Thursday, June 23, 2011

பேய்கள் உண்டா இல்லையா?பேய்கள் உண்டா இல்லையா?....இது எல்லோர் மனதிலும் நிலவும் ஒரு முக்கியமான கேள்வி. குறிப்பாக, வளரும் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்திருக்கும் ஒரு முக்கிய என்றால் அது மிகையல்ல. சிறுவயதில் தானாகவே மனிதமனமானது பேய்கள், ஆவிகள் குறித்த செய்திகளை நாடுகிறது. பிறப்பின் நோக்கமே இறைவனை உணருவதுதான் என தத்துவஞானிகளும், சித்தர்களும் கூறி வருகிறார்கள். இறைவனை நாடும் அனைவரது மனதிலும் ஒரு உள்ளார்ந்த அமைப்பாக ( Inherent & Latent ) இருக்கிறது. இந்த தேடலே வளரும் பிராயத்தில் பேய்கள் மீதான நாட்டமாக உருவெடுக்கிறது என்றே எண்ணுகிறேன்.


நானும் சிறுவயதில் பேய்களை அல்லது பேயை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என மிகுந்த ஆவலுடன் இருந்தேன். என் வீட்டைச் சுற்றியுள்ளவர்கள், உறவினவர்கள் இவர்களில் யாருக்காவது பேய் பிடித்து விட்டது அல்லது பேயைப் பார்த்து மிரண்டு விட்டார்கள் எனக்கூறி- தர்காவிற்கு அழைத்து சென்று மந்திரித்து, தாயத்து கட்டி கூட்டிவருவார்கள். வந்தபின்னும், பேஸ்தடித்தது போலத்தான் இருப்பார்கள். பேயைப் பார்த்து பயந்தவர்கள், இருளடித்து விட்டது எனக்கூறுவார்கள் கிராமங்களில். பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருட்டான பகுதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வேன். இருட்டான பகுதிகளிலும், மரத்தடிகளிலும், நீர் நிலைகளின் அருகிலும்தான் பேய்கள் அண்டியிருக்குமாம்.


பேய்களில் முனி என்றொரு வகை உண்டு. நடுசாமத்தில் முச்சந்திகளில் முனிகள் உலாவருமாம். முனிகளின் வழியில் யாராவது குறுக்கிட்டால் அவர்கள் உடலுக்குள் புகுந்து கொண்டு சாமானியமாக விடாது. பொதுவாக இந்த முனிகள் சக்தி வாய்ந்தவை மற்றும் கொடூரமானவையாகும். இவ்வாறெல்லாம் நிறைய கதை கூறுவார்கள்.


வயதுகூடி, ஏழாவது எட்டாவது வகுப்பு என வந்தபின் பேய்கள் என்பவை ஆவிகளாக மாறின. லைப்ரரியில் ஆவிகள் பற்றிய பலபுத்தகங்கள் இருப்பதை அறிந்தேன். வெளிநாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிகள், ஆவி உருவங்கள், ஆவியுடனான அனுபவங்கள், ஆவிப் பத்திரிக்கைகள் இவையெல்லாம் மிகப்பிரபலமானவை. சிலநாட்களில், ஆவிகளைப் பற்றி சில மாத பத்திரிக்கைகளும் தமிழ்நாட்டில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன என்று அறிந்து - ஓடோடிச் சென்று அவற்றை வாங்கி வைத்து படிக்கத்துவங்கினேன். பேசும் ஆவிகள், ஆவிகள் உலகம் என்பன அவற்றுள் சில. இப்போதும் அப்பத்திரிக்கைகள் வெளியாகின்றன என அறிகிறேன். விக்கிரவாண்டி. திரு. ரவிச்சந்திரன் என்பவர் ஒரு ஆவிகள் பத்திரிக்கையை வெளியிடுகிறார்.


சென்னையில் அமுதா என்ற ஒரு பெண்மணி இருக்கிறார். ஆவிகளுடன் உரையாடுவதில் பிரபலமானவர். ஆவிகளுடன் உரையாடுபவர்களை மீடியம்கள் என அழைக்கிறார்கள். ஒருநாள் லைப்ரரியில் ' ஆவிகளுடன் பேசுவது எப்படி ' ? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கைக்கு கிடைத்தது. அவ்வளவுதான். ஒரு ஆவியோடாவது பேசிவிட வேண்டும் என தீர்மானித்தேன். நானும், என் நண்பர் சுரேஷும் அசட்டு துணிச்சலுடன் களத்தில் இறங்கினோம்.


வீட்டில் ஒரு தனியறையில் சோதனையை தொடங்கினோம். இரட்டைக் கோடுகளால் வரையப்பட்ட ஒரு பெரிய செவ்வகத்தை தரையில் வரைந்து கொள்ளவேண்டும். அதில் A முதல் Z வரை எழுத வேண்டும். ஒரு டம்ளரை செவ்வகத்தின் நடுவில் தலைகுப்புற கவிழ்த்து வைத்து , அதன் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஏதாவது ஒரு செத்த ஆவி நம்மோடு சேர்ந்து கொண்டு நம்முடனேயே உரையாடும். அதாவது எழுத்துகள் மூலமாக. நாம் தம்ளரின் மேல் விரலை வைத்துக்கொண்டேன். சுரேஷ் திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தான். டம்ளர் லேசாக அசைந்தது. நான், வந்திருப்பது யார்?...என்றேன். டம்ளர் நகர்ந்து சென்று ' T ' என்ற எழுத்தில் நின்றது. உங்கள் பெயரென்ன ? ....என்றேன். இப்படியாக டம்ளர் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து கொண்டே சென்று இறுதியில் ' N ' என்ற எழுத்தில் நின்றது. அந்த பெயரானது அப்போது உயிருடன் இல்லாத ஒரு சினிமா நடிகராவார். ஆகா....அப்படியானால் ஆவிகள் இருப்பது உண்மைதான் உறுதியாக நம்பிவிட்டேன். எங்களுடைய இந்த செயல்களை எல்லாம் பார்த்து என் அம்மா எங்களை திட்டிக்கொண்டே இருந்தார். அந்த நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. அங்கு என்னைவிட, ஒரு வயது மூத்த, ரேவதி என்ற பெயரில் ஒரு அழகான பெண் இருந்தாள். நானும் சுரேஷும், ஆவிகள் மேட்டரை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு ரேவதியின் திசையில் கவனத்தை செலுத்த துவங்கினோம். தொங்கிவிட்ட ஆவிமேட்டர் காலப்போக்கில் மறந்தே போனது.


நான் முன்பே கூறியிருந்தபடி, வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை படிக்கத்துவங்கிய பின், எனக்கு ஆன்மிகம் மட்டுமல்லாமல் அறிவியலும் புரிந்துவிட்டது; அமானுஷ்யமும் புரிந்து விட்டது. பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ எதுவும் கிடையாது. ஆனால் ஆன்மா என்பது உண்டு. ஒரு மனிதனின் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதே ஆன்மாவாகும். ஒரு நபரின் எண்ணம் மற்றும் செயல்களால் பண்பேற்றம்(Characterized Magnetic Wave Domain ) பெற்ற காந்த அலைத்தொகுப்பே ஆன்மாவாகும். இதனை ஒரு காந்த அலைமுடிச்சு போல் கற்பனை செய்துகொள்ளலாம். ஒருவர் மரித்தபின், இந்த ஆன்மாவானது வானவெளியில் மிதக்கிறது. தனக்கு ஒத்த குணமுடைய வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் ஆன்மாவுடன், உடலைவிட்ட ஆன்மாவானது இணைந்துகொள்கிறது. ஆன்மாவிற்கு உருவம் கிடையாது. அது ஒருவரின் உடலோடு சேருவதையும் சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியாது. ஒத்த குணமுடைய மனிதருடனேயே இணைவதால் கெடுதல்கள் ஒன்றும் விளையாது. புதிதாக இணைந்த ஆன்மாவின் எண்ணங்கள் அவ்வப்போது செயலுக்கு வந்து, வாழும் நபரால் நிறைவேற்றிக்கொள்ளப்படும். ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தபின்பு அதன் இயக்கங்களை சாதாரணமாக ஒருவரால் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மாவின் ரகசியங்களை நுணுகிய உணர்வு நிலையில் நின்றே புரிந்துகொள்ள முடியும்; வார்த்தைகளுக்கு எல்லையுண்டு . புதிய ஆன்மாவின் சேர்க்கையால் ஒரு மனிதனின் திறமைகள் அதிகரிக்கவே பெரும்பாலும் வாய்ப்பு உண்டு; தீய விளைவுகள் என பெரிதாக ஒன்றுமில்லை. ஆகையினால், நாம் பேய்கள் ஆவிகள் இவைகளைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை; முக்கியத்துவமும் அளிக்க வேண்டியதில்லை.


எல்லாம் சரி. சிலர் பேய் ஆவி இவற்றின் உருவங்களை பார்த்தேன் என கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்களே. அது என்ன?......அவர்கள் பார்த்த பேய் உருவமோ, ஆவி உருவமோ உண்மைதான். அதாவது அவர்களுக்கு மட்டும் உண்மை. ஒருவர் மனதில் பதிந்துள்ள அழுத்தமான கற்பனை வடிவங்களே , சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, உண்மை வடிவங்கள் போலவே Project ஆகி வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. இக்கற்பனை வடிவங்களை உளவியல் நிபுணர்கள் தோற்ற பிரமை அல்லது மாயத் தோற்றங்கள் ( Visual Hallucinations ) என்கிறார்கள்.


சிலவருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள என் சீனியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். இரவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது நான், அண்ணா.....நீங்க இதுவரைக்கும் எங்கயாவது பேயப் பாத்துறிக்கீங்களா....? என்றேன். அதற்கு அவர், நான் இதுவரைக்கும் பேயயையோ, பிசாசையோ பாத்ததில்ல. மனுஷங்கள்ளதான் பேய்க் குணமுள்ள.....ராட்சசி குணமுள்ள மனிதர்களை பார்த்திருக்கிறேன் எனக் கூறிக்கொண்டே எங்களுக்கு தோசையை பரிமாற வந்த அவரது மனைவியை ஒரு கணம் பார்த்தார். அவர், தொப்பென்று தோசையை தட்டில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டார். பிறகு நானும் என் சீனியரும் இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியில் சாப்பிட சென்றோம் !2 comments:

 1. sir,very interesting.ana oru sandhegam.

  apo peya image a eduthu podrangalla sir. apo adhu ennaa sir?

  ReplyDelete
 2. சார் நல்ல இருந்தது. புள் அரிச்சிரிச்சி சார்.ஆன ஒரு சந்தேகம் சார்.

  அபோ புகைப்படம் எடுத்து பேப்பர்ல போடுரங்கல்ல சார். அது என்ன சார்.

  எனக்கு தெரிஞ்சி நா 10த் படிக்கும் போது இத்ஹு நடந்தது சார்.

  ReplyDelete

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...