதோ ஒன்றில் மட்டுமே திறமை வாய்ந்தவராக இருப்பார். உதாரணமாக, கங்குலியை தனக்கு ஆப் சைடில் மிகவும் நுணுக்கமாக விளையாட கூடியவர். இரண்டு பக்கமும் திறமையாக விளையாடக் கூடியவர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடம் சச்சினுக்குதான்.


ஹூக் ஷாட் (Hook shot) என்று ஒரு கவர்சிகரமான ஆனால் ஆபத்தான ஷாட் ஒன்றுள்ளது. பந்து தரையில் குத்தி எழும்பி தோள்பட்டை அல்லது முகத்துக்கு நேரே வருவதுதான் ஹூக்ஷாட் அடிக்க உகந்த பாலாகும். பேட்சுமேன் சற்று வலப்புறம் முன்னோக்கி நகர்ந்து ,உடலை திருப்பி பேட்டை சுழற்றி பின்நோக்கி ஓங்கி வீச வேண்டும். பேட்டும் பந்தும் துல்லியமாக பொருந்தினால் சிக்சர் உறுதி. டைமிங் மிஸ்ஸாகி விட்டது என்று வைத்து கொள்ளுங்கள், முகம் பெயர்ந்து விடும் அல்லது பந்து எகிறி கேட்சாகிவிடும். குனிந்து கொள்வது உத்தமம். பெரும்பாலான பேட்சுமேன்கள் இந்த ஷாட்டை தவிர்த்து விடுவார்கள். இந்த ஒரே ஒரு ஷாட்டை தான் டெண்டுல்கர் அடித்து பார்த்ததில்லை. சேவாக் அவ்வப்போது ஹூக் அடிக்க முயல்வார். இவைகளைத்தவிர லேட் கட், லேக் கிளான்ஸ் என பல தரப்பட்ட ஷாட்டுகள் உண்டு. எல்லாம் சச்சினுக்கு அத்துப்படி. லேட் கட், லேக் கிளான்ஸ் இவற்றில் ஒரு ரன்தான் கிடைக்கும், ரிஸ்க் அதிகமில்லை. சுலபமாக தட்டி விடலாம்.


வந்த புதிதில் சச்சினுக்கு இருந்த விளையாட்டு வேகம் இப்போது இல்லைதான். ஆனாலும் மிகுந்த பக்குவத்தோடும், நிதானமாக, முதிர்ச்சியான ஆட்டத்தை சச்சின் வெளிப்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். கிரிக்கெட் கடவுள் என்ற உயரத்திற்கு ரசிகர்களால் தூக்கி வைக்கப்பட்டாலும், வாய்ப்பு கிடைத்தால் சந்தடி சாக்கில் கபில் தேவ் , கவாஸ்கர் போன்றவர்கள் சச்சினை கருத்து கூறி காலை வாருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சச்சின் டெண்டுல்கரின் இடத்திற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.

No comments:

Post a Comment

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...