Saturday, May 14, 2011

எது அழகு? - ஒரு மறுபார்வை.சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நீயா நானா? நிகழ்ச்சியில் எது அழகு? என்பது போன்றதொரு தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. ஒவ்வொரு பார்வையாளரும் ஒவ்வொருவிதமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அதில் அர்ச்சனா என்ற ஒரு பெண் கூறிய கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் கூறியது என்னவென்றால், அழகு என்பது நமக்கு நாமே மனதில் உருவாக்கி கொள்ளும் அல்லது உருவாகும் அபிப்ராயமே தவிர வேறொன்றுமில்லை என்றார்.


இதையொட்டி சிலநாட்கள் தொடர்ந்து நான் சிந்தித்து வந்தபோது எனக்கு சில சமூகநல நோக்கமுடைய கருத்துகள் கிடைத்தன. அவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.


அழகு என்ற அபிப்ராயம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகுவதற்கு சினிமாக்களும், நாடகங்களும், விளம்பரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இவ்வகையான கூத்துக்களில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் கோடிக்கணக்கான பணத்தை கூலியாக பெற்றுக்கொண்டு, வெட்கத்தை விட்டு, தங்களை கவர்ச்சியாகவும் திருத்தமாகவும் அலங்காரம் செய்துகொண்டு நடிக்கிறார்கள். ஆனால் உண்மையான தோற்றம் காணவே சகிக்காது. இந்த சினிமாக்களை தொடர்ச்சியாக பார்க்கும் மக்கள் , குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள், அவற்றில் மனம் லயித்து விடுகிறார்கள். அவற்றை உண்மை எனவே அடிமனதில் நம்பிவிடுகிறார்கள். இதுதான் அழகு, இதுதான் இன்பம் என்பதுபோன்ற அளவுகோல்களையும், ஒப்பீடுகளையும், அபிப்ராயங்களையும், முன்மாதிரிகளையும் மனதில் உருவாக்கிகொள்கிறார்கள். உதாரணமாக, இன்றைய கல்லூரி பெண்களுக்கு நடிகர் சூர்யாவை பிடித்திருக்கிறது. நாம் அழகை பற்றி மனதில் முன்கூட்டியே உருவாக்கிக்கொள்ளும் கருத்துகள் உண்மையான அழகை உணர்வதற்கு, ரசிப்பதற்கு, அனுபவிப்பதற்கு தடங்கலாக , மனதில் முடிச்சுகள் போல அமைந்துவிடுகின்றன.


ஆனால் உண்மை என்ன? ஒரு ஆணும் பெண்ணும் உடலோடு உடல் உரசும்போதும், சரசம் செய்யும்போதும், முத்தமிடும்போதும் உண்டாகும் இன்பம் எல்லா நாட்டினருக்கும், எல்லா இனத்தவர்க்கும் ஒன்றுதான்; பொதுவானதுதான். இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அழகைப்பற்றிய மனமுடிச்சுகள் உண்மை அழகை, இன்பத்தை உணரவொட்டாமல் செய்துவிடுகின்றன. இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம் என்பதைப்போலவே எல்லோருமே அழகானவர்கள் தான்.


ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவளுக்கு அழகில்லை அல்லது அழகு குறைச்சல் என்று சமுதாயத்தால் அறியப்படுவது ஒரு காரணம். இதை யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்தபோதிலும் யாரும் மறுக்க முடியாதல்லவா? எனக்கென்ன...இதெல்லாம் அவரவர்கள் பாடு....என பொதுவாக மக்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.


ஆனால் இறைவன் ஒதுங்கி விடுவதில்லை. ஒவ்வொரு மனிதமனத்தின் அடித்தள ஆற்றலாக இறைவனே இருப்பதால் , மனிதனின் எண்ண அலைகளுக்கு பேராற்றல் உண்டு. காலாகாலத்தில் திருமணமாகாத ஆண் பெண்களின் எண்ண அலைகள் பிரபஞ்ச வெளியில் பரவி , சகமனிதர்கள் ஒவ்வொருவரையும் தாக்கி ஒரு சிறு பாதிப்பையாவது உண்டாக்கிவிடுகிறது. அன்பே சிவம், அன்பே கடவுள் இந்த வாக்கியங்களை என் கட்டுரைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டிவருகிறேன். அன்பு என்ற உணர்வு ஒருவகையான பாய்மப்பொருள் போன்றது. ஓரிடத்தில் நிற்காமல் பாய்ந்தோடக்கூடியது. அதனால்தான் வள்ளுவர், ' அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ' என்கிறார். இயல்பாகவே மனிதமனத்தில் அன்பு நிறைந்திருக்கிறது.
வயதுக்கு வந்தபின் அன்பு பாய்ந்தோட வாழ்க்கைத்துணை வேண்டுமல்லவா? அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும், வாய்ப்பு வசதிகளும் கூடிவர வேண்டும். அழகை பற்றிய தவறான கருத்துக்களால் திருமணம் தடைபடுகிறது. அன்பு அடைபடுகிறது ; அடைபட்ட அன்பென்ற உணர்வு மனப்புழுக்கம், எரிச்சல், விரக்தி போன்ற மனக் குறைகளாக உருவெடுக்கிறது.


அழகைப்பற்றிய கற்பனையான எதிபார்ப்புகள், கவர்ச்சி, அலங்காரம், சினிமாக்கள் இவற்றை சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். திரைப்படங்களை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் யதார்த்தமான திரைப்படங்களை எடுக்க ஊக்கமும், ஆக்கமும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கிடைத்தற்கரிய இவ்வரிய மானிடபிறவியை முறையாக,நிறைவாக அனுபவிக்க முடியும். எப்படியானாலும் இதுபோன்ற திட்டங்களை படிப்படியாகத்தான் நடைமுறைக்கு கொண்டுவரமுடியும்.


நிறைவாக: அழகு என்பது மனதில் உருவாகும் ஓர் ஒப்பீட்டு அபிபராயமே தவிர நிலையான பொருளல்ல. அனுபவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், பழக்கம் ,குணம் இவற்றிற்கேற்ப அழகு மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக, நாம் முதன்முதலில் சந்திக்கும் நண்பர்கள் அழகில்லாதவர்கள் போல தோன்றினாலும் அவர்களுடன் பழக பழக ,தோற்றம் மறைந்து நாளடைவில் அழகாகவே தெரிவ்வர்கள். இதற்கு காரணம் அவரகளுடன் தொடர்பு கொள்ள கொள்ள , இருவரிடையே ஒத்திசைவு ஏற்பட்டு, நாம் அவர்களின் வாயிலாக பெறும் அனுபவங்கள் மனதில் இனிமையான் எண்ணத்தை உருவாக்கி விடுகின்றன. இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடியதுதான்.


இதற்குமேல் விரிவாக, ஆழமாக சிந்தத்து நடைமுறைத் திட்டங்களை வகுக்கவேண்டியது அறிஞர்கள், சிந்தனையாளர்களின் கடமையாகும். அறிஞர்கள், சிந்தனையாளர்கள் என்றால் யாரோ அல்ல. நாம்தான் சிந்தனையாளர்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற அனைவருமே சிந்தனையாளர்கள்தாம். எனவே வருங்கால உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ ஒவ்வொருவரும் தங்கள் பொன்னான நேரத்தில் சிறிது செலவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

2 comments:

 1. தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
  அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

  http://tamilthirati.corank.com/

  தங்கள் வருகை இனிதாகுக

  ReplyDelete
 2. அழகு குறித்து ஒரு அழகிய சிந்தனை!

  ReplyDelete

நமது மண்டையை அலசும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள்....

மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை விமானத்திலுள்ள  Black Box  போன்று கருதுகிறார்கள். மூளையானது பலகோடி நியூரான் எனப்பட...