Wednesday, March 2, 2011

காவலன் - கோடை வெயிலில் ஒரு நிழல்!
போன வாரம் நானும் நண்பர் ஒருவரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தோம். நான் பயணம் போலாமா என்றேன். அவர் காவலன் போலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு காவலன் ஓடுவதே நினைவுக்கு வந்தது. படம் சுமாராகத்தான் போகிறது என்று கேள்விப்பட்டதால் அதை நான் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தியேட்டரில் போய் உட்கார்ந்தவுடன் எனக்கு கொட்டாவி வரத்துவங்கியது. பிரண்ட்ஸ் படம் எனக்கு மனதிலே இருந்தததால் சித்திக் படம் என்று எனக்கு ஆர்வமே வரவில்லை. பிரண்ட்சில் வடிவேலுவின் கூப்பாடு மிகவும் எரிச்சலை வரவைக்க கூடியது. அதே ஞாபாகத்தில் லேசாக தூங்க ஆரம்பித்துவிட்டேன். சிறிதுநேரத்தில்...ஆகா...ஏதோ ரொமான்ஸ் தெரிகிறதே....என நிமிர்ந்து உட்கார்ந்தேன். படம் போக போக என் மனது பதினைந்து வருடங்கள் பின்னோக்கி போக துவங்கியது. கடைசியில் திரையை மூடும் வரை எழுந்திருக்கவே இல்லை.அப்பாடா.....என்றிருந்தது.அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனெனில் கடைசியாக நான் பார்த்த மூன்று படங்கள் அப்படி. ஈசன், ஆடுகளம், யுத்தம் செய் என்பவைதான் அவை. ஒவ்வொரு படத்திலும் என்னவிதமான ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. கேட்டால் சமூகத்தில் நடக்கிறதைதானே எடுக்கிறேன் என்பார்கள். ஏசுவின் காலம் தொட்டே.....ஏன் ஆதிகாலம் தொட்டே சமூகத்தில் அக்கிரமங்களும், அநியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டினால் என்னவாகும்? மனிதன் எப்போதும் பழக்கங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமை. வேதாத்திரி மகரிஷி, மனிதனில் அடங்கியுள்ள மிருககுண பதிவுகள் சந்தர்ப்ப சூழ்நிலை வாய்த்திடில் எப்போதும் எழுச்சிபெற்றுவிடும் என்று எச்சரிக்கிறார்.இப்போது நடுநிசி நாய்கள் வெளிவந்துள்ளது. கதையெல்லாம் சரிதான். கேட்டால் சிக்மன்ட் பிராய்ட், ஜெயகாந்தன் என்பார்கள். இதுபோன்ற கதையையெல்லாம் சினிமாவாக எடுக்கும்முன் கெளதம் மேனன் சற்று யோசிக்கவேண்டும். நடுநிசி நாய்கள், வேட்டையாடு விளையாடு போன்ற சைக்கோ கதைகளை எதிர்கொள்ள நல்ல மனப்பக்குவமும், சிறிது மனோத்தத்துவமும் தெரிந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டில் எத்தனை இளம்பையன்களும், பெண்களும் பார்ப்பார்கள்? அவர்களுக்கெல்லாம் என்ன தோன்றும்? கெளதம் மேனன் தன் வீட்டுப் பிள்ளைகளையும் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.


இதுபோன்ற ஒரு இக்கட்டான தருணத்தில்தான் காவலன் பார்த்தேன். வெயிலில் அலைந்தது திரிந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒதுங்க நிழல் கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி குளிர்ச்சியாகவும், இதமாகவும் மனதிற்கு இருந்தது. பள்ளிப் பருவங்களில் விஜய் என் மனதிற்கு நெருக்கமாகவே இருந்தார். விஜயைப் போல நளினமான அசைவுகளுடன் நடனமாடும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை.பழைய படங்களில் காமெடி சீன்களில் ஆங்.......என்பார். செம நக்கலாக இருக்கும். பக்கவாட்டில் கிடைமட்டமாக கைகளை நீட்டிக் கொண்டு, தலையை இருபுறமும் ஆட்டுவது விஜய் ஸ்டைல். பூவே உனக்காகத்தான்...அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது.
உன்னை என்னும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது.
காற்று நின்று போனாலும்
காதல் நின்று போகாது....... இந்த வரிகள் இன்றும் நடுத்தரவர்க்க காதலர்களிடையே உலவுகிறது என்றே நினைக்கிறேன். அந்த பாடலில் வரும் ' மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது...சோகம்கூட சுகமாகும்....வாழ்க்கை இன்ப வரமாகும்......' என்ற வரிகளை கேட்கும்போது மனதில் ஏதோ நெருடலாக இருக்கிறது.


நான் பதினொன்றாவது படிக்கும்போது என நினைக்கிறேன். ஒருநாள் சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு போஸ்டரில் விஜயும், ஒரு பெண்ணும் கடற்கரை மணலில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பெண் சோகமான முகத்துடன் இருந்தார். சராசரியான முக லட்சணத்துடன் இருந்தாலும் எனக்கு அந்த நடிகையை பிடிந்திருந்த்தது. பக்கத்து வீட்டுப்பெண் போன்ற முகம். ஸ்கூலுக்கு சென்றவுடன்தான் தெரிந்தது....அது வேறு யாருமல்ல...ஷாலினிதான் என்று. அந்த படம் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதையில் தான் எல்லாமே துவங்கியது. படம் சூப்பராக இருக்கிறது எனக் கேள்விப்பட்டு முதல் வாரமே சென்றுவிட்டேன். முதல் இரண்டு தடவை டிக்கட்டே கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை அடித்து பிடித்து கவுண்டருக்குள் கையை விட்டுவிட்டேன். வெளியே எடுக்கும்போது டிக்கட் வரவில்லை. கைகளில் சிராய்ப்பு தான் இருந்த்தது. பிறகு திட்டமிட்டு, முன்கூட்டியே சென்று, டிக்கட் எடுத்து நான்கு தடவையோ ஐந்து தடவையோ தியேட்டரிலயே படத்தை பார்த்துவிட்டேன். அதற்கும் காரணம் இல்லாமலில்லை. ' என்னை தாலாட்ட வருவாளோ.....' என்ற பாடல்தான் அனைத்திற்கும் காரணம். ஒரு பெண்ணின் இதழை சுவைத்த ஆண் மகன் போல...அந்த பாடலுக்காகவே மீண்டும் மீண்டும் கா.மரியாதையை பார்த்தேன். ஹரிஹரனின் தேன்சொட்டும் குரலும், இளையராஜாவின் இசையும் அப்போதுதான் எனக்கு நன்றாக அறிமுகமாயின.


என்னைத் தாலாட்ட வருவாளோ......இந்த வரிகளை இசையுடன் கேட்கும்போது என் உள்ளத்திலும், உடலிலும் ஒரு இனம் புரியாத உணர்வு பரவும். காதல் உணர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதற்கு விடை நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது தெரிந்தது. அப்போது நானும், எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். நெருக்கமேன்றால் இரண்டு அடிகள் தள்ளிதான். ஒருநாள் கேண்டினில் டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அந்தப் பாடலை நான் புகழத் துவங்கினேன். அப்போது என் சிநேகிதி அப்பாடலை பற்றி கூறிய ஓரிரு வார்த்தைகள்....ஒரு பெண்ணின் வாயிலிருந்து வருமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ' ஒருநாள் வீட்டுக்கு வெளியே கோலம் போட்டிகொண்டிருக்கும்போது....இதயம் துடிக்கும் ஓசையுடன் ன...ன...ன....என ஒரு வசீகரிக்கும் பாட்டு டிவியில் ஒலிக்கத் துவங்கியது. உடல் முழுவதும் ஆயிரமாயிரம் வண்ணத்து பூச்சிகள் பறப்பதை போன்ற உணர்வு உண்டானது. நான் வயதுக்கு வந்தபின் என் உடலில் என்னவித உணர்வுகள் வந்தனவோ அதைப் போன்று இருந்தது....ஒருவேளை நான் வயதுக்கு வராமல் இருந்திருந்தால்...அப்பாடலை கேட்கும்போது கட்டாயம் வயதுக்கு வந்திருப்பேன்....;. என்றார். நான் சில நொடிகள் திகைத்து விட்டேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் பதிலேதும் கூறவில்லை. ஏனெனில் என்னைத் தாலாட்ட வருவாளோ.....என்ற மயக்கும் பாடலைக் கேட்கும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் இனம் புரியாமல் அடைத்துக் கொண்டிருந்த உணர்வுகள் வார்த்தைகளாக என் தோழி மூலம் வடிவம் பெற்றன.


விஜய் உண்மையில் ஒரு சிறப்பான நடிகர். நிச்சயமாக விஜய் ஒரு ஆக்சன் ஹீரோ அல்ல. கார்த்திகைப் போன்ற ஒரு ஸ்மார்ட்டான நடிகர். முழுநீள ஆக்சனைக் காட்டிலும் சிறிது ஆக்சன், நிறைய ரொமான்ஸ், துறுதுறுப்பான நடிப்பு, கொஞ்சம் காமெடி இவை கலந்த கதைகளில் விஜய் கலக்கிவிடுவார். புதிய கீதை அதற்கு ஒரு உதாரணம். காவலன் போன்ற படங்களை அவர் அவ்வப்போதுவாது செய்யவேண்டும். வாழ்க்கையே பெரும்பாலும் அனேக பேருக்கு போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. இதற்கிடையில் சினிமாவிலும் ரணகளமா?.....காவலன் மாதிரி படங்களை பார்த்து என்னைப் போன்ற ஆட்கள் மூச்சு விட்டுக் கொள்வோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாகவும், பீலிங்க்சாகவும் தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்.

2 comments:

  1. வித்தியாசமான விமர்சனம்.

    ReplyDelete
  2. yeah, really vijay is a romance hero, but ghilli change his cine life. and he got continuous success of Thirupachi, sivakasi, & pokkiri.

    after pokkiri he got continuous failure. but i thought that he change his style. I hope he'll continue his carrier.

    Well done vijay, you too..

    ReplyDelete

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...