Monday, January 31, 2011

பார்வை ஒன்று போதுமடி...
பார்வையை பம்பரம்போல் சுழல விடுகிறாய்..
பார்க்கவே மறுக்கிறாய் என்னை மட்டும்..
பார்வையாலே யாசகம் கேட்கிறேன் - கடைக்கண்
பார்வையொன்று வீசினால் என்னடி குற்றம் உனக்கு !


- லிங்கேஸ்வரன்.

Saturday, January 29, 2011

வாழ்க்கைத்துணை எனும் வரம் !


ஒவ்வொரு ஆணின் நெற்றியிலும்
ஒரு பெண்ணின் பெயரும்
ஒவ்வொரு பெண்ணின் நெற்றியிலும்
ஒரு ஆணின் பெயரும்
பொறிக்கப்பட்டுள்ளது...
திருமணத்தின் போதுதான்
தெரிகிறது அது யாரென்று....!


- லிங்கேஸ்வரன்.

Friday, January 28, 2011

தமிழ்நாடு...!
விலைவாசி உயர்வு விண்ண முட்டுது - கூத்தாடிகளின்
கலைச் சேவையோ நெஞ்ச தொட்டுது - அரசியல்
உழைப்பாளிகளின் பேச்சோ புல்லரிக்க வைக்குது
சோத்துல உப்பு குறைச்சுபோட்டு தின்பதால என்னவோ
பொழப்பு எனும் வண்டி ஓடுது...


-லிங்கேஸ்வரன்.

Thursday, January 27, 2011

இயற்கை மருத்துவம் - உணவு அட்டவணை.
மேலே காணப்படும் உணவு அட்டவனையை பொறுத்து நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை ஒரு பங்கும், காரத்தன்மை மூன்று பங்கும் இருக்குமாறு அனுசரித்து நம்முடைய உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் கனகச்சிதமாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை முயற்சி செய்யலாம். அமிலத்தன்மை உடலில் அதிகமாக அதிகமாக நோய்கள் வருவது உறுதி. குறிப்பாக தொற்று நோய்கள் (இன்பெக்டிவ் டிசீஸ் ) வரும் வாய்ப்பு அதிகம். மனித உடலானது தன்னிடம் பற்றாக்குறையாக உள்ள காரச்சத்தை எலும்புகள், நரம்புகள், திசுக்களில் இருந்து தானாகவே எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக மூட்டுவலி, நரம்பு தளர்ச்சி, தசைவலி போன்ற பிரச்சினைகள் வந்துவிடும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள அமிலச்ச்த்தை உடலானது சிறுநீரகம் வழியாக வெளியற்ற முயல்கிறது. இதன் விளைவாக சிறுநீரங்கள் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இயற்கை மருத்துவ நிபுணர்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்களே உங்கள் அனுபவத்தில் சுயமாகவும், பிறரோடும் ஒப்பிட்டு பாருங்கள்.....பிசகாத சத்தியம்.


திருமூலர், உத்தமன் கோயில் கொண்டுள்ள மனித உடலை ஓம்ப வேண்டும் என்கிறார். உத்தமனுக்காக ஒம்புகிறமோ இல்லையோ, குடும்பத்தினருக்கு உபத்திரவம் தராமல் இருக்கவாவது நாம் நம் உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டுவிட்டால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது.


ஆங்கில மருத்துவத்தில் , எப்பேர்பட்ட நோய்க்கும் வைத்தியம் உண்டு. நோய் வந்த பின், சிகிச்சை உண்டு - குணமாக்கி விடலாம் என்பது சிறப்பல்ல. நோயே வராமல் காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உதாரணமாக, புற்றுநோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் கீமோ தெரபி குடுப்பார்கள். புற்று நோய் சரியாகிறதோ இல்லையோ பக்கவிளைவுகளால் நோயாளி கடைசியில் நொந்து நூலாகி ஒரு வழியாகி விடுவார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சைக்லோஸ் போரின் என்ற ஒரு மருந்து தருகிறார்கள். அது உடலில் என்ன வேலை செய்கிறது என்று இன்டர்நெட்டில் தேடிப்பாருங்கள். அதை நினைத்தாலே மனக்கலக்கமாக இருக்கிறது. விபத்துகள், அசம்பாவிதங்கள் போன்றவை நம் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனால் பிரசவம், மூளைக்கட்டி ,விபத்துகள் போன்றவைகளுக்கு ஆங்கில மருத்துவம்தான் சிறந்தது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நான் ஆங்கில மருத்துவமுறையை குறை கூறவில்லை. இதுதான் நாட்டில் இன்றைய நிலவரம்.


அடுத்த பதிவில் இயற்கை சிகிச்சைகளான உண்ணாநோன்பு, சூரிய குளியல், நீர் சிகிச்சை, ஆசனங்கள் ஆகியவற்றைப் பற்றி ஒரு சிறு பதிவிட்டு முடித்துக்கொள்கிறேன்.

Wednesday, January 26, 2011

இயற்கை மருத்துவம் - அடிப்படைத் தத்துவம்.
நோய்க்கு காரணம் கிருமிகள் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. ஆனால் இயற்கை மருத்துவமோ கிருமிகள் நோய்க்கு காரணம் அல்ல என்கிறது. கிருமிகள் தங்கக்கூடிய அளவிற்கு உடலில் கழிவுப் பொருட்களை நாம் தேக்கி வைத்திருப்பதே காரணம் என்கிறது. ஓடுகின்ற நீரில் கொசுக்கள் முட்டையிடுவதில்லை. தேங்கியுள்ள நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும். அதேபோல் நாம் உடலை கழிவுகள் இன்றி தூய்மையாக வைத்திருந்தால் நோய் வருவதில்லை. கழிவுகள் என்பவை மலம், சிறுநீர், சளி, கெட்ட கொழுப்பு போன்றவை ஆகும். கிருமிகள் கழிவுகளில் இருந்து தானாகவே உற்பத்தியாகின்றன. ஒரு மாம்பழத்தின் கொட்டையிலிருந்து எப்படி இயல்பூக்கத்தினால் ஒரு வண்டு தானாவே உருவாகிறதோ, அதேபோல் கிருமிகள் தேங்கியுள்ள கழிவிலிருந்து தானாவே உருவாகின்றன.


மேலும், இயற்கை மருத்துவம் நோய் என்பது ஒன்றுதான் என்கிறது. சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்தாயிரம் எனப்பட்டுள்ளது. ஆங்கில நோய்களுக்கு எண்ணிலடங்கா பெயர்களை இட்டுள்ளது. இயற்கை மருத்துவம் நோய் என்பது ஒன்றுதான் என்றும் , உடல் உறுப்புகளின் பெயர்களுக்கேற்ப நோயின் பெயரும் மாறுபடுகிறது என்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தின் கரை உடைந்துவிட்டது என பொத்தாம்பொதுவாக சொன்னால் யாருக்கும் புரியாது. அதற்கு பதில், குளத்தின் கிழக்கு கரை உடைந்துவிட்டது என்று சொன்னால் தெளிவாக புரியும். அதேபோல் நம் உடலிலுள்ள அழுக்குகள், கழிவுகள் உடலின் ஏதேனும் ஒரு பகுதி வழியாக வெளியேறுகிறது. வெளிவிடும் மூச்சுக் காற்றாகவும், மலமாகவும், சிறுநீராகவும் வெளியேறுகிறது. சற்று அதிகமானால் கண்ணில் பீளை, சளி, வியர்வை ஆகிய வழிகளிலும் உடல் தன் கழிவை வெளியேற்றுகிறது. இன்னும் அதிகமானால் காய்ச்சல், தலைவலி, வாந்தி பேதி, தொற்று போன்ற உணர்வுகளால் நமக்கு உடலில் கழிவு அதிகமிருக்கிறது என்பதை உடல் தெரிவிக்கிறது. கழிவுகள் அதிகரிக்க அதிகரிக்க துன்பம் அதிகரிக்கிறது, நோயின் பெயரும் அதற்கேற்ப மாறுபடுகிறது.


சரி....உடலில் கழிவுகளும் உருவாகித் தேங்க காரணம் என்ன? நோய்களாக அவை உருவெடுக்க காரணம் என்ன? இதற்கு பதில் மிக எளிமையானது. மனித உடலானது (ரத்தத்தில்) இருபத்தைந்து சதவீதம் அமிலத்தன்மையும், எழுபத்தைந்து சதவீதம் காரத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த இருபத்தைந்து சதவீதம் அமிலம் : எழுபத்தைந்து சதவீதம் காரம் என்ற விகிதாச்சாரம் தவறும்போது, சீர்குலையும்போது உடலில் கழிவுகள் தேக்கமும், கிருமிகள் உற்பத்தியும் துவங்கிவிடுகின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, காரத்தன்மை என்றால் வீட்டில் பயன்படுத்தும் மிளகாய்பொடி காரம் அல்ல....இதன் பெயர் ஆங்கிலத்தில் ஆல்கலைன்.


அமில கார விகிதாச்சாரம் கெடக் காரணம் என்ன? செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவு, அதிக உணவு, நேரங்கெட்ட நேரத்தில் உண்ணுதல், பசியே இல்லாமல் உண்ணுதல், போதிய அளவு நீர் அருந்தாமை - இவை அமில:கார சமநிலை கேட்டு நோய்வர, உணவு சார்ந்த பிரதான காரணங்களாகும். உணவில் அமிலச்சத்து நிறைந்த உணவுகள், காரச்சத்து நிறைந்த உணவுகள் என இரண்டுவகை உள்ளன. மாவுசத்து (கார்போஹைட்ரேட்), கொழுப்பு, புரதம் ஆகியவை நிறைந்த உணவுகள் அமில உணவுகள் ஆகும். வைட்டமின்கள், தாது உப்புகள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்றவை) நிறைந்த உணவுகள் காரத்தன்மை உண்டாக்கும் உணவுகளாகும். துரதிஷ்டவசமாக, நாம் அனைரும் அமிலச்சத்து நிறைந்த உணவுகளையே உண்டு வருகிறோம். அடுத்த பதிவில் எந்தெந்த உணவுகள் அமிலத்தன்மை கொண்டவை, எந்தெந்த உணவுகள் காரத்தன்மை கொண்டவை என்பதை ஒரு அட்டவணையாக தருகிறேன்.


உடலின் செல்கள் அமிலத்தன்மையை அடைந்தது விட்டதென்றால் உடலுக்கு அழிவுதான் என்றும், வாழ்வின் போக்கும்- உடல் நலமும் - வயதான காலத்தில் நோய்களுக்கு தாக்கு பிடிக்கும் சக்தியும் - காரதன்மையையே சார்ந்தது என் டாக்டர். ஹெச்.சி. மேன்ஹேல் (எம். டி ) கூறுகிறார்.


பேராசை, வெறுப்பு, ஆணவம், கடுங்கோபம், கவலை, சரியான தூக்கமின்மை, ஒழுக்க கேடான காம எண்ணங்கள், பய உணர்வு போன்றவையும் உடலை உலரச் செய்து, ரத்தம் சுண்டி, உடல்பலத்தை குறைக்கின்றன என இயற்கை மருத்துவம் கூறுகிறது.
தூய்மையான அன்பு, உற்சாகம், நம்பிக்கை, பொறுமை, சாந்தம் முதலிய உணர்வுகள் உடல் ஆரோக்யத்தை வளர்த்து இன்பத்தை தருகின்றன.


இயற்கை உணவு அட்டவணையும், இயற்கை மருத்துவத்தில் நோய் தீர்க்கும் முறைகளான நீர் சிகிச்சை, சூரிய குளியல், உண்ணா நோன்பு, எளிய உடற்பயிற்சிகள் ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவில் சிறுகுறிப்புகள் தருகிறேன். இவை உடல் கழிவுகளை அகற்றி விரைவில் நோயை தீர்க்க உதவுகின்றன.

Monday, January 24, 2011

இயற்கை மருத்துவம் - ஓர் ஒப்பற்ற மருத்துவம்.
உலகம் முழுவதும் பரவலாக ஐந்துவித மருத்துவமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்றவையே அவை. சித்த ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவிலும், யுனானி குறிப்பாக அரேபிய நாடுகளிலும், ஹோமியோபதி ஓரளவு உலகம் முழுக்கவும் பின்பற்றப்படுகின்றன. ஆங்கில மருத்துவம் உலகப்பொதுவானது. ஒவ்வொரு வைத்திய முறைக்கும் தனி சிறப்புகளும் உண்டு ; சில குறைபாடுகளும் உண்டு.


என் அப்பாவுக்கு நான்கைந்து வருடங்களாக ஒருவித சிறுநீர் இயல் பிரச்சினை இருந்து வந்தது. அதன் காரணமாக , சிறுநீர்ப்பாதை தொற்று (யு.டி.ஐ.) அடிக்கடி ஏற்பட்டு தொந்திரவு அளித்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஆங்கில மருத்துவரிடம் அழைத்து செல்வேன் என் அப்பாவை, மருத்துவரும் சிலபல மருந்துகளை தருவார். தொற்று உடனே சரியாகி விடும். ஆனால் மீண்டும் சில மாதங்களில் அதே உபாதை வந்துவிடும். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்து வந்தது. அப்பாவும் மிகவும் உடல் நலிவுற்று சிரமப்பட்டார். அந்த சமயத்தில், சித்த- ஆயுர்வேத வைத்திய முறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே என்று எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு சித்த மருத்துவரிடம் அவரை அழைத்து சென்றேன். சித்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளால் என் தந்தை நல்ல உடல் திடம் பெற்ற போதிலும், சிறுநீர் தொற்று தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. எனக்கு இதன் காரணம் புரியாத புதிராகவே இருந்தது மேலும் மன உளைச்சலை அதிகரித்தது. ஹோமியோபதியும் வயதானவர்களின் நலிந்த உடல்வாகுக்கு ஒத்துவராது என்றே தோன்றியது. அது போன்ற ஒரு இக்கட்டான தருணத்தில், தெய்வாதினமாக, இயற்கை மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளையும் புத்தகங்களையும் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் என் அப்பாவுக்கு ஏன் அடிக்கடி சிறுநீர் தொற்று உண்டாகிறது என்பதையும், நோய்கள் எவ்வாறு ஒரு மனிதனுக்கு உண்டாகின்றன என்பதையும் , அவற்றை எப்படி சில எளிமையான இயற்கை வைத்திய உபாயங்கள் மூலமாக குணமாக்கி கொள்வது என்பதையும் அறிந்துகொண்டேன். ஏற்கனவே நான் பெற்றிருந்த ஆன்மீக அறிவும், அறிவியல் அறிவும் ஒருசேர உதவின இயற்கை மருத்துவ தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு.


இயற்கை மருத்துவத்தை ஒரு முழுமையான மருத்துவமுறை என்றால் அது மிகையில்லை. எளிமையான, சிக்கனமான, பக்கவிளைவுகளே இல்லாத....ஏன் மருந்துகளே இல்லாத ஒரு தெய்வீக மருத்துவம்தான் இயற்கை மருத்துவமாகும். சொல்லப்போனால், இயற்கை மருத்துவம் ஒரு மருத்துவமுறையே அல்ல. மாறாக , அது இயற்கையோடு இசைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். தடைகளே சாதனைகளுக்கு உந்துசக்தியாக அமைவது போல, தோல்வியே வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமைவது போல, நோயே நல்ல உடல்நலனை பெறுவதற்கு வழியாக அமைகிறது. இயற்கை வைத்தியத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. ஒவ்வொருவரும் தனக்குத்தானே மருத்துவர்.


விதவிதமான நோய்களால் உலகம் முழுவதுவமே மனிதகுலம் தனிநபர்- குடும்பம்-தேசம் ஆகிய பல்வேறு தளங்களில் தாங்கமுடியாத அல்லலுற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் இயற்கை மருத்துவம் மனதிற்கு மிகவும் ஆறுதலளிக்கும் விஷயமாகும். ஆங்கில மருத்துவ முறையின் அச்சுறுத்தும் மருத்துவமனை சூழல், லாபத்தையே முன்னிறுத்தும் வணிக போக்கு, பொருளாதார நெருக்கடியால் தினமும் உயரும் மருந்துகளின் விலை - இவற்றிலிருந்து தப்பிக்க ஒரே சுலபவழி இயற்கைத் தாயிடம் சரணடைந்து விடுவதுதான்.


நோய்கள் உண்டாகும் விதம், அவற்றை போக்கி கொள்ளும் சிகிச்சைகள் , நோய்கள் வராமல் தடுக்கும் வழி - இவற்றை பற்றி இயற்கை மருத்துவம் என்ன கூறுகிறது என்பதை சுருக்கமாக அடுத்த ஓரிரு கட்டுரைகளில் எழுதிவிடுகிறேன். பிறகு நீங்களே, புத்தகங்களை படித்தும் சிந்தித்தும் அறிவை விருத்தி செய்துகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பது என் விருப்பம்.

Thursday, January 20, 2011

மயில் போல பொண்ணு ஒண்ணு...
மயில்போல சாயல் உடையாளை
குயில்போல தேக நிறத்தாளை - அழகுப்
பேய்போல மனதை வதைக்கும் வஞ்சியவளை
இதயமெனும் என் சிறையில் வைத்தேன் !- லிங்கேஸ்வரன்.

Tuesday, January 18, 2011

ப்ளுடூத் டெக்னாலஜி - ஓர் எளிய அறிமுகம்.


அருகருகே உள்ள இரண்டு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கிடையே வயர்கள், கேபிள்கள் ஏதும் இல்லாமல் தகவல்களை பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் இந்த ப்ளுடூத் டெக்னாலஜி. செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், பைல்கள் போன்றவற்றை ப்ளுடூத் மூலம் பரிமாறிக்கொள்ள இயலுகிறது. அதிகபட்சமாக பத்து மீட்டர் ( முப்பத்திரண்டு அடி) தொலைவுக்குள் ப்ளுடூத் தொழில்நுட்பம் திறம்பட செயல்படுகிறது. பத்து மீட்டருக்கு மேல் ப்ளுடூத் உபயோகப்படாது. ப்ளுடூத் மூலம் இணைக்கப்படும் சாதனங்கள் என்பவை மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமராக்கள், பிரிண்டர்கள் போன்ற எதுவாகவும் இருக்கலாம். ப்ளுடூத் டெக்னாலஜி செயல்பட அச்சாதனத்தில் குறிப்பிட்ட மைக்ரோ சிப்புகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியமே.குறைந்த சக்தி கொண்ட ரேடியோ அலைகளே ப்ளுடூத்தில் செய்திகளை கடத்த பயன்படுகின்றன. குறைந்த சக்தி கொண்ட அலைகள் என்பதால் இவற்றின் அலைநீளமும் குறைவுதான். அலைகள் என்றாலே - முன்னோக்கிய திசையில் வளைந்து வளைந்து செல்பவை ஆகும். அலைகளை பொதுவாக இரண்டு பெரிய தலைப்பில் வகைப்படுத்தலாம். ஒன்று, முன்னோக்கிய திசையில் சுருள் சுருளாக வளைந்து செல்பவை. இரண்டு, சிறிதுதூரம் கிடைமட்டமாக சென்று பின் கீழ்நோக்கி தாழ்வாக வளைந்து, பின் மீண்டும் மேல் எழும்பி மீண்டும் கிடைமட்டமாக செல்பவை. முன்னதை மாற்று மின்னூட்ட அலைகள் என்றும், பின்னதை நேர் மின்னூட்ட அலைகள் என்றும் இயற்பியலில் கூறுகிறார்கள். அலைநீளம் என்பது - அலைகள் தொடர்ச்சியாக செல்லும்போது - அதன் ஒரு உச்சிக்கும் மறு உச்சிக்கும் இடையே உள்ள தொலைவாகும் அல்லது ஒரு தாழ்வுக்கும் மறு தாழ்வுக்கும் உள்ள தொலைவாகும். அதிர்வெண் என்பது, ஒரு வினாடியில் ஒரு அலை எத்தனை சுழற்சிகளை உருவாக்குகிறது என்பதாகும். எந்தவித அலையானாலும் அலை அகலம் எனப்படும் பேண்ட்வித் தான் ஒரு அலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான தகவல்களை சுமந்து செல்லமுடியும் என்பதை தீர்மானிக்கிறது.ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படும் ரேடியோ அலைகள் நுண்ணிய மைக்ரோ அலைகளாகும். குறித்த சக்தியும், குறைந்த அலைநீளமும் கொண்ட அலைகலாதளால் இவற்றால் குறுகிய தூரமே பிரயாணம் செய்யமுடியும். பத்து மீட்டர்தான் இவற்றின் அதிகபட்ச எல்லையாகும். நீண்ட தூர தகவல் கடத்தலுக்கு உயர் அழுத்த மின்காந்த அலைகளே பயன்படுகின்றன. தனது உயர் அழுத்தத்தினால் மின்காந்த அலைகள் வலுவிழக்காமல் நீண்ட தூரம் செய்திக் கொத்துக்களை சுமந்துசெல்கிறன.ப்ளுடூத்தில் பயன்படும் ரேடியோ அலைகள் இரண்டு ஜிகா ஹெர்ட்ஸ் என்ற அதிர்வெண் கொண்டவை. ஒரு வினாடிக்கு ஒரு மெகா பைட்ஸ் என்ற அளவிலும் செய்திப் பொட்டலங்களை பரிமாற்றம் செய்கின்றன. ப்ளுடூத் இயக்கப்பட்ட கருவிகள் அவற்றின் எல்லைக்குள் இருக்கும்போது யாரும் இயக்காமலே ( சுவிட்ச் ஆண் செய்வதை தவிர ) ஒன்றையொன்று புரிந்து கொண்டு தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை அமைத்து கொள்கின்றன. ஆங்கிலத்தில் இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் அல்லது பைக்கொநெட் என்கிறார்கள்.அன்றாட வாழ்வில் ப்ளுடூத்தின் பயன்பாடுகள் நமக்கு மிகவும் உற்சாகமும், மகிழ்ச்சியும் ஊட்டுபவை. சான்றாக, மொபைல்போனில் ஒரு அழகான போட்டோ எடுத்தால் அதை பிரின்ட் எடுக்க மொபைலையும் பிரிண்டரையும் இணைக்க வேண்டியதில்லை. மொபைலுக்கும் பிரிண்டருக்கும் ப்ளுடூத் மூலம் இணைப்பு கொடுத்து விட்டால் போதும். மொபைலில் உள்ள ஒரு பாட்டை எந்தவித வயருமின்றி ஹெட்செட்டில் கேட்கலாம். வீட்டிலுள்ள குழந்தைகளை கேட்டு பார்த்தால் ......நெறைய ப்ளுடூத் பயன்களை அடுக்குவார்கள். மொபைலில் ஜி.பி.எஸ். ( குளோபல் பொசிசனிங் சிஸ்டம் ) சிஸ்டத்திலிருந்து தகவல்களை ப்ளுடூத் மூலம் பெறலாம் என ப்ளுடூத் டெக்னாலஜியின் சாத்தியப் பயன்பாட்டு எல்லைகள் அபாரமாக விரிகின்றன.


Thursday, January 13, 2011

சகோதரனும், காதலியும்...
நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத்தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு..
பூவைச்சூடிப்......மாமன் உண்டு மானே...மானே..
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே... நானே...
உன்னோடுதான் என் ஜீவன்....
ஒன்றாக்கினான் நம் தேவன்...
நீதானம்மா என் தாரம்...
மாறாதம்மா எந்நாளும்...


தர்மத்தின் தலைவன் திரைப்படத்தில் வரும் தென்மதுரை வைகை நதி என்ற பாடலில் இடையில் வரும் வரிகள் இவை. மு.மேத்தாவின் உயிரோட்டமுள்ள வரிகளும், இளையராஜாவின் அற்புதமான மெட்டும், ரஜினியின் மிக இயல்பான நடிப்பும் சேர்ந்து- சமையலில் அத்தனை சரக்குகளும் மிகச்சரியாக சேரும்போது எப்படி ஒரு சமையல் வாசம் வீசுமோ- அதேபோல் கேட்கும்போது மனதில் ஒரு இனிமையான உணர்வை உண்டாக்கும் பாடல் இது. என்னைப் பொறுத்த வரையில், தமிழில் வெளிவந்த உலகத்தரமான பாடல் இது. ஏன் என்று கூறுகிறேன்.


மேலே உள்ள வரிகளை எந்த ஆண்மகனும் உற்று கேட்டால் , அப்படியே மனதை கவ்விவிடும். குறிப்பாக காதலிப்பவர்களுக்கு. வரிகளும் இசையும் அப்படிப்பட்டவை. நான் கல்லூரியில் படித்த நேரத்தில், இந்த பாடலை ஒரு கேசட்டில் பலபாடல்களோடு சேர்த்து பதிவு செய்து வைத்திருந்தேன். என் ரூமில் இந்த பாடல் ஒலிப்பதை கேட்டு, என் நண்பர்களும் கேசட்டை வாங்கி சென்று கேட்டு ரசிப்பார்கள். அப்போது எங்கள் ஹாஸ்டலில் இந்த பாடல் ஒலிக்காத ரூமே இல்லை. ஒவ்வொருவருக்கும் அவ்வளவு பிடித்து விட்டது. அச்சமயம் ஒருநாள் நானும், கார்த்தி என்ற நண்பன் ஒருவனும் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அவன் பாடலை ரசித்து கேட்டுவிட்டு பின்வருமாறு கூறினான். " இந்தப்பாட்டில் முதல் பாராவை விட , இராண்டாவது பாராதான் நன்றாக இருக்கிறது" என்றான்.


நான் உடனே, உனக்கு தம்பி இருக்கிறானா என்று கேட்டேன். இல்லை எனக்கு அண்ணன்தான் இருக்கிறார் என்றான். அதற்கு நான், அண்ணனும் தம்பியும் ஒன்றுதான்......நமக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்ற
ஞாபகத்தோடு இந்த பாடலைக் கேட்டு பார்......பாடல் முழுவதும் பிடித்து விடும் என்றேன். அவன் பதிலேதும் கூறாமல் என்னை சில வினாடிகள் முழித்து பார்த்தான். பின் அங்கிருந்து சென்று விட்டான். அதன் பின் சில நண்பர்களும் இதேபோல் இராண்டாவது பாராதான் அருமையாக உள்ளது என்றார்கள்.எஸ்.பி.பி. இன் குழைவான குரலில் தடையில்லாமல் ஓடும் ஆறுபோல் ஒலிக்கும் இப்பாடலில் இளையராஜா ஒரே ராகத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் இதன் சிறப்பம்சம், ஒரே ராகத்தில் - சகோதரன் மீதான பாசத்தையும், காதலியின் மீதான நேசத்தையும் - அழகாக பொருந்தி போகச் செய்திருக்கிறார். இது போன்ற பாடல்கள் மிக அரிதானவை. அப்போதெல்லாம் பாடலை கேட்கும்போது என் தம்பியின் நினைவும், என் காதலியின் நினைவும் ஒருசேர மனதில் படர்ந்து மனதை மெய்மறக்க வைத்துவிடும். நீங்களும் தரமான அந்த பாடலை ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்.....தம்பியின் மீது தனிப்பாசமே வந்துவிடும். காதலியின் மீது பாசம் வருவதைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதெல்லாம், காதலிக்கும் நண்பர்கள் மொபைல் போனிலேயே காதலியிடம் உருகி விடுகிறார்கள். சகோதரனை சிலாகித்து ரஜினி பாடும் வரிகள் இதோ:


நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை...
தன்னை போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர்தாய் பிள்ளை.
தம்பி....உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை.
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை....
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்...
தென்மதுரை வைகைநதி
தினம்பாடும் தமிழ் பாட்டு......

Saturday, January 8, 2011

என் ஞாபக அலமாரியில் போகர்...
தோழி என்ற பெயரில் எழுதி வரும் இலங்கை சிநேகிதி ஒருவருக்காக ஈழத்து சித்தர்களை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் எனக்கூறிவிட்டு அப்படியே மறந்து விட்டேன். உண்மையில் மறக்கவில்லை. என் ஞாபக அலமாரியில் குவிந்து கிடக்கும் ஏராளமான தகவல்களில் தோழிக்கான பதிவுகள் பத்திரமாகவே இருந்தன.


எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. மேலாண்மை படிக்கும் நானே நேரத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பொழுது , மருத்துவம் பயிலும் மாணவியான தோழி எப்படி தினமும் ஒரு பதிவை எழுதி வெளியிடுகிறார் என்று. நல்லவேளை அந்த ரகசியத்தை அவரே சொல்லிவிட்டார். வாரயிறுதியில் ஒருநாளில் பல புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து அடுத்த நாள் பிளாக்கரில் ஒரே மூச்சில் உள்ளிட்டுவிட்டால், பிளாக்கரே அந்தந்த நாளில் ஒரு பதிவை வெளியிட்டு விடுமாம். அசாத்தியமான செயல்...! சாதாரணமாக ஒருவரால் முடிகிற காரியமா இது? எனக்கு இருப்பதோ ஒரு நாளோ ரெண்டு நாளோ விடுமுறை. கொஞ்சமாவது ரிலாக்ஸ் செய்யாவிட்டால் மண்டை காய்ந்து விடும். அதுவும் ஒரே தலைப்பில் தொடர்ந்து எழுதும் பொழுது ஆயாசமும், சோர்வும் ஏற்பட்டு விடும். அதனால்தான் நான் மாற்றி மாற்றி எழுதுகிறேன். ஆனால் இத்தடைகளை எல்லாம் மீறி தோழி எழுதுகிறார் என்றால் அதற்கு காரணம் சித்தகளின் ஆசி பரிபூரணமாக அவருக்கு இருப்பதுதான். ஒருவர் எந்த தத்துவம் அல்லது நபரை பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறாரோ அந்த அளவிற்கு மிகத்துல்லியமாக சிந்திப்பவரின் மன அலை சுழல் மாற்றமும், பண்பேற்றமும் பெறுகிறது. சிந்திக்கப்படும் பொருள் அல்லது நபரின் தன்மைகளை தானாகவே சிந்திப்பவர் பெறுகிறார். இந்த இயற்கை- மனோதத்துவ நியதிப்படி பார்த்தால் வான வெளியில் அரூபமாக இயங்கும் எண்ணற்ற சித்தர்களின் அருள்மழை தோழிக்கு தடையில்லாமல் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த அருள்மழை அவருக்கு வழிநடத்துவதாகவும், பாதுகாப்பாகவும், ஆசீர்வாதமாகவும் அமையும். ஞானயோகம், கர்மயோகம், குண்டலினியோகம், ராஜயோகம் என அனைத்து யோகங்களையும் ஒன்றுகூட்டி பரபரப்பான தற்கால வாழ்க்கை ஒத்தபடியும், விஞ்ஞான யுகத்திற்கு ஒத்தபடியும் மனவளக்கலை யோகம் என்ற பெயரில் மிக எளிய முறையில் உலகிற்கு வழங்கிய என் குருநாதர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆசியும் இலங்கை சிநேகிதிக்கு கிடைக்குமாக. வேதாத்திரி மகரிஷி ஒரு முறை ஆழ்ந்த தவத்தில் இருந்த நேரத்தில் போகர் அவருக்கு உணர்வாக காட்சியளித்ததாக மகரிஷி ஒரு கவியில் குறிப்பிட்டுள்ளார்.


நேரமில்லாததால் ஈழ சித்தர்கள் என்ற தலைப்பில் நான் கூற நினைத்ததை மிகசுருக்கி எழுதிவிடுகிறேன். தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர் நாகராஜ். இந்த நாகராஜ் சித்தர் என்பவரே பிற்காலத்தில் மகா அவதார் பாபாஜி என அறியப்பட்டார். நாகராஜ் சித்தர் போகரை இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற ஊரில் (பாபாஜியின் இளவயதில்) சந்தித்ததாகவும், போகர் அவருக்கு குண்டலினி யோகம், கிரியா யோகம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்து கடுமையான பயிற்சிகளுக்கு பின், குற்றால மலைக்கு சென்று அகத்தியரை சந்திக்குமாறு பணித்ததாகவும் என்னிடம் உள்ள ஒரு பழைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அகத்தியர் நாகராஜ் சித்தருக்கு சில ரகசிய உபதேசம் செய்து பிறகு இமயமலைக்கு அனுப்பி வைத்ததாகவும் அதன்பிறகே நாகராஜ் சித்தர் மகா அவதார் பாபாஜி என உலகம் முழுவதும் அறியப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. பாபாஜியைப் பற்றி எந்த வரலாற்று ஆவணமும் இதுவரை கிடைக்காததால் அவரைபற்றிய எந்த தகவலையும் உறுதி செய்ய முடியவில்லை. உண்மை பொய் என பிரித்தறிய முடியாத அளவிற்கு பலதகவல் காணக்கிடக்கின்றன. ஒரு மூத்த யோகா ஆசிரியர் ஒருவர் என்னிடம் பாபாஜியும் ஏசுநாதரும் இமயமலை சாரலில் ஒன்றாக யோகம் பயின்றவர்கள் என்றும் கூறினார். ஆனால் இவையெல்லாம் எந்த அளவு உண்மையென தெரியவில்லை. எல்லாம் அனுமானத்தின் அடிப்படையிலேயே பரவும் செய்திகளாக இருக்கின்றன. உலகம் முழுவதும் ஆன்மீக ஏக்கம் கொண்ட மனித ஆன்மாக்களின் தேவையை பூர்த்தி செய்வதே பாபாஜியின் நோக்கமாக கருதப்படுகிறது.


இன்னும் பெரியானைக் குட்டி சுவாமிகள், சித்தானைக் குட்டி சுவாமிகள் ஆகியோரை குறித்த சில செய்திகளும், போகர் கதிர்காமம் முருகன் கோயிலில் நிறுவிய பூஜா எந்திரம் குறித்த ஒரு செய்தியும் பாக்கி இருக்கிறது. அவற்றை இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.

Thursday, January 6, 2011

பெண்கள்...
பெண்கள்...
தங்கள் அழகை
மேக்கப் போட்டு
மறைத்து விடுகிறார்கள் !


- லிங்கேஸ்வரன்.

Monday, January 3, 2011

ஒரு சிறிய தவறு...
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான எந்தவொரு
நட்பிலும்
ஒரு சிறிய தவறு
இருக்கத்தான் செய்கிறது.....


- லிங்கேஸ்வரன்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...