Friday, April 15, 2011

ஜென் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.பல ஆண்டுகளுக்கு முன்பு தினமலரில் ஒரு ஜென் கதையொன்றை படித்தேன். அப்போது எனக்கு அவ்வளவாக ஆன்மீகத்தில் பரிச்சயம், ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்கதையை படித்தவுடன் இனம்புரியாத ஒரு பரவசமும், திகைப்பும் ஏற்பட்டது. ஏனெனில் வாழ்க்கையின் ஏதோவொரு ரகசியத்தை மிக எளிதாக அக்கதை விளக்கியது. உடனே எனக்கு அதுபோன்ற கதைகளை படிக்கவேண்டும் என ஆர்வம் மேலிட்டது. சென்னையில் அப்போது படித்து வந்த என் பால்யகால சிநேகிதன் கண்ணனிடம் ஒரு ஜென் கதைகள் புத்தகம் வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டேன். அவனும் சிலநாட்களில் ஜென் கதைகள் என்ற ஒரு புத்தகம் வாங்கி எனக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பிவைத்தான். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அப்புத்தகம் சாரமே இல்லாமல் சாதாரண பீர்பால் கதைபுத்தகம் போல இருந்தது. எனக்கு மிகுந்த ஏமாற்றம். பிறகுதான் அறிந்தேன், ஜென் கதைகளை ஏராளமான பதிப்பகங்கள் வெளியிடுகின்றன என்றும், நல்ல தரமான ஜெ.க. புத்தகங்களை சில பதிப்பகங்களே வெளியிடுகின்றன என அறிந்தேன்.


சிலநாட்களுக்கு முன்பு எங்கள் ஊரில் ஒரு புத்தககடையில் பாடப்புத்தகம் ஒன்று வாங்க சென்றிருந்தேன். அந்தப்புத்தகம் மட்டும் கடையில் இல்லை. வேறுசில நல்ல நூல்கள் கிடைத்தன. என் நண்பர் சரவணாவின் அம்மாவிடம் சுந்தரகாண்டம் புத்தகம் வாங்கித்தருவதாக சொல்லியிருந்தேன். சுந்தரகாண்டமும், எனக்கு சிலநூல்களும், ஒரு அற்புதமான ஜென் புத்தகமும் வாங்கினேன்.


தத்துவத்தை பொதுவாக இந்தியத் தத்துவம், மேல்நாட்டுத் தத்துவம் என இருவகையாக பிரிப்பர். தத்துவம் என்ற சொல்லின் பொருள், மெய்ப்பொருளை தேடுவதாகும். புரியும் வார்த்தைகளில் சொன்னால், இறைவனை தேடுவதாகும். இந்தியத் தத்துவம் எனபது அகமுகமாக ஆராய்ந்து கொண்டே செல்வது. மேல் நாட்டுத்தத்துவம் என்பது வெளிப்புறமாக தேடுவது. எடுத்த எடுப்பிலே இந்தியத் தத்துவத்தை ஒருவர் படிக்க துவங்கினால் அவர் மூளை குழம்பி பைத்தியமாவது நிச்சயம். மேல்நாட்டு தத்துவம் ஓரளவு புரிந்து கொள்வது எளிது.


ஜென் எனபது ஒரு மதமல்ல. அதில் சடங்குகளோ, வழிபாடுகளோ ஏதுமில்லை. கடினமான தத்துவ விளக்கங்கள் ஏதும் ஜென்னில் கிடையாது. இதுதான் இறைவன் என்றோ இதுதான் இறைவனை அடையும் வழிஎன்றோ ஜென் குறிப்படுவதில்லை. பொதுவாக புத்தமத கருத்துகளை ஜென் என நினைப்பார் உண்டு. ஆனால் அப்படியல்ல. ஜென் தத்துவங்களில் புத்தரும் ஒரு ஜென் துறவியாக வருகிறார். ஜென் தத்துவத்தின் சாராம்சம் இதுதான் : " நீ நீயாக இரு.......இயல்பாக இரு...... அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.....கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.....எளிமையாக இரு. நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது - இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்ன்னின் சிறப்பு அம்சங்களாகும்.


ஒரு சிறிய ஜென் தத்துவத்துடன் இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.

பசித்தால் சாப்பிடு...
தூக்கம் வந்தால் தூங்கு....


பின்குறிப்பு: நான் இக்கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில்தான் தெரிந்தது நாளை மாகாவீரர் ஜெயந்தி என்று !


4 comments:

 1. பசித்தால் சாப்பிடு...
  தூக்கம் வந்தால் தூங்கு....


  .....அதை பற்றி பதிவு ஒன்ற போட நினைத்தால் போடு....
  அதை வாசித்து விட்டு, பின்னூட்டம் தோன்றினால் இடு..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...

  ReplyDelete
 2. எளிமையாக ...அருமையாக பதிவில் ஜென் தத்துவத்தின் சாரம்சத்தை தொகுத்து தந்தற்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 3. // அந்தக்கதையை படித்தவுடன் இனம்புரியாத ஒரு பரவசமும், திகைப்பும் ஏற்பட்டது. ஏனெனில் வாழ்க்கையின் ஏதோவொரு ரகசியத்தை மிக எளிதாக அக்கதை விளக்கியது. ///

  கடைசிவரை அந்த கதையை சொல்லாமல் விட்டது? ...ஓஹோ.........நங்கள் அதனை தேடி பிடித்து படிக்கவேண்டும் அப்படித்தானே?:))))
  நீங்கள் ஏன் ஜென் கதைகளை இங்கு பதிவுகளாக எழுதக்கூடாது? தமிழ் பிளாக்கில் அப்படி எழுதுவதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் கூட நீங்கள் எழுதலாம் அல்லவா?
  நல்ல இடுகை.

  ReplyDelete
 4. இரத்தின சுருக்கமா தத்துவத்தை சொல்லிடிங்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...