Friday, December 23, 2011

தயங்கி நிற்கும் அறிவியல்...
படித்தவர்களின் கவனம் இப்போது சிறிது சிறிதாக ஆன்மிகம் பக்கம் திரும்பி கொண்டிருக்கிறது. ஆன்மீக பயிற்சிகளெல்லாம் உண்மையில் ஒரு வகையான சைக்கோதெரபி போன்ற சிகிச்சை முறைகள்தான். ஆன்மீக தத்துவக் கருத்துக்களை ஓரளவு அறிவியல் ரீதியில் விளக்கினால் படித்தவர்கள், பகுத்தறிவுவாதிகள், அறிவாளிகள் இவர்களெல்லாம் நம்ப வாய்ப்புண்டு. ஆன்மீக பயிற்சிகள் அனைத்திலும் முக்கியமாக வலியுறுத்தப்படுவது மனிதனின் மனம் தான். அதனால்தான் பி.ஹெச்.டி படித்தவர்கள் கூட ஆன்மீகவாதிகளிடம் தஞ்சம் அடைகிறார்கள். நித்யானந்த சுவாமிகள் போன்றவர்களிடம் ஆன்மிகம் சிக்கிக் கொள்ளும்போதுதான் ஆன்மிகம் கடுமையான கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கப்படுகிறது. உள்ளபடி ஆன்மிகம் அல்லது தத்துவம் என்பதே உண்மையை தேடுவது அல்லது நான் என்று அறிவதே ஆகும். நான் என்று ஒருவர் தேடும்போதுதான் மனம் அமைதியடைய துவங்குகிறது. மனம் போன போக்கிலேயே செயல்பட்டால் ஆரம்பத்தில் இன்பம் போல தோன்றினாலும், பிறகு சலிப்பும் சோர்வுமே மிஞ்சும்.


உண்மையில் அறிவியல் என்பதும் , ஆன்மிகம் எனபதும் இரண்டும் ஒன்றுதான். ஒரு நீளமான கயிற்றை நினைத்துக்கொண்டால் அதன் கண்ணுக்கு புலப்படும் பகுதி வரை போன்றது அறிவியல் . அதற்கு அப்பால் கட்புலனாகாத பகுதியை போன்றது ஆன்மிகம். ஆன்மீகமும் அறிவியலும் ஒரே கோர்வையாகவே உள்ளது. நமது கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டதாதால் ஆன்மிகம் மூடநம்பிக்கை என்று கருதிவிடுகிறோம். அறிவியல் எங்கே முட்டி நிற்கிறதோ அங்கேதான் தத்துவம் துவங்குகிறது. அறிவியலைக்கொண்டு ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தைக்கொண்டு அறிவியலையும் புரிந்து கொள்வதுதான் புத்தியுடைமையாகும். இந்தக்கட்டுரையை படிக்கும் நண்பர்கள் பலதரப்பட்ட கல்வி பின்புலத்தை கொண்டிருக்கக் கூடும் எனபதால், ஒரு மிக எளிமையான் உதாரணம் மூலம் இதை விளக்குகிறேன்.


நாம் கண்ணுறும் அனைத்து பொருட்களையும் பொதுவாக இரண்டு வகைகளில் பிரித்து விடலாம். அவை ஒன்று உயிரினங்கள் , மற்றொன்று உயிரற்ற சடப்பொருட்கள் . உயிரினங்களில் ஒரு செல் உயிரி, வண்டுகள், பூச்சிகள்,பறவைகள், விலங்குகள், மனிதன் போன்றவை அடக்கம். சடப்பொருட்களில் பேப்பர், பேனா, கம்ப்யுட்டர், கல், மண், கோள்கள் என உணர்வற்ற அனைத்தும் அடக்கம். இவ்விரண்டு வகைகளில் எதுவானாலும் அதாவது உயிரற்றவகையாக இருந்தாலும், உயிர்பெற்றவகையாக இருந்தாலும் - அவை பலவகைப்பட்ட தனிமங்களால் ( கார்பன், நைட்ரஜன், மக்னீசியம் போன்றவை) ஆனவை. தனிமங்கள் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை. அணுக்களோ எலெக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியுட்ரான் எனும் அடிப்படை துகள்களால் ஆனவை. இவையனைத்தும் அறிவியலால் நிரூபிக்கப்பட்டவை. இதுவரை சொன்னவற்றை தொகுத்துப் பார்த்தால்,

உயிருள்ள ஜீவன்கள் / உயிரற்ற சடப்பொருட்கள்
தனிமங்கள்
மூலக்கூறுகள்
அணுக்கள்
எலெக்ட்ரான் / புரோட்டான் / நியுட்ரான்
என்று முடிகிறது.அணுவை பிளந்து அலசி ஆராயும் விஞ்ஞானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் தேங்கியும், தயங்கியும் நிற்கிறது. உதாரணத்திற்கு எலெக்ட்ரான் துகளை எலெக்ட்ரான் மைக்ராஸ் கோப்பில் பெரிதாக்கி பார்த்துக்கொண்டே வந்தால், என்ன நடக்கிறது என்றல், எலெக்ட்ரான துகளானது மங்கலாகி ஒரு கட்டத்தில் இருட்டோடு இருட்டாகி விடுகிறது. எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் இந்த மூன்று துகள்களும் எங்கிருந்து உருவாயின, அவை சுழல்வதற்கு ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. உலகிலுள்ள அனைத்தும் இந்த மூன்று துகள்களால் ஆனவையே என்றாலும் எவ்வாறு கோடிக்கணக்கான வண்ணங்கள், சுவைகள், தோற்ற பேதங்கள் உருவாகின்றன என்பது இன்னும் விஞ்ஞானத்திற்கு எட்டவே இல்லை. சுருங்க கூறினால், எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் இவற்றின் தோற்றம், இயக்கம் அவை ஒன்றோடு ஒன்று கூடி தரும் பலகோடி விளைவுகள் -இந்த முக்கிய வினாக்கள் விடையளிக்கப்படாமலே இருக்கின்றன.


ஆன்மீக பயிற்சிகளில் மனதை மையமாக வைத்து செய்யப்படும் தியானப்பயிற்சியே முக்கியமானதாகும். தியானம் மூலம் - வெளியிலேயே அலையும் மனதை - அகம் நோக்கி திருப்பி - மனதின் வேகத்தை படிப்படியாக குறைத்து பெறப்படும் மனதின் உள்ளுணர்வு நிலையிலேயே அணுவின் ரகசியங்களை அறிந்து கொள்ளமுடியும் என்கின்றனர் தத்துவஞானிகள். சித்தர்கள் பாடல்கள், இந்திய தத்துவங்களான நியாய-வைசேடிகம், ஜைனத் தத்துவம் போன்றவற்றில் அணுவை பற்றி விரிவாக அலசப்படுகிறது. இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றிணைத்து நோக்கும் ஒரு பரந்த மனப்பான்மையுடன் கூடிய அறிவும் ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவானது தனிமனிதனுக்கும், நாடுகளுக்கும் ஒட்டு மொத்த உலகிற்குமே அமைதியெனும் அக ஒளியை ஏற்றி வைக்கவல்லது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், அடிமைப்பட்ட மக்கள், பிழைக்க வழியில்லாமல் பசியில் வாடும் பிச்சைக்காரர்கள், நோயாளிகள் என ஒவ்வொருவருமே இன்றைய உலகின் பொருளாதார, சமூக , அரசியல் குழப்பங்களால் சொல்லயியலாத துயரங்களில் வாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆன்மீக அறிவே மனிதகுலத்தை துன்பங்களிலிருந்து விடுவிக்கும் வழியாகும். மிகவும் மெதுவான வழிதான் என்றாலும், இதைத்தவிர பொருத்தமான், உறுதியான வழியொன்றும் இருப்பதாக தெரியவில்லை.

Sunday, December 11, 2011

ஸ்வாதியும், போராடும் புலிகளும்...
இரண்டு நாட்களுக்கு முன்பு போராளி பார்த்தேன். சினிமா பொம்மை கதாநாயகி போலல்லாத சுவாதியின் இயல்பான அழகு என்னை ரொம்பவே கவர்ந்திருந்தது.
சுவாதிக்காகவே படத்தை பார்த்துவிட வேண்டுமென தீர்மானித்திருந்தேன். சிங்கப்பல் தெரிய சிரிக்கும் சுவாதி கொள்ளை அழகு. ஒரு காட்சியில் சசிகுமார் சுவாதியிடம் நீ இனிமேல் நினைத்தாலும் என்னைவிட்டு போக முடியாது என்கிறார். அதற்கு சுவாதி, உங்கள விட்டு போகமாட்டேன் என்பார், சசிகுமாருக்கு சட்டென்று கோபம் வந்து, எனது...போகமாட்டியா... என சற்று கோபத்துடன் அன்பை வெளிப்படுத்துவார். அந்த காட்சியில் சுவாதி பயமும், இன்ப அதிர்ச்சியும் கலந்து கலங்கிய கண்களுடன் ஒரு எக்ஸ்பிரஷனை காட்டுகிறாரே பார்க்கலாம்....அசத்தல் எக்ஸ்பிரஷன். சிலவினாடிகளே வரும் அபூர்வ காட்சி. தவறாமல் பாருங்கள்.


ஆனந்த விகடனில் படத்தை சரியாக விமர்சனம் செய்யவில்லை. எந்த ஒரு படைப்பையும் மேலோட்டமாக எடைபோட்டு விடகூடாது. ஒரு படைப்பாளியின் மனதின் ஓட்டத்தை அல்லவா ஒரு படைப்பு பிரதிபலிக்கிறது? சிலோன் பரோட்டாவுடன் ' போராளி' எதிர்பார்ப்பை ஏறக்கட்டி விட்டார்கள் என்றிருக்கிறார்கள் விகடனில். அது உண்மையல்ல. சமுத்திரக்கனி தனது தமிழ் உணர்வை படம் முழுக்கவே பின்புலமாக சித்தரித்திருக்கிறார். குமரன், பாரதி, தமிழ்செல்வி என்ற பெயர்களை உற்று நோக்குங்கள். கிராம அத்தியாயத்தில் ஒரு வீர தமிழ்ப்பெண்ணை காட்டியிருக்கிறாரே, அவர் யார்? குறிப்பாக, சசிகுமாருக்கு கிராமத்தில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த கவனத்திற்கு உரியவை. யார வேணாலும் நம்பலாம், இந்த சொந்தக்காரய்ங்க இருக்க்காங்களே.....என்று சசிகுமார் பல்லை கடித்துக்கொண்டு கூறும் வசனம், உடனிருந்தே செய்யப்படும் துரோகத்தைதானே குறிக்கிறது. ஒரு மனிதன் அஹிம்சை வழியிலும், அற வழியிலும் வாழவேண்டும் என்பது சரிதான். ஆனால் நம் உயிருக்கே ஆபத்து என்றால், அவர்களை திருப்பி தாக்கி அழிப்பது என்பது இயற்கை நியதியில் சரியான ஒன்றுதான். உயிர் போய்விட்டால், மனிதனின் அடிப்படை உணர்வான உளதாம் தன்மைக்கே (Feeling of Existence) அர்த்தமில்லையே. படத்தின் கடைசி காட்சிகளில் இதையொட்டிய கருத்து வெளிப்படுகிறது.


போராளி படம் முழுவதுமே இலங்கை நிகழ்வுகளை முடிந்தவரையில் இயக்குனர் பின்புலமாக சித்தரித்திருக்கிறார். சமூக-அரசியல் கட்டுப்பாடுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டே வாழும் ஒரு படைப்பாளி ஒரு இவ்வளவுதான் செய்ய முடியும். வேறு என்ன செய்வது சொல்லுங்கள்? பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு பேட்டியில், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து ஒரு சினிமாவாக எடுக்க விரும்பியதாகவும்,. அதில் திரு.பிரபாகரன் பாத்திரத்தில் நடிக்க விரும்பியதாகவும் கூறினார். கூறிவிட்டு , இன்றைய சூழலில் அப்படி ஒரு படம் எடுத்தால் அதை வெளியிடவே நாக்கு தள்ளி விடும் என்றார். தமிழ்நாட்டில் அதுதான் உண்மை.


ஆனந்த விகடனிலும் மற்றும் சில பத்திரிக்கைளும் இலங்கையில் நடைபெறும் கொடூர நிகழ்வுகளை குறித்து கட்டுரைகள் வெளிவரும். முதலில் ஒருசில பத்திகள் படிக்க துவங்குவேன், பிறகு அப்படியே நிறுத்திவிட்டு வேறு செய்திகளுக்கு தாவி விடுவேன். என் இதயம் ஏற்கனவே நிறைய தாங்கி தாங்கி பலகீனமாகிவிட்டது தான் காரணம்.


என் அப்பாவிற்கு இலங்கைப் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் சுவாதியும், ஜெய்யும் வரும் ' கண்கள் இரண்டால் ' என்ற பாடல் டிவியில் ஓடும் போதெல்லாம் அப்படியே கண்சிமிட்டாமல் பார்ப்பார். கோபத்தில் கத்திக் கொண்டிருக்கும்போது கூட அந்த பாடல் டிவியில் ஒலித்தால், அப்படியே அமைதியாகி விடுவார். எனக்கு இதன் காரணம் நீண்ட நாட்களாக புரியவே இல்லை. பின்பு ஒருநாள், பழைய ரெக்கார்டுகளை துருவிக் கொண்டிருக்கும்போது என் அம்மாவின் சிறுவயது போட்டோ கிடைத்தது. அப்போது விளங்கிவிட்டது , ஏன் என் அப்பாவிற்கு கண்கள் இரண்டால் பாடல் பிடித்ததென்று.

Tuesday, December 6, 2011

காமப் பெருங்கடல்...காமப் பெருங்கடலில்
சிக்கி
தக்கை போலான
உடம்பு
போன போக்கில்
மிதந்து
செல்கிறது...!

Friday, November 25, 2011

சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட் பிதாமகன் !


சச்சின் தனது நூறில் நூறாவது சதமடிக்க தொடர்ந்து திணறி வருகிறார். பத்திரிகை பேட்டிகளில் தனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை என்றே கூறுகிறார். எனினும் டென்ஷன் இருக்கத்தானே செய்யும். எப்படியும் நூறில் நூறு அடித்து விடுவார். ஆஸ்ட்ரேலியாவின் பிராடு மேன் ஒரு மேட்சில் நாலே நாலு ரன் அடித்தால் அவரது சராசரி நூறு ஆகிவிடும் என்றிருந்ததாம். ஆனால் அந்த போட்டியோடு தான் ஓய்வு பெறப்போவதாக முன்கூட்டியே அறிவித்து விட்டாராம். என்ன ஆனது தெரியுமா, பிராடு மேன் அந்த மாட்சில் டக் அவுட் ஆகிவிட்டார். எந்த சூழ்நிலையிலும் பதட்டமாகாமல் இருப்பது ஒரு திறமை.


நான் சிறுவனாக இருக்கும்போது டெண்டுல்கர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஓரிரு மேட்சுகளில் மண்டையில் அடிவாங்கினார். பிறகு, பந்துகள் (கிரிக்கெட் பந்துதான்! ) டெண்டுல்கரிடம் அடிவாங்கத் துவங்கின. பாகிஸ்தானுடன் ஒரு டெஸ்டில் 147 ரன்கள் விளாசி விட்டு, பேட்டை தரையில் ஸ்டைலாக ஊன்றி ,நின்று கொண்டுஇருந்தார். சுருண்ட முடியுடன் கூடிய வித்யாசமான தலைமுடி அவரை தனித்து அடையாளப்படித்தியது. இளம்வயதிலேயே விதி அவரை புகழேணியில் ஏற அனுமதித்தது.


சச்சின் 22 வயதிலேயே திருமாணமானவர். அவரைவிட ஐந்து வயது மூத்தவரான அஞ்சலி சச்சினிடம் I love you,sachin என்றாராம். அப்போதெல்லாம் Technology-ஐ விட மனிதர்களுக்கு மதிப்பிருந்தது. நான் சொல்லவருவது என்னவென்றால், முன்பு காதலித்தவர்கள் ஒருவர் மீதான நேசத்தை தங்கள் மனதில் முதலிடத்திலும், பணம் டெக்னாலஜி இவற்றை அடுத்த இடத்திலும் வைத்திருந்தார்கள் . இப்போது நிலைமை அப்படியே உல்டா. காதல், புனிதம் என்ற வார்த்தைகளை கேட்டாலே இளம்பெண்கள் ஜாக்கிரதையாகி விடுகிறார்கள். தயிர்சாதம், ஓ நீ அந்த Category-யா , பையன் ஜல்லியடிக்கிறான் என செல்போனில் ரிப்ளை பண்ணாமலே எஸ்கேப் ஆகிறார்கள். மீறிகேட்டால், பிசி என்று ஒற்றை வரியில் வெறுப்புஏற்றுகிறார்கள். அதற்கு மேலும் ஒரு பெண்ணுடன் பேச தன்மானம் குறுக்கே நிற்கிறது. சச்சின்-அஞ்சலி காதலித்தெல்லாம் அந்த காலம். ஐ லவ் யூ சொன்ன பெண்ணிடம் உருகிப்போய் II too love you, anjali என்றாராம். சச்சின்-அஞ்சலி ஜோடியைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. சச்சின் கிரிக்கெட்டில் திறமை குன்றாமலும், புகழின் உச்சியிலும் இருக்க காரணம் அவர் தனிமனித வாழ்வில் ஒழுக்கமாக இருப்பதாலோ என்னவோ என எண்ணத் தோன்றுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்திலிருந்து விலகிப்போன மலைகளுடன் இதை ஒப்பிட்டு பாருங்கள், தெளிவாகப் புரியும்.


சச்சின் பேட்டிங் செய்யும் ஸ்டைலே அழகாக, ஒரு அமைப்பாக இருக்கும். சச்சின் விளையாடுவதை பார்க்கும்போது ஒரு பெண்ணை இழுத்து அணைப்பது தான் எனக்கு நினைவுக்கு வரும். வேகமாக தன்னை நோக்கி வரும் பந்தை - காந்தம் ஈர்ப்பது போல - தன் பேட்டில் உள்வாங்கி அணைத்து பிறகு ஆன் சைடிலோ ,ஆப் சைடிலோ வேண்டிய திசையில் அடித்து விடுவார். Classical Batsman என்ற வார்த்தைக்கு சச்சின்தான் சரியான உதாரணம். தென்னாப்ரிக்கா, ஆஸ்ட்ரேலியா இவர்கள் மண்ணில் விளையாடும்போது ஸ்லிப்பில் நாலு பேர் நிற்பார்கள். பௌலிங் அசுர வேகத்தில் வீசுவார்கள், தொட்டாலே எகிறி ஸ்லிப்பில் கேட்சாகி விடும். ஆனால் சச்சினோ பேட்டின் பிளைடால் பந்தை லாவகமாக திசைதிருப்பி , இரண்டு ஸ்லிப்புகளுக்கிடையே உள்ள மிகக்குறுகிய இடைவெளியில் நுழைத்து விடுவார். பந்து பவுண்டரிக்கு ஓடும். ஸ்வீப் ஷாட் என்று ஒரு ஷாட் இருக்கிறது. மற்ற பேட்ஸ் மேன்கள் ஸ்வீப் ஷாட் அடிக்கிறேன் என்ற பேரில் தரையை கூட்டிவிட்டு , தூசு கிளப்புவார்கள். சச்சின் ஒருவர்தான் துல்லியமாக ஸ்வீப் ஷாட் அடிக்கத் தெரிந்தவர். பவுண்டரி அல்லது இரண்டு ரன்கள் உறுதி.


ஸ்கொயர் கட் (Square cut), ஸ்கொயர் டிரைவ் (Square drive), ஸ்டிரைட் டிரைவ் (Straight drive) என அனைத்துவித ஷாட்டுகளையும் நேர்த்தியாகவும், லாவகமாகவும் அடிக்கத் தெரிந்தவர் சச்சின் மட்டும்தான். ஸ்கொயர் டிரைவ் செய்வதற்கு மிகுந்த திறமை வேண்டும், ஸ்கொயர் டிரைவ் அடிக்கும்போது சொதப்பி விட்டால் பந்து ஆப் சைடில் அண்டையில் நிற்கும் பீல்டரின் கைகளில் தஞ்சம் புகுந்துவிடும். ஸ்கொயர் கட்டில் சொதப்பினால் பந்து லட்டுபோல பாயின்ட் அல்லது கல்லி பொசிஷன்களில் நிற்கும் பீல்டரிடம் கேட்சாகிவிடும்.ஒருமுறை தென்னாப்ரிக்காவுடன் விளையாடும்போது அசுர வேகத்தில் Pollack. வீசிய பந்தை சச்சின் ஸ்கொயர் கட் அடித்தார். பாயிண்டில் நின்று கொண்டிருந்த Cullinan அப்படியே தான் நின்றிருந்த இடத்திலிருந்து விலகிக்கொண்டார். பந்து அந்த அளவு கையில் தொட முடியாத வேகத்தில் வந்தது. வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் Excellent Shot என்று சொல்லி முடிப்பதற்குள் பந்து பவுண்டரியை தொட்டு விட்டது. எல்லோரும் திகைத்து விட்டார்கள்.ஷார்ஜாவில் ஆஸ்ட்ரேலியாவுடன் இரண்டு மேட்சுகளில் இந்தியா விளையாண்டது. அப்போதுதான் சச்சினின் விஸ்வரூபத்தை எல்லோரும் புரிந்து கொண்டார்கள். புயல்போல் சுழன்று நாலாபுறமும் பந்தை சிதறடித்த அவரது அன்றைய ஆட்டத்தை வியந்து எழுதாத ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம்.ஸ்டிரைட் டிரைவ் அடிக்கும்போது சச்சின் பிழையிழைத்து ஒருமுறை கூட நான் பார்த்ததேயில்லை. கால்களுக்கடியில் லெக் சைடில் பால் சிக்கினால் தொலைந்தது, ஆன் சைடில் பந்தை சுழட்டியடித்து விடுவார். ஸ்கொயர் லெக் போசிஷனிலிருந்து பீல்டர் லொங்கு லொங்கென்று ஓடிவர வேண்டியதுதான். எந்த ஒரு வீரரும் ஆன்சைடிலோ ஆப்சைடிலோ எதோ ஒன்றில் மட்டுமே திறமை வாய்ந்தவராக இருப்பார். உதாரணமாக, கங்குலியை தனக்கு ஆப் சைடில் மிகவும் நுணுக்கமாக விளையாட கூடியவர். இரண்டு பக்கமும் திறமையாக விளையாடக் கூடியவர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடம் சச்சினுக்குதான்.


ஹூக் ஷாட் (Hook shot) என்று ஒரு கவர்சிகரமான ஆனால் ஆபத்தான ஷாட் ஒன்றுள்ளது. பந்து தரையில் குத்தி எழும்பி தோள்பட்டை அல்லது முகத்துக்கு நேரே வருவதுதான் ஹூக்ஷாட் அடிக்க உகந்த பாலாகும். பேட்சுமேன் சற்று வலப்புறம் முன்னோக்கி நகர்ந்து ,உடலை திருப்பி பேட்டை சுழற்றி பின்நோக்கி ஓங்கி வீச வேண்டும். பேட்டும் பந்தும் துல்லியமாக பொருந்தினால் சிக்சர் உறுதி. டைமிங் மிஸ்ஸாகி விட்டது என்று வைத்து கொள்ளுங்கள், முகம் பெயர்ந்து விடும் அல்லது பந்து எகிறி கேட்சாகிவிடும். குனிந்து கொள்வது உத்தமம். பெரும்பாலான பேட்சுமேன்கள் இந்த ஷாட்டை தவிர்த்து விடுவார்கள். இந்த ஒரே ஒரு ஷாட்டை தான் டெண்டுல்கர் அடித்து பார்த்ததில்லை. சேவாக் அவ்வப்போது ஹூக் அடிக்க முயல்வார். இவைகளைத்தவிர லேட் கட், லேக் கிளான்ஸ் என பல தரப்பட்ட ஷாட்டுகள் உண்டு. எல்லாம் சச்சினுக்கு அத்துப்படி. லேட் கட், லேக் கிளான்ஸ் இவற்றில் ஒரு ரன்தான் கிடைக்கும், ரிஸ்க் அதிகமில்லை. சுலபமாக தட்டி விடலாம்.


வந்த புதிதில் சச்சினுக்கு இருந்த விளையாட்டு வேகம் இப்போது இல்லைதான். ஆனாலும் மிகுந்த பக்குவத்தோடும், நிதானமாக, முதிர்ச்சியான ஆட்டத்தை சச்சின் வெளிப்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும். கிரிக்கெட் கடவுள் என்ற உயரத்திற்கு ரசிகர்களால் தூக்கி வைக்கப்பட்டாலும், வாய்ப்பு கிடைத்தால் சந்தடி சாக்கில் கபில் தேவ் , கவாஸ்கர் போன்றவர்கள் சச்சினை கருத்து கூறி காலை வாருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். சச்சின் டெண்டுல்கரின் இடத்திற்கு இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.

Wednesday, November 23, 2011

வேதாத்திரியத்தின் விஸ்வரூபம் ...

நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் தான்; ஆனால் மனித நம்பிக்கை உள்ளவன்; மனிதர்களை நேசிக்கிறவன். மண்ணில் ஒவ்வொரு துணுக்கும் எல்லா மனிதருக்கும் சொந்தமானது என்பதை நம்புகிறவன். சூரியனைப் போல, மழையைப் போல, நிலாவைப் போல , காற்றைப் போல எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்ற வேட்கையோடு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறவன் நான்.


இந்த ஆனந்தத்தில் வேதாத்திரிய தத்துவத்தின் விஸ்வரூபத்தை வேதாத்திரி மகரிஷியின் உட்குரலாக நான் கேட்கிறேன். அதனால் அவருடைய கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு நெருக்கம் இருப்பதாக நிச்சயம் நான் நம்புகிறேன்.வேதாத்திரி மகரிஷி அவர்கள் மழை பொதுவுடமையாக இருப்பது போல, காற்று பொதுவுடமையாக இருப்பது போல - தண்ணீரையும் பொதுவுடைமையாக்க வேண்டும் என்கிறார். இந்தக் கருத்தை ஆழமாக , அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி. எனக்கு பிடித்தமான கருத்தும் இதுதான்.

- கவிப்பேரரசு வைரமுத்து.

______________________________________________________________


வேதாத்திரி மகரிஷியின் பெருமைகளில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு கோணத்தில் வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்களில் பெரியார் சாயல் தெரியும். இன்னொரு கோணத்தில் மகாத்மா காந்தியின் சாயல் தெரியும். விவேகானந்தர் சாயல் தெரியும். இப்படி ஒரு மனிதன் ஒரே நேரத்தில் பல்வேறு வடிவங்களை சமூகத்தில் காட்டுவது என்பது எல்லோருக்கும் இயலாது.


மகரிஷி அவர்கள் உள்முகமாக , தான் அனுபவித்து தெளிந்து, அதன் பிறகு தத்துவங்களை நமக்கு வழங்கியிருக்கிறார். அந்த அனுபவம்தான் மிக அற்புதமானது.


இறைவழிபாடு, உயிர்வழிபாடு இரண்டும் இணைந்தால்தான் அது ஆன்மீக வழிபாடு என்று ஒரே வரியில் சொல்கிறார்.மகரிஷியின் வாழ்கையை முற்றாக பின்பற்றியவர்கள் இந்த மண்ணில் நல்லவண்ணம் வாழமுடியும். உடல்நலனையும், மனநலனையும் சேர்த்து சிந்தித்து , இரண்டின்பால் மனித சமுதாயத்தை கொண்டுவந்து சேர்ப்பதற்காக ஒரு மாபெரும் தவத்தை நடத்தியுள்ளார்கள் வேதாத்திரி சுவாமிகள்.

- தமிழருவி மணியன்.

_______________________________________________________________


நன்றி: அருள்நிதி. மன்னார்குடி பானுகுமார் அவர்கள்.

( வேதாத்திரி மகரிஷி பற்றி நூறு அறிஞர்கள் என்ற நூலிலிருந்து. வெளியீடு: விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர் )

____________________________________________________________

Monday, November 21, 2011

பூ வனம்...!


தாலி முடிச்சு ஒண்ணு
அவ கழுத்துல போட
நெனச்சேன்...
அவளோ என் மனசுல
முடிச்சு ஒண்ணு
போட்டு விட்டா...
மோதிரம் ஒண்ணு
அவ கையில போட
நெனச்சேன்...
அவளோ உள்ளத்துல
மோதிப்பாருன்னு
சொன்னா....
அவ உள்ளக் கதவுதான்
இரும்பு...
ஆனா உள்ளுக்குள்ள
எல்லாமே
பூ வனம்.....!


லிங்கேஸ்வரன்

Tuesday, November 15, 2011

A True love...!
A True love is like
the silence that
prevails in the
clear sky;
Though it seems
to be nothing,
it looks awesome
and beautiful with
the silently
glowing stars...!


Lingeswaran

Wednesday, November 9, 2011

பேரழகி...
சொன்ன பிறகுதான்
அவள்
பேரழகியாக
தெரிகிறாள்...
காதல்
அதிகரிக்கிறது...
மனம்
நோகிறது...!


லிங்கேஸ்வரன்

Saturday, November 5, 2011

எம்.பி.ஏ - ஓர் எளிய அறிமுகம்.

மனிதகுலம் தன் அறிவின் முழுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார் சுவாமி விவேகானந்தர். மனித வாழ்க்கையே அறிவின் முழுமையை நோக்கிய பயணம்தான் என்கிறார் மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி. விலங்குகள் ஐம்புலன்களின் வழியில் வாழ்பவை. தேவைக்காக (Biological needs) மட்டுமே ஒரு பொருளையோ, துணையையோ நாடும். ஐம்புலன்களின் இயக்கம், அனுபவங்கள் மூலமாகவே விலங்குகள் வாழ்கையை நடத்துவதால் அவை என்றுமே இயற்கையை மீறுவதில்லை; இயற்கையை ஒட்டியே அவற்றின் வாழ்வு அமைகிறது. இக்காரணத்தினால் விலங்கின வாழ்வில் ஒழுக்கம், பாவம், புண்ணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை, அதனால் ஒழுக்கத்தை மீறுவது - பாவம் புரிவது என்ற நேர்வும் அவற்றின் வாழ்வின் எழவில்லை.


ஆனால் மனிதனின் வாழ்வு அப்படிப்பட்டதல்ல. பரிணாம வளர்ச்சியில் மிருகங்களிருந்து மனிதன் தோன்றினான். அப்போதே மனிதனிடம் ஆறாவது அறிவு செயல்பட தொடங்கிவிட்டது. ஆறாவது அறிவு என்பது புலன்களை கடந்து சிந்திப்பதாகும். எந்த ஒரு பொருளையும் உருமாற்றி, அழகுபடுத்தியே மனிதன் பயன்படுத்த தொடங்கினான். எந்த செயலுக்கும் காரணத்தை அறிய முற்பட்டான். மனிதனின் இடைவிடாத முயற்சியில் பலபல கண்டுபிடிப்புகள் உருவாகின. எந்த ஒரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூலகாரணமாகவும் உட்பொருளாகவும் ஒரு பொருள்/ஆற்றல் இருக்கவேண்டுமென யூகித்துக் கொண்டான். அதனை அறிந்துவிட வேண்டுமென இடைவிடாது காலங்காலமாக முயன்றார்கள். அவ்வப்போது சோர்வும்,தடங்கலும் ஏற்பட்டாலும் தங்கள் முயற்சியில் மனம்தளரவில்லை. காரணங்களுக்கெல்லாம் காரணமாகவும், பொருட்களுக்கு எல்லாம் பொருளாகவும் இருப்பதால் அப்பொருளுக்கு மெய்ப்பொருள் ( Almighty or Providence ) என முன்னோர்கள் பெயரிட்டார்கள். மெய்ப்பொருளை குறித்த தேடலானது மனித மனத்தில் தலைமுறை தலைமுறையாக எல்லோருக்கும் தொடர்ந்து வருகிறது. இதுவே மெய்ஞ்ஞானம் எனப்படும். ஆங்கிலத்தில் Philosophy எனவும் , தமிழில் தத்துவம் எனவும் அழைக்கபடுகிறது.


ஒருபுறம் மெய்ஞான தேடல் தொடர்ந்து கொண்டிருந்தாலும் , மனிதனின் கலாச்சாரமும் ( Cultural development ) ஒருபுறம் வளர்ச்சி பெற்றுக்கொண்டே இருந்தது. மெய்ப்பொருளை பற்றிய ஆராய்ச்சியே - நாகரீக வளர்ச்சியில் உருமாற்றம் பெற்று , மருவி, சிதைந்து, பகுக்கப்பட்டு பல்வேறு பட்டப்படிப்புகளாக்வும், பட்ட மேற்படிப்புகளாகவும் நம்மிடையே தற்காலத்தில் உலவிவருகின்றன. தத்துவமே எல்லாவித படிப்புகளுக்கும் தாயாகும். Philosophy is the mother of all academic studies. அறிவின் முழுமையை நோக்கிய பயணம் என்ற கருத்தையே தத்துவம் என்ற சொல் குறிக்கிறது. இதனால்தான், பட்ட மேற்படிப்புக்கு பிறகான எந்த ஆராய்ச்சி படிப்பும் M.Phil (Master of philosophy) என்றும், Ph.D (Doctorate in philosophy) என்றே கல்லூரிகளால் வழங்கப்படுகின்றன.


இன்றைய உலகில் வழங்கிவரும் பல்வேறு படிப்புகளில் MBA என்ற படிப்பானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இதுவே ஏறக்குறைய ஒரு முழுமையான படிப்பை நெருங்கி வருகிறது ( A Complete academic study ) . MBA -ல் உள்ள சிற்சில குறைகளை நீக்கிவிட்டு, சேர்க்க வேண்டியதை சேர்த்துவிட்டால் முழுமை பெற்றுவிடும். மற்ற படிப்புகளை நோக்கினால் அவை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். உதராணமாக, B.Sc கணிதம், இயற்பியல், வேதியியல், உளவியல் மற்றும் M.Sc, B.E, MBBS போன்றவையாகும். இன்னும் ஒருபடி மேலேபோய், அவற்றையும் பகுத்து பகுத்து பல்வேறு பட்டப்படிப்புகளாக கல்லூரிகளில் வழங்குகிறார்கள். உதாரணமாக, M.Sc(Nuclear physics) , B.E (Petrol Engineering), B.Sc(Interior designing), M.Ch (Neurology) etc. இவையெல்லாம் நுட்பமாக படிக்கவேண்டியவை. குறுகிய அளவிலேயே இருப்பதால் இவற்றை படிப்பதால் விசாலமான அறிவு ஒன்றும் ஏற்பட்டுவிடாது. சம்பாதிக்க பயன்படும்.


MBA என்ற பட்டமானது அப்படி அமையாமல், ஒரு உலகளாவிய பார்வையும் ( Global view ), விசாலமான அறிவையும் கொண்டு விளங்குகிறது. சிலர் MBA -ல் எல்லா படங்களும் பொதுவாகவே உள்ளது; படிக்க பெரிதாக ஒன்றுமில்லை. குப்பை என்றுகூட சொல்வார்கள். அது அவரவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது. ஒரு விஷயத்திற்கு நாம் மனதால் கொடுக்கும் மதிப்பே அதன் மதிப்பாகும். மனதால் அன்றி எதைக்கொண்டு ஒரு பொருளை மதிப்பிடுகிறோம். MBA வானது ஒரு எல்லைக்குள் தன்னைக்குறுக்கி கொள்ளாமல் பலதுறை அறிவை தன்னுள் அடக்கிக்கொண்டு விளங்குகிறது. MBA-ல் கணிதம் (Maths), கணிதவியல் (Accountancy), பொருளாதாரம் (Economics), உளவியல் (Psychology), வணிக சட்டம் (Business law), உற்பத்தி நிர்வாகம் (Production management), மனிதவள மேம்பாடு (Human resource management), தொழிலாளர்நல சட்டம் (.Labor welfare and act), நிதி மேலாண்மை (Financial management), சர்வதேச பொருளாதார, சமூக சூழல் (International political and economic environment) , ஆராய்ச்சி செயல்முறைகள் (Research .methods) - இத்தனை பாடங்களையும் ஒருங்கே கற்றுக்கொடுக்கிறார்கள்.


முயற்சி செய்தால் ஒரு .MBA மாணவர் பலதிறமைகளை பெற்று விளங்கலாம். ஆங்கிலத்தில் இதனை .Versatile என்று கூறுவார்கள். புரியும்படி கூறினால், சகலகலா வல்லவர் என்று கூறலாம். ஆர்வத்துடன் படித்தால் MBA படிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை ஒருவருக்கு தரக்கூடியதாகும். A MBA student is supposed to know something about everything. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இயக்குனர் மணிரத்னத்தை கூறலாம். மணிரத்னம் புனேவில் MBA படித்தவர்.


இப்போதுள்ள .MBA படிப்பில் விடுபட்டவை உயிரியல் (Biology) மற்றும் வணிக தார்மீக நெறிகள் (.Business ethics) போன்றவை மட்டும்தாம். மருத்துவத்தில் (MBBS) முதல் வருடத்தில் .Anatomy, Bio- chemistry, Physiology போன்ற பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இவை மூன்றையும் மிகவும் சுருக்கி, எளிமையாக்கி .MBA -ல் ஒரே பேப்பராக சேர்த்து விடலாம். கூடவே அன்றாட வாழ்வில் பிரயோஜனப்படும் உளவியலையும் (the psychology which is applicable and useful to practical life). அந்த பேப்பரில் சேர்த்து விட்டால் போதும். எந்த ஒரு படிப்பனாலும் படிப்பவருக்கும் பயன்பட வேண்டும், சமூகத்திற்கும் பயன்பட வேண்டும் என்பதே அதன் உள்நோக்கமாகும். ஒரு மனிதனானவன் தனக்கும், சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை ஐயமற உணர்ந்து அதற்கேற்ப பொறுப்போடு, சமுதாயநல நோக்கோடு (Social welfare) தனது செயல்களை கட்டுப்படுத்தி நடந்து கொள்வதுதான் .Ethics எனப்படும். தூய தமிழில் அறம் எனப்படும். Business Ethics எனப்படுவது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். இருந்தபோதிலும் .Ethics, Responsibility போன்றவற்றையெல்லாம் யார் மனதிலும் நாமாக திணிக்க முடியாது; தானாகவே வர வேண்டும். பீட்டர் டிரக்கர் உள்ளிட்ட பல மேனேஜ்மென்ட் மாமேதைகள் தொடர்ந்து .Business ethics -ஐ வலியுறுத்தி வந்தார்கள். தற்போது MBA படிப்பில் Business ethics என்பது Corporate Social Responsibility என்ற பெயரில் ஒரு முக்கிய இடமும், கவனமும் பெற்று வருகிறது. நிறுவனங்களும் CSR செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் (IGNOU) கடந்த ஆண்டு MBA (Social Welfare) என்ற படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.


IIM (Indian Institute of Management) என்ற கல்வி நிறுவனம் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்பெற்றது. IIM-ல் MBA படித்தவர்கள் ஒரு மாதத்திற்கே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் .IIM-கள் அமைந்துள்ளன. IIM, Bangalore ஒரே ஒரு நான் தடவை சென்றுள்ளேன். IIM-ல் MBA சேர்வதற்கு CAT (Common Aptitude Test) என்ற அகில இந்திய பரீட்சை எழுத வேண்டும். அதை தவிர MAT (Management Aptitude Test) என ஒரு டெஸ்ட் உள்ளது. மேலும், IIT (Indian Institute of Technology), பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் என எல்லாவற்றிலும் MBA படிப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு கல்லூரிகளில் MBA சேர .TANCET எழுத வேண்டும். இதை தவிர, Consortium Test எழுதி துட்டு கொடுத்து கூட சேரலாம். IIM -ல் படித்தால் மட்டும்தான் உயர்வு, மற்றதெல்லாம் தாழ்வு என்றில்லை. எல்லா MBA களும் ஒன்றுதான். நாம்தான் திறமைகளை முயன்று வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு .MBA மாணவர் - நல்ல தகவல் தொடர்பு திறன் (Communication skill), ஆங்கில அறிவு (English proficiency), தலைமைப் பண்பு (Leadership), பிறருடன் சுமூகமாக உறவாடுதல் (Interpersonal skill), ஒருங்கிணைக்கும் திறன் (Co-ordination), குழுவாக செயல்படுதல் (Team spirit) போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்க்கபடுகிறார்.


எனக்கு தெரிந்தவரை நடிகைகளில் பத்மப்ரியா எம்.பி.ஏ. படித்தவர். யார் கண்டது, நீங்களும் எம்.பி.ஏ. படிக்கும்போது பத்மப்ரியாவை போல ஒரு அழகான தாரகையை சந்திக்க நேரிடலாம். எனக்கு அப்படிதான் நடந்தது !


Wednesday, November 2, 2011

காதல் பொன்னம்மா...யம்மா யம்மா...
காதல் பொன்னம்மா...
நீ என்ன விட்டு
போனதென்னம்மா...
நெஞ்சுக்குள்ளே
காயம் ஆச்சம்மா...
என் பட்டாம்பூச்சி
சாயம் போச்சம்மா...
ஆணோட காதல்
கைரேகை போல...
பெண்ணோட காதல்
கைக்குட்டை போல...
கனவுக்குள்ள அவள
வச்சேனே...
என் கண்ணு ரெண்டையும்
திருடிப் போனாளே...
புல்லாங்குழல கையில்
தந்தாளே...
என் மூச்சுகாற்ற வாங்கி போனாளே....
__________________________________________

வானவில்லின் கோலம் நீயம்மா...
என் வானம் தாண்டி போனதென்னம்மா...
காதல் இல்லா ஊரு எங்கடா...
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா...
__________________________________________

நன்றி: ஏழாம் அறிவு.

Saturday, October 29, 2011

தத்தளிக்கும் மனமே...
தத்தளிக்கும் மனமே
தத்தை வருவாளா...
மொட்டு இதழ்
முத்தம் ஒன்று
தருவாளா...
கொஞ்சம் பொறு...
கொலுசொலி
கேட்கிறதே....!

கவிஞர். பழநி பாரதி

Wednesday, October 26, 2011

மன இறுக்கம் மற்றும் கவலை இல்லாமல் வாழ்வது எப்படி?எல்லோருக்கும் மன இறுக்கம் (Tension.) உண்டு. எதிர்காலத்தை குறித்த (Apprehension) பயம், கவலை, பதட்டம் போன்றவை இல்லாதவர்களே இல்லை எனலாம். ஒருவருக்கு ஒருவர் அளவுதான் (magnitude) வேறுபடுமே தவிர மன இறுக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. சற்று கூடக்குறைய இருக்கலாம். மன இறுக்கம் என்பதும், மன அழுத்தம் (Depression) என்பதும் இரண்டும் ஒன்றுதான். கவலைகள், பயம் போன்றவை தொடர்ச்சியாக மனதை அழுத்தும்போது மன அழுத்தம் என்றாகிறது.


மன இறுக்கம் அல்லது மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள் அதிலிருந்து ஏதாவது ஒருவகையில் விடுபடவே முயற்சி செய்கிறார்கள். கவுன்சிலிங், யோகா, தியானம், ஆங்கில மருந்துகள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் - அவரவர்களுக்கு தெரிந்தவரை முயல்கிறார்கள். முயற்சியின் அளவிற்கேற்ப ஓரளவு பலனும் கிடைக்கிறது. நவீன நிர்வாக (Management) இயலில் Stress management program என்ற பெயரில் Workshop -கள் நடத்தப்படுகின்றன. கார்பொரேட் கம்பெனிகளில் பணிபுரியும் ஊழியர்கள் (Employees.) - வேலைப்பளு (Workload) மற்றும் குடும்ப பிரச்சினைகள் (Family conflicts) இவற்றின் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை வரை சென்று விடுவதால் கம்பெனி நிர்வாகம் இதில் ஒரு தனிகவனம் (of serious concern) செலுத்துகின்றன. மனரீதியான பிரச்சினைகளால் அல்சர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடற்பருமன் (Obesity) போன்ற உடற்கோளாறுகள் (Psychosomatic disorders) உருவாகக்கூடும் என்பது படித்த அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. நீடித்த மன உளைச்சலால் உடலில் ஸ்டீராய்டுகள் தூண்டப்பட்டு கான்செர் (Cancer) கூட ஒருவருக்கு உருவாகலாம் என்கிறன நவீன ஆராய்சிகள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் எல்லாம் ஓரளவு உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் Stress management program -கள் முழுமையான பயந்தருகின்றனவா என்று கேட்டால் , இல்லை எனபதே பதிலாகும்.


ஏனெனில், மன அழுத்ததிலிருந்தும் - கவலை,பயம் போன்றவற்றிலிருந்தும் விடுபட மனித வாழ்க்கையை பற்றிய ஒரு முழுமையான அறிவு (A Complete or Holistic knowledge about life) தேவைப்படுகிறது. மனித வாழ்க்கை ஒரு கோளத்தை (globe) போன்றது. அதன் ஒருபகுதியை மட்டும் உற்று நோக்கினால் , அந்த அளவிற்கேற்பவே நமக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் நமக்கு வேண்டியதோ நிலைத்த நீடித்த அமைதி அல்லவா? Stress management program -களில் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால், அதையும் .Power point presentation slide.-களை போட்டு பாடம், படிப்பு (Academic) மாதிரியே நடத்துவதே ஆகும். நடைமுறை வாழ்க்கையை ஒட்டி கற்று தராததும், வாழ்க்கை அனுபவங்களிலிருந்து ஒப்பிட்டு கற்று தராததும், ஒரு தத்துவார்த்த பின்புலம் (Philosophical background) இல்லாமல் நடத்துவதுமே Stress management program -களில் உள்ள முக்கிய குறைகளாகும். இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாழ்க்கையை பற்றிய ஒரு பரந்த , முழுமையான அறிவு தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை A Comprehensive understanding of life என்று கூறலாம்.


என்னுடைய முப்பது வயதில், எனக்கு விவரம் தெரியாத வருடங்களை கழித்துவிட்டால் மீதியுள்ள வயதில் கிடைத்த அனுபவங்களை கொண்டு ஒரே ஒரு உபதேசத்தை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதை உபதேசம் என்று கூறுவதைவிட - ஒரு அமைதியான, சிறப்புமிக்க, மன அழுத்தம்-கவலை-பயம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு , கடமையை செய்து மகிழ்ச்சி காணும் ஒரு திருப்தியான வாழ்க்கைக்கான ஒரு நல்ல வழிகாட்டுதல் (Guidance) என்றே கூறுவேன். வழிகாட்டுவதற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருவர் நினைக்கலாம். கவுன்சிலிங் கொடுப்பதை ஒரு தொழிலாக (Professional counselling) செய்ய முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவன் என்ற முறையிலும், மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற - உளவியல் வல்லுனர்களால் நடத்தப்படும் கவுன்சிலிங் படிப்பை முடித்தவன் என்ற முறையிலும் இக்கட்டுரையை எழுத தகுதி உள்ளவன் என்றே என்னை கருதிகொள்கிறேன்.


எதையும் எதிர்பார்க்காமல் கடமையை செய்தல் - என்பதே அந்த எளிமையான மந்திர வரிகளாகும். இதை சற்று விரிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதில் ஒரு எதிர்பார்ப்பு (Expectation) உருவாகும்போது என்ன நடக்கிறது? ஒரு நிகழ்ச்சியானது நாம் நினைத்தவாறே நடக்க வேண்டும் என நினைக்கும்போதே, ஒரு பொருள் நமக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும்போதே, ஒரு ஆணோ பெண்ணோ நம்மை விட்டு போய்விடுவாரோ என நினைக்கும்போதே (Separation in love) - மனதிலும் , மண்டையிலும், மூளை செல்களிலும் ஒருவித இறுக்கம், அழுத்தம் வந்துவிடுகிறது. அதனை தொடர்ந்து இதயத்துடிப்பு அதிகமாகிறது. உடலில் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பிக்கின்றன. உடலில் ஒவ்வொரு நோயாக நுழைய துவங்குகின்றன. கவலை, பயம், பீதி போன்றவையெல்லாம் மன அழுத்தத்தின் வேற்று வடிவங்களே ஆகும்.


ஒவ்வொருவருக்கும் இயற்கையில் ஒரு செயல்திறமை (Capacity) இருக்கிறது. எதிர்பார்ப்பும், அதனை தொடர்ந்து உண்டாகும் இறுக்கமும் ஒரு மனிதனின் இயற்கையான செயல்திறமையை (It causes inefficiency) பாதிக்கின்றன. எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தையும் பாதிப்பையுமே உண்டாக்குகின்றன. சரி, எதிர்பார்ப்பதை விட்டுவிட்டால் என்னவாகும் என்று சிந்திப்போம்? இயற்கையில் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரு ஒழுங்கமைப்பின் படியே ( Design of nature) நடக்கின்றன. நாம் பிறக்கிறோம், சிலகாலம் வாழ்கிறோம், பின்பு மரித்து விடுகிறோம். யாருமே வேண்டுமென்று நினைத்து பிறந்ததில்லை. இறப்பும் நம் கையில் இல்லை. நிகழ்கால வாழ்க்கை மட்டுமே நம்கையில் உள்ளது. வாழும்காலத்தில் ஆண்டவனின் கருணையினால் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்ப துன்பங்களை மாறி மாறி அனுபவிக்கிறோம். எல்லாமே ஒரு முறைப்படிதான் (Order) நடக்கின்றன. எனவே, ஒருவர் எதிர்பார்த்துதான் ஒன்று நடக்க வேண்டும், ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பார்ப்பை விட்டு விட்டாலும் நமக்கு வேண்டிய நல்ல விஷயங்கள் நடக்கத்தான் போகிறது, கிடைக்கத்தான் போகிறது. இயற்கையின் அமைப்பை யாராலும் தடுக்க முடியாது. எதிர்பாராமல் இருப்பதால் நடக்கவேண்டியது நடக்காமல் போய்விடாது.
எனவே எதிர்பார்ப்பு தேவையில்லாத ஒன்று. இன்னும் சொல்லப்போனால், எதிபார்ப்பின்றி நம் கடமைகளை செய்யும்போதுதான், மனச்சுமையின்றி (Without any mental pressure) சுதந்திரமாக முழுத்திறமையோடு ஒரு காரியத்தை செய்ய முடியும்; நமக்கு பேரும், அங்கீகாரமும் கிடைக்கும். ஒரு வேலையை நல்லபடியாக முடித்த திருப்தியும் (Sense of accomplishment ) கிடைக்கும். அதனை தொடர்ந்து நமக்கு வேண்டிய பொருளோ, நபரோ, நினைத்த நிகழ்ச்சியோ சுலபமாக நடந்தேறும்; கிடைக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்தந்த நேரத்தில் நம் கடமையை உணர்ந்து கடமையிலிருந்து வழுவாமல், மனதை செலுத்தி (with concentration and involvement) முழுக்கவனத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கவேண்டியதுதான். Living in the present moment என்பார்களே அதுதான்.


எதிர்காலத்தை குறித்து ஒரு உத்தேச திட்டம் (A Tentative plan about the future ) வகுத்து வைத்திருப்பதில் தவறில்லை. அதிலும் உடும்புபிடியாக (Rigid) இல்லாமல், சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து (Flexible), தேவைப்படும் இடங்களில் சிற்சில மாற்றங்களை செய்துகொண்டு வாழ்வதுதான் கவலையும், சிக்கல்களும் இல்லாது வாழ்வதற்கு வழியாகும்.


இது ஒன்றும் வறட்டு போதனை அல்ல. இதுதான் உண்மையான Psychology ஆகும். .Psychology என்றால் யதார்த்த வாழ்விற்கு பயன்பட வேண்டும் அல்லவா? மேற்கண்ட கருத்துக்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, ஆத்மார்த்தமாக (Subjective understanding) உணர்ந்துகொண்டால்தான் பயனளிக்கும். வருங்காலங்களில் ஒருசிலருக்காவது மன ஆறுதலையும், அமைதியான நல்லதொரு வாழ்க்கைக்கு ஒரு சிறு வழிகாட்டியாகவும் ௦- இந்த கட்டுரையானது அமையும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்துகொள்கிறேன்.

Monday, October 24, 2011

முத்தெடுப்பவள்...என் மனக்கடலில்
முத்துகளைப் போல
புதைந்து கிடக்கும்
கனவுகளை
எடுத்து
மாலையாக போட்டுக்கொள்...
உனக்கு மட்டுமே
அது அழகாக
இருக்கும்...
உன்னால் மட்டுமே
அது முடியும்....!


லிங்கேஸ்வரன்

Tuesday, October 18, 2011

வெள்ளைப்புறா ஒன்று எழுதும் புதுக்கவிதை...
நல்லவேளை,இளையராஜா காலத்தில் காதலித்தோம் என்று twitter -ல் ஒருவர் கமென்ட் போட்டிருந்தார். மிகச்சரியான ஸ்டேட்மென்ட் அது. ஏனெனில், இளையராஜாவின் பாடல்களை முணுமுணுக்காமல் எப்படி காதலிப்பது என்றே தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமான் திரையுலகை ஆக்கிரமிக்கும் முன்பே, அதிர்ஷ்டவசமாக நான் இளையராஜாவின் ரசிகனாகி விட்டிருந்தேன்.


இப்போது பாடல்களை மொபைல்போனில், கம்ப்யுட்டரில், சிடி டிவிக்களில் கேட்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் ஆடியோ கேசட்டுகள்தான் இருந்தன. நமக்கு பிடித்த பாடல்களை ஒரு பேப்பரில் எழுதி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டால் நான்கைந்து நாட்களில் கேசட்டில் பதிந்து தந்து விடுவார்கள். ஒரு கேசட்டில் பன்னிரண்டு முதல் பதினைந்து பாடல்கள் வரை பதியலாம்.


கமல், ரஜினி இவர்களின் பாடல்கள் ஒரு பன்னிரண்டு பாடல்களை கேசட்டில் மேற்சொன்னவாறு பதிந்து, நான் காதலித்த பெண்ணிடம் கொடுத்து.....கேட்டு பார்...சூப்பராக இருக்கும் எனக்கூறி கொடுத்துவிட்டேன். அவளும் மிகுந்த ஆர்வத்தோடு, ஓடோடிச்சென்று, டேப் ரெக்கார்டரில் கேசட்டை போட்டு, Volume- ஐ அதிகமாக வைத்துகொண்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். பாடல் ஓடத்துவங்கியதுதான் தாமதம். பாவம்...பதறி விட்டாள். சடாரென டேப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்து என்னை முறைத்து பார்த்தாள். நல்லவேளை வீட்ல அம்மா இல்ல.....என்னைய இப்படி மாட்டி விட்டுடீங்களே என்று நேரில் பேசிக்கொண்ட போது கூறினாள். அது என்ன பாடல் என்னவென்றால், கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் வரும் ' வனிதாமணி......வனமோகினி....' என்ற பாடல்தான். எஸ்.பி.பியும், ஜானகியும் போட்டி போட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள். ஆனால் பாடல் துவங்கும் முன், கமலின் கமகம குரலில் '........கண்ணே.....தொட்டுக்கவா.....கட்டிக்கவா....கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா.....' என விறுவிறுவென ஓடத்துவங்கும். கமலை தவிர வேறு யாராலும் அந்த வரிகளை அப்படி பாட முடியாது.


புதுக்கவிதை என்ற ஒரு ரஜினி படம் 1983 -ல் வெளிவந்தது. என் அப்பாதான் எனக்கு அந்த படத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். பிளஸ்டூ படித்துக்கொண்டிருந்த போது, அருமையான படம்பா இது.......பாரு நல்லாயிருக்கும் என்று ஒருநாள் கூறினார். நானும் பார்த்தேன். அதன்பிறகு, என் ஆன்மாவை விட்டு அந்தப்படம் அகலவே இல்லை. புதுக்கவிதை ஒரு படமே அல்ல. அது ஒரு காவியம். அந்தப்படத்தில் ஒரு காட்சி வருகிறது, ரஜினி தன்னுடைய டைரியை மறந்துவிட்டு செல்லும்போது, வில்லன்களில் ஒருவர், ' .......பிரதர்.......காவியத்தை மறந்துட்டு போறீங்க.......' என்பார். ரஜினியும்,ஜோதியும் உண்மையிலேயே காதலிக்கிறார்களோ என்றுகூட தோன்றும்.

வெள்ளைப்புறா ஒன்று...
ஏங்குது கையில் வராமலே...
நமது கதை...
புதுக்கவிதை...
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூமாலை....

ஒருதடவை இந்த பாடலை கேட்டுப்பாருங்கள். ஜானகியின் குரலில் ஒரு ரம்மியமான ஹம்மிங்குடன் பாடல் துவங்கும். வாழ்நாளில் மறக்கவே முடியாது. மெய்மறக்க செய்யும் பாடல் என்பார்களே. அதுதான் இது.


பெரும்பாலும் எல்லோருக்கும் காதல் அனுபவம் இருக்கும். காதலிப்பார்கள்; அல்லது தான் மட்டும் காதலிப்பார்கள்; அல்லது காதலிக்கப்படுவார்கள். காதல் நோய் ( நோய்தானே...! ) ஆரம்பித்த புதிதில் பசங்களும், பொண்ணுகளும் ரொம்பவே உணர்ச்சிவசப்படுவார்கள். அன்பை வார்த்தைகளில் காட்டுகிறேன் என, உளறிக்கொட்டுவார்கள். காமெடியாகி, அசடு வழிவார்கள். இதற்கு பதிலாக, இளையராஜாவின் இசையிலமைந்த ஒரு பாடலின் நாலு வரிகளை பாடிக் காண்பிக்கலாம். உதாரணமாக,

உன்னோடுதான் என் ஜீவன்...
ஒன்றாக்கினான் நம் தேவன்...
நீதானம்மா என் தாரம்...
மாறாதம்மா எந்நாளும்....

( படம்: தர்மத்தின் தலைவன் , பாடல்: தென்மதுரை வைகைநதி )


பத்து வருடங்களுக்கு முன்பு அடிக்கடி நான் முணுமுணுத்த வரிகள் இவை:

உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் மானே...
உயிர் பூவெடுத்து
ஒரு மாலையிடு
விழிநீர் தெளித்து....
ஒரு கோலமிடு.....
உன்னைத்தானே தஞ்சம் என்று
நம்பி வந்தேன் மானே...
______________________________________
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது...
அடடா.....முந்தானை சிறையானது..
இதுவே என் வாழ்வில் முறையானது..
பாறை ஒன்றின் மேலே
சிறு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே..
உன்னால் ஒரு சொந்தம் வந்தது.....!

(படம்: நல்லவனுக்கு நல்லவன், பாடல்: உன்னைத்தானே தஞ்சம் )


ராமன் அப்துல்லா என்ற ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் ஒரு அற்புதமான பாடல் வருகிறது. பாலு மகேந்திரா கேட்டு வாங்கியிருப்பார் என நினைக்கிறேன். சங்கீதத்தில் ஸ்ருதி, லயம் என்று கேள்விபட்டுயிருப்பீர்கள். இவைதவிர சங்கதி என பாடலில் ஒன்று உண்டு. எஸ்.பி.பியும், சித்ராவும் சங்கதி பிசிறில்லாமல் பாடியிருப்பார்கள். ஒருவரின் உள்ளத்தில் அடைபட்டு கிடைக்கும் உணர்வுகளுக்கு இசைவடிவம் கொடுத்தால் அது என்ன வடிவம் பெறுமோ அதுதான் இளையராஜாவின் பாடலாகும். இளையராஜா இசையை வார்த்தெடுக்க, கவிஞர் இசையில் தனது வரிகளை அற்புதமாக கோர்த்து எடுக்க, ராமன் அப்துல்லாவில் வரும் அந்த பாடல் வரிகள் இதோ:

முத்தமிழே முத்தமிழே...
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன...
முத்தத் தமிழ் வித்தகியே...
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன..
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன...
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன...
மனம் வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே....
____________________________________
காதல் வழிச்சாலையிலே...
வேகத்தடை ஏதுமில்லை...
நாணக்குடை நீ பிடித்தும்...
வேர்வரைக்கும் சாரல்மழை..
பூவைக் கிள்ளும்
பாவனையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாள்...
மின்னல் சிந்தி சிரித்தாள்
கண்ணில் என்னை குடித்தாள்...
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாள்...!

Sunday, October 16, 2011

நான் யார்?

நான் யார்? என்ற மிகச்சிறிய இந்த வினாவிற்கு விடை தெரிந்துவிட்டால் தனிமனிதன் வாழ்விலும், உலகத்திலும் உள்ள அனைத்து சிக்கல்களும் கவலைகளும் ஒரே நாளில் தீர்ந்து போகும். எந்த ஒரு வினாவிற்கு விடை தெரிந்தால் , எல்லா ரகசியங்களுக்கும் விடுபட்டு போகுமோ அந்த விடைதான் நான் யார்? என்ற கேள்விக்கு பதிலாகும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் நண்பர்களிடம் ' நீங்கள் யார்? ' என கேட்டுப்பார்ப்பேன். சில வினாடிகள் திகைப்பார்கள். பெரும்பாலும் எல்லா நண்பர்களும் நன்கு படித்தவர்கள் ஆகையால் இந்த கேள்வியை கேட்டவுடன் சற்று உஷாராகி விடுவார்கள். நேரடியாக பின்னோக்கி சென்று, நான் என்பது உயிர் அல்லது ஆத்மா என்பார்கள். எங்கேயோ படித்தது, கேட்டதை யெல்லாம் ஞாபத்தில் வைத்து சொல்லக்கூடாது என்பேன். குமார் என்ற ஒரு நண்பர் ஓரளவு சரியான பதிலை கூறினார். என் மீது அன்பும், அக்கறையும் கொண்ட என்னுடைய விரிவுரையாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: I am a temporary living being,born in order to attain few goals which are bestowed upon me.


பெயர், படிப்பு, இன்னாரின் மகன்/மகள் என்பவையெல்லாம் வெறும் அடையாளங்களே (merely identifications) என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. அப்படியானால், நான் யார்?. முதலில் கண்ணுக்கும் கருத்துக்கும் எல்லையாக நம்முடைய உடலே தெரிகிறது. இதைதவிர, தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. முதலில் மேலோட்டமாக ஆராய்வோம். நான் என்பது உடலா? என்றால் இல்லை. ஏனெனில் உயிர் போய்விட்டால் உடலுக்கு பிணம் என்ற பெயர் வந்துவிடுகிறது. சரி, உயிர் என்பதுதான் நானா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் உடல் இயந்திரம் இல்லாமல் உயிர் இயங்க முடியாது. உடலும் உயிரும் சேர்ந்து இயங்கும்போதே நான் என்ற உணர்வும் அதைத் தொடர்ந்து எண்ணங்களும் செயல்களும் அனுபவங்களும் உருவாகின்றன. அப்படியானால், நான் யார்?


நான் யார்? இந்த கேள்வி ஒருவர் மனதில் எழுந்து விட்டால் , அவர் ஆன்மீகத்தில் உயர்நிலையை அடைய தகுதி பெற்றுவிட்டார் என அர்த்தமாகும். வாழ்க்கையில் சோதனைகளும், பிரச்சினைகளும் ஒருவரை தொடர்ச்சியாக அழுத்தும்போது வெறுத்துபோய் கடைசியில் ' என்ன வாழ்க்கை இது......நான் யார்? ' என்ற வினா ஒருவர் மனதில் எழலாம். அனைத்து தேவைகளும் ஒருவருக்கு பூர்த்தியாகி, அளவுக்கதிகமான அனுபோகங்களால் (Luxurious life and Enjoyments) சலிப்படைந்து இறுதியில் ' என்ன வாழ்க்கை இது.....நான் ஏன் பிறந்தேன்.....நான் யார்? ' என்ற கேள்வி ஒருவருக்கு எழலாம். Maslow theory of hierarchical needs-ல் இறுதிகட்டமாக வரும் .Self-actualization எனப்தே நான் யார் என்ற தேடலாகும். பெரும்பாலும், இந்திய கலாச்சாரத்தில் முதல் வகையிலும் , மேற்கத்திய கலாச்சாரத்தில் இரண்டாவது வகையிலும் நான் யார் ? என்ற வினா ஒரு மனிதனுக்கு எழுகிறது.


நான் யார் என்ற கேள்விக்கு பதிலை வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது. பதில்தான் எளிதில் கிடைத்து விட்டால் பிரச்சினை தீர்ந்ததே. இருந்தாலும், நான் யார் என்ற முடிச்சை அவிழ்க்க முயற்சிப்போம்.


அனு என்ற பெயருடைய ஒரு பெண் ஒருதிசையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை நாம் அனு என பெயர் சொல்லி விளிக்கிறோம். இப்போது என்ன நடக்கிறது? நம் குரல் அதிர்வுகளாக காற்றில் பரவி, அனுவின் காதை சென்றடைகிறது. காது நரம்புகள் வழியாக ஒலி அதிர்வுகள் கடத்தப்பட்டு மூளையை சென்றடைந்து - மூளையில் பல்வேறு மாற்றங்களுக்கு (Bio-chemical process) உள்ளாகி - அனு நம் குரலை உணர்ந்து கொள்கிறார். இதுவரையில் நடந்த செயல்பாடுகளில் அனுவின் பங்கு (Contribution) என்ன? ஒன்றுமே இல்லை. எல்லாம் தானாகவே நடக்கிறது. நம் குரலை உணர்ந்துகொண்ட பிறகு, தலையை திருப்பி பார்க்க வேண்டுமென கழுத்து நரம்புகளுக்கு கட்டளை செல்கிறது. நம்மை திரும்பி பார்க்கிறார். இதில் அவரது பங்கு என்ன? இதுவும் தானாகதானே நடக்கிறது? நம்மை பார்க்கும்போது, நமது உருவம் அனுவின் கண்களில் பட்டு கண் நரம்புகள் வழியாக கடத்தப்பட்டு மூளையை சென்றடைந்து- நம்மை உணர்ந்து கொள்கிறார். எல்லா செயல்களும் தானாகவே நடக்கிறது. எந்த ஒரு செயலாவது தானாக நடக்குமா? ஒரு டம்ளர் இருக்கிறது, அதை விரலால் தள்ளினால்தானே அது நகரும். தானாக நகருமா? ஒரு ஆற்றல் அல்லது விசை (Force or Pressure) அன்றி எந்தக்காரியமும் நடக்காது. உலகம் ஒன்றுதான்; கடலும் ஒன்றுதான். ஆனால் ஒரே கடலே அந்தந்த பிரதேசங்களுக்கு தக்கவாறு குறிப்பிட்ட ஒரு பெயரிட்டு அழைக்கப்படுவது போல - ஒரே ஆற்றலே அதிர்வுகளை கடத்துதல் (Conduction), உணருதல் (Cognition), சிந்தித்தல் (Thinking), எதிர்வினை புரிதல் (Reaction to stimuli), பேசுதல், நடத்தல் என அனைத்து செயல்களுக்கும் ஆற்றலை அளிக்கிறது. அந்த ஆற்றலே கடவுள் எனும் பேராதார சக்தியாகும் (Omnipresent consciousness and force). அனைத்து செயல்களுக்கும் , தன் இருப்பிலிருந்து (Potential) ஆற்றலை அளிப்பதால் தமிழில் மூல ஆற்றல் எனவும், ஆங்கிலத்தில் Stock force எனவும் அழைக்கப்படுகிறது.
God is also known as providence because it provides. நம்முடைய எந்த கட்டுப்பாடுமின்றி உணவு ஜீரணம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.


புறத்தூண்டல்கள் (External stimuli) - எதிர்வினை புரிதல் (Reaction) - அனுபவம் (Experiences and memory) என்ற இந்த சங்கிலிதொடரானது (Chain action) ஒருவர் பிறந்த நொடி முதல் கொஞ்சம்கூட இடைவிடாமல் தொடச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருப்பதால், எந்த ஒரு காரியத்தையும் நாமே செய்வதுபோல (Own self, the ego) தெரிகிறது. ஒரு ஆறு இருக்கிறது. ஆற்று நீரானது நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருந்தாலும், ஆறு நிலையாக இருப்பது போலவே (Static) தோற்றமளிக்கிறது. அதேபோல, தெய்வம் என்ற சக்தியால் நம் உடலும் மனமும் இயங்கி கொண்டிருந்தாலும், தெய்வம் என்பது நம்முடைய நினைவு மனதிற்கு (Conscious mind) எட்டுவதே இல்லை. எனவே நான் யார்? என்ற வினாவிற்கு பதில் நான் கடவுள் என்பதே ஆகும். பரிணாம வளர்ச்சியில்(Evolution) கடவுளே பல்வேறு உயிர்களாகவும், மனிதாகவும் வந்து நிற்கிறார். உண்மையில் கடவுளை தவிர இந்த உலகில் ஒன்றுமே இல்லை.


இந்த இரகசியத்தையே ' அகம் பிரம்மாஸ்மி ' என யோகிகளும், ' அறிவே தெய்வம் ' என தமிழ் சித்தர்களும் கூறிவைத்தார்கள். இயேசுநாதர் மிக அழகான வரிகளில் The kingdom of God is within you என்று கூறினார். இன்றைய உலகில் ஏறக்குறைய அறுநூறு கோடி மக்கள் உள்ளனர். கடல் இருக்கிறது; கடலில் எண்ணற்ற அலைகள் தோன்றுகின்றன. அலைகள் வேறு கடல் வேறா என்றால் இல்லை. கடல் நீரே அசையும்போது அலையாகிறது. அலைகள் கடலிலேயே உருவாகி, கடலிலேயே இயங்கி, கடலிலேயே தணிந்துவிடுகிறது. அதேபோலவே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உடலும் மனமும் இருப்பதுபோல தோன்றினாலும் - எண்ணற்ற அலைகளுக்கு பிறப்பிடமாக அடித்தளமாக கடல் இருப்பதுபோல - ஒவ்வொருவரின் மனதின் அடித்தள ஆற்றலாக விளங்குவது (Basic source of mind) கடவுள் என்ற ஆதார சக்தியே ஆகும். இந்த மனநிலையில்தான் மனிதன் சகமனிதனிடம் அன்புகொண்டு - இனம், மதம், சாதி, ஒருவரை ஒருவர் புண்படுத்துதல், பொறாமை, பேராசை, காமவெறி, ஒருவரை ஒருவர் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்தல் போன்ற உணர்ச்சிவயப்பட்ட செயல்களில் இருந்து விடுபட்டு மனச்சுமையின்றி சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ முடியும். ஒவ்வொருவரின் பிறப்பின் நோக்கமும் இதுவேயாகும்; ஆன்மீக வாழ்வே அதற்கு வழியாகும். தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவனை நோக்கிய இந்த தேடல் (Search for something) இருக்கவே செய்கிறது.


இந்த அளவிற்கு நமக்கு உண்மைகள் தெரிந்தாலும், இதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உண்டு. கடவுள் எனும் இருப்பாற்றலே , இயக்கநிலையில் (Functioning state) மனமாக விளங்குவதால் - நம் மனமானது நான் யார்? என தேட முனையும்போது, ஆராயும்போது - மனதின் அடித்தளமாக விளங்கும் கடவுள் தத்துவம் மிக எளிதில் நம் சிந்தனையின் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. இந்த ஒரு காரணத்தினால்தான் நாம் தேடும்பொருள் நமக்குளேயே இருந்தும் அலைக்கழிக்கப்படுகிறோம். பெரும்பாலான மனிதர்கள் அனுபோகங்களிலும் (Enjoyments), புலன் இன்பங்களிலுமே (Sensory pleasures) திளைத்து வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். ஆனால் நான் யார்? என்ற தேடலானது ஒரு மனிதனின் ஆன்மாவில் தொக்கி நின்று அவனது மரணத்திற்கு பிறகும் தொடர்கிறது. The journey of consciousness of the soul towards its perfection continues after death.

Thursday, October 13, 2011

பீட்டர் டிரக்கர் - மேனேஜ்மென்ட் சரித்திரத்தில் ஒரு சகாப்தம் !எஞ்சினீரிங் படித்துக்கொண்டிருந்த போது எப்.டபிள்யு.டைலர் , எல்டன் மாயோ, கில்பேர்த் போன்ற மேனேஜ்மென்ட் அறிஞர்களை அறிந்திருந்தேன். எம்.பி.ஏ. படிக்கும் பீட்டர் டிரக்கர் என்ற பெயரை அடிக்கடி கேள்விபட நேர்ந்தது. யார் இவர் புதிதாக இருக்கிறாரே என ஆராய்ந்தபோது அவரைப்பற்றி ஒரு அறிவுக்களஞ்சியமே கிடைத்தது. நீண்ட நெடிய அவரது வரலாறை மிகவும் சுருக்கி தருகிறேன்.


நவீன நிர்வாக இயலில் டிரக்கரின் பங்களிப்பு அளப்பரியது. டிரக்கர் தனது கருத்துகளை பெரும்பாலும் தத்துவங்கள் போலவே கூறினார். இருந்தாலும், சர்வதேச கம்பெனிகளில் பணிபுரிந்த அனுபவம், பேராசிரியராக பணிபுரிந்த அனுபவம், சமூதாயத்தின்பால் அவர் கொண்ட அக்கறை, கூர்மையான கணிப்புகள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து பிழிந்து, சாராம்சமாக தனது கருத்துகளை முன்வைத்தார். மேனேஜ்மென்ட் துறையில் டிரக்கரின் கருத்துகள் வேத வாக்காக எடுத்துகொள்ளப்படுகின்றன. ஒரு Authority ஆகவே டிரக்கர் கருதப்படுகிறார். இன்று அவர் உயிருடன் இல்லை. எனினும் உலகின் பல்வேறு மூலைகளில், பி ஸ்கூல்களில் டிரக்கரின் பெயரில் கருத்தரங்களும் , மாநாடுகளும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.


இன்று பரவலாக பேசப்படும் Outsourcing என்கிற கான்செப்டை அறிமுகப்படுத்தியவர் பீட்டர் டிரக்கர்தான். தனியார்மயமாக்கம் (Privatization), இயந்திரமயமாக்கம் (Mechanization), நிறுவனங்களில் அதிகாரத்தை பரவலாக்குதல் (Decentralization) போன்ற நிகழ்வுகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்தார். Blue collar எனப்படும் உடலுழைப்பு தொழிலாளிகளின் தேவை எதிர்காலத்தில் குறைந்துகொண்டே வரும் என்பதையும் முன்னறிவித்தார். தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால் உடல் உழைப்பாளிகளின் தேவை எதிர்காலத்தில் குறையும் என யூகித்தார்.


பீட்டர் டிரக்கர் மேனேஜ்மென்ட் எனபதை ஒரு வரையறைக்குள் அடக்க விரும்பவில்லை. பலதுறை சார்ந்த அறிவை பயன்படுத்தி, சுதந்திரமாக இயங்கும், ஒரு கலையைப் போன்றதே (Liberal art) மேனேஜ்மென்ட் என்றார். எனவே ஒரு மேனேஜெர் அல்லது நிர்வாகி என்பவர் உலகியல் விஷயங்கள் அனைத்திலும் (multi-faceted)ஓரளவாது ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும் என எதிபார்க்கபடுகிறார்.


பீட்டர் டிரக்கர் மேனேஜ்மென்ட் தத்துவ அறிஞர் மட்டுமல்ல; அவர் வரலாறு, உளவியல், மருத்துவம், பொருளாதாரம், மதம் கலாசாரம் என சகலதுறைகளிலும் நுட்பமான அறிவைப் பெற்றிருந்தார். அவற்றிலிருந்தே தனது கருத்துகளையும், பயிற்சிமுறைகளையும் வகுத்தார் (Management concepts and practices).


இன்றைய பிசினஸ் உலகில் , மேனேஜ்மென்ட் என்பது லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. தொழில்ரீதியான தார்மீக நெறிகள் (Business ethics) என்பதெல்லாம் புத்தகத்தோடு சரி. யார் எக்கேடு கெட்டுபோனால் என்ன நமக்கு வேண்டியது லாபம் என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால் மானிட வாழ்க்கையை நன்கு கற்ற பீட்டர் டிரக்கர் போன்ற மாமேதைகள் ஒருபோதும் அவ்வாறு குறுகிய நோக்குடன் ஆலோசனைகளை வழங்கியதே இல்லை. ஒரு கம்பெனியின் முதன்மையான நோக்கம் லாபம் மட்டும் ஈட்டுவது அல்ல என்றும், கம்பெனி தொடர்ந்து பிசினசில் நிலைத்திருப்பதிற்குதான் (sustaining in the market) லாபம் என்பது தேவை என்றும் தெளிவாக எடுத்துக்கூறினார். ஒவ்வொரு நிறுவனமும், தனக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான தொடர்பை உணர்ந்து சமுதாயத்திற்கு தீங்கிழைக்காத வகையில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


பொருட்களின் உற்பத்தி செயல்முறைகள் ( Manufacturing process), ஊழியர்களை மதிப்புடன் நடத்துதல் (Management of human resources with respect), நவீன பொருளாதரத்தில் உள்ள குறைபாடுகள், சமுக-பொருளாதார வளர்ச்சியில் சேவை நிறுவனகளின் பங்களிப்பு - என ஏராளமான தலைப்புகளில் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக்குவித்து, நிர்வாக இயலில் தவிர்க்க முடியாத மனிதராக டிரக்கர் விளங்கினார். தன் மறைவுக்கு ஒரு வருடம் முன்பு கூட ஒரு புத்தகத்தை எழுதி முடித்தார்.


General motors, General Electric, Coca-cola, Citicorp, IBM போன்ற உலகின் தலைசிறந்த நிறுவனகளின் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளிலும் (Chairman), கௌரவ ஆலோசகராகவும் (Consultant) டிரக்கர் செயல்பட்டார். அமெரிக்கா, ஜப்பான், கனடா நாடுகளின் அரசாங்கங்கள் அவ்வப்போது டிரக்கரின் ஆலோசனையை பெற்றே செயல்பட்டன. American Red Cross முதலிய சர்வதேச சேவை நிறுவனங்களுக்கும் டிரக்கர் ஆலோசகாரக செயல்பட்டார்.


முப்பது வயதிலேயே சர்வதேச சட்டம் மற்றும் பொது சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற பீட்டர் டிரக்கர் , கல்லூரி படிப்பை முடித்த காலத்தில் ஒரு பஞ்சாலையில் பயிற்சியாளராக வேலை செய்தார். டாக்டர் பட்டம் பெற்ற பிறகு ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனத்திலும், பிறகு ஒரு பத்திரிகையில் Chief economist ஆகவும் பணிபுரிந்தார். டிரக்கர் நேரிடையாக கல்வித்துறையில் பணிபுரிந்த காலமே அதிகம். அமெரிக்காவில் பெநிங்க்டன் பல்கலைகழகத்தில் , அரசியல் & தத்துவத்துறையில் பேராசியராகவும் - நியுயார்க் பல்கலைகழத்தில் மேனேஜ்மென்ட் பேராசிரியராகவும் - 1971 இருந்து தன் வாழ்நாளின் கடைசிவரை கிளார்மொன்ட் கிராஜுவேட் பல்கலைகழகத்தில் சமூக அறிவியல் & நிர்வாகத்துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். டிராக்கரின் பெயரில் ஒரு பி ஸ்கூல் அமெரிக்காவில் துவங்கப்பட்டு அவரது வாழ்நாளிலேயே பெருமைபடுத்தப்பட்டார்.


பீட்டர் டிரக்கர் ஆங்கிலத்தில் ஏறக்குறைய நாற்பது நூல்கள் எழுதியுள்ளார். Practices of management, Innovation and Entrepreneurship, Technology & Management & Society, The concept of corporation ஆகியவை ஒருசில நூல்களாகும். நிர்வாக இயல் மாணவர்கள் கட்டாயம் டிரக்கரின் புத்தகங்களை படிக்க வேண்டும். மேனேஜ்மென்ட் சரித்திர புத்தகத்தின் பலபக்கங்களை தனது 95 வயது வரை ஆக்கிரமித்துக்கொண்ட பீட்டர் டிரக்கர் என்ற பேரறிஞர் தன்னுடைய மகத்தான சாதனைகளை உலக நலனுக்காக உலக மக்களிடமே விட்டுவிட்டு 2005 -ல் பூத உடலை நீத்தார்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...