Thursday, June 30, 2011

முக்கியமாக காதலை...நாம் விரும்பும்
வாய்ப்பை...
மிகச் சரியாக
ஒரே ஒருமுறை
மட்டும்
கடவுள்
வழங்குகிறார்...
முக்கியமாக
காதலை...!

- லிங்கேஸ்வரன்.

Thursday, June 23, 2011

பேய்கள் உண்டா இல்லையா?பேய்கள் உண்டா இல்லையா?....இது எல்லோர் மனதிலும் நிலவும் ஒரு முக்கியமான கேள்வி. குறிப்பாக, வளரும் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்திருக்கும் ஒரு முக்கிய என்றால் அது மிகையல்ல. சிறுவயதில் தானாகவே மனிதமனமானது பேய்கள், ஆவிகள் குறித்த செய்திகளை நாடுகிறது. பிறப்பின் நோக்கமே இறைவனை உணருவதுதான் என தத்துவஞானிகளும், சித்தர்களும் கூறி வருகிறார்கள். இறைவனை நாடும் அனைவரது மனதிலும் ஒரு உள்ளார்ந்த அமைப்பாக ( Inherent & Latent ) இருக்கிறது. இந்த தேடலே வளரும் பிராயத்தில் பேய்கள் மீதான நாட்டமாக உருவெடுக்கிறது என்றே எண்ணுகிறேன்.


நானும் சிறுவயதில் பேய்களை அல்லது பேயை எப்படியாவது பார்த்துவிட மாட்டோமா என மிகுந்த ஆவலுடன் இருந்தேன். என் வீட்டைச் சுற்றியுள்ளவர்கள், உறவினவர்கள் இவர்களில் யாருக்காவது பேய் பிடித்து விட்டது அல்லது பேயைப் பார்த்து மிரண்டு விட்டார்கள் எனக்கூறி- தர்காவிற்கு அழைத்து சென்று மந்திரித்து, தாயத்து கட்டி கூட்டிவருவார்கள். வந்தபின்னும், பேஸ்தடித்தது போலத்தான் இருப்பார்கள். பேயைப் பார்த்து பயந்தவர்கள், இருளடித்து விட்டது எனக்கூறுவார்கள் கிராமங்களில். பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருட்டான பகுதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வேன். இருட்டான பகுதிகளிலும், மரத்தடிகளிலும், நீர் நிலைகளின் அருகிலும்தான் பேய்கள் அண்டியிருக்குமாம்.


பேய்களில் முனி என்றொரு வகை உண்டு. நடுசாமத்தில் முச்சந்திகளில் முனிகள் உலாவருமாம். முனிகளின் வழியில் யாராவது குறுக்கிட்டால் அவர்கள் உடலுக்குள் புகுந்து கொண்டு சாமானியமாக விடாது. பொதுவாக இந்த முனிகள் சக்தி வாய்ந்தவை மற்றும் கொடூரமானவையாகும். இவ்வாறெல்லாம் நிறைய கதை கூறுவார்கள்.


வயதுகூடி, ஏழாவது எட்டாவது வகுப்பு என வந்தபின் பேய்கள் என்பவை ஆவிகளாக மாறின. லைப்ரரியில் ஆவிகள் பற்றிய பலபுத்தகங்கள் இருப்பதை அறிந்தேன். வெளிநாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சிகள், ஆவி உருவங்கள், ஆவியுடனான அனுபவங்கள், ஆவிப் பத்திரிக்கைகள் இவையெல்லாம் மிகப்பிரபலமானவை. சிலநாட்களில், ஆவிகளைப் பற்றி சில மாத பத்திரிக்கைகளும் தமிழ்நாட்டில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன என்று அறிந்து - ஓடோடிச் சென்று அவற்றை வாங்கி வைத்து படிக்கத்துவங்கினேன். பேசும் ஆவிகள், ஆவிகள் உலகம் என்பன அவற்றுள் சில. இப்போதும் அப்பத்திரிக்கைகள் வெளியாகின்றன என அறிகிறேன். விக்கிரவாண்டி. திரு. ரவிச்சந்திரன் என்பவர் ஒரு ஆவிகள் பத்திரிக்கையை வெளியிடுகிறார்.


சென்னையில் அமுதா என்ற ஒரு பெண்மணி இருக்கிறார். ஆவிகளுடன் உரையாடுவதில் பிரபலமானவர். ஆவிகளுடன் உரையாடுபவர்களை மீடியம்கள் என அழைக்கிறார்கள். ஒருநாள் லைப்ரரியில் ' ஆவிகளுடன் பேசுவது எப்படி ' ? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் கைக்கு கிடைத்தது. அவ்வளவுதான். ஒரு ஆவியோடாவது பேசிவிட வேண்டும் என தீர்மானித்தேன். நானும், என் நண்பர் சுரேஷும் அசட்டு துணிச்சலுடன் களத்தில் இறங்கினோம்.


வீட்டில் ஒரு தனியறையில் சோதனையை தொடங்கினோம். இரட்டைக் கோடுகளால் வரையப்பட்ட ஒரு பெரிய செவ்வகத்தை தரையில் வரைந்து கொள்ளவேண்டும். அதில் A முதல் Z வரை எழுத வேண்டும். ஒரு டம்ளரை செவ்வகத்தின் நடுவில் தலைகுப்புற கவிழ்த்து வைத்து , அதன் மேல் ஆள்காட்டி விரலை வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது ஏதாவது ஒரு செத்த ஆவி நம்மோடு சேர்ந்து கொண்டு நம்முடனேயே உரையாடும். அதாவது எழுத்துகள் மூலமாக. நாம் தம்ளரின் மேல் விரலை வைத்துக்கொண்டேன். சுரேஷ் திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தான். டம்ளர் லேசாக அசைந்தது. நான், வந்திருப்பது யார்?...என்றேன். டம்ளர் நகர்ந்து சென்று ' T ' என்ற எழுத்தில் நின்றது. உங்கள் பெயரென்ன ? ....என்றேன். இப்படியாக டம்ளர் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து கொண்டே சென்று இறுதியில் ' N ' என்ற எழுத்தில் நின்றது. அந்த பெயரானது அப்போது உயிருடன் இல்லாத ஒரு சினிமா நடிகராவார். ஆகா....அப்படியானால் ஆவிகள் இருப்பது உண்மைதான் உறுதியாக நம்பிவிட்டேன். எங்களுடைய இந்த செயல்களை எல்லாம் பார்த்து என் அம்மா எங்களை திட்டிக்கொண்டே இருந்தார். அந்த நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. அங்கு என்னைவிட, ஒரு வயது மூத்த, ரேவதி என்ற பெயரில் ஒரு அழகான பெண் இருந்தாள். நானும் சுரேஷும், ஆவிகள் மேட்டரை அப்படியே தொங்கலில் விட்டுவிட்டு ரேவதியின் திசையில் கவனத்தை செலுத்த துவங்கினோம். தொங்கிவிட்ட ஆவிமேட்டர் காலப்போக்கில் மறந்தே போனது.


நான் முன்பே கூறியிருந்தபடி, வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை படிக்கத்துவங்கிய பின், எனக்கு ஆன்மிகம் மட்டுமல்லாமல் அறிவியலும் புரிந்துவிட்டது; அமானுஷ்யமும் புரிந்து விட்டது. பேய்கள் என்றோ, ஆவிகள் என்றோ எதுவும் கிடையாது. ஆனால் ஆன்மா என்பது உண்டு. ஒரு மனிதனின் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதே ஆன்மாவாகும். ஒரு நபரின் எண்ணம் மற்றும் செயல்களால் பண்பேற்றம்(Characterized Magnetic Wave Domain ) பெற்ற காந்த அலைத்தொகுப்பே ஆன்மாவாகும். இதனை ஒரு காந்த அலைமுடிச்சு போல் கற்பனை செய்துகொள்ளலாம். ஒருவர் மரித்தபின், இந்த ஆன்மாவானது வானவெளியில் மிதக்கிறது. தனக்கு ஒத்த குணமுடைய வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரின் ஆன்மாவுடன், உடலைவிட்ட ஆன்மாவானது இணைந்துகொள்கிறது. ஆன்மாவிற்கு உருவம் கிடையாது. அது ஒருவரின் உடலோடு சேருவதையும் சம்பந்தப்பட்ட நபரால் உணர முடியாது. ஒத்த குணமுடைய மனிதருடனேயே இணைவதால் கெடுதல்கள் ஒன்றும் விளையாது. புதிதாக இணைந்த ஆன்மாவின் எண்ணங்கள் அவ்வப்போது செயலுக்கு வந்து, வாழும் நபரால் நிறைவேற்றிக்கொள்ளப்படும். ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தபின்பு அதன் இயக்கங்களை சாதாரணமாக ஒருவரால் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மாவின் ரகசியங்களை நுணுகிய உணர்வு நிலையில் நின்றே புரிந்துகொள்ள முடியும்; வார்த்தைகளுக்கு எல்லையுண்டு . புதிய ஆன்மாவின் சேர்க்கையால் ஒரு மனிதனின் திறமைகள் அதிகரிக்கவே பெரும்பாலும் வாய்ப்பு உண்டு; தீய விளைவுகள் என பெரிதாக ஒன்றுமில்லை. ஆகையினால், நாம் பேய்கள் ஆவிகள் இவைகளைப் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை; முக்கியத்துவமும் அளிக்க வேண்டியதில்லை.


எல்லாம் சரி. சிலர் பேய் ஆவி இவற்றின் உருவங்களை பார்த்தேன் என கற்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாக சொல்கிறார்களே. அது என்ன?......அவர்கள் பார்த்த பேய் உருவமோ, ஆவி உருவமோ உண்மைதான். அதாவது அவர்களுக்கு மட்டும் உண்மை. ஒருவர் மனதில் பதிந்துள்ள அழுத்தமான கற்பனை வடிவங்களே , சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, உண்மை வடிவங்கள் போலவே Project ஆகி வெளிப்புறத்தில் காட்சியளிக்கின்றன. இக்கற்பனை வடிவங்களை உளவியல் நிபுணர்கள் தோற்ற பிரமை அல்லது மாயத் தோற்றங்கள் ( Visual Hallucinations ) என்கிறார்கள்.


சிலவருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள என் சீனியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன். இரவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது நான், அண்ணா.....நீங்க இதுவரைக்கும் எங்கயாவது பேயப் பாத்துறிக்கீங்களா....? என்றேன். அதற்கு அவர், நான் இதுவரைக்கும் பேயயையோ, பிசாசையோ பாத்ததில்ல. மனுஷங்கள்ளதான் பேய்க் குணமுள்ள.....ராட்சசி குணமுள்ள மனிதர்களை பார்த்திருக்கிறேன் எனக் கூறிக்கொண்டே எங்களுக்கு தோசையை பரிமாற வந்த அவரது மனைவியை ஒரு கணம் பார்த்தார். அவர், தொப்பென்று தோசையை தட்டில் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டார். பிறகு நானும் என் சீனியரும் இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியில் சாப்பிட சென்றோம் !Thursday, June 16, 2011

அணு...எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் மூன்றும்
---- வேறுவேறு துகள்கள் அல்ல. முன்பு
சலனமுற்ற அறிவால் விஞ்ஞானிகள் பகுத்தறிந்து
---- இட்ட பெயர்களே அவை. இன்று விஞ்ஞான
காலத்தில் எளிதாக புரிந்து கொள்வோம்
---- வட்டப்பாதையில் துகள்கள் சுழலும் அந்தந்த
தலத்திற்கேற்ப இடப்பட்ட பெயர்களே மூன்றும்.
---- உண்மையில் அணு என்பதே ஒரே பெயர்.
விலகி ஒன்றையொன்று நிற்க காரணம்
---- வேறுபட்ட சுழல்விரைவும் அழுத்தமும்தான்.


லிங்கேஸ்வரன்,

ஆன்மீகக் கவிகள்...ஆன்மீக வழியில் முன்னேறிப் போகுங்கால்
---- பெறும் அனுபவங்கள் அறிவை தரமுயர்த்தும்
மென்மேலும் திறமை பெருகும் - வாய்த்த
---- குருவால் கிடைத்த யாசகம் இது
என்றெண்ணி பணிவுடன் அடக்கம் கொள்ளு.
---- மாறாக தானே பெற்ற ஆற்றல் இதுவென
வீண்பேச்சு பேசினால், சூரியன் விலக
---- விலக ஒளியிழந்து தேய்ந்து போகும்
வான்மதியின் நிலையே கடைசியில் உண்டாகும்.
---- குருபக்தி நினைவு எப்போதும் மறக்கலாகாது.

----------------------------------------------------------------------------------

உருவமில்லா இறைவனை எடுத்துக் காட்ட
---- கருவிகளுக்கு திறன் இல்லை - மொழிகள்பலவும்
அருந்தமிழும் உதவாது வார்த்தைகள் வழியாக
---- விளக்க . ஓங்கி உயர்ந்த மெய்ப்பொருள்
இருப்பாக இங்குநம் உடலாகவும் உயிராகவும்
---- இணைந்து இயங்குவதே அதற்கு சாட்சி.

லிங்கேஸ்வரன்,

Sunday, June 12, 2011

வெள்ளை புறா ஒன்று...வெள்ளை புறா ஒன்று..
போனது கையில் வராமலே...
முதலெழுத்து தாய்மொழியில்..
தலை எழுத்து யார்மொழியில்..
என் வாழ்க்கை வான்வெளியில்..
வெள்ளை புறா ஒன்று.....
போனது கையில் வராமலே...
நீயும் நானும் சேர்ந்தபோது
கோடைகூட மார்கழி...
பிரிந்தபின்பு பூவும் என்னை
சுடுவதென்ன காதலி...
துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
திசை மறந்தது பைங்கிளி...
வேதங்களே வாழும்வரை..
சோகங்களே காதல்கதை...
இல்லாத உறவுக்கு
நான் செய்யும் அபிஷேகம்....
வெள்ளை புறா ஒன்று...
போனது கையில் வராமலே......!


நன்றி: புதுக்கவிதை.

Saturday, June 11, 2011

டோபமைன் - ஓர் ஆபத்தான கதாநாயகன்!
மனித மூளையானது உலகிலேயே மிகச் சிறந்த கருவியாகும். மணித் உடல் செல்களால் ஆனதைப்போல, மூளையானது நியுரான்கள்(Neurons) எனப்படும் நரம்பு செல்களால் ஆனது. மூளையில் ஏராளமான ரசாயன நீர்கள் உற்பத்தியாகின்றன. அவற்றை Neurotransmitters என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நாம் வசதிக்காக ஹார்மோன்கள் என வைத்துக் கொள்ளலாம். டோப்பமைன், செரட்டோனோனின், மெலனின் போன்றவை அவற்றுள் சிலவாகும். இன்னும் ஏராளமான ஹார்மோன்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பெயர் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு ஹார்மோனும் ஒருவித உடல் மற்றும் மன இயக்கங்களை கட்டுபடுத்துகிறது; ஒழுங்குபடுத்துகிறது.


தனித்தனியாக பெயரிடப்பட்டிருந்தாலும் மூளையில் சுரக்கும் Neurotransmitter எனப்படும் இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடயவைதாகவே இயங்குகின்றன. ஒன்றின் கூடுதல் குறைவு மற்றொரு ஹார்மோனையும் பாதிக்கவே செய்யும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மூளையில் சுரக்கும் ஹார்மோன்களில் மிக முக்கியமான ஒன்று டோப்பமைன் (Dopamine) என்ற ஹார்மொனாகும். ஏனெனில் மனிதர்களில் நேக நடத்தை மற்றும் சிந்தனை (Cognition and Behavior) சார்ந்த செயல்களை இஹ்ஹார்மோனே கட்டுபடுத்துகிறது; ஒழுங்குபடுத்துகிறது. உறக்கம், மனநிலை (Mood), செக்ஸ், மனதை ஒருமுகபடுத்தி சிந்தித்தல் (Attention), கற்றல், ஞாபக திறன், முனைப்போடு செயலாற்றல் (Motivation), இன்பத்தை துய்த்தல்-மீண்டும் அதே இன்பத்தை நாடுதல் (Behavior and Reinforcement), போன்ற பலபல செயல்கள் சீராக இயங்குவதில் டோபமைன் பெரும் பங்கு வகிக்கிறது. ஆங்கிலத்தில் இதை Pleasure Center என அழைக்கிறார்கள்.


டோப்பமைனானது அளவோடு சுரக்கும்பட்சத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எக்காரணத்தினாலோ டோபமைன் அளவானது கூடுதலாகவோ, குறைவாகவோ சுரந்தால் அங்குதான் பிரச்சினையே துவங்குகிறது.


டோபமைன் குறைவாக சுரந்தால் உடல் சோர்வு, சுறுசுறுப்பாக செயலாற்ற முடியாமை, மனச்சோர்வு (Depression), எதிலும் ஆர்வமின்மை (Loss of Interest and Satisfaction), செக்சில் நாட்டமின்மை, கவனக்குறைவு, ஞாபகத்திறன் குறைவு, தடுமாற்றம் போன்றவை ஏற்படும். டோபமைன் குறைவுபட்டவர்களுக்கு Addiction வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ADHD எனப்படும் ஒரு மனக்குறைபாடு குழந்தைகளிடம் அதிகம் தென்படுகிறது. Attention Deficit Hyperactivity Disorder ( அதீத சுறுசுறுப்பு & கவனசிதறல் ) என்ற இந்நோயானது குறைவான டோபமைன் அளவால் உண்டாகலாம் என்கிறார்கள். முதியவர்களுக்கு Parkinson எனப்படும் உடல் நடுக்கநோய் ஏற்படுகிறது.


ஒரு ஆற்றில் கரையை உடைத்துக்கொண்டு பெருகும் வெள்ளமானது வழியில் தட்டுப்படும் ஆடு, மாடு, கோழிகள், மனிதர்கள் என கணக்கில்லாமல் மானாவாரியாக அனைவரையும் மிதக்கவிடுகிறது. அதைப்போலவே, அதிகமாகவும் தாறுமாறாகவும் உற்பத்தியாகவும் டோபமைன் ஹார்மொனானது எந்தவித உடல்- மனக் கோளாறாகவும் உருவெடுக்கலாம். மனப்பதட்டம், தூக்கமின்மை, சோர்வில்லாமல் அலைந்துகொண்டே இருத்தல், அதீத செக்ஸ் வெறி, இளித்துகொண்டே இருப்பது, வினோதமான செய்கைகள், அகங்காரம், அர்த்தமற்ற மீண்டும் மீண்டும் மனதை துளைக்கும் சந்தேகங்கள், ஆவேசம்-அமைதி இரண்டும் மாறிமாறி வருதல் (Bipolar Mood) போன்ற கோளாறுகள் உருவாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் போன்றவையும் நோயாளிக்கு காட்சியளிக்கலாம்; கேட்கலாம். எழுத்தாளர் சுஜாதா, ஒரு மனநோயாளிக்கு கேட்கும் மாய ஒலிகளை அடிநாதமாக வைத்து 'ஆ' என்ற ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.


அதிகப்படியான டோபமைன் உற்பத்தியால் மூளையில் எண்ணங்களும் , கற்பனைகளும் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கும்; மூளை கொதிப்பேறி நோயாளிகள் தனிமையில் சுருண்டு அசைவற்று அப்படியே உட்கார்ந்து விடுவார்கள். இது ஒரு வகை.


மனிதர்களாகிய நாம் ஐம்புலன்கள் மூலமாக புற உலகோடு தொடர்புகொண்டு அனுபவங்களை பெறுகிறோம். இது நல்லது, இது கேட்டது என பிரித்தறியும் திறனையும், சுற்றாத்தாரோடு உறவாடும் திறனையும் பெறுகிறோம். ஆனால் டோபமைன் மிகையாக உற்பத்தியாகும் மூளையில் இடைவிடாத எண்ணங்களின் சுழற்சியால் கற்பனை தோற்றங்களாக உருவாகி உருவாகி இந்நோயாளிகள் ஐம்புலன்கள் வழியாக உலகோடு தொடர்பு கொள்ளும் திறனை படிப்படியாக இழந்து, சிந்தனையாற்றலையும் இழந்து - இறுதியில் மனமானது சிதைந்து விடுகிறது. இதுவே Schizophrenia எனப்படும் மனச்சிதைவு நோயாகும். மனச்சிதைவு நோயில் பலவகைகள் உண்டு. மிகையான டோபமைனால் மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ பலவோ நோயாளிக்கு காணப்படும்.


ஒருவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவரை பதவிசாக ஆங்கில மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றிட வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் Anti-Psychotic வகை மருந்துகள் சிறந்த முறையில் மனச்சிதைவு நோய்க்குறிகளை கட்டுப்படுத்துவதாக தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றால் குறைவான Anti-Psychotic மருந்துகள் மூலமே மனச்சிதைவு நோயாளியை நல்லமுறையில் வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம். சித்த-ஆயர்வேத மருத்துவம், ஹோமியோபதி, சைக்கோதெரபி, கவுன்சிலிங் ஆகியவறை துணைசிகிச்சைகளாக தாராளமாக நாடலாம். மனச்சிதைவு நோய் என அறிந்த பின்னும் சிகிச்சை பெறாமலிருப்பது விஷப்பரிட்சையாகும். நூறில் ஒருவருக்கு இந்நோய் வரும் என்கிறார்கள். வம்சாவளியாக மனச்சிதைவு நோய் வரக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.


மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சிறந்த படைப்பாளிகளாக இருப்பார்கள் என்பது ஒரு வியப்பூட்டும் தகவலாகும். ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோரில் சிலரை இதற்கு உதாரணமாக காட்டுகிறார்கள்.


ஆளவந்தான் திரைப்படத்தில் வரும் மொட்டை கமல் கதாபாத்திரம் மனச்சிதைவு நோய்க்கு மிகச்சிறந்த உதாரணமாகும். கமல் நன்றாக Research செய்தே அப்பாத்திரத்தை தவறில்லாமல் கச்சிதமாக உருவாக்கி உள்ளார். கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதே கொடுத்திருக்கலாம். எங்கே அதெல்லாம். கமல் படம் வெளியாகி, ஓடாமல் பெட்டிக்குள் போனபின்புதான் அவருடைய கடுமையான உழைப்பும் முயற்சிகளும் நமக்கு தெரிகிறது. தமிழ் ரசிகர்கள் வட்டாரம் இன்னும் அந்த அளவு விழிப்படையவில்லை. கமல் தன்னுடைய இளம்வயது முதலே தொடர்ந்து ஒரு முயற்சியை இடைவிடாது செய்து வருகிறார். அது என்னவென்றால், தமிழ் ரசிகர்களின் ரசனையை எப்படியாவது உயர்த்திவிட வேண்டும் என்பதுதான் அது. அறுபது வயதை நெருங்கியும் , கமலும் தன் முயற்சியில் மனம் தளரவில்லை.....ரசிகர்களும் மனம் தளரவில்லை....!

Wednesday, June 8, 2011

மனதில் ஒரு வலி...மனதில் ஒரு வலி இருந்தால்
வார்த்தைகள் வருவதில்லை...
காதலே அந்த வலியாக இருந்தால்
வார்த்தைகள் அருவியென கொட்டுகிறது..
கவிதைகளாய்...
கீதங்களாய்...

Monday, June 6, 2011

சித்தர்கள் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.சித்தர்களைப் பற்றியும், சித்தர்கள் தத்துவத்தை பற்றியும் பதிவுலகில் நிறைய நண்பர்கள் எழுதுகிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் சித்தர்கள் தத்துவத்தை பற்றி ஒரு சிறு விளக்கத்தை நானும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில், சித்தர்கள் இந்து மதத்திற்கே உரித்தான சொத்து அல்லர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ஓம், சிவன் போன்றவார்த்தைகளெல்லாம் குறியீடுகள்தானே தவிர ஒரு எல்லைக்குள் தங்களை குறுக்கிக்கொள்ளும் முயற்சி அல்ல. சிவன் சிலை எப்படி இருக்கிறது? இறைவன் மௌன வடிவானவன்.....அவனுக்கு வடிவம் கிடையாது.......பிரபஞ்சவெளி எங்கும் கும்மிருட்டாக நிறைந்திருக்கிறான் என்ற ரகசியத்தின் அடையாளமே சிவன் என்ற தெய்வமாகும். விநாயகர் சிலை எப்படிஇருக்கிறது? ஐந்து கரங்களுடன் காட்சியளிக்கிறார். இறைவன்பரிபூரணமானவர்........பஞ்சபூதங்களாய் பிரபஞ்சம் முழுவதும் காட்சியளிக்கிறார்என்பதே விநாயகர் சிலை. விநயாகரை பெரியோர்கள் முழுமுதற்கடவுள் என்பார்கள். அதற்கு அர்த்தம் பரிபூரனமாகும்; கடவுள்களில் முதல் என்று பொருள்அல்ல. இதே ரீதியில், இந்துமதத்தில் மூட நம்பிக்கைகள் என விமரிசிக்கப்படும் அனைத்திற்கும் விடைகண்டு விடலாம். சித்தர்கள் உலகத்திற்கே பொதுவானவர்கள். எல்லா மதங்களிலும் சித்தர்கள் உண்டு. சூபிஞானிகளெல்லாம் சித்தர்கள்தாம். சித்தர்களின் நோக்கம் என்னவென்றால், தீயசெயல்களை செய்து பிறரை வருத்தி, தானும் வருந்தும் மானிடர்களை துன்பக்கடலில் இருந்து மீட்டு நலமளிப்பதுதான் அவர்களின் நோக்கம்.நாம் குழந்தைகளாக இருக்கும்போது பேய்ப்படங்களை விரும்பி பாப்போம். அமானுஷ்ய விஷயங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். இந்த பழக்கமானது வளர்ந்து பெரியவர்களான பின்னும் பலருக்கு தொடர்கிறது. ஏனெனில், சித்தர்கள் தத்துவத்தை ஒரு மர்மான பொருளாக, அமானுஷ்யமாக வைத்திருப்பதிலேயே பலரும் விரும்புகிறார்கள்; சொல்லப்போனால் அதையே எல்லோரும் விரும்பி படிக்கிறார்கள். உண்மையில் சித்தர்களின் தத்துவம் மிக எளிமையானது; நேர்மையானது; உண்மையானது.சித்தம் என்றால் மனம். மனதின் அடித்தளமாக, மூல ஆற்றலாக இயங்குவதுதெய்வம். மனதின் அடித்தளமான தெய்வநிலையை ஐயமற உணர்ந்த மாமனிதர்கள்தாம் சித்தர்கள். குண்டலினி யோகம் அல்லது அதை ஒத்ததாக பேசப்படும் தியானமுறை ஒன்றை கடைப்பிடித்து எண்ணஅலைகளை படிப்படியாக குறைத்து இறுதியில் தானே மனம் கடந்த, அசைவற்ற தெய்வநிலையை அடைந்து சித்தர்கள் உணர்கிறார்கள். ஆனால் அதை முழுமையாக மொழி வழியாக எடுத்துக்கூற முடியாது. ஏனெனில் இறைநிலை குணம் கடந்த நிலையாகும். இதையே சித்தர்கள் ' கண்டவர் விண்டிலை....விண்டவர் கண்டிலை' என்றார்கள். பலரையும் நான் பார்க்கும்போதும் சித்தர்கள் தத்துவத்தை மந்திரம், தந்திரம், சரியை, கிரியை,பூஜை,புனஸ்காரம் என்ற புறச் செயல்களிலேயே மையப்படுத்தி பேசுகிறார்கள். இது சித்தர்களின் தலையாய நோக்கத்தையே குறுக செய்வதாகும். ஏனெனில் இன்றைய உலகின் தேவை அதுவல்ல. மனிதனுக்கு மனிதன் போட்டி,பொறாமை, வஞ்சம்- குடும்பத்தில் சண்டை சச்சிரவுகள்- அரசியல் பொருளாதாரகுழப்பங்கள்- நாடுகளுக்கிடையே போர்கள்- இனப்படுகொலைகள்.....இவையேஇன்றைய உலகின் அடையாளங்களாகும். இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார்.....அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கிறார் என்று உணரும்போதுதான் ஒரு மனிதனுக்கு தன்மேலேயே சுயமதிப்பு, தன்னம்பிக்கை வரும். சக மனிதர்களின் மேல் அன்பும், கருணையும் மலரும். உலக சகோதரத்துவம் வரும். இந்த உண்மையை யாரும் மறுக்கமுடியுமா?இறைவன் பேராற்றலும், பேரறிவும் உடையவர். அந்த நிலையில் மனம் தோய்ந்துவரும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கும் பேராற்றலும் பேரறிவும் சொந்தமாகிறது. உயிர்களுக்கு உயிராகவும், அணுவுக்குள் உயிராகவும் இயங்கும் இறைவனை உணர்ந்த சித்தர்களின் ஆற்றல் எல்லை கடந்ததாகிறது. சித்தர்களால் நினைத்தமாத்திரத்தில் தங்கள் உடல் அணுக்களை பிரித்துகொள்ளவும், மறையவும் வேறிடத்தில் காட்சி கொடுக்கவும் முடியும். உடலைகாற்று போல லேசாக்கி கொள்ளுதல், விஸ்வரூபம் எடுத்தல் போன்ற அஷ்டமாசித்திகளை இந்த அடிப்படையில்தான் சித்தர்கள் பெற்றார்கள். நாம்வாழும் நவீன விஞ்ஞான யுகத்தில், இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களை படிக்கும் இக்காலத்தில்- சித்தர்களின் தத்துவத்தை நாம் பெற்றஅறிவியல் அறிவோடும், ஆழ்ந்த சிந்தனையோடும் சேர்த்து விளங்கிக் கொள்ளஎவராலும் முடியும்.சித்தர்கள் தத்துவத்தின் அடிப்படையை நன்றாக விளங்கிக்கொள்ள நாம் நன்கறிந்த சில சித்தர்களின் பாடல் வரிகளையே சான்றுகளாக காட்டுகிறேன்.திருவள்ளுவர்

வள்ளுவரை பலர் சித்தர் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஏன்? அவர் சித்துக்கள் எதுவும் செய்யவில்லையா?

ஐயப் படாது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
.

என்கிறார். வள்ளுவர் வெறும் அகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால்அகத்தது என்றிருக்கிறார். அகம் என்றால் மனம். அகத்தது என்றால் மனதின்அடித்தளம் என்று பொருள். மனதின் அடித்தளத்தை உணர்பவரை தெய்வத்திற்கு சமமாக கருதலாம் என்கிறார் தெய்வப்புலவர்.


தாயுமானவர்

மெய்ப்பொருள் உணர்ந்த மகான்களில் மிகவும் முக்கியமானவர் தாயுமானவர். அவரது பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த செல்வங்களாகும். தாயுமானவர் பாடல்களில் ' என் சுத்த அறிவான தெய்வமே...' என்ற வாக்கியம் திரும்ப திரும்ப வருகிறது.


திருமூலர்

திருமூலர் சித்தர் பரம்பரையில் தலையாய சித்தர். அறிஞர் அண்ணாவிடம் ஒருமுறை கேட்டார்களாம் தமிழில் உங்களுக்கு பிடித்த நூல் எதுவென்று. அண்ணா ஒரு நாத்திகவாதி. கேள்வி கேட்டவர் நினைத்திருப்பார், திருக்குறள் என் அண்ணா பதில் சொல்வாரென. ஆனால் அண்ணா சொன்ன பதில் ' திருமந்திரம் ' .

திருமந்திரத்தில் ' அறிவே தெய்வம் ' , ' அன்பே சிவம் ' , ' தன்னையறிந்த தத்துவஞானிகள் ' போன்ற வார்த்தைகள் வருகின்றன. உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று, உடம்பை யானிருந்து ஓம்புகின்றேனே என்ற பாடல் புகழ் பெற்றதல்லவா?


பட்டினத்தார்

ஊணுக்குள் நீ நின்று உலாவினதை அறியாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே - இது பட்டினத்தார்.


இராமலிங்க சுவாமிகள்

ராமலிங்கரின் பாடலை படித்தால் உள்ளம் உருகிவிடும். பக்தி பரவசம் தானாகவே மனதில் பொங்கும். திருவருட்பாவில் ' என் உள்ளத்தில் நடனமாடும் அருட்பெரும்ஜோதி.....' என்ற வாக்கியத்தை மீண்டும் மீண்டும் வள்ளலார் உபயோகபடுத்துகிறார்.


யேசுநாதர்

' தேவனின் அரசாட்சி உங்களுக்குள்ளயே உள்ளது ' .
' நானும் என் பிதாவும் ஒன்றே '.
' தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் இறைவனை காண்பர் '.

- புனித நூலான பைபிளில் வரும் இவ்வாக்கியங்களுக்கு பதவுரையே தேவை இல்லை.
தெளிவாக புரியும்படிதானே யேசுநாதர் கூறியிருக்கிறார்.


மகாகவி பாரதியார்

பாரதியார் நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் முழங்குகிறார்.

அறிவே தெய்வம் என்ற தலைப்பில் வரும் பாட்டில் ' சுத்த அறிவே சிவம் என்ற சுருதி கேளீரோ ' என்றும் ' அறிவொன்றே தெய்வம் ' என்றும் கூறுகிறார்.

பரசிவம் வெள்ளம் என்ற தலைப்பில் வரும் பாட்டில் உண்மையை போட்டு உடைக்கிறார்.
' உள்ளும் புறமும் உள்ளதெலாம் தானாகும்
வெள்ளமென்று ஒன்று உண்டாம் அதை தெய்வம் என்பார் வேதியரே' ....சித்தர் பாடல்களை படிக்க படிக்க நன்றாகத்தான் இருக்கும். திகட்டவே திகட்டாது. ஆனால் அதிலென்ன பிரயோஜனம்? படித்து நமதாக்கி வாழ்கையில் பயன்படுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? எந்த ஒரு நூலையும் மேலோட்டமாக படிப்பதில் பயனில்லை. ஆழ்ந்து படிக்க வேண்டும். நூலாசிரியரின் மனநிலைக்கே சென்றால்தான் அவர் எந்த அர்த்தத்தில் எழுதினார் என்று அறிவுக்கு எட்டும். இல்லையானால், அரைவேக்காட்டுத்தனமான அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போக வேண்டியதுதான்.


சித்தரியல் என்பது சீரிய வாழ்க்கைமுறை என்பது ஒருசாரார் கருத்து. அதில் என்ன சந்தேகம்? சித்தர்கள் நித்திய கரும விதிகளை வகுத்துள்ளார்கள். அதாவது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், என்னென்ன அன்றாட பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும், எந்தெந்த உடல்வாகு (வாத, பித்த, கப ) உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் தவிர்க்க வேண்டும் என் வகுத்துள்ளார்கள். தூக்கம், உணவு, உடலுறவு இவற்றில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வகுத்துள்ளார்கள்.
ஆயுர்வேத மருத்துவத்தின் முதல் பகுதியில் இதுபற்றி விரிவாக வருகிறது. வள்ளலாரின் தத்துவங்களிலும் இதுபற்றி விரிவாக காணலாம். உதாரணமாக, மாதம் இரண்டு தடவை மட்டும் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறார்கள்.


சித்தர்கள் தத்துவம், ஆன்மிகம். இரண்டும் ஒன்றா? வேறு வேறா? இது ஒரு கேள்வி.
ஆன்மிகம் என்பது ஒரு பரந்த தலைப்பு. சித்தர்கள் என்பது ஒரு குழுவினரை குறிக்கும் அடையாள குறிப்பு. ஆன்மாவின் அடித்தளத்தை உணர்ந்து அதோடு லயமாக வேண்டும் என்பது பொருள். சித்தர்கள் தத்துவம், ஆன்மிகம் இரண்டும் வேறு வேறு நினைத்து குழம்பிக் கொள்ள கூடாது. ஆன்மா + இகம் சொல்லிலேயே அர்த்தம் உள்ளது. தமிழ் மொழியின் சிறப்பே சொல்லிலேயே பொருளையும் பொதித்து வைப்பத்துதான்.


சித்தர்கள் தத்துவத்தை ஒரே வாக்கியத்தில் கூற வேண்டுமானால் ' அறிவே தெய்வம் ' எனலாம் அல்லது ' அன்பே சிவம் ' எனலாம். என்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருத்தியிடம் ' அன்பே சிவம்'....இதை கூறியது யாரென்று தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு அவள் ' ஓ.....தெரியுமே......கமல்ஹாசன்தானே....' என்று ஒரு போடு போட்டாள். அப்படியே இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்.
எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...