Friday, February 4, 2011

ராக்கம்மா கையத் தட்டு...

பெங்களூரில் பலவருடங்களுக்கு முன்பு சிலமாதங்கள் வேலைதேடி தங்கியிருந்தேன். பெங்களூரில் பன்நீர்கட்டா ரோடு என்கிற ஒரு ஏரியா இருக்கிறது. அந்த ரோட்டில் அக்சன்ச்சர் என்ற புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகம் இருக்கிறது. மென்பொருள்துறையில் , அக்சன்ச்சர் ஒரு பிரபலமான கம்பெனி. பெங்களூரிலேயே அதற்கு இரண்டு கிளைகள் உள்ளன. அக்சன்ச்சர் அலுவலகம் ஏறக்குறைய பத்துபதினைந்து தளங்களை உள்ளடக்கியது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக, நல்ல கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும். மதியநேரங்களிலும், மாலைநேரங்களிலும் ஏகப்பட்ட ஆண்-பெண்கள் வர போக இருப்பார்கள். சிலநேரங்களில் இன்டர்வ்யுவிர்காக பட்டதாரிகள் கூட்டம் குவிந்திருக்கும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அக்சன்ச்சர் நிறுவனத்திற்கு அதன் முன் ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை என்பதாலோ என்னவோ எனக்கும், அக்சன்ச்சருக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அக்கம்பெனிக்கு நேர் எதிர்புறத்தில் , நமது சென்னையில் இருப்பதை போல, கையேந்திபவன் ஒன்று இருந்தது. அங்கு மாலைநேரங்களில் சூடான பூரியும், கிழங்கு மசாலும் கிடைக்கும். பெங்களூர் ஹோட்டல்களில் கிடைக்கும் பூரி, சப்பாத்திகள் மிருதுவாகவும், சுவையாகவும் நல்ல கோதுமை வாசத்துடனும் இருக்கும். தமிழ்நாட்டில் இதுதான் கோதுமை என நம்பி சாப்பிடுகிறோம். நான், கல்லூரியில் என்கூட படித்த நிரஞ்சனா, அவளது சிநேகிதி ஒருத்தி என மூன்று பேரும் அந்த கடையில், பெங்களூரின் மிதமான குளிரில், ஒரு இனிய மாலை நேரத்தில் பூரியும், கிழங்கும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
நிரஞ்சனாவுடன் வந்திருந்த அந்த பெண் நல்ல சிகப்பாக, திருத்தமான முகத்துடன் லட்சணமாக இருந்தாள். அய்யங்கார் பெண் என நிரு என்னிடம் சொன்னாள். அவர் சிறுசிறு வெள்ளைநிற பூக்கள் போட்ட பிளாக் கலர் சர்ட்டும், பிளாக் கலர் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிசான சில்வர் செயின் ஒன்று இருந்தது. பெங்களூரில் உலாவும் அனேக பெண்களை போல தலைமுடியை விரித்து போடாமல், பின்னல் போட்ட ஜடையுடன் எளிமையாக காட்சியளித்தாள். நாங்கள் மூவரும் சாப்பிட்டுக் கொண்டே அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். ( நிரு என்னிடம்.....ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகும்போல தெரியுது....ட்ரை பண்ணி பாரேன்டா....மொபைல் நம்பர்கூட தர்றேன் என்றாள். நான்தான் மிஸ் பண்ணி விட்டேன்...! ) பேசிக்கொண்டிருக்கும்போது நான், நீங்கள் ஒரு பிராமணப் பெண்தானே.....அப்படியென்றால் சங்கீதம் பழகியிருப்பீர்களே?......என அவளிடம் கேட்டேன். அதற்கு அவள் தான் பத்து வருடங்களாக சங்கீதம் பயின்று வருவதாக கூறினார். நான் உடனே வழக்கம்போல் இளையராஜாவை பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன். இடையில் மறித்து அவள், தளபதி படத்திற்கு இசை ஏ.ஆர். ரகுமானா? இளையராஜாவா? என்று கேட்டார். நான், சே...சே.....இளையராஜா என்றேன். தளபதியில் வரும் ராக்கம்மா கையத் தட்டு என்ற பாடலை பற்றிய ஒரு வியப்பான செய்தியை கூறினாள். அந்த பாடலை பிரம்மாணடமான பேரிசையாக ஒலிக்கச் செய்வதற்கு இளையராஜா ஒரேநேரத்தில் முன்னூறு வயலின்களை தனது ஆர்கெஸ்ட்ராவில் பயன்படுத்தினார் என்றும், அந்த ஒரே பாடலில் கர்நாடிக், ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன் உட்பட அத்தனை சாத்தியங்களையும் பயன்படுத்தி உள்ளார் என்றும் கூறினார். எனக்கு மிகவும் வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் அவர், அந்த பாடலை எஸ்.பி.பி. பாடும் விதத்தை கவனிக்குமாறும் கூறினார்.
ராக்கம்மா கையத்தட்டு பாடலை பற்றி அந்த அய்யங்கார் வீட்டு பெண் கூறியபோதுதான் எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மேற்கண்ட நிகழ்ச்சி நடந்தது கல்லூரி முடிந்த பின்பு. நாங்கள் பைனல் இயர் படிக்கும் போது ஒரு செய்தி மாணவர்களிடையே காட்டுத்தீயாக பரவியது. அது என்னவெனில், ஒரு தனியார் நிறுவனம் உலகின் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ,முதல் சிறந்த பத்து பாடல்களை தேர்ந்தெடுக்க இணையதளத்தில் ஒரு சர்வே நடத்தி கொண்டிருந்தது. அதில் ராக்கம்மா கையத்தட்டு பாடல் நான்காம் இடத்தையும், ரகுமானின் தில்சேவில் வரும் ஒரு பாடல் ஒன்பதாம் இடத்தையும் பிடித்திருக்கிறது என்றும் கேள்விப்பட்டோம். மேலும் சர்வே முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது என்றும், அதுவரை யாவரும் ஓட்டளிக்கலாம் என்றும் கூறினார்கள். எங்களுக்கு ஆர்வம் எல்லை கடந்துவிட்டது. இளையராஜாவை முதல் இடத்திற்கு கொண்டு வருவது எனத் தீர்மானித்தோம். தினமும் நெட் லேப்பிற்கு சென்று அந்த நிறுவனத்தின் தளத்தில் நான்கு ஓட்டுகளை குத்திவிட்டு வருவோம். ஒரு மாத இறுதியில் முடிவு தெரிந்தது. இறுதியில், ராக்கம்மா கையத்தட்டு அதே நான்காம் இடத்திலும், தில்சே ஒன்பதாம் இடத்திலும் இருந்தது. பரவாயில்லை.....உலகிலேயே சிறந்த பத்து பாடல்களில் இளையராஜாவின் பாடல் நான்காம் பாடல். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.எங்கள் கல்லூரியில் மாணவர்களாக சேர்ந்து ஒரு ஆர்கெஸ்ட்ரா வைத்திருந்தார்கள். நான்கு பசங்களும், நான்கு பெண்களும் அதில் பாடுவார்கள். நன்றாக பாடுவார்கள்....நன்றாக கடலையும் போடுவார்கள். ஒருநாள் கல்லூரியில் நடந்த கல்ச்சுரல்சில் ராக்கம்மா கையத்தட்டு என்றவொரு மிகச்சிறந்த பாடலை முதல்பாடலாக பாடி சொதப்பினார்கள்.

7 comments:

 1. அருமை
  வாசித்து
  வாக்களித்தேன்

  ReplyDelete
 2. ..உலகிலேயே சிறந்த பத்து பாடல்களில் இளையராஜாவின் பாடல் நான்காம் பாடல். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.


  .....நம் எல்லோருக்கும் பெருமைதானே!

  ReplyDelete
 3. நல்லா இருக்கு உங்க எழுத்து நடை

  ReplyDelete
 4. உண்மையில் இப்பாடல் எல்லோரையும் ஒரு தடவை முணுமுணுக்கவே வைத்திருக்கும்...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

  ReplyDelete
 5. அருமையான் பதிவு. இந்த பாடல் என் All Time Favorite பாடல்களில் ஒன்று.

  ReplyDelete
 6. கமென்ட் போட்டு வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல....

  ReplyDelete
 7. I too had a doubt of the music director of "THALAPATHI" Now the doubt is cleared.

  ReplyDelete

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...