Sunday, October 16, 2011

நான் யார்?

நான் யார்? என்ற மிகச்சிறிய இந்த வினாவிற்கு விடை தெரிந்துவிட்டால் தனிமனிதன் வாழ்விலும், உலகத்திலும் உள்ள அனைத்து சிக்கல்களும் கவலைகளும் ஒரே நாளில் தீர்ந்து போகும். எந்த ஒரு வினாவிற்கு விடை தெரிந்தால் , எல்லா ரகசியங்களுக்கும் விடுபட்டு போகுமோ அந்த விடைதான் நான் யார்? என்ற கேள்விக்கு பதிலாகும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் நண்பர்களிடம் ' நீங்கள் யார்? ' என கேட்டுப்பார்ப்பேன். சில வினாடிகள் திகைப்பார்கள். பெரும்பாலும் எல்லா நண்பர்களும் நன்கு படித்தவர்கள் ஆகையால் இந்த கேள்வியை கேட்டவுடன் சற்று உஷாராகி விடுவார்கள். நேரடியாக பின்னோக்கி சென்று, நான் என்பது உயிர் அல்லது ஆத்மா என்பார்கள். எங்கேயோ படித்தது, கேட்டதை யெல்லாம் ஞாபத்தில் வைத்து சொல்லக்கூடாது என்பேன். குமார் என்ற ஒரு நண்பர் ஓரளவு சரியான பதிலை கூறினார். என் மீது அன்பும், அக்கறையும் கொண்ட என்னுடைய விரிவுரையாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: I am a temporary living being,born in order to attain few goals which are bestowed upon me.


பெயர், படிப்பு, இன்னாரின் மகன்/மகள் என்பவையெல்லாம் வெறும் அடையாளங்களே (merely identifications) என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அப்படியானால், நான் யார்?. முதலில் கண்ணுக்கும் கருத்துக்கும் எல்லையாக நம்முடைய உடலே தெரிகிறது. இதைதவிர, தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. முதலில் மேலோட்டமாக ஆராய்வோம். நான் என்பது உடலா? என்றால் இல்லை. ஏனெனில் உயிர் போய்விட்டால் உடலுக்கு பிணம் என்ற பெயர் வந்துவிடுகிறது. சரி, உயிர் என்பதுதான் நானா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் உடல் இயந்திரம் இல்லாமல் உயிர் இயங்க முடியாது. உடலும் உயிரும் சேர்ந்து இயங்கும்போதே நான் என்ற உணர்வும் அதைத் தொடர்ந்து எண்ணங்களும் செயல்களும் அனுபவங்களும் உருவாகின்றன. அப்படியானால், நான் யார்?


நான் யார்? இந்த கேள்வி ஒருவர் மனதில் எழுந்து விட்டால் , அவர் ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய தகுதி பெற்றுவிட்டார் என அர்த்தமாகும். வாழ்க்கையில் சோதனைகளும், பிரச்சினைகளும் ஒருவரை தொடர்ச்சியாக அழுத்தும்போது வெறுத்துபோய் கடைசியில் ' என்ன வாழ்க்கை இது......நான் யார்? ' என்ற வினா ஒருவர் மனதில் எழலாம். அனைத்து தேவைகளும் ஒருவருக்கு பூர்த்தியாகி, அளவுக்கதிகமான அனுபோகங்களால் (Luxurious life and Enjoyments) சலிப்படைந்து இறுதியில் ' என்ன வாழ்க்கை இது.....நான் ஏன் பிறந்தேன்.....நான் யார்? ' என்ற கேள்வி ஒருவருக்கு எழலாம். Maslow theory of hierarchical needs-ல் இறுதிகட்டமாக வரும் .Self-actualization எனப்தே நான் யார் என்ற தேடலாகும். பெரும்பாலும், இந்திய கலாச்சாரத்தில் முதல் வகையிலும் , மேற்கத்திய கலாச்சாரத்தில் இரண்டாவது வகையிலும் நான் யார் ? என்ற வினா ஒரு மனிதனுக்கு எழுகிறது.


நான் யார் என்ற கேள்விக்கு பதிலை வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது. பதில்தான் எளிதில் கிடைத்து விட்டால் பிரச்சினை தீர்ந்ததே. இருந்தாலும், நான் யார் என்ற முடிச்சை அவிழ்க்க முயற்சிப்போம்.


அனு என்ற பெயருடைய ஒரு பெண் ஒருதிசையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் அனு என பெயர் சொல்லி விளிக்கிறோம். இப்போது என்ன நடக்கிறது? நம் குரல் அதிர்வுகளாக காற்றில் பரவி, அனுவின் காதை சென்றடைகிறது. காது நரம்புகள் வழியாக ஒலி அதிர்வுகள் கடத்தப்பட்டு மூளையை சென்றடைந்து - மூளையில் பல்வேறு மாற்றங்களுக்கு (Bio-chemical process) உள்ளாகி - அனு நம் குரலை உணர்ந்து கொள்கிறார். இதுவரையில் நடந்த செயல்பாடுகளில் அனுவின் பங்கு (Contribution) என்ன? ஒன்றுமே இல்லை. எல்லாம் தானாகவே நடக்கிறது. நம் குரலை உணர்ந்துகொண்ட பிறகு, தலையை திருப்பி பார்க்க வேண்டுமென கழுத்து நரம்புகளுக்கு கட்டளை செல்கிறது. நம்மை திரும்பி பார்க்கிறார். இதில் அவரது பங்கு என்ன? இதுவும் தானாகதானே நடக்கிறது? நம்மை பார்க்கும்போது, நமது உருவம் அனுவின் கண்களில் பட்டு கண் நரம்புகள் வழியாக கடத்தப்பட்டு மூளையை சென்றடைந்து- நம்மை உணர்ந்து கொள்கிறார். எல்லா செயல்களும் தானாகவே நடக்கிறது. எந்த ஒரு செயலாவது தானாக நடக்குமா? ஒரு டம்ளர் இருக்கிறது, அதை விரலால் தள்ளினால்தானே அது நகரும். தானாக நகருமா? ஒரு ஆற்றல் அல்லது விசை (Force or Pressure) அன்றி எந்தக்காரியமும் நடக்காது. உலகம் ஒன்றுதான்; கடலும் ஒன்றுதான். ஆனால் ஒரே கடலே அந்தந்த பிரதேசங்களுக்கு தக்கவாறு குறிப்பிட்ட ஒரு பெயரிட்டு அழைக்கப்படுவது போல - ஒரே ஆற்றலே அதிர்வுகளை கடத்துதல் (Conduction), உணருதல் (Cognition), சிந்தித்தல் (Thinking), எதிர்வினை புரிதல் (Reaction to stimuli), பேசுதல், நடத்தல் என அனைத்து செயல்களுக்கும் ஆற்றலை அளிக்கிறது. அந்த ஆற்றலே கடவுள் எனும் பேராதார சக்தியாகும் (Omnipresent consciousness and force). அனைத்து செயல்களுக்கும் , தன் இருப்பிலிருந்து (Potential) ஆற்றலை அளிப்பதால் தமிழில் மூல ஆற்றல் எனவும், ஆங்கிலத்தில் Stock force எனவும் அழைக்கப்படுகிறது.
God is also known as providence because it provides. நம்முடைய எந்த கட்டுப்பாடுமின்றி உணவு ஜீரணம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.


புறத்தூண்டல்கள் (External stimuli) - எதிர்வினை புரிதல் (Reaction) - அனுபவம் (Experiences and memory) என்ற இந்த சங்கிலிதொடரானது (Chain action) ஒருவர் பிறந்த நொடி முதல் கொஞ்சம்கூட இடைவிடாமல் தொடச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருப்பதால், எந்த ஒரு காரியத்தையும் நாமே செய்வதுபோல (Own self, the ego) தெரிகிறது. ஒரு ஆறு இருக்கிறது. ஆற்று நீரானது நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தாலும், ஆறு நிலையாக இருப்பது போலவே (Static) தோற்றமளிக்கிறது. அதேபோல, தெய்வம் என்ற சக்தியால் நம் உடலும் மனமும் இயங்கி கொண்டிருந்தாலும், தெய்வம் என்பது நம்முடைய நினைவு மனதிற்கு (Conscious mind) எட்டுவதே இல்லை. எனவே நான் யார்? என்ற வினாவிற்கு பதில் நான் கடவுள் என்பதே ஆகும். பரிணாம வளர்ச்சியில்(Evolution) கடவுளே பல்வேறு உயிர்களாகவும், மனிதாகவும் வந்து நிற்கிறார். உண்மையில் கடவுளை தவிர இந்த உலகில் ஒன்றுமே இல்லை.


இந்த இரகசியத்தையே ' அகம் பிரம்மாஸ்மி ' என யோகிகளும், ' அறிவே தெய்வம் ' என தமிழ் சித்தர்களும் கூறிவைத்தார்கள். இயேசுநாதர் மிக அழகான வரிகளில் The kingdom of God is within you என்று கூறினார். இன்றைய உலகில் ஏறக்குறைய அறுநூறு கோடி மக்கள் உள்ளனர். கடல் இருக்கிறது; கடலில் எண்ணற்ற அலைகள் தோன்றுகின்றன. அலைகள் வேறு கடல் வேறா என்றால் இல்லை. கடல் நீரே அசையும்போது அலையாகிறது. அலைகள் கடலிலேயே உருவாகி, கடலிலேயே இயங்கி, கடலிலேயே தணிந்துவிடுகிறது. அதேபோலவே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உடலும் மனமும் இருப்பதுபோல தோன்றினாலும் - எண்ணற்ற அலைகளுக்கு பிறப்பிடமாக அடித்தளமாக கடல் இருப்பதுபோல - ஒவ்வொருவரின் மனதின் அடித்தள ஆற்றலாக விளங்குவது (Basic source of mind) கடவுள் என்ற ஆதார சக்தியே ஆகும். இந்த மனநிலையில்தான் மனிதன் சகமனிதனிடம் அன்புகொண்டு - இனம், மதம், சாதி, ஒருவரை ஒருவர் புண்படுத்துதல், பொறாமை, பேராசை, காமவெறி, ஒருவரை ஒருவர் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்தல் போன்ற உணர்ச்சிவயப்பட்ட செயல்களில் இருந்து விடுபட்டு மனச்சுமையின்றி சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ முடியும். ஒவ்வொருவரின் பிறப்பின் நோக்கமும் இதுவேயாகும்; ஆன்மீக வாழ்வே அதற்கு வழியாகும். தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனை நோக்கிய இந்த தேடல் (Search for something) இருக்கவே செய்கிறது.


இந்த அளவிற்கு நமக்கு உண்மைகள் தெரிந்தாலும், இதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உண்டு. கடவுள் எனும் இருப்பாற்றலே , இயக்கநிலையில் (Functioning state) மனமாக விளங்குவதால் - நம் மனமானது நான் யார்? என தேட முனையும்போது, ஆராயும்போது - மனதின் அடித்தளமாக விளங்கும் கடவுள் தத்துவம் மிக எளிதில் நம் சிந்தனையின் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இந்த ஒரு காரணத்தினால்தான் நாம் தேடும்பொருள் நமக்குளேயே இருந்தும் அலைக்கழிக்கப்படுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் அனுபோகங்களிலும் (Enjoyments), புலன் இன்பங்களிலுமே (Sensory pleasures) திளைத்து வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். ஆனால் நான் யார்? என்ற தேடலானது ஒரு மனிதனின் ஆன்மாவில் தொக்கி நின்று அவனது மரணத்திற்கு பிறகும் தொடர்கிறது. The journey of consciousness of the soul towards its perfection continues after death.

No comments:

Post a Comment

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...