Friday, April 29, 2011

சுபா என்ற ஒரு சிறந்த கதாசிரியர் !நான் சிறுவனாக இருந்தபோது தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலரை படித்து படித்துதான் தமிழ் படிக்க கற்றுக்கொண்டேன். சிறிது வளர்ந்தபிறகு, காமிக்ஸ் புத்தகங்கள் மீது என் கவனம் திரும்பியது. லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்றவற்றில் வரும் சாகசக்கதைகள் மீது எனக்கு ஒரு காதலே இருந்தது. சிலவருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து ராஜேஷ் குமார் நாவல்களை படிக்க துவங்கினேன். எல்லாம் நண்பர்கள் மூலம் அறிமுகமானவைதான். ராஜேஷ் குமார் ஒரு சிறந்த சஸ்பென்ஸ் கதை எழுத்தாளர் ஆவார். அவர் கதைகளில் வரும் அலுமினியப் பறவை என்ற ஒரு வார்த்தை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அதாவது விமானத்தை அலுமினிய பறவை என்று வர்ணிப்பார். ஆனாலும் ராஜேஷ் குமார் கதைகளில் எனக்கு ஏதோ குறைவதாக தோன்றியது. ரா.குமார் நாவல்களில் ஒரு ஜோடி வருவார்கள். விவேக்-சுசீலா என்று நினைக்கிறேன். இருவரும் எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அதாவது துப்பறியும் வேலையை மட்டும் செய்வார்கள். ரொமான்ஸ் என்பது தப்பி தவறி கூட இருக்காது.


அதே சில வருடங்களில் சுபா என்றவொரு எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார்.
சுரேஷ்-பாலா என்ற இரு நபர்கள் சேர்ந்துதான் சுபா. சுபாவின் கதைகள் நிறைய படித்து இருக்கிறேன். ஆனால் ஒரு தலைப்புகூட நினைவிலில்லை. ஆனால் அவர் கதை எழுதும் விதமும், வசனங்களும், சுபாவின் கதை வடிவமும் நன்றாகவே நினைவில் இருக்கிறது. சுபாவின் கதைகள் ர.குமார் கதைகள் போன்றவை அல்ல. சஸ்பென்ஸ், சாகசம், ரொமான்ஸ், காமெடி,செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த கதைகள்தான் சுபா நாவல்கள். ரொமான்ஸ் சற்று தூக்கலாகவே இருக்கும். நாசூக்காக இரட்டை அர்த்த வசனங்களை எழுதுவார். ஹீரோவும்,ஹீரோயினும் ஒரே நேரத்தில் ஒரே சாக்லேட்டை சாப்பிடுவது, மோப்பம் பிடிப்பது இவற்றை சுபா நாவல்களில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். ராணுவத்தை பின்புலமாக வைத்து கதைகள் எழுவதில் சுபாவை மிஞ்சமுடியாது. சுபாவின் காதல் கதைகள் நினைவைவிட்டு அகலாதவண்ணம் உருக்கமாக இருக்கும்.


ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு கனா கண்டேன் என்ற ஒரு திரைப்படம் வந்தது. அதற்கு கதை,திரைக்கதை, வசனம் ஆகிய மூன்றும் எழுதியது சுபா என்ற ஒரே காரணத்திற்காக சென்றேன். திண்டுகல்லில் ஒரு சுமாரான தியேட்டரில் போட்டிருந்தார்கள். தியேட்டருக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஒரே திகைப்பு. ஏனெனில் உள்ளே இருபது பேர்தான் இருந்தார்கள். ஆனால் கதை மிக அருமையாக இருந்தது.
படத்தின் ஹீரோ ஒரு பி.ஹெச்டி. மாணவர் உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சாதனத்தை கண்டுபிடிக்கிறார். இதை எப்படி கந்துவட்டி, தாதா இவற்றோடு இணைப்பது ? கதையின் ஊடாக ஒரு அழகான காதலும் வருகிறது. இந்த மூன்று நூல்களையும் அழகாக சிக்கலில்லாமல் கோர்த்து ஒரு திரைக்கதையாக்க சுபாவால் மட்டுமே முடியும்.


சுபாவின் அடுத்த படமான அயன் படு அமர்க்களம். வித்யாசமான கதைபின்னனியில் விறுவிறுப்பான திரைக்கதையோடு சூர்யா, தமண்ணா இவர்களோடு படம் வெற்றியை
உறுதி செய்தது. சுபாவின் கதையென்றால் தாராளமாக நம்பி செல்லலாம் என என் நண்பர்களிடம் சொல்வேன். சமீபத்தில் வெளியான கோ திரைப்படமும் அதே அயன் பாணியிலான கதைதான். கதையின் ஹீரோ ஒரு பத்திரிகை போட்டோகிராபர். படம் சூப்பராக ஓடுகிறது. ஆனால் கனா கண்டேன் என்ற கதைக்கும், அயன் கோ போன்ற கதைகளுக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் தெரிகிறது. கனா கண்டேன் ஒரு தெளிந்த நீரோடை போன்ற ஒரு அழகான திரைக்கதை . அயன், கோ போன்றவற்றில் மாசாலாக்கள் அதிகம். ஒருவேளை படத்தை வெற்றிகரமாக ஓடச்செய்யும் உத்தியாக இருக்கலாம். எப்படி என்றாலும் சுபாவின் கதைகள் உற்சாகம், பொழுதுபோக்கு ஆகியவற்றிகு உத்திரவாதம்.


சுபாவின் நாவல்களை படிக்கும்போதே அது ஒரு சினிமா போலத்தான் இருக்கும். மனக்கண்ணில் ஒரு திரைப்படம் போல ஓடும். அயன் படம் முழுவதும் தமன்னா ஒரு பாவாடையும், டி சர்ட்டும் அணிந்திருப்பார். இது அப்படியே அவரது நாவல்களில் வரும் டிபிக்கல் ஹீரோயின். படத்திலும் அப்படியே கொண்டுவந்து விட்டார்கள்.


தமிழ் சினிமாவிற்கு சுபாவின் வருகை ஆரோக்கியமான ஒன்றாகும் . கதையே கிடைக்காமல் தமிழ் சினிமாவில் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கிறார்கள். அமரர் சுஜாதாவை போல் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமிக்க இடத்தை பிடிக்க சுபாவிற்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...