Saturday, September 25, 2010

ரஜினி...கமல்...சித்தர்கள்...
ரஜினியின் ஆன்மீக நாட்டம் உலகறிந்தது. ஆனால் யாருக்கும் தெரியாத விஷயம் அவரது ஒரு படத்தைப் பற்றியது. சுவாமி பரமஹம்ச யோகானந்தர் என்பவர் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமரிக்கா உட்பட பலநாடுகளில் கிரியா யோகத்தை பரப்பியவர். ' ஒரு யோகியின் சுயசரிதம் ' என்ற புகழ்பெற்ற ஆன்மீக நூலை எழுதியவர். திகைப்பு, பரவசம் என மாறி மாறி பலவித சிலிர்ப்பூட்டும் தகவல்கள் நிறைந்த நூல் அது. இன்றும் பரவலாக விற்பனையாகும் அந்நூல் உலகின் அனேக மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆன்மாவின் அடித்தளத்தை ஊடுருவும் வாசிப்பு என்று புகழுரை சூட்டப்பட்டது. சுவாமி யோகானந்தரின் வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து தனது இமேஜிற்கு ஏற்ப ஆங்காங்கு அலங்காரம் செய்து, கிளைமாக்சில் தன் சொந்தக்கதையையும் சேர்த்து, ரஜினி ஒரு படமாக எடுத்து நடித்தார். அந்தப் படம்தான் பாபா...! படம் வெற்றிகரமாக பிளாப் ஆனது.


கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தன் நூலகத்தில் சித்தர்கள் இருப்பதாக கூறினார். அதாவது சித்தர்களின் நூல்கள். கமலின் ரசிகனாகவும், சித்தர்கள் தத்துவத்தின் மீது பற்றுள்ளவனாகவும் இருக்கும் எனக்கு அவரின் இந்த ஒரு வாக்கியம் போதுமானதாக இருந்தது. கமல் தன்னுடையை பல படங்களில் சித்தர் பாடல்களை பயன்படுத்துவதாக தெரிந்தது. ஆளவந்தான் படத்தில் ' அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே....' என்ற பட்டினத்தார் பாடலையும், ' அன்பே சிவம் ' என்ற புகழ்பெற்ற திருமூலரின் வரிகளை ஒரு படத்தின் தலைப்பாகவும், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக ' தாயுமானவன் ' என்றும் பயன்படுத்தியுள்ளார். குணா படம் கூட 'அபிராமி அந்தாதியை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என நண்பர் சரவணா ஒருமுறை கூறினார்.


' ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
நான் என்றிருந்து நலம் அழிந்தேன் பூரணமே. ' - என்று பட்டினத்தடிகளும்,
'அன்பே சிவம்' - என்று திருமூலரும், ' சுத்த அறிவான என் தெய்வமே ' என்று தாயுமானவரும் பாடியுள்ளார்கள். திருவள்ளுவர் ' அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள்...' என்கிறார். அன்பு என்பது ஒரு தூய உணர்வு. களங்கம் இல்லாதது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இசைந்து, அன்பு செலுத்தி வாழும்போது ' கடவுளெனும் எல்லையற்ற உணர்வுக்கடலோடு ஒன்றுபடுகிறார்கள். ' தெய்வம் என்பது எங்கோ தனியாக இல்லை. மனிதனில்தான் தெய்வம் அன்பாகவும், அறிவாகவும் உறைந்துள்ள்ளது. இவ்வாறு மனிதனில் தெய்வீகத் தன்மையை கண்டுணர்ந்து, மனிதனை மனிதனாக மதித்து வாழ வலியுறுத்தும் சித்தர்களின் தத்துவமே கமல்ஹாசனை கவர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

Saturday, September 18, 2010

இதயம்...


நடிகர் முரளி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. நாம் பிரியம் வைத்திருப்பவர்கள், நம்முன் உயிர் உடல்களாக நிஜமாக உலாவி வந்தவர்கள் திடீரென இல்லை எனும்போது அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே பலநாட்களாகி விடுகிறது. வேதாத்திரி மகரிஷி, சுஜாதா, தென்கச்சி.கோ. சுவாமிநாதன் இவர்களின் மரணங்கள் எல்லாம் என்னை நேரடியாக தாக்கின. கல்லூரியில் படிக்கும்போது எங்கள் நெருங்கிய நண்பரின் தாயார் கடுமையான நோயால் தாக்கப்பட்டு காலமாகிவிட்டார். இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு இரவு ரூமில் அமர்ந்திருந்தோம். மாரியப்பனும் நானும் என் ரூமில் இருந்தோம். இருவரும் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தோம். திடீரென தன்னிச்சியாக என் மனதில் உதித்த ஒரு வாக்கியத்தை நான் கூறினேன். அது இதுதான்: ' இவ்வாறு நாம் அடிக்கடி சந்திக்கும் மரணங்கள்தான் வாழ்வின் நிலையாமையை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன...'.
சிந்திக்காமல் உள்ளுணர்வில் எழுந்த வார்த்தைகள் அவை. மாரியப்பன் மிகுந்த ஆமோதிப்புடன் ஆமாம் ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.
திருவள்ளுவர் நிலையாமையை பற்றி :
' நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. '
நேற்று சிறப்பாக வாழ்ந்தவன் இன்றில்லை எனும் பெருமை உடைய உலகிது என்பது பொருள்.
இன்னொரு திருக்குறள்:
' உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பதும் போலும் பிறப்பு.'
சாக்காடு என்றால் சாவு.
பிறக்கும் சமயம் எதுவும் யாரும் கொண்டு வருவதில்லை. போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. வாழ்வு முடியும்போது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்ல வேண்டியதுதான். வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிறருடைய ஒத்தாசையும், உதவியும், உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த உண்மைகளெல்லாம் யாருக்கும் தெரியாததல்ல. ஆனாலும் பெரும்பாலும் அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஏனெனில் மரணம் நெருங்கும் தருணம், நாம் உருவாக்கிக் கொண்ட அர்த்தங்கள், கொள்கைகள், பிடிவாதங்கள் அனைத்தும் தகர்ந்து விடுகின்றன. இவையெல்லாம் விரக்தியில் பேசுபவை அல்ல. இயற்கையாக நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகள். என்னைப் பொறுத்த வரையில், மரணத்தை ஒட்டி சிந்திக்கும்போதுதான் ஒரு மனிதன் மனதில் விழிப்புநிலை பெறுகிறான். நிலையாமையை சிந்திக்கும்போது, நுகர்பொருட்களின் மீதும் , உறவினர்களின் மீதும் நாம் வைத்திருக்கும் கடும்பற்று , மனதின் இறுக்கம் குறைகிறது. மனம் லேசாகிறது.
பரந்த மனப்பான்மை, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, விட்டு கொடுத்தல் போன்ற நற்குணங்கள் இயல்பாகவே மனித மனத்தில் மலர்கின்றன.
ஒருமுறை என் வீட்டின் முன்புறமுள்ள ரோட்டைக் கடந்து வர முயலும்போது, அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. வருகிறார்....வருகிறார் என்று சத்தம் கேட்டது. நான் ஓரமாக நின்றேன். சில நொடிகளில், ஒரு வேகமாக வந்து நின்றது. நடிகர் முரளி அந்த ஜீப்பில் சிலருடன் நின்று கொண்டிருந்தார். கடந்த லோக் சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். தமிழின துரோகி..........என்று தமிழக அரசியல் தலைவர் ஒருவரை வசைபாடினார். நான் மிக அருகில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை.
முரளி நன்றாக தமிழ் பேசக்கூடியவர். ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இவர்களை போலல்லாமல் ஒழுங்காக தமிழ் பேசுவார். முரளி பெங்களுரை சேர்ந்தவர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். இதயம் படம் வெளிவந்தபோது நான் சிறுவன். ஆனால் படம் முழுக்க சோகம் என்றும், படம் நன்றாக ஓடுகிறது என்றும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டது நினைவில் இருக்கிறது. வளர்ந்து வாலிபனான பிறகு, எங்களுக்கு இதயம் படத்தை மிகவும் பிடிக்க போதுமான காரணங்கள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவனுக்கும், ஒரு அழகான (ஹீரா) பெண்ணுக்கும் இடையிலான காதல், இளையராஜாவின் இசையில் முத்தான மூன்று மேலடிக்கள் பிளஸ் இரண்டு உற்சாக பாடல்கள். இவை போதாதா?
அதர்மம் படத்தில் வரும், 'முத்து மணி.....முத்துமணி.....' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. வசீகரமான ராகத்தில் அமைந்த பாடல் அது.
முரளி ஒரு பேட்டியில் தான் காதலித்து மணந்த மனைவியுடன், திருமணத்திற்கு முன் பெங்களுரு தெருக்களில் பைக்கில் சுற்றியதாக கூறியிருந்தார். மலரும் நினைவுகள் போல், மகிழ்வோடு அதை பகிர்ந்து கொண்டிருந்தார். நான் பெங்களுரு செல்லும் போதெல்லாம் தனியாக தெருக்களில் நடந்து திரிவது வழக்கம். அப்போது முரளி இந்த தெருக்களில் தானே சுற்றியிருப்பார் என கட்டாயம் நினைவுக்கு வரும்.
வினாத் தாள் போல் இங்கே
கனாக் காணும் உள்ளம்.
விடை போல அங்கே
நடை போடும் காதல்.
மௌனம் பாதி...
மோகம் பாதி... - என்ற முரளியின் இனிய கானம் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Tuesday, September 14, 2010

தவமாய் தவமிருந்து...
ஒரு நீண்ட
காதல் கதை
முடிவுற்றது
கல்யாணத்தில்.
இனிதாய்.....

Saturday, September 11, 2010

மீன்முள் வரைபடம் - சுருக்கமான அறிமுகம்.


மேனேஜ்மென்ட் எனப்படும் மேலாண்மை இயலில் ஜப்பானியர்களின் பங்கு குறிப்படத்தக்கது. குறிப்பாக தர மேலாண்மை எனப்படும் குவாலிட்டி மேனேஜ்மென்ட் துறையில் . கேயிசன் மேனேஜ்மென்ட், டோடல் குவாலிட்டி மேனேஜ்மென்ட், டோடல் ப்ரொடக்டிவிட்டி மெயிண்டனன்ஸ், ஜஸ்ட் இன் டைம் ப்ரொடக்சன் ( உடனடியாக உற்பத்தி செய்தல்) போன்றவை ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக உலாவரும் டெக்னிக்கல் பிலாசபிக்கள்.ஜப்பானில் தயாராகும் பொருட்கள் தரத்தில் பெரும்பாலும் நூல்பிடித்தாற்போல் சரியாகவே இருக்கும். தொழில்நுட்பத்தோடு சேர்த்து தரத்தையும் பேணுவதில் ஜப்பானியர்கள் மிகுந்த கவனம் செலுத்துபவர்கள். டகுச்சி எனும் ஒரு ஜப்பானிய எஞ்சினியர் தர மேலாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதாவது, ஒரு அடி உயரமும், பத்து சென்டிமீட்டர் சுற்றளவும் உள்ள ஒரு இரும்பு உருளையை தயாரிக்க, இரும்பை உருக்கி, அச்சில் ஊற்றி, பின் குளிர வைத்து சூடு ஆறியவுடன் வெளியில் எடுக்க வேண்டும். சூடு என்றால் ஐநூறு, அறுநூறு டிகிரி செல்சியஸ். வெளியில் எடுத்தவுடன் அளந்து பார்த்தால் இரும்பு உருளை சரியாக பத்து சென்.மீ. இருக்காது. சிலபல டெக்னிக்கல் காரணங்களால் அளவு சிறிது கூடலாம்; அல்லது குறையலாம். தவிர்க்க இயலாது. இதற்காக உற்பத்தி பிரிவில் என்ன செய்வார்கள் எனில், டாலரன்ஸ் லெவல் என ஒரு அளவை நிர்ணயிப்பார்கள். அதாவது இரும்பு உருளை அதிகபட்சமாக பதினோரு சென்.மீட்டரும், குறைந்தபட்சம் ஒன்பது சென்.மீட்டரும் இருக்கலாம். இவ்வாறு கடைசி தர பரிசோதனையில் இரும்பு உருளை ஒன்பது முதல் பதினோரு சென்.மீ. வரை எந்த அளவு இருந்தாலும் ஒகே

செய்து அனுப்பி விடுவார்கள். ( மேற்கண்ட அளவுகள் உதாரணத்திற்கு மட்டும் ). சுற்றளவு பதினொன்றுக்கு மேல் சென்றாலும், ஒன்பதுக்கு கீழ் சென்றாலும் குறைபாடுள்ள பொருள் என்று லேபில் ஒட்டி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்த நடைமுறைதான் காலங்காலமாக தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.டகுச்சி இந்த நடைமுறையில் ஒரு திருத்தத்தை கூறினார். தேவைப்படும் சரியான அளவிலிருந்து, தயாரிக்கப்படும் பொருளின் அளவு ஒவ்வொரு முறை விலகும்போதும் கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட விகிதம் பண இழப்பு ஏற்படுகிறது என்றார். குறைபாடுள்ள பொருட்களை மீண்டும் சரி செய்தல், ஊழியர்களுக்கு அவ்வேளையில் கொடுக்கப்படும் அதிக சம்பளம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் குறைபாடுள்ள பொருட்களை சர்வீஸ் செய்ய ஆகும் செலவு இவை கம்பெனியின் லாபத்தை பாதிக்கும் என்றார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு குறைபாடுள்ள பொருட்களால் உண்டாகும் பண இழப்பு, மன உளைச்சல் ஆகிய சமுதாய நல கருத்தையும் தன் திருத்தத்தில் சேர்த்து கூறினார்.ரோபஸ்ட்நஷ் என்ற முக்கிய தன்மையையும் டகுச்சி வலியுறுத்தினார். எந்தவித பொருளானாலும் , சாதனமானாலும் அதன் பயன்பாட்டில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். அதாவது எல்லாவித சூழ்நிலைகளிலும் அதன் இயக்கம் / பயன்பாடு ஓரளவு சரியாகவே இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு டூவீலர் சமதளங்களில் நன்றாக ஓடுகிறது. ஆனால் மலைகளில் ஏறும்போது முக்குகிறது; பள்ளங்களில் வேகமாக உழன்டு ஓடுகிறது. அப்படியானால் அந்தவகை டூவீலர் ஸ்திரத்தன்மை இல்லாதது. ஒரு சாக்லேட் முப்பது டிகிரிக்கு கீழ் கல்போல இறுகியும், அறுபது டிகிரிக்கு மேல் உருகியும் ஓடினால் அந்த சாக்லேட் ஸ்திரத்தன்மை இல்லாதது.இவ்வாறு பொருட்கள் / சாதனங்களில் உண்டாகும் குறைகளை கண்டறிந்து சரிசெய்வதற்கும், ஸ்திரத்தன்மையை ஒரேமாதிரி பேணுவதற்கும் டகுச்சி ஓர் எளிய உத்தியை கூறினார். அந்த உத்தியின் பெயர் பிஷ் போன் டயக்ரம். தமிழில் மீன்முள் வரைபடம். ஜப்பானிய பாஷையில் இஷிகவா டயக்ரம் என அழைக்கப் படுகிறது. இதில் என்ன செய்கிறார்கள் என்றால், ஓர் குறைபாட்டிற்கு காரணமான - கண்ணுக்கு புலனாகும் சாத்தியங்களை முதலில் கிடைமட்டமான ஒரு மேற்கோட்டின் இருபுறமும் கோடுகளை வரைந்து அதில் ஒவ்வன்றாக எழுதிவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு சாத்தியக்கூறையும் தனித்தனியாக ஆராய்ந்து உட்சாத்தியங்களை அந்தந்த கோட்டின் அருகில் பட்டியலிட வேண்டும். கடைசியில் பார்த்தால், நாம் ஆராயும் குறைபாட்டிற்கான காரணங்கள் எது எது என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்து விடும். ஒருமுறை ஒரு பொருளுக்கு / சாதனத்துக்கு மீன்முள் வரைபடம் வரைந்துவிட்டால் போதும். அப்பொருளின் பாகங்கள்- அவை வேலை செய்யும் விதம், மூலப்பொருட்கள் என அனைத்து விவரங்களும் நமக்கு அத்துப் படியாகி விடும்.நாம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கால திட்டம், ஓரிரு முடிவுகளில் எந்த முடிவெடுப்பது என்ற நிலை - என நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலும் இந்த மீன்முள் உத்தியை சிற்சில திருத்தங்களோடு பயன்படுத்திக் கொள்ளலாம் எனபது உபரித் தகவல்.

Wednesday, September 8, 2010

உனக்கும்....எனக்கும்...


உனக்கும் எனக்கும்
இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ...
இது உலகில் பிறர்க்கு
எய்தும் பொருத்தமோ...!

Sunday, September 5, 2010

ஈழத்து சித்தர்கள்...அருட்செல்வி தோழி, தனது சித்தர்கள் வலைப்பூவில் சித்தர்களைப் பற்றி விடாப்பிடியாக, அயராமல் எழுதி வருகிறார். தொடர்ந்து எழுதிவரும் இவரது பணி நிச்சயம் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. சித்தர்களின் வாழ்க்கை செய்திகள், சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள், சித்த மருந்துகள், சித்தர்களின் காயகற்ப முறைகள், சித்தர்களைப் பற்றிய தனித்தகவல்கள் என தொடர்ந்து அளித்து வருகிறார்.


சித்தர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, சமூகத்திற்கோ சொந்தமானவர்கள் அல்லர்; உலகத்திற்கு பொதுவானவர்கள்; மக்கள் நலனையே இலக்காக கொண்டவர்கள்; உலகம் முழுவதும் பரவலாக பயணம் செய்து தொண்டாற்றியவர்கள்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு.


தோழி சில நாட்களுக்கு முன் தன் வலைப்பூவில் ஈழத்து சித்தர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஈழத்து சித்தர்களின் பாடல்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
என்னிடம் ஈழ சித்தர்களின் பாடல்கள் ஏதும் இல்லை. ஆனால் அது சம்பந்தமான சில தகவல்கள் என்னிடம் உள்ளன. மொத்தமாக அவற்றை எழுதினால் பதிவு நீண்டு விடும் என்பதால் ஒன்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மீதியுள்ளவற்றை இடையிடையே எழுதி விடுகிறேன். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:


பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.


- போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).


ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).


பின்குறிப்பு: மேலே படத்தில் இருப்பவர் மஹா அவதார் பாபாஜி. பாபாஜி வட இந்தியா சென்று தவம் புரியுமுன் அவர் போகரை இலங்கையில் வைத்து சந்தித்த நிகழ்வைப் பற்றியும், அகத்தியரை குற்றால மலையில் சந்தித்த நிகழ்வைப் பற்றியும் அடுத்ததொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

Friday, September 3, 2010

உளவியல் பேரறிஞர் சிக்மன்ட் பிராய்டு.நான் இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும்போது எங்களுக்கு இண்டஸ்ட்ரியல் சைக்காலாஜி என்று ஒரு பேப்பர் இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே சைக்காலாஜியில் ஒரு ஈர்ப்பும், ஆர்வமும் இருந்ததால் அந்த பாடத்தை சற்று முனைப்புடன் படித்தேன். மற்ற பாடங்களில் எல்லாம் சுமார்தான். ஒரு செமஸ்டர் தேர்வில் சிக்மன்ட் பிராய்டு கருத்துக்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக என இரண்டு மார்க் கேள்வி கேட்டிருந்தார்கள். அதாவது ஷார்ட் நோட்ஸ். எனக்கு பிராய்டு பற்றி நன்றாக தெரிந்திருந்ததால், ஒரு பக்கம் முழுவதும் எழுதித் தள்ளி விட்டேன். அப்பாடத்தின் ப்ரொபசர் என்னைக் கூப்பிட்டு ஒரு அதட்டு அதட்டி விட்டு, நான் எழுதிய பதிலுக்கு இரண்டு மார்க் மட்டும் போட்டு அனுப்பினார்.


உளவியல் சரித்திரத்தில் பேரறிஞர் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் சிக்மன்ட் பிராய்டு ஆவார். ஆனால் இக்காலத்தில் பலரை பேரறிஞர் என்று கூறிக்கொள்கிறார்கள். கனவுகள், கனவுகளுக்கும் காம உணர்வுக்கும் உள்ள தொடர்பு, குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமை (பெர்சனாலிட்டி) உருவாக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன, ஆழ்மனம், எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் - இவை போன்ற முற்றிலும் எதிர்பாராத உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். மனோதத்துவ உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆழ்மனதில் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், எண்ணங்கள், ஆசைகள், அனுபவங்கள் இவையே மனநோய்க்கு காரணமாக அமைகின்றன என்றும்,
ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்றும் கூறினார். ஆழ்மனதில் மண்டிக்கிடக்கும் உணர்வுகள் பெரும்பாலும் பாலியல் உணர்வு சார்ந்தவை என்றும், அவை பெரும்பாலும் கனவின் மூலம் வெளிப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப் படுகின்றன என்றும் கூறினார். பிராய்டு தன்னுடைய அனைத்து நூல்களிலும், பாலியல் உணர்வு என்ற சொல்லை உடலுறவு எனும் குறுகிய ஒரே பொருளில் மட்டும் கையாளவில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு அம்சமாகும்.


ஆழ்மனதில் அமுக்கப்பட்ட அல்லது தானாக படிந்து கிடக்கும் - நிறைவேறாத / முறையற்ற / அறநெறிக்கு முரணான / சமுதாய கோட்பாடுகளுக்கு எதிரான ஆசைகளையும், அனுபவங்களையும் ஒருசில உத்திகள் மூலம் மனிதமனத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து அவற்றை முறையாக பைசல் செய்வதன் மூலம் மனநோய்களை தீர்க்க முடியும் என்று கூறினார். கூறியதோடல்லாமல், குணப்படுத்தியும் காட்டினார். இந்த உத்திக்கு பெயர் சைக்கோ அனாலிசிஸ். தமிழில் உளப்பகுப்பாய்வு. பிராய்டு எந்த ஒரு கருத்தையோ, கொள்கை முடிவையோ மேலோட்டமாகவோ கூறவில்லை. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நோயாளிகளிடம் தன் தொடர் ஆய்வுகளின் முடிவில்தான் தன் கருத்தை வெளியிட்டார்.


அக்காலத்தில் வாழ்ந்த உளவியல் மற்றும் தத்துவ துறையை சேர்ந்த சிந்தனாவாதிகள் பிராய்டின் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்; முகம் சுளித்தனர்; கடும் எதிர்ப்பும் காட்டினர். ஆனால் பிராய்டு சற்றும் அசரவில்லை. தன் கொள்கைகளில் உறுதியாகவும், தான் கூறியவை உண்மைதான் என்பதிலும் தெளிவாக இருந்தார். ப்ராய்டை எதிர்த்தவர்கள் வீட்டிற்கு சென்று தனிமையில் பிராய்டு கூறியது உண்மையாகத்தான் இருக்குமோ என்று யோசிக்கவும் செய்தனர்.


உள்ளம் என்பதை எளிமையாக எல்லோரும் நினைத்த அக்காலத்தில், உள்ளம் என்பது ஓர் ஆழ்கடல் என்றும், உள்ளம் ஒரு சிக்கலான அமைப்பு என்றும், உள்ளக்கடலில் எழுந்து போராடும் உணர்வும் எண்ணிலடங்காதவை என்றும் தனது புரட்சிகரமான உண்மைகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உளவியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் சிக்மன்ட் பிராய்டு. ஆண்டுகள் செல்ல செல்ல, பிராய்டின் கருத்துகளில் உள்ள உண்மைக் கூறுகளை சிந்தனையாளர்களும் அறிஞர்களும் புரிந்துகொள்ள துவங்கினர். தற்போது அவரின் கருத்துக்களும், ஆய்வு முறைகளும் ஏற்கப்பட்டு சிற்சில மாற்றங்களோடு நடைமுறை செய்யப்பட்டுள்ளன. எல்லா மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் சோதனை முறைகளிலும் சைக்கோ அனாலிசிஸ் முறையானது ஓரளவு மறைமுகமாக பயன்பட்டே வருகிறது. தசாவதாரம் படத்தில் ஒரு பாடலில், ' விஞ்ஞானி ப்ராய்டையும் புரிந்து கொண்டாய்.....' என ஒரு வரியை வைரமுத்து எழுதியிருக்கிறார்.


மதிப்புமிக்க சிக்மன்ட் பிராய்டின் கருத்துக்கள், ஆய்வு முறைகள், கொள்கைகள் இவற்றை நான் விளங்கிக்கொண்ட வரையில் - சிறுசிறு கட்டுரைகளாக அவ்வப்போது எழுதி வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். ஏனெனில், ஒருவர் பிராய்டின் உளவியல் கருத்துக்களை தெளிவாக புரிந்துகொண்டால், அவ்வறிவு அவருக்கு தன் மனதை தானே செப்பனிட்டு - மனநலமும் உடல் நலமும் பெற உதவும். மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வைப் பெற உதவும். சமுதாயமும் ஓரளவு அமைதியாகும். தனது கடுமையான உழைப்பு, ஆய்வு, அர்பணிப்பு இவற்றின் மூலம் மனிதமனதின் ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பேரறிஞர் சிக்மன்ட் ப்ராய்டிற்கு மனித சமுதாயம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.Wednesday, September 1, 2010

முன்பே வா...என் அன்பே வா...
ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டுக்
கவிஞன் ஆனேன்...!- தபூ சங்கர்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...