Friday, April 29, 2011

சுபா என்ற ஒரு சிறந்த கதாசிரியர் !நான் சிறுவனாக இருந்தபோது தினமலருடன் இணைப்பாக வரும் சிறுவர்மலரை படித்து படித்துதான் தமிழ் படிக்க கற்றுக்கொண்டேன். சிறிது வளர்ந்தபிறகு, காமிக்ஸ் புத்தகங்கள் மீது என் கவனம் திரும்பியது. லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் போன்றவற்றில் வரும் சாகசக்கதைகள் மீது எனக்கு ஒரு காதலே இருந்தது. சிலவருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து ராஜேஷ் குமார் நாவல்களை படிக்க துவங்கினேன். எல்லாம் நண்பர்கள் மூலம் அறிமுகமானவைதான். ராஜேஷ் குமார் ஒரு சிறந்த சஸ்பென்ஸ் கதை எழுத்தாளர் ஆவார். அவர் கதைகளில் வரும் அலுமினியப் பறவை என்ற ஒரு வார்த்தை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அதாவது விமானத்தை அலுமினிய பறவை என்று வர்ணிப்பார். ஆனாலும் ராஜேஷ் குமார் கதைகளில் எனக்கு ஏதோ குறைவதாக தோன்றியது. ரா.குமார் நாவல்களில் ஒரு ஜோடி வருவார்கள். விவேக்-சுசீலா என்று நினைக்கிறேன். இருவரும் எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அதாவது துப்பறியும் வேலையை மட்டும் செய்வார்கள். ரொமான்ஸ் என்பது தப்பி தவறி கூட இருக்காது.


அதே சில வருடங்களில் சுபா என்றவொரு எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார்.
சுரேஷ்-பாலா என்ற இரு நபர்கள் சேர்ந்துதான் சுபா. சுபாவின் கதைகள் நிறைய படித்து இருக்கிறேன். ஆனால் ஒரு தலைப்புகூட நினைவிலில்லை. ஆனால் அவர் கதை எழுதும் விதமும், வசனங்களும், சுபாவின் கதை வடிவமும் நன்றாகவே நினைவில் இருக்கிறது. சுபாவின் கதைகள் ர.குமார் கதைகள் போன்றவை அல்ல. சஸ்பென்ஸ், சாகசம், ரொமான்ஸ், காமெடி,செண்டிமெண்ட் அனைத்தும் கலந்த கதைகள்தான் சுபா நாவல்கள். ரொமான்ஸ் சற்று தூக்கலாகவே இருக்கும். நாசூக்காக இரட்டை அர்த்த வசனங்களை எழுதுவார். ஹீரோவும்,ஹீரோயினும் ஒரே நேரத்தில் ஒரே சாக்லேட்டை சாப்பிடுவது, மோப்பம் பிடிப்பது இவற்றை சுபா நாவல்களில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். ராணுவத்தை பின்புலமாக வைத்து கதைகள் எழுவதில் சுபாவை மிஞ்சமுடியாது. சுபாவின் காதல் கதைகள் நினைவைவிட்டு அகலாதவண்ணம் உருக்கமாக இருக்கும்.


ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு கனா கண்டேன் என்ற ஒரு திரைப்படம் வந்தது. அதற்கு கதை,திரைக்கதை, வசனம் ஆகிய மூன்றும் எழுதியது சுபா என்ற ஒரே காரணத்திற்காக சென்றேன். திண்டுகல்லில் ஒரு சுமாரான தியேட்டரில் போட்டிருந்தார்கள். தியேட்டருக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஒரே திகைப்பு. ஏனெனில் உள்ளே இருபது பேர்தான் இருந்தார்கள். ஆனால் கதை மிக அருமையாக இருந்தது.
படத்தின் ஹீரோ ஒரு பி.ஹெச்டி. மாணவர் உப்புத்தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சாதனத்தை கண்டுபிடிக்கிறார். இதை எப்படி கந்துவட்டி, தாதா இவற்றோடு இணைப்பது ? கதையின் ஊடாக ஒரு அழகான காதலும் வருகிறது. இந்த மூன்று நூல்களையும் அழகாக சிக்கலில்லாமல் கோர்த்து ஒரு திரைக்கதையாக்க சுபாவால் மட்டுமே முடியும்.


சுபாவின் அடுத்த படமான அயன் படு அமர்க்களம். வித்யாசமான கதைபின்னனியில் விறுவிறுப்பான திரைக்கதையோடு சூர்யா, தமண்ணா இவர்களோடு படம் வெற்றியை
உறுதி செய்தது. சுபாவின் கதையென்றால் தாராளமாக நம்பி செல்லலாம் என என் நண்பர்களிடம் சொல்வேன். சமீபத்தில் வெளியான கோ திரைப்படமும் அதே அயன் பாணியிலான கதைதான். கதையின் ஹீரோ ஒரு பத்திரிகை போட்டோகிராபர். படம் சூப்பராக ஓடுகிறது. ஆனால் கனா கண்டேன் என்ற கதைக்கும், அயன் கோ போன்ற கதைகளுக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் தெரிகிறது. கனா கண்டேன் ஒரு தெளிந்த நீரோடை போன்ற ஒரு அழகான திரைக்கதை . அயன், கோ போன்றவற்றில் மாசாலாக்கள் அதிகம். ஒருவேளை படத்தை வெற்றிகரமாக ஓடச்செய்யும் உத்தியாக இருக்கலாம். எப்படி என்றாலும் சுபாவின் கதைகள் உற்சாகம், பொழுதுபோக்கு ஆகியவற்றிகு உத்திரவாதம்.


சுபாவின் நாவல்களை படிக்கும்போதே அது ஒரு சினிமா போலத்தான் இருக்கும். மனக்கண்ணில் ஒரு திரைப்படம் போல ஓடும். அயன் படம் முழுவதும் தமன்னா ஒரு பாவாடையும், டி சர்ட்டும் அணிந்திருப்பார். இது அப்படியே அவரது நாவல்களில் வரும் டிபிக்கல் ஹீரோயின். படத்திலும் அப்படியே கொண்டுவந்து விட்டார்கள்.


தமிழ் சினிமாவிற்கு சுபாவின் வருகை ஆரோக்கியமான ஒன்றாகும் . கதையே கிடைக்காமல் தமிழ் சினிமாவில் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கிறார்கள். அமரர் சுஜாதாவை போல் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமிக்க இடத்தை பிடிக்க சுபாவிற்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.

Saturday, April 23, 2011

ஆராதனா...
புதிதாக பூமியில் பூத்த சின்னமலர்..
புதுமையும் பழமையும் கலந்த பெயர்..
புதுப்புது பாடங்கள் பலநீ கற்றாலும்
புனிதமுள தெய்வம் எல்லாவிடத்தும்
புதினம்போல் இருந்துகொண்டு இயங்குவதை
புறத்தே தேடாமல், சரவணன்-தர்மாபாய்
புதல்வி ஆராதனா உள்ளுணர்வாய் பெற்று
பூரித்தே சிறப்பாக வளர்ந்து வாழ வேண்டும் !


-லிங்கேஸ்வரன்.

Photo: Model.

Tuesday, April 19, 2011

வேதாத்திரி மகரிஷிக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை...?உலக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கும் சமயத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கு, நேரு, நேதாஜி, வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட உலகப் பெருந்தலைவர்கள் ஏராளமான பேர் நோபல் கமிட்டிக்கு சிபாரிசு கடிதம் அனுப்பினார்களாம். தாகூர் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கே உலக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாகூர் ஒரு மகாகவி என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நேரத்தில் மதுரை அரசடியில் பாரதியார் புலம்பிக் கொண்டிருந்தாராம். பாரதியாருக்காக பரிந்துரைக்க ஒரு ஆள் கூட இல்லை. ஆனால் பாரதியை போல ஒருவர் கவி எழுத முடியுமா எனத்தெரியவில்லை. பாரதியாரின் கவிதைகளை மடைதிறந்த வெள்ளம் என்று கூட சொல்லமுடியாது. காட்டாற்று வெள்ளம் என்றுதான் சொல்லவேண்டும். பாரதியாரின் இளையமகள் திருமதி. சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை எனும் அபூர்வ புத்தகம் என்னிடம் உள்ளது. அதைப்படித்தால், பாரதியார் வாழ்க்கை முழுவதுமே மிகுந்த சிரமத்திற்கிடையே தான் வாழ்ந்திருக்கிறார் எனத்தெரிகிறது. ரத்தக்கொதிப்பு போன்ற உடல் உபாதைகளாலும், மனக்கொதிப்பிலும், வெள்ளையர்களின் நெருக்கடிகளுக்கு இடையேயும்தான் அவர் வாழ்ந்திருக்கிறார். அதுபோன்ற நிலையிலும் அவர்...... ' எத்தனை கோடி இன்பம் வைத்தாய்.....எங்கள் இறைவா.....! ' என்று பாடியிருக்கிறார். இந்த ஒற்றைவரியில் எத்தனை அர்த்தங்கள் உள்ளன என யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பாரதியார் எந்த யோகமும் பழகியதில்லை.
ஆனாலும் உள்ளுணர்வு நிலையில் அவர் வடித்த கவிதைகள் விரைந்தோடும் ஆறு போல் பாய்ந்தாலும் கச்சிதமாகவே அமைந்திருக்கின்றன. உலக சமுதாயமானது, சமகாலத்தில் வாழும் கர்மவீரர்களையும், ஞானிகளையும், மகாகவிகளையும் என்றுமே அடையாளம் கண்டுகொண்டதில்லை; அங்கீகரித்ததில்லை.


வேதாத்திரி மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவுத்திருகோயிலில் ஒரு இரவு நேரத்தில் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது அவருக்குமுன் ஒரு ஒருவம் நிற்பதை உணர்ந்திருக்கிறார். இவர் யாரோ என மகரிஷிக்கு மனதிற்குள் ஒரு கேள்வி. நான் போகர் என பதில் வந்திருக்கிறது. போகர் மகரிஷியிடம், நான் உனக்கு நான்கு வரங்கள் தருகிறேன்.....நீண்ட நாட்களாக உன்னை வருத்தும் வயிற்றுப்புண் குணமாதல், அறிவுத்திருக்கோயிலை விரைவில் கட்டிமுடித்தல், உனது மனவளக்கலையை உலகம் முழுவதும் பரப்ப வழி செய்தல், உலகத்துக்கே தொண்டு செய்யும் உனக்கு உலகப்பரிசு கிடைக்க உதவி செய்தல் என்பவையே அவை எனக்கூறி கணப்பொழுதில் போகர் மறைந்து விட்டாராம். இந்நிகழ்வை மகரிஷி ஒரு நூலில் கவியாக குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தவுடன் எல்லோருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. வேதாத்திரி மகரிஷிக்கு, உலக அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் நன்னாளை எதிர்பார்த்து காத்திருந்தோம். போகரே சொல்லிவிட்டார் அல்லவா? மேலும் மகரிஷியின் வயிற்றுபுண் சிலநாட்களிலேயே சரியாகிவிட்டது, கட்டிமுடிக்காமல் இருந்த அறிவுத்திருக்கோயிலும் தடங்கலின்றி கட்டி முடிக்கப்பட்டது. அவரது மனவளக்கலையும் விரைவாக உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. தற்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைத்து பல்கலைகழகங்களும் மனவளக்கலையை அங்கீகரித்து டிப்ளமா, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளாக தனியாகவே வழங்கிவருகின்றன. இந்தநிலையில் மகரிஷி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி இடி போன்று இறங்கியது. மனவளக்கலை அனபர்கள் எல்லோரும் மிகுந்த துயர் அடைந்தனர்.


வேதாத்திரி மகரிஷிக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்க வேண்டும்? அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என சிலர் நினைக்கிறார்கள்? வேதாத்திரி மகரிஷியின் சீடனான நான் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சுருக்கமாகவே கூறுகிறேன். வேதாத்திரி மகரிஷி ' எளியமுறை உடற்பயிற்சி ' என ஒரு உடற்பயிற்சி தொகுப்பை உருவாக்கியுள்ளார். பார்ப்பதற்கு சாதரணமாக , எளிமையாக தோன்றும். சும்மா கை, காலை சுத்துவதுபோல இருக்கும். ஆனால் நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு திறமையான மருத்துவரும், ஒரு அறிவியல் நிபுணரும் சேர்ந்துதான் அப்பயிற்ச்சியை வடிவமைக்கமுடியும் எனப்புரியும். ஏராளமான நோய்களை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் கூடிய வல்லமை படைத்தது எளியமுறை உடற்பயிற்சி. பலன் பெற்றோர், பெற்றுக்கொண்டிருப்போர் லட்சக்கணக்கான பேர்.


அடுத்தது காயகல்ப பயிற்சி. பெயர்தான் ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆனால் கீர்த்தி மிகப்பெரியது. முறையான கால இடைவெளியில்லாமல் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு ஈடுபட்டு விந்தை செலவழித்து ஓட்டாண்டி ஆனவர்கள் உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள் . முறைகேடான உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டு நரம்புகள் தளர்ந்து, மூளை மழுங்கி போனவர்களுக்கும் குறைவில்லை. இதுபோன்ற இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்தில் உடல்நலனை மீட்டு உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை அளிக்க கூடியது காயகல்ப யோகம். காயகல்பம் என்பது மருந்தல்ல. ஒரு எளிமையான மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றதுதான். காயகல்ப யோகம் என்பது ஒருவரின் வாழ்க்கையே மாற்ற கூடிய வரம் போன்றது.


அடுத்தது தற்சோதனை என்ற மனப்பயிற்சி. வேதங்கள் 'அகம் பிரமமாம் ஸ்மி ' என்கின்றன. ஜீசஸ் கிறிஸ்ட் ' தேவனின் அரசாட்சி உங்களுக்குள்ளேயே உள்ளது ' என்கிறார் ' புனித நூலான பைபிளில். ஆனால் ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற எண்ணங்கள், பொறாமை, பேராசை, வெறுப்பு, முறையற்ற ஆசைகள், கற்பனையான எதிர்பார்ப்புகள், கவலைகள், சினம் இவற்றால் தங்களது மனதில் தாங்களே ஒரு திரையை போட்டுக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒவ்வாத எண்ணங்களை தானாகவே ஆராய்ந்து படிப்படியாக மனதை விட்டு நீக்கிகொண்டு சாந்தமான மனதையும், நிம்மதியான வாழ்வையும் அடைய உதவுவதே தற்சோதனை பயிற்சி. நவீன மொழியில் கூறினால் ' தனக்குத் தானே செய்துகொள்ளும் சைக்கோதெரபி ' என்று நான் தற்சோதனையை கூறுவேன். ஒரு தேர்ந்த உளவியல் மேதையால்தான் தற்சோதனை பயிற்ச்சியை உருவாக்க முடியும்.


குண்டலினி யோகம் எனும் தியானமும் மனவளக்கலையில் கற்றுத்தரப்படுகிறது. இதைப்பற்றி தனியாக ஒரு பதிவே எழுத வேண்டும். அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை ஒரு அமைதியான நிலைக்கு கொண்டு வந்து, மனதின் இறுக்கத்தை தளர்த்தும் பயிற்சியே குண்டலினி யோகமாகும். இதில் மந்திரங்களோ, சிலை வணக்கமோ எதுவும் கிடையாது.


வேதாத்திரி மகரிஷி தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகள் உலக அமைதிக்கு பாடுபட்டார். அவர் வெறுமனே உலக அமைதி உலக அமைதி என கூவிக்கொண்டிருக்க்வில்லை. தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று தளங்களிலும் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கமாக ஆராய்ந்து அவற்றை நிரந்தரமாக தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்கினார். தனது மனவளக்கலை பயிற்ச்சிகள், உலக அமைதிக்கான கொள்கை கோட்பாடுகள், விஞ்ஞான கருத்துகள் இவற்றை உலகம் முழுவதும் பயணம் செய்து- பல்கலைகழகங்கள், அறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் இவற்றின் மூலமாக தொண்டாற்றினார். ஐ.நா. சபையில் கூட ஒருமுறை உரையாற்றியிருக்கிறார். வேதாத்திரி மகரிஷியின் எந்த ஒரு கருத்தோ, பயிற்சி முறையோ பகுத்தறிவுக்கும் அறிவியல் கண்ணோட்டத்திற்கும் புறம்பானது அன்று என்பது குறிப்பிடத்தக்கது. மனவளக்கலை என்பதை அனைத்து மதத்திற்கும் பொதுவாகவே மகரிஷி வடிவமைத்துள்ளார் எனபது மிகவும் சிறப்பாகும். தமிழிலும், ஆங்கிலத்திலும் சேர்த்து ஏறக்குறைய என்பது நூல்களை மகரிஷி எழுதியுள்ளார். அவர் தனது மறைவிற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக ஒரு நூலை எழுதி முடித்தார் என்ற செய்தி நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை.


வேதாத்திரி மகரிஷிக்கு நோபல் பரிசு கடைசிவரை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் அதுவும் ஒருநாள் தீர்ந்துவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு (!) கொடுத்தார்களே......அப்போதுதான் அது.....நல்லவேளை வேதாத்திரி மகரிஷிக்கு நோபல் பரிசு கொடுக்காமல் விட்டார்கள்......!!!

Friday, April 15, 2011

ஜென் தத்துவம் - ஓர் எளிய அறிமுகம்.பல ஆண்டுகளுக்கு முன்பு தினமலரில் ஒரு ஜென் கதையொன்றை படித்தேன். அப்போது எனக்கு அவ்வளவாக ஆன்மீகத்தில் பரிச்சயம், ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்கதையை படித்தவுடன் இனம்புரியாத ஒரு பரவசமும், திகைப்பும் ஏற்பட்டது. ஏனெனில் வாழ்க்கையின் ஏதோவொரு ரகசியத்தை மிக எளிதாக அக்கதை விளக்கியது. உடனே எனக்கு அதுபோன்ற கதைகளை படிக்கவேண்டும் என ஆர்வம் மேலிட்டது. சென்னையில் அப்போது படித்து வந்த என் பால்யகால சிநேகிதன் கண்ணனிடம் ஒரு ஜென் கதைகள் புத்தகம் வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டேன். அவனும் சிலநாட்களில் ஜென் கதைகள் என்ற ஒரு புத்தகம் வாங்கி எனக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பிவைத்தான். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அப்புத்தகம் சாரமே இல்லாமல் சாதாரண பீர்பால் கதைபுத்தகம் போல இருந்தது. எனக்கு மிகுந்த ஏமாற்றம். பிறகுதான் அறிந்தேன், ஜென் கதைகளை ஏராளமான பதிப்பகங்கள் வெளியிடுகின்றன என்றும், நல்ல தரமான ஜெ.க. புத்தகங்களை சில பதிப்பகங்களே வெளியிடுகின்றன என அறிந்தேன்.


சிலநாட்களுக்கு முன்பு எங்கள் ஊரில் ஒரு புத்தககடையில் பாடப்புத்தகம் ஒன்று வாங்க சென்றிருந்தேன். அந்தப்புத்தகம் மட்டும் கடையில் இல்லை. வேறுசில நல்ல நூல்கள் கிடைத்தன. என் நண்பர் சரவணாவின் அம்மாவிடம் சுந்தரகாண்டம் புத்தகம் வாங்கித்தருவதாக சொல்லியிருந்தேன். சுந்தரகாண்டமும், எனக்கு சிலநூல்களும், ஒரு அற்புதமான ஜென் புத்தகமும் வாங்கினேன்.


தத்துவத்தை பொதுவாக இந்தியத் தத்துவம், மேல்நாட்டுத் தத்துவம் என இருவகையாக பிரிப்பர். தத்துவம் என்ற சொல்லின் பொருள், மெய்ப்பொருளை தேடுவதாகும். புரியும் வார்த்தைகளில் சொன்னால், இறைவனை தேடுவதாகும். இந்தியத் தத்துவம் எனபது அகமுகமாக ஆராய்ந்து கொண்டே செல்வது. மேல் நாட்டுத்தத்துவம் என்பது வெளிப்புறமாக தேடுவது. எடுத்த எடுப்பிலே இந்தியத் தத்துவத்தை ஒருவர் படிக்க துவங்கினால் அவர் மூளை குழம்பி பைத்தியமாவது நிச்சயம். மேல்நாட்டு தத்துவம் ஓரளவு புரிந்து கொள்வது எளிது.


ஜென் எனபது ஒரு மதமல்ல. அதில் சடங்குகளோ, வழிபாடுகளோ ஏதுமில்லை. கடினமான தத்துவ விளக்கங்கள் ஏதும் ஜென்னில் கிடையாது. இதுதான் இறைவன் என்றோ இதுதான் இறைவனை அடையும் வழிஎன்றோ ஜென் குறிப்படுவதில்லை. பொதுவாக புத்தமத கருத்துகளை ஜென் என நினைப்பார் உண்டு. ஆனால் அப்படியல்ல. ஜென் தத்துவங்களில் புத்தரும் ஒரு ஜென் துறவியாக வருகிறார். ஜென் தத்துவத்தின் சாராம்சம் இதுதான் : " நீ நீயாக இரு.......இயல்பாக இரு...... அந்தந்த கணங்களில் உணர்ந்து வாழு.....கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் கெடுதல் செய்யாதே, நினைக்காதே.....எளிமையாக இரு. நான் என்ற முனைப்பை விட்டு உலக காரியங்களை செய்து வா. இயல்பாக, அமைதியாக, நிதானமாக இருப்பதே இறையுணர்வு. இதற்கென தனியாக இறைவனை துதிபாடுவது கூட வீண்வேலை. எதிர்பார்ப்பின்றி காரியங்களை ஆற்றி வா. எதிர்பாராமல் இருப்பதால் நடப்பது நடக்காமல் போகாது - இவைகளே ஜென் தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். உள்ளுணர்வால் வழிகாட்டப்பட்டு அது எதை செய்ய சொல்கிறதோ அதை இயல்பாக செய் என்கிறது ஜென். ஜென் துறவிகள் என்பவர்கள் எதையும் குறிப்பாக போதனை செய்ய மாட்டார்கள். சிறுசிறு கதைகள் மூலமாக, தங்களின் செயல்களின் மூலமாக - மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை, பிரபஞ்ச ரகசியங்களை விளங்க வைத்துவிடுவார்கள். ஜென் கதைகளை படித்தால் மனம் மிக லேசாகிவிடும். வாழ்க்கையின் சலிப்பான தருணங்களில், கஷ்டமான நேரங்களில் ஜென் கதைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பவையாகும். அமைதி, எளிமை, உண்மை, நேர்மை இவையே ஜென்ன்னின் சிறப்பு அம்சங்களாகும்.


ஒரு சிறிய ஜென் தத்துவத்துடன் இக்குறுங்கட்டுரையை முடிக்கிறேன்.

பசித்தால் சாப்பிடு...
தூக்கம் வந்தால் தூங்கு....


பின்குறிப்பு: நான் இக்கட்டுரையை எழுதி முடிக்கும் தறுவாயில்தான் தெரிந்தது நாளை மாகாவீரர் ஜெயந்தி என்று !


Thursday, April 7, 2011

சத்தமில்லாமல் முத்தமிட்டு...சத்தமில்லாமல் முத்தமிட்டுக் கொள்ளலாம் என்றேன்.
முத்தமிட்டு முத்தமிட்டே கொல்கிறாய் என்னை.
நித்தம்நித்தம் இதுவேண்டும் என்றேன் - உடம்புக்கு ஆகாது
யுத்தம்போல அவ்வப்போது மட்டும் போதும் என்கிறாய் !


-லிங்கேஸ்வரன்.

Wednesday, April 6, 2011

வேதாத்திரி மகரிஷி விடுவித்த எஞ்சின் புதிர்...!

நான் பி.இ. படிக்கும்போது எங்களுக்கு ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் என்ற சப்ஜக்ட் ஒரு ஆன்சிலரி பாடமாக இருந்தது. நான் படித்த பொறியியல் பிரிவு பெரும்பாலும் மேலாண்மை தொடர்பாகவே இருந்ததால் ஆட்டோமொபைலை நான் கண்டுகொள்ளவே இல்லை. அந்த பாடத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்றுதான் பாஸ் ஆனேன். மார்க் கூட வெறும் ஐம்பத்தி ஐந்துதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என் திறமையை. இது நடந்தது பைனல் இயர் பைனல் செமேஸ்டேரில். கடைசியில் தியரி பரீட்சைகளுக்கு முன் வைவா-வாய்ஸ் என ஒன்று நடக்கும். அதாவது நான்கு ஜாம்பவான்கள் (முனைவர்கள்) உக்காந்து கொண்டு கேள்வி கேட்டு மார்க் போவார்கள். அதில் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். ஏனென்றால் எனக்கு முன் இருந்த மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் சொந்த பாடத்திலிருந்தே கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தவர்கள் என்னுடைய முறை வரும்போது, அவர்களுக்கு போரடித்ததோ என்னவோ, ஆட்டோமொபைலிருந்து ஒரு கேள்வியை கேட்டு விட்டார்கள். கேள்வி மிகவும் எளிதானதுதான். நான்கு பேர்களில் ஒருவரான என் பேராசிரியர் ஒருவர்....அதான் மிகவும் ஈசியான கேள்விதானே.....சொல்லிவிட்டு போப்பா.....என்பதுபோல என்னைப் பார்த்துக் கொண்டே பின்னால் சாய்ந்து உட்கார்ந்தார். கேள்வி இதுதான்: டூ ஸ்ட்ரோக் எஞ்சினுக்கும் , போர் ஸ்ட்ரோக் எஞ்சினுக்கும் என்ன வித்யாசம்?.....நான் சிலநொடிகள் யோசித்து விட்டு.....தெரியல சார் என்றேன். அவ்வளவுதான்....நால்வரும் நிமிர்ந்து உட்காந்தார்கள். என்னப்பா இது தெரியலன்கிற? என்றார்கள். சார்....உண்மைலயே தெரியல சார் என்றேன். ஒருவர், எ காமன் மேன் வில் நோ இட்.....யு சே யு டோன்ட் நோ....என்றார். சரி....யு கேன் கோ என்றார்கள். எப்படியோ பிழைத்துப்போகிறான் என பாஸ் போட்டுவிட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அந்த கேள்வி மிக மிக அடிப்படையான கேள்வி என்றும், காமன் மேன் என்றால் பாமரன் என்று அர்த்தம் என்றும். எனக்கு ரொம்பக் கேவலமாக இருந்தது.அதன் பிறகு பலபல புத்தகங்களை வாங்கிப்படித்து என் ஆட்டோமொபைல் அறிவை (!) பெருக்கிக் கொள்ள முயன்றேன். எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. கடைசி முயற்சியாக ஆட்டோமொபைலின் அடிப்படைகள் என்ற எளிமையான புத்தகத்தை வாங்கினேன். சத்தியமாக அந்த புத்தகமும் எனக்கு விளங்கவில்லை. இறுதியில் எனக்கு நானே கூறிக் கொண்டேன். நமக்கு ஆட்டோமொபைல் துறையின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு மூளை இல்லை அல்லது அந்த துறையில் நமக்கு ஆர்வமும் ஈடுபாடும் இல்லை என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் உண்மை மிக ஆச்சர்யகரமாக வேறுவிதம் இருந்தது.வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். மகரிஷி உலகம் முழுவதும் தத்துவஞானியாகவே அறியப்படுகிறார். பொதுவாக எனக்கு எந்த சாமியார்களையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் பழக்கம் இல்லை. ஆனால் மகரிஷியை ஒரு ஏமாற்றுக்கார சாமியார் என்று என்னால் கூறிவிட முடியவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஏனெனில் அவரது புத்தகங்கள் அனைத்திலும் எலக்ட்ரான், நியுட்ரான், புரோட்டான், ஆற்றல், கிராவிட்டி, காந்த அலை இதுபோன்ற வார்த்தைகள் அடிக்கடி வந்துகொண்டே இருந்தன. ஒரு ஆன்மீகவாதி இவ்வாறு எழுதுவது எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள நான் எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகம் முதல் பி.எஸ்.சி., பொறியியல் புத்தகங்கள் வரை நான் ரெபர் செய்ய வேண்டியதாயிற்று. வேதாத்திரி மகரிஷி முறையாக எந்த படிப்பும் படித்தவர் கிடையாது. ஆனால் அவர் எழுதிய தத்துவ நூல்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள ஒருவர் சிறிதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வான சாஸ்திரம் மற்றும் உளவியலை போன்ற பல இயல்களின் அடிப்படைகளை தெரிந்திருக் வேண்டும். அந்த வகையில் நான் மிகவும் சிரமப்பட்டுத்தான் மகரிஷியின் தத்துவங்களை ஓரளவு புரிந்து கொண்டேன். எனக்கு சிறுவயதிலிருந்தே ஒரு மனக்குறை இருந்தது. அது என்னவென்றால், அறிவியல் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளும் திறமை நமக்கில்லையோ எனபதுதான் அது. அந்தக் குறையை மகரிஷிதான் தீர்த்து வைத்தார். பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்த கல்லூரி பேராசிரியர்களும் விளங்கவைக்கத் திணறும் அறிவியல், பொறியியல், உயிரியல் கருத்துக்களைஎல்லாம் அவர்தான் எங்கேயோ இருந்து கொண்டு எனக்கு கற்று கொடுத்தார். இத்தனைக்கும் அவரை ஒருமுறை கூட நான் நேரில் கண்டதில்லை. என் வாழ்க்கையே வேதாத்திரி மகரிஷி அவர்களின் எண்ணங்கள் தான் என்றால்கூட அது மிகையாகாது. சிறுவயதிலிருந்து கல்லூரி வரை நான் மிரண்டு போயிருந்த அறிவியல் கருத்துக்களெல்லாம் சிறிது சிறிதாக எனக்கு பிடிபட துவங்கின. அவ்வாறு வந்து கொண்டிருக்கும்போது ஆட்டோமொபைல் எஞ்சின் எப்படி இயங்குகிறது என்று நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த புதிரும் விடுபட்டுவிட்டது.
ஆ.மொபைல் என்ஜின்களில் பொதுவாக டூ ஸ்ட்ரோக் எஞ்சின் என்றும் போர் ஸ்ட்ரோக் எஞ்சின் என இரண்டு வகை உண்டு. மேலும் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் என பலவிதங்களில் வகைபடுத்தி படிப்பார்கள். ஆனாலும் அடிப்படை என்பது ஒன்றுதான். ஒரு ஆ.மொபைல் எஞ்சின் கீழ்க்கண்டவாறு இயங்குகிறது :

ஒரு இரும்பு சிலிண்டருக்குள் தலைகீழாக திரும்பிய டி வடிவிலான பிஸ்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஸ்டன் ஒரு நீண்ட ராடு (கம்பி) மூலமாக பல்சக்கரங்கள் எனப்படும் கியர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நாம் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்காக திறந்து விட்டவுடன் பெட்ரோல் ( அல்லது டீசல் ) சிறிது சிறிதாக பெட்ரோல் டாங்குக்குள் கசியத் துவங்குகிறது. நாம் கிக்கரை உதைக்கும்போது, இயந்திர ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு, ஸ்பார்க் பிளக்கில் ஒரு நெருப்புபொறி உண்டாகிறது. ஸ்பார்க் பிளக்கின் மற்றொரு முனை பெட்ரோல் டாங்குக்குள் இருக்கிறது. நெருப்புபொறி பட்டவுடன் பெட்ரோல் குபுக்கென பற்றி எரிய ஆரம்பிக்கிறது. வெப்பத்தால் விரிவடைந்த பெட்ரோல் அணுக்கள் பிஸ்டனை மேல் நோக்கி தள்ளுகின்றன. பிஸ்டன் மேலே சென்றவுடன் பிஸ்டனின் எடை மீண்டும் கீழே அழுத்துகிறது. இரண்டு தடவைகளில் பெட்ரோல் அணுக்கள் எரிந்து ஆற்றல முழுவதையும் இழந்து விட்டால் அது டூ ஸ்ட்ரோக் எஞ்சின், நான்கு தடவைகள் (ஒரு சுழற்சி எனபது ஒரு தடவை மேலே கீழே சென்று வருவது ) மேலும் கீழும் நகர்ந்து பிஸ்டன் வரும்வரை பெட்ரோல் அணுக்களில் ஆற்றல இருந்தால் அது போர் ஸ்ட்ரோக் எஞ்சின். பிஸ்டனின் மேல்-கீழ் அசைவுகளுக்கேற்ப அதனோடு ராடு மூலம் இணைக்கப்பட்ட கியர்கள் தொடச்சியாக சுழன்று வண்டியை ஓடச்செய்கின்றன. பெட்ரோல் தொடர்ச்சியாக கசிவதும், எரிவதும், ஆற்றலாக மாறுவதும் இடைவிடாமல் நடப்பதால் நாம் வண்டியை அணைக்கும் வரை வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.போர் ஸ்ட்ரோக் எஞ்சின்கள் அதிக மைலேஜும், டூ ஸ்ட்ரோக் எஞ்சின்கள் குறைவான மைலேஜும் தருபவை. சிலிண்டர், பிஸ்டன் இவைகளின் எடைகளை மாற்றி வடிவமைப்பதின் மூலமாக எஞ்சின்கள் வித்தியாசப்படுகின்றன. நாம் ஓட்டும் டி.வி.எஸ். வண்டிகள் டூ. ஸ்ட்ரோக் எஞ்சின்களையும், கியர் வண்டிகள் போர். ஸ்ட்ரோக் எஞ்சின்களையும் கொண்டவை. இப்போது சொல்லுங்கள்......அறிவியல் என்பது மிக எளிமைதானே......?
நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...