Monday, June 6, 2011

சித்தர்கள் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.சித்தர்களைப் பற்றியும், சித்தர்கள் தத்துவத்தை பற்றியும் பதிவுலகில் நிறைய நண்பர்கள் எழுதுகிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் சித்தர்கள் தத்துவத்தை பற்றி ஒரு சிறு விளக்கத்தை நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில், சித்தர்கள் இந்து மதத்திற்கே உரித்தான சொத்து அல்லர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ஓம், சிவன் போன்றவார்த்தைகளெல்லாம் குறியீடுகள்தானே தவிர ஒரு எல்லைக்குள் தங்களை குறுக்கிக்கொள்ளும் முயற்சி அல்ல. சிவன் சிலை எப்படி இருக்கிறது? இறைவன் மௌன வடிவானவன்.....அவனுக்கு வடிவம் கிடையாது.......பிரபஞ்சவெளி எங்கும் கும்மிருட்டாக நிறைந்திருக்கிறான் என்ற ரகசியத்தின் அடையாளமே சிவன் என்ற தெய்வமாகும். விநாயகர் சிலை எப்படிஇருக்கிறது? ஐந்து கரங்களுடன் காட்சியளிக்கிறார். இறைவன்பரிபூரணமானவர்........பஞ்சபூதங்களாய் பிரபஞ்சம் முழுவதும் காட்சியளிக்கிறார்என்பதே விநாயகர் சிலை. விநயாகரை பெரியோர்கள் முழுமுதற்கடவுள் என்பார்கள். அதற்கு அர்த்தம் பரிபூரனமாகும்; கடவுள்களில் முதல் என்று பொருள்அல்ல. இதே ரீதியில், இந்துமதத்தில் மூட நம்பிக்கைகள் என விமரிசிக்கப்படும் அனைத்திற்கும் விடைகண்டு விடலாம். சித்தர்கள் உலகத்திற்கே பொதுவானவர்கள். எல்லா மதங்களிலும் சித்தர்கள் உண்டு. சூபிஞானிகளெல்லாம் சித்தர்கள்தாம். சித்தர்களின் நோக்கம் என்னவென்றால், தீயசெயல்களை செய்து பிறரை வருத்தி, தானும் வருந்தும் மானிடர்களை துன்பக்கடலில் இருந்து மீட்டு நலமளிப்பதுதான் அவர்களின் நோக்கம்.நாம் குழந்தைகளாக இருக்கும்போது பேய்ப்படங்களை விரும்பி பாப்போம். அமானுஷ்ய விஷயங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். இந்த பழக்கமானது வளர்ந்து பெரியவர்களான பின்னும் பலருக்கு தொடர்கிறது. ஏனெனில், சித்தர்கள் தத்துவத்தை ஒரு மர்மான பொருளாக, அமானுஷ்யமாக வைத்திருப்பதிலேயே பலரும் விரும்புகிறார்கள்; சொல்லப்போனால் அதையே எல்லோரும் விரும்பி படிக்கிறார்கள். உண்மையில் சித்தர்களின் தத்துவம் மிக எளிமையானது; நேர்மையானது; உண்மையானது.சித்தம் என்றால் மனம். மனதின் அடித்தளமாக, மூல ஆற்றலாக இயங்குவதுதெய்வம். மனதின் அடித்தளமான தெய்வநிலையை ஐயமற உணர்ந்த மாமனிதர்கள்தாம் சித்தர்கள். குண்டலினி யோகம் அல்லது அதை ஒத்ததாக பேசப்படும் தியானமுறை ஒன்றை கடைப்பிடித்து எண்ணஅலைகளை படிப்படியாக குறைத்து இறுதியில் தானே மனம் கடந்த, அசைவற்ற தெய்வநிலையை அடைந்து சித்தர்கள் உணர்கிறார்கள். ஆனால் அதை முழுமையாக மொழி வழியாக எடுத்துக்கூற முடியாது. ஏனெனில் இறைநிலை குணம் கடந்த நிலையாகும். இதையே சித்தர்கள் ' கண்டவர் விண்டிலை....விண்டவர் கண்டிலை' என்றார்கள். பலரையும் நான் பார்க்கும்போதும் சித்தர்கள் தத்துவத்தை மந்திரம், தந்திரம், சரியை, கிரியை,பூஜை,புனஸ்காரம் என்ற புறச் செயல்களிலேயே மையப்படுத்தி பேசுகிறார்கள். இது சித்தர்களின் தலையாய நோக்கத்தையே குறுக செய்வதாகும். ஏனெனில் இன்றைய உலகின் தேவை அதுவல்ல. மனிதனுக்கு மனிதன் போட்டி,பொறாமை, வஞ்சம்- குடும்பத்தில் சண்டை சச்சிரவுகள்- அரசியல் பொருளாதாரகுழப்பங்கள்- நாடுகளுக்கிடையே போர்கள்- இனப்படுகொலைகள்.....இவையேஇன்றைய உலகின் அடையாளங்களாகும். இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார்.....அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கிறார் என்று உணரும்போதுதான் ஒரு மனிதனுக்கு தன்மேலேயே சுயமதிப்பு, தன்னம்பிக்கை வரும். சக மனிதர்களின் மேல் அன்பும், கருணையும் மலரும். உலக சகோதரத்துவம் வரும். இந்த உண்மையை யாரும் மறுக்கமுடியுமா?இறைவன் பேராற்றலும், பேரறிவும் உடையவர். அந்த நிலையில் மனம் தோய்ந்துவரும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கும் பேராற்றலும் பேரறிவும் சொந்தமாகிறது. உயிர்களுக்கு உயிராகவும், அணுவுக்குள் உயிராகவும் இயங்கும் இறைவனை உணர்ந்த சித்தர்களின் ஆற்றல் எல்லை கடந்ததாகிறது. சித்தர்களால் நினைத்தமாத்திரத்தில் தங்கள் உடல் அணுக்களை பிரித்துகொள்ளவும், மறையவும் வேறிடத்தில் காட்சி கொடுக்கவும் முடியும். உடலைகாற்று போல லேசாக்கி கொள்ளுதல், விஸ்வரூபம் எடுத்தல் போன்ற அஷ்டமாசித்திகளை இந்த அடிப்படையில்தான் சித்தர்கள் பெற்றார்கள். நாம்வாழும் நவீன விஞ்ஞான யுகத்தில், இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களை படிக்கும் இக்காலத்தில்- சித்தர்களின் தத்துவத்தை நாம் பெற்றஅறிவியல் அறிவோடும், ஆழ்ந்த சிந்தனையோடும் சேர்த்து விளங்கிக் கொள்ளஎவராலும் முடியும்.சித்தர்கள் தத்துவத்தின் அடிப்படையை நன்றாக விளங்கிக்கொள்ள நாம் நன்கறிந்த சில சித்தர்களின் பாடல் வரிகளையே சான்றுகளாக காட்டுகிறேன்.திருவள்ளுவர்

வள்ளுவரை பலர் சித்தர் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஏன்? அவர் சித்துக்கள் எதுவும் செய்யவில்லையா?

ஐயப் படாது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
.

என்கிறார். வள்ளுவர் வெறும் அகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால்அகத்தது என்றிருக்கிறார். அகம் என்றால் மனம். அகத்தது என்றால் மனதின்அடித்தளம் என்று பொருள். மனதின் அடித்தளத்தை உணர்பவரை தெய்வத்திற்கு சமமாக கருதலாம் என்கிறார் தெய்வப்புலவர்.


தாயுமானவர்

மெய்ப்பொருள் உணர்ந்த மகான்களில் மிகவும் முக்கியமானவர் தாயுமானவர். அவரது பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த செல்வங்களாகும். தாயுமானவர் பாடல்களில் ' என் சுத்த அறிவான தெய்வமே...' என்ற வாக்கியம் திரும்ப திரும்ப வருகிறது.


திருமூலர்

திருமூலர் சித்தர் பரம்பரையில் தலையாய சித்தர். அறிஞர் அண்ணாவிடம் ஒருமுறை கேட்டார்களாம் தமிழில் உங்களுக்கு பிடித்த நூல் எதுவென்று. அண்ணா ஒரு நாத்திகவாதி. கேள்வி கேட்டவர் நினைத்திருப்பார், திருக்குறள் என் அண்ணா பதில் சொல்வாரென. ஆனால் அண்ணா சொன்ன பதில் ' திருமந்திரம் ' .

திருமந்திரத்தில் ' அறிவே தெய்வம் ' , ' அன்பே சிவம் ' , ' தன்னையறிந்த தத்துவஞானிகள் ' போன்ற வார்த்தைகள் வருகின்றன. உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று, உடம்பை யானிருந்து ஓம்புகின்றேனே என்ற பாடல் புகழ் பெற்றதல்லவா?


பட்டினத்தார்

ஊணுக்குள் நீ நின்று உலாவினதை அறியாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே - இது பட்டினத்தார்.


இராமலிங்க சுவாமிகள்

ராமலிங்கரின் பாடலை படித்தால் உள்ளம் உருகிவிடும். பக்தி பரவசம் தானாகவே மனதில் பொங்கும். திருவருட்பாவில் ' என் உள்ளத்தில் நடனமாடும் அருட்பெரும்ஜோதி.....' என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் வள்ளலார் உபயோகபடுத்துகிறார்.


யேசுநாதர்

' தேவனின் அரசாட்சி உங்களுக்குள்ளயே உள்ளது ' .
' நானும் என் பிதாவும் ஒன்றே '.
' தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் இறைவனை காண்பர் '.

- புனித நூலான பைபிளில் வரும் இவ்வாக்கியங்களுக்கு பதவுரையே தேவை இல்லை.
தெளிவாக புரியும்படிதானே யேசுநாதர் கூறியிருக்கிறார்.


மகாகவி பாரதியார்

பாரதியார் நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் முழங்குகிறார்.

அறிவே தெய்வம் என்ற தலைப்பில் வரும் பாட்டில் ' சுத்த அறிவே சிவம் என்ற சுருதி கேளீரோ ' என்றும் ' அறிவொன்றே தெய்வம் ' என்றும் கூறுகிறார்.

பரசிவம் வெள்ளம் என்ற தலைப்பில் வரும் பாட்டில் உண்மையை போட்டு உடைக்கிறார்.
' உள்ளும் புறமும் உள்ளதெலாம் தானாகும்
வெள்ளமென்று ஒன்று உண்டாம் அதை தெய்வம் என்பார் வேதியரே' ....சித்தர் பாடல்களை படிக்க படிக்க நன்றாகத்தான் இருக்கும். திகட்டவே திகட்டாது. ஆனால் அதிலென்ன பிரயோஜனம்? படித்து நமதாக்கி வாழ்கையில் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? எந்த ஒரு நூலையும் மேலோட்டமாக படிப்பதில் பயனில்லை. ஆழ்ந்து படிக்க வேண்டும். நூலாசிரியரின் மனநிலைக்கே சென்றால்தான் அவர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று அறிவுக்கு எட்டும். இல்லையானால், அரைவேக்காட்டுத்தனமான அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போக வேண்டியதுதான்.


சித்தரியல் என்பது சீரிய வாழ்க்கைமுறை என்பது ஒருசாரார் கருத்து. அதில் என்ன சந்தேகம்? சித்தர்கள் நித்திய கரும விதிகளை வகுத்துள்ளார்கள். அதாவது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், என்னென்ன அன்றாட பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும், எந்தெந்த உடல்வாகு (வாத, பித்த, கப ) உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டும் என் வகுத்துள்ளார்கள். தூக்கம், உணவு, உடலுறவு இவற்றில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வகுத்துள்ளார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்தின் முதல் பகுதியில் இதுபற்றி விரிவாக வருகிறது. வள்ளலாரின் தத்துவங்களிலும் இதுபற்றி விரிவாக காணலாம். உதாரணமாக, மாதம் இரண்டு தடவை மட்டும் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


சித்தர்கள் தத்துவம், ஆன்மிகம். இரண்டும் ஒன்றா? வேறு வேறா? இது ஒரு கேள்வி.
ஆன்மிகம் என்பது ஒரு பரந்த தலைப்பு. சித்தர்கள் என்பது ஒரு குழுவினரை குறிக்கும் அடையாள குறிப்பு. ஆன்மாவின் அடித்தளத்தை உணர்ந்து அதோடு லயமாக வேண்டும் என்பது பொருள். சித்தர்கள் தத்துவம், ஆன்மிகம் இரண்டும் வேறு வேறு நினைத்து குழம்பிக் கொள்ள கூடாது. ஆன்மா + இகம் சொல்லிலேயே அர்த்தம் உள்ளது. தமிழ் மொழியின் சிறப்பே சொல்லிலேயே பொருளையும் பொதித்து வைப்பத்துதான்.


சித்தர்கள் தத்துவத்தை ஒரே வாக்கியத்தில் கூற வேண்டுமானால் ' அறிவே தெய்வம் ' எனலாம் அல்லது ' அன்பே சிவம் ' எனலாம். என்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருத்தியிடம் ' அன்பே சிவம்'....இதை கூறியது யாரென்று தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவள் ' ஓ.....தெரியுமே......கமல்ஹாசன்தானே....' என்று ஒரு போடு போட்டாள். அப்படியே இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.
1 comment:

 1. திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

  (First 2 mins audio may not be clear... sorry for that)

  (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete

Psychology E-Book !

அன்புள்ள நண்பர்களே . .  Psychology E-Book (free of cost). சமீபத்தில், நான் Psychology தொடர்பாக ஒரு E- Book தமிழில் எழுதியுள...