Monday, August 30, 2010

எம்பெட்டட் சிஸ்டம்ஸ் - மிகச் சுருக்கமான அறிமுகம்.ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் நண்பர்கள் குழாமில் ஒருவரான பாரதி எம்.டக் (எம்பெட்டட் சிஸ்டம்ஸ்) படிப்பை முடித்துவிட்டு விப்ரோவில் கைநிறைய சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் அவ்வளவு பிரபலமாகவில்லை ஆனால் தற்போது எம்.இ / எம்.டக் கவுன்சிலிங்கில் முதலில் சீட் தீர்வது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தானாம். அந்த அளவு எ. சிஸ்டமின் பயன்பாடுகள் (அப்ளிகேஷன்ஸ்) விசாலமாகி வருகின்றன. அதனால் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும், படிப்பதற்கு போட்டியும் அதிகரித்துள்ளது.


எலெக்ட்ரானிக்ஸ் இயலின் சமீபத்திய முன்னேற்றங்களில் ஒன்றுதான், வசீகரமான இந்த எம்பெட்டட் சிஸ்டம்ஸ். எலெக்ட்ரானிக்ஸ் துறை முன்னேற்றம் அடைகிறது என்றால் அதன் பொருள், சிப்புகளும் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களும் சிறியதாகவும், பயன்கள் அதிகமாகவும்
ஆகி வருகின்றன என்று பொருளாகும். விலைகளும் கணிசமாக குறைகிறது.


எம்பெட்டட் சிஸ்டம்ஸ் என்பதை பொதுவாக கம்ப்யூட்டர் என்கிறார்கள். ஆனால் இவை பெர்சனல் கம்ப்யுட்டர் போன்றவை அல்ல. ஒரு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யுட்டரை கொண்டு நாம் பற்பல காரியங்களை செய்யலாம். ஒரு விலங்கியல் கட்டுரையை டவுன்லோட் செய்து பார்க்கலாம்; தெரியாத ஒரு சொல்லுக்கு பொருள் காணலாம்; அனுஷ்கா அழகுப் படங்களை கண்டு களிக்கலாம். ஆனால் எம்பெட்டட் சிஸ்டம் என்ற கம்ப்யுட்டர்கள் ஏற்கனவே இடப்பட்ட கட்டளைகளை (ப்ரீ-ப்ரொக்ராம்டு) கொண்டு ஒருசில குறிப்பிட்ட வேலைகளை மட்டும் திரும்ப,திரும்ப செய்யும் திறன் உள்ளவை. ஒருமுறை ப்ரோக்ராம் செய்ததை மாற்றுவது மிகக் கடினம்.


ஒரு மைக்ரோப்ராசசர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் இவற்றில் ஒன்றை தகுந்த சாப்ட்வேர் மூலம் ப்ரோக்ராம் செய்து எலெக்ட்ரிகல் உபகரணம் / எதாவது ஒரு உபகரணத்தில் பதித்து விடுகிறார்கள். அதாவது எம்பெட் செய்கிறார்கள். உதாரணமாக வாஷிங் மெஷின், டிஜிட்டல் கேமெரா, கார்கள் இது போன்ற சாதனங்களில் உள்ளே பொருத்தி விடுகிறார்கள். வெளியே தெரியாது. ஒரு தேர்ந்த வல்லுநர் மட்டுமே எம்பெட்டட் சிஸ்டம் மூலம் ஒரு உபகரணம் இயங்குகிறது எனக் கண்டறிய முடியும்.


எம்பெட்டட் சிஸ்டமில் ரியல் டைம் அப்ளிகேஷன்ஸ் என்று ஒரு விஷயம்
சொல்கிறார்கள். இதற்கு ஒரு அருமையான உதாரணம், ஒரு கார் இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். திடீரென ஒரு பாப்பா குறுக்கே வந்துவிட்டது. சடாரென ப்ரேக் போட்டால் வண்டி தலைகுப்புற கவிழ்ந்து விடும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில், எம்பெட் சிஸ்டம்கள் - கார் இத்தனை கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும்போது ப்ரேக் போட்டால்- என்ற ப்ரோக்ராம் வரிகளை நிஜத்திற்கு கொண்டு வந்து (ரியல் டைம்) செயல்படுத்தி, ஒருநொடியில் சீட்டின் முன்புறம் ஒரு பெரிய பலூனை விடுவித்து முன்சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை காயம் படாமல் காப்பாற்றுகிறது. எம்பெட் சிஸ்டம்களில் ஹார்ட் டிஸ்க் போன்றவை இல்லாததால், உள்ளீடுகள் (இன்புட்) நொடிக்கும் குறைவான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.


விரைவாக செயல்படுதல், பயன்பாட்டில் நம்பகத்தன்மை (ரிலயபிளிட்டி) போன்றவை எம்பெட் சிஸ்டமின் தனிச்சிறப்புகள். மைக்ரோ கண்ட்ரோலர் உள்ளேயே இன்புட்/அவுட்புட் டிவைசெஸ், ரோம், சி.பி.யு. இத்யாதிகள் அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளதால், மைக்ரோ கண்ட்ரோலர் ஓரளவு சிறிய கருவிகளிலும், மைக்ரோ பிராசசர்கள் தொழிற்சாலை அளவில் இயங்கும் சாதனங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.


எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளில் இருந்தே தெளிவாக புரிந்துகொள்ள முடியும். வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன், டிஜிட்டல் கேமரா, வாட்சுகள், கார்கள், போக்குவரத்து சிக்னல்கள், நியுக்ளியர் பவர் ஸ்டேஷன்கள் என எம்பெட்டட் சிஸ்டமின் பயன்பாடுகள் நீள்கிறது. எதிர்காலத்தில் ஏறக்குறைய நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் சிலிக்கான் சிப்புகளை பதித்து எம்பெடட் சிஸ்டம் மூலம் இயங்க வைத்து விடுவார்கள் என நினைக்கிறேன். மனிதனில் பதிக்காமல் விட்டால் சரி.

Sunday, August 29, 2010

மனதை வருடும் கவிதை...சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
தன் வாழ்வை
எழுதிச் செல்கிறது...!- நகுலன்.

இதுபோன்ற மனதை வருடும் கவிதையை எங்காவது படித்திருக்கிறீர்களா?
மனதில் ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கும் அபூர்வக்கவிதை இது.

Saturday, August 28, 2010

தெய்வீக காதல் எது?

காதல் தெய்வீகமானது
என்பது உண்மைதான்.
ஆனால் எந்தக் காதல்
தெய்வீகமானது
என்பதுதான் கேள்வி...!


- கவியரசர் கண்ணதாசன்.


சேரன் இந்தக் கவிதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ஆட்டோகிராப் படத்தை எடுத்தார்.

Friday, August 27, 2010

மறதியில் கரைந்த ஒரு மகத்தான பாடகன் !

உயிர்மை மாத இதழை தவறாமல் வாங்கிவிடுவேன். காரணம், சாரு நிவேதிதா அவ்வப்போது வெளியாகும் தமிழ், ஹாலிவுட் சினிமாக்களை போட்டுத்தாக்குவார். தவிர, திரு. ஷாஜி என்பவர் திரையிசை பாடல்களையும், பாடகர்களையும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதுவார். ஷாஜி ஒரு சிறந்த இசை விமர்சகர் ஆவார். மிகத் திறமையாகவும், நுணுக்கமாகவும், நடுநிலைமையோடும், அனுபவ அறிவோடும் ஆய்ந்து கட்டுரை எழுதுபவர். கேரளத்துக்காரர்.
ஆகஸ்ட் மாத இதழை வாங்கியவுடன் அதில், ' மலேசியா வாசுதேவன் - மறதியில் கரைந்த மகத்தான பாடகன் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
எஸ்.பி.பி. தான் எப்போதும் என் மனங்கவர்ந்த பாடகர். குழைவான குரல், நடிகர்களுக்கேற்றபடி குரலை மாற்றிப்பாடும் லாவகம், பாடப்படும் சூழ்நிலையை அப்படியே வெளிப்படுத்தும் குரல் பாவம், எந்தவித பாடலையும் பாடும் திறமை, பாடலின் இடையிடையே எஸ்.பி.பி. வெளிப்படுத்தும் சிரிப்புகள் முனகல்கள் இது போன்ற காரணங்களால் எப்போதும் நான் விரும்பி ரசிக்கும் குரல் எஸ்.பி.பி. யின் குரல்தான்.
காமரசம் சொட்ட சொட்ட ஒலிக்கும் பாடல்களில் அவர் கொடுக்கும் சப்தங்கள் என் வயதையொத்த நண்பர்களிடம் மிகப்பிரபலமானவை.
உதாரணமாக, காதலர் தினம் படத்தில் 'காதலெனும் தேர்வெழுதி...' என்ற பாடலை குணாலுக்கு கூட பொருந்தும்படி பாடியிருப்பார். மேலும், சத்யா படத்தில் வரும், 'வளையோசை...' என்ற பாடலிலும், மீரா படத்தில் ' ஓ பட்டர்பிளை....' என்ற இருபாடல்களிலும் உலகத்தரம் வாய்ந்த லதாமங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரின் குரல்களுக்கும் ஈடு கொடுத்து, தன் குரலின் தரமுயர்த்தி மிகுந்த முயற்சியோடு பாடியிருப்பார்.
எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முழுமையான பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்.
இப்படிப்பட்ட மனநிலையில், மலேசியா வாசுதேவன் மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற தலைப்பை பார்த்து சற்று திடுக்கிட்டேன். ம.வாசுதேவன் ஒரு சிறந்த பாடகர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஏறக்குறைய பத்து பக்க அளவு எழுதுமளவு வாசுதேவன் பாடல்களில் என்ன இருக்கிறது என்ற சிந்தனையில் அக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என் விழிகள் வியப்பிலும், திகைப்பிலும் விரிந்தே விட்டன. படித்து முடித்தவுடன் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஷாஜி, ஏராளமான பாடல்களை உதாரணம் காட்டி , ம.வாசுதேவன் ஒவ்வொரு பாடலையும் எவ்வாறு துடிப்புடனும், உயிர்ப்புடனும், மேதைமையுடனும் பாடியுள்ளார் என்பதை அழகாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு உதாரணமும் எனக்கு சவாலாகவே தோன்றியது. நான் பாடகர்களை பற்றி முன்பு கொண்டிருந்த கொள்கைகள் அனைத்தும் உடைந்தே போயின போல தோன்றியது. அக்கட்டுரையை படித்தவுடன் என் குறுகிய ரசிக மனப்பான்மை எனக்கே நன்கு விளங்கியது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் ஷாஜியின் வரிகளிலேயே அப்படியே தருகிறேன். " சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த மலேசியா வாசுதேவன் பாடிய ' பட்டுவண்ண ரோசாவாம்...' (கன்னிப்பருவத்திலே) பாடலையும், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய ' உச்சி வகுந்தெடுத்து...' என்ற இரண்டு பாடல்களையும் உன்னிப்பாக கேட்டுப் பாருங்கள். இரண்டும் ஏறக்குறைய ஒரே கிராமிய ராகத்தில் அமைந்தும், ஒரேவித ஏக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் -
பாடும் பா முறையைக்கொண்டு எந்தப்பாடல் சிறப்பாக பாடப்பட்டுள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் " என்கிறார் ஷாஜி. நான் இந்த வரிகளை படித்தவுடன் ஆஹா....விடை தெரிந்துவிட்டது. என் அம்மாவிடமும், அப்பாவிடமும் இரண்டில் எது சிறந்த பாடல் என்று கேட்டேன். இருவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். நீங்களும் வேண்டுமானால் கேட்டு பாருங்கள்....!
ஷாஜி எழுதிய மலேசியா வாசுதேவனை பற்றிய அந்த அருமையான, அபூர்வ கட்டுரை உயிர்மை இணையதளத்தின் முகப்பில் தற்போது படிக்க கிடைக்கிறது. அனைவரும் கட்டாயம் படித்து விடுங்கள்...!
( நன்றி: உயிர்மை மாத இதழ்.)


Thursday, August 26, 2010

புலன் கடந்த அனுபவம்...ஈ.எஸ்.பி.


ஈ.எஸ்.பி. என்பது ஒரு ஆற்றலோ, கலையோ அல்ல. மாறாக, மனிதமனத்தில் இயற்கையாக நடக்கும் தொடர்நிகழ்ச்சியாகும். இப்பரந்த பிரபஞ்சவெளியில் உலாவும் கோடான கோடி கோள்களில் நம் பூமியும் ஒன்று. பூமியில் வசிக்கும் அனைத்து ஜீவேராசிகளின் மனங்களுக்கும் இடையே ஒரு சூட்சுமமான, பரஸ்பர தொடர்பு (அதாவது கம்யுனிகேஷன்) எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. திடீரென, அனுபவமாக நமக்கு அந்த எண்ணத் தொடர்பு புலனாகும்போது மிகவும் வியப்பளிக்கிறது.
டெலிபதி- தொலைவில் நடப்பதை உணர்தல், பொருள்களை கண்ணால் பார்த்தே நகட்டுவது/ ஸ்பூனை வளைப்பது - இவற்றை சைக்கோ கைனசிஸ் என்கிறார்கள். இவ்வித செயல்களும் ஈ.எஸ்.பி. யில் சேர்த்திதான்.
ஒருவர் வரப்போவதை சில நிமிட அல்லது நொடிகளுக்கு முன் அறிதல், நடக்கபோவதை முன்கூட்டியே அறிதல், ஒருவர் ஒன்று சொல்ல நினைப்பார் அருகிலுள்ள நண்பர் உடனே அதை கூறிவிடுவார், மனதில் ஒரு நண்பரின் எண்ணம் தோன்றும் உடனே அவர் போன் செய்வார் - இவையெல்லாம் ஈ.எஸ்பி.க்கு உதாரணங்களாகும். இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்தே இருக்கும்.
தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களுக்கு மனதின் அலைவேகம் குறைந்து மன அலை நுண்மையாகி மனதின் ஏற்பு திறன் அதிகமாகிறது.
அதேபோன்று ஒரு விடயத்தில் ஆழ்ந்து மனதை செலுத்தும்போது மன அலை நுண்மையாகி அப்போதும் மன ஏற்பு திறன் கூடுகிறது. இவ்விரண்டு சாத்தியங்களும்தான் பு.க. அனுபவத்திற்கு காரணங்களாக அமைகின்றன. ஆனால் ஈ.எஸ்.பி. ஆற்றல் கைவரவேண்டும் என நினைத்து தியானம் செய்தால் அது நடக்காது. அந்த எண்ணமே தடையாக அமைந்துவிடும்.
நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருமுறை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பும்போது என்கூட படிக்கும் சுபஸ்ரீ பஸ்ஸ்டாண்டில் இருப்பாள் என்ற எண்ணம் திடீரென பளிச்சிட்டது. அடுத்த பத்து நொடிகளில் பஸ் அவளை கிராஸ் செய்ததது. மிகுந்த வியப்பில் அவளுக்கு பஸ்ஸில் இருந்தபடியே டாட்டா காட்டினேன். என் அத்தை பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற ஆழ்ந்த எண்ணமும், விருப்பமும் பலவருடங்களுக்கு முன் எனக்கு இருந்தது. அந்த சமயத்தில், ஒரே வருடத்தில் ஐந்து முறை அவள் வருவதை முன்கூட்டியே அறிந்திருக்கிறேன். இதுபோன்ற ஏராளமான ஈ.எஸ்.பி. சம்பவங்கள் எனக்கு நண்பர்களுடனும் நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன. ஒருமுறை மனதில் பளிச்சிட்ட ஒருபாடல், அடுத்த சிலநொடிகளில் அப்படியே எப்.எம். ரேடியோவில் ஒலித்தது. இவைகளை பெருமைக்காக கூறவில்லை. அனைவருக்கும் இதேபோல் நடந்து கொண்டுதான் இருக்கும். நான் அவ்வப்போது தியானம் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Wednesday, August 25, 2010

புலன் கடந்த அனுபவம்...ஈ.எஸ்.பி.

நீண்ட பதிவாகையால் தொடர்ச்சியாக டைப் அடிக்க முடியவில்லை. இப்பதிவு மேலும் தொடர்கிறது....இன்னும் சில ஆச்சரியமூட்டும் தகவல்களுடன்.

லிங்கேஸ்வரன்.

புலன் கடந்த அனுபவம்... ஈ.எஸ்.பி.


ஈ.எஸ்.பி. என்பது அனேக பேரால் விரும்பி படிக்கப்படும் ஒரு தலைப்பாகும். ஒரு புதிரான, சுவாரசியமான, இன்னமும் முழுமையாக நிரூபிக்கபடாத, அறிவியல் ஏற்றுக்கொள்ளாத இயல் இது. ஈ.எஸ்.பி. என்றால் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன். தமிழில் புலன் கடந்த அனுபவம் என மொழிபெயர்க்கலாம். பிடிவாதமான தமிழ் ஆர்வலர்களுக்கு புலன் கடந்த கண்ணோட்டம். மறைந்த தமிழ் எழுத்தாளர் பி.சி. கணேசன் என்பவர் இது பற்றிய சில நல்ல புத்தகங்களை எழுதியுள்ளார். ஈ.எஸ்.பி.யானது ஆன்மீகத்திலும் சேராமல், சைக்காலஜியிலும் சேராமல் கடைசியில் நம்ப முடியாத கேஸ்கள் சேர்க்கப்படும் பாரா - சைக்காலஜியில் சேர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஈ.எஸ்.பி. என்பது மிக எளிமையான ஒன்றேயாகும். நமது உடம்பில் ஐந்து புலன்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல். இவற்றின் மூலம்
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவை மற்றும் ஸ்பரிச உணர்வுகளை உணர்கிறோம். பொதுவாக நாம் ஒரு ஒரு புலனை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். அல்லது ஒரே நேரத்தில் ஓரிரு புலன்களை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். இவ்வாறு புலன்களை இயக்கும்போது அல்லது புலனில் தூண்டுதல் (அதாவது வெளிச்சம், சத்தம், வாசனை, தொடல், சுவை) பெறும்போதும் - அவ்வாறு இயக்குவதற்கு தக்கவாறு, அந்தந்த உணர்வுகளுக்கு தக்கவாறு மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனுபவங்களாக பதிவாகின்றன. இதுவே ' புலன் அனுபவம் '.
அதாவது ஆங்கிலத்தில் சென்சரி பெர்செப்ஷன்.

மேற்கண்டவாறு அல்லாமல், புலன்கள் இயக்காமலோ-புலன்கள் தூண்டல் இல்லாமலோ நேரடியாக மனதில் எண்ணங்கள் தோன்றுவதே 'புலன் கடந்த அனுபவமாகும்'. ஆங்கிலத்தில் ஈ.எஸ்.பி. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், ஏற்கனவே நமக்குள் அனுபவங்களாக பதிந்த கற்பனையான ஆசைகள், அல்ப ஆசைகள் போன்றவையும் தானாகவே எழுச்சி பெற்று (உடல் இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதால்) மனதில் எண்ணங்களாக தோன்றும். அவைகளை புலன் கடந்த அனுபவம் என நினைத்துவிட கூடாது. நுட்பமாக, நடுநிலைமையோடு கவனித்தால்தான் எது ஈ.எஸ்.பி., எது அல்ப ஆசை என புரியும்.

ஈ.எஸ்.பி. ஆற்றலை எப்படி பெறுவது அல்லது வளர்த்து கொள்வது என்பது
பற்றி ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் யாரும் நம்பிவிட வேண்டாம். ஈ.எஸ்.பி. என்பது பயிற்சி செய்து பெற வேண்டிய கலையோ, ஆற்றலோ அல்ல...

Tuesday, August 24, 2010

கல்லூரி நாட்களும், ஆனந்த விகடனும்...


கல்லூரியில் படித்த நான்கு வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் படிக்கிறோம் என்ற பெருமை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. அவ்வப்போது பாடபுத்தகங்களையும், அடிக்கடி ஆனந்தவிகடனையும் படிப்போம். ஆனந்தவிகடன் எங்களது ஆதர்சன பத்திரிகை. எட்டு வருடங்களுக்கு முன் அப்போது விகடனில் முத்திரை கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. தவறாமல் வாங்கிப் படிப்போம்.

இசையில் இளையராஜா சிறந்தவரா? ரகுமான் சிறந்தவரா? என பெரிய விவாதமே எங்களுக்குள் இரு அணியாக நடக்கும். அப்படி இப்படி என போராடி இளையராஜாவை ஜெயிக்க வைத்துவிடுவோம். கமல்ஹாசனை பற்றி பேசும்போது மட்டும் எல்லோரும் ஒரே அணிதான். தமிழ் வெறியர்களாக சிலர் காலேஜில் அலைந்தார்கள். அதில் நானும் ஒருவன். அழகான பெண்கள் எங்களை கடக்கும்போது, அவர்களுக்கு கேட்காதபடி மெல்ல விசிலடிப்போம். ஒரு மெகா சைஸ் ஆடிட்டோரியத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். பழைய நோட்டில் பேப்பர்களை கிழித்து ராக்கெட் விடுவோம். ஒருமுறை வேகமாக விட்டதில் பெண் நடுவர் மீதே ராக்கெட் பாய்ந்து விட்டது. யாருக்காவது பிறந்தநாள் வந்தால், மற்ற எல்லா பசங்களும் சேர்ந்து 'பம்ஸ்' கொடுப்பார்கள். பம்ஸ் என்றால் பப்சோ, ஸ்வீட்டோ, காரமோ அல்ல. பிறந்தநாள் கொண்டாடுபவனின் இரண்டு கைகளை இரண்டு பேரும், இரண்டு கால்களை இரண்டு பேரும் பிடித்து தூக்கிக் கொள்வார்கள். மற்றவர்கள் பின்புறத்தில் புட்பாலை உதைப்பது போல உதைத்து துவைத்து விடுவார்கள். பிறந்தநாள் நெருங்கினாலே பீதியாக இருக்கும். அப்புறம்தான் வாழ்த்து, கேக், தண்ணீர் எல்லாம். இவ்வளவு உற்சாகங்களுக்கிடையிலும், கேம்பஸ் இன்டர்வியுவில் வேலை கிடைக்க வேண்டுமென்ற கவலை எல்லோருக்கும் ஞாபகத்தில் இருந்தது.

திரும்பி வராத இனிய நாட்கள் அவை. அதுபோன்ற ஒரு நன்னாளில் எங்கள் நண்பர் மாரியப்பன் ஆனந்தவிகடன் முத்திரை கவிதை போட்டிக்கு ஒரு கவிதை எழுதியனுப்பினார். கவிதையும் தேர்வாகி விகடனில் வெளிவந்தது.
பரிசு பணமும் மணியார்டர் அனுப்பினார்கள். நான்கே வரிகளை கொண்ட அக்கவிதையை மாரியப்பன் எப்படி எழுதினார் என்று எனக்கு இன்றும் வியப்பாக இருக்கிறது. அந்த கவிதையை எழுதும் போது அவருக்கு வயது இருபத்தி ஒன்றுதான். சொல்லாத பல அர்த்தங்களை சொல்லும் அந்த கவிதையை நீங்களும் படித்து பாருங்கள்.

டைவர்ஸ்
உன்னை நானும்
என்னை நீயும்
முழுமையாக
புரிந்துகொண்ட போது.

Sunday, August 22, 2010

தமிழ்மொழி 'ழ'-வின் தனிச்சிறப்பு...


நண்பர் ம.தி.சுதா ஒரு கட்டுரையில் தமிழ் 'ழ'- வை பற்றி எழுதியிருந்தார். தமிழ், மலையாளம், மண்டரின் ஆகிய மொழிகளில் மட்டும்தான் ழ உள்ளது என எழுதியிருந்தார். குஜராத்தியிலும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிறமொழி 'ழ' க்களை பற்றி எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை.
தமிழ் 'ழ' எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதின் பின்புலத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

'ழ' வை பற்றி அறியும் முன் நம் முன்னோர்களாகிய சித்தர்களின் ஜீவசமாதி என்ற தத்துவத்தை சற்று அறிந்து கொண்டால்தான் 'ழ' -வின் மகத்துவம் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

ஜீவசமாதி: ஜீவசமாதியை பற்றி சுருக்கமாகவே இங்கு கூறுகிறேன். விரிக்கின் பெருகும் ஆதலால், மற்றொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். முற்காலத்தில் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நம் சித்தர்கள் ஜீவசமாதி அடைவதற்காக 'லம்பிகா யோகம்' என்ற முறையை கையாண்டார்கள். இந்த யோகா முறையை அவர்கள் தவளை, உடும்பு, ஓணான் முதலிய விலங்குகளிலிருந்து கற்றுக்கொண்டார்கள். அதாவது என்னவென்றால், சித்தர்கள் நாவை மடக்கி மேல் அன்னத்தில் ஓட்ட வைத்துக்கொண்டு, அப்படியே தவத்தில் அமர்ந்து விடுவார்கள். அதேசமயத்தில் ரகசியமான ஒருவித பயிற்சியை செய்வார்கள். அதைப்பற்றி இங்கு வெளிப்படையாக சொல்ல இயலாது. இவ்வாறு சிறிது சிறிதாக, மணிக்கணக்கில் பயிற்சியை கூட்டிக்கொண்டே செல்வார்கள். அப்போது என்ன ஆகுமெனில், மனிதனின் விந்துவில் உள்ள சாரமானது, பதங்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி
மூளைக்கு சென்று சேர்ந்து கொண்டே இருக்கும். கவனிக்கவும், மேலே செல்வது விந்து அல்ல. விந்துவின் சாரம்தான். இதனை எளிதாக காந்தசக்தி என அழைக்கலாம். தத்துவத்தில் இது ஓஜஸ் அல்லது தேஜஸ் எனப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து பலநாட்கள் செய்து வரும்போது, உடம்பானது சிறிது சிறிதாக மரத்துபோய், உணர்வற்றுக் கொண்டே வரும். இது கோமா நிலை போன்றது. அதாவது உடலில் உயிர் இருக்கும், உடல் இயக்கங்கள் எல்லாம் நுண்ணியதாக நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் உணர்வு இருக்காது; மனம் செயல்படாது. சீடர்கள் அப்படியே உடலை தூக்கிக்கொண்டு சென்று ஏற்கனவே தயாராக உள்ள குழியில் வைத்து மூடிவிடுவார்கள். இதுதான் ஜீவசமாதி.

தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்? நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம். மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக, விந்து சுரப்பியில் உள்ள விந்துவின் சாரமானது எப்போதும் சிறிதளவு பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம் வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம் கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ் சக்தியானது சட்டென்று ஒருவினாடியில் அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ் சக்தியானது மூளைக்கு நலமும், வளமும், அமைதியும், சீர்மையும் அளிக்கிறது. இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும். 'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும் ஏராளாமான பலன்கள் கிடைக்கும்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே மெய்ப்பொருள் சிந்தனை மிகுந்திருந்தது. இதற்க்கு சரியான உதாரணம், எந்த தமிழருடைய ஆண் பெண்ணுடைய பெயர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்...அவற்றை பிரித்துப்பார்த்தால் கடைசியில் தெய்வத்தின் பெயராகவே முடியும் (தொண்ணூறு சதவீதம்). மேலும் தமிழர்களின் பண்பாடும், இறை உணர்வும் ஒன்றாக கலந்தே இருந்தன. இதை பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, தமிழில் 'ழ' எனும் எழுத்தை மேற்கண்ட பின்புலத்தில்தான் தமிழர்களோ, தமிழ் சித்தர்களோ உருவாக்கியிருப்பார்கள் என்பது என் துணிபு.

எச்சரிக்கை: மேற்கண்ட ஜீவசமாதி முறையை யாரும் தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் உடலும், மனதும் பாதிக்கப்படுவது நிச்சயம்; பேராபத்து.Saturday, August 21, 2010

தசாவதாரம்...


தசாவதாரம் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் முடியப்போகும் நிலையில் நான் இக்கட்டுரையை எழுதினாலும், இது விமர்சனக்கட்டுரை அல்ல. ஏற்கனவே யோசித்து வைத்ததை இப்போது எழுதுகிறேன்.

தசாவதாரம் படம் பார்த்தவுடன் சிலர் சொதப்பல் கதை என்றார்கள்; சிலர் ஆஹா அற்புதம் என்றார்கள்; சிலர் சர்க்கசுக்கு சென்று வந்ததுபோல் இருந்தது என்றார்கள்; தற்போது பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் ஒருவர் தசாவதாரத்தை குப்பை என்றார். எனக்கு முதல்முறை பார்த்தபோது தலை வலித்தது. இரண்டாவது தடவை பார்த்த பின் தெளிவாக விளங்கியது. மூன்றாவது தடவை பார்த்தபின் மிகத்தெளிவாக விளங்கியது.

தசாவதாரத்தை படம் என்று சொல்லுவதை விட, கமல்ஹாசன் தன் மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த கேள்விகளை - ஓர் அற்புதமான திரைக்கதையாக்கி நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் என்று சொல்லுவதே சரி. சிந்தனை செறிந்த அக்கேள்விகளுக்கான விடைதேடும் வேலையை கமல் பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறார். புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அக்கேள்விகளை நாலைந்து கேள்விகளாக பிரித்து கீழே தருகிறேன்.

கேள்வி ஒன்று: கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்றால், ஆபத்து சமயத்தில் கூப்பிட்ட குரலுக்கு அவர் ஏன் வரமாட்டேன்கிறார்? கூப்பிட்ட குரலுக்கு மனிதர்கள்தானே ஓடி வருகிறார்கள்.
அப்படியென்றால், மனிதன்தான் கடவுளா?

கேள்வி இரண்டு: கடவுள் என்று ஒருவர் இல்லை....எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்திதான் இருக்கிறது என்றால் அந்த சக்தி எங்கே இருக்கிறது?
எப்படி செயல்படுகிறது? ஒன்றும் தென்படவில்லையே? இப்போதும் மனிதர்கள்தானே செயல்படுகிறார்கள். அப்படியென்றால், மனிதசக்திதான் அந்த சக்தியா?

கேள்வி மூன்று: ஒரு மனிதன் செய்யும் காரியம் சிறிது காலத்திற்கு பின் ஒரு விளைவாக வருகிறது. இதேபோல் கோடி மனிதர்கள், கோடி காரியங்கள், கோடி விளைவுகள். ஏராளமான மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த ' காரியங்கள்-காலம்-விளைவுகள் ' என்ற சங்கிலித்தொடர் ஒரு கோர்வையாக, பின்னிபினைந்து, ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த சிக்கலான சம்பவக் கோர்வைகளில் கூட ஒரு ஒழுங்கமைப்பு தெரிகிறதே? ( கமல் இதை படத்தில் கேயாஸ் தியரி என்கிறார்.)
இந்த ஒழுங்கமைப்பை நிர்வகிப்பது யார்?

கேள்வி நான்கு: எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளோ / சக்தியோ / ஒழுங்கமைப்போ - எதுவானாலும், ஒருபுறம் மனிதர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக்கொண்டும் - இன்னொருபுறம் நன்றாக வாழ்ந்து கொண்டுந்தான் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம், யார் பொறுப்பு?

கேள்வி ஐந்து: இல்லை, எல்லா சம்பவங்களும் தற்செயலாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா?

இவ்வாறு தீவிரமான் சிந்தனையை தூண்டும் கேள்விகளை தன் படத்தின் மூலம் பார்வையாளர்கள் முன் வைக்கிறார் கமல்ஹாசன். தசாவதாரம் படத்தின் மூலம் கமல் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பது தெரிகிறது. மேற்கூறப்பட்டுள்ள கேள்விகளையும், கேள்விக்கான பதில்களையும் ஓரளவு யோசித்து விட்டு படம் பார்த்தால்- கமல்ஹாசன் தசாவதாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதும், படத்தில் அவருடைய அசாத்திய உழைப்பும், பத்து கதாபாத்திரங்களைக் கொண்டு கமல் திரைக்கதையை கோர்த்த விதமும், கதையின் ஊடாக வசனங்களில் வரும் ரசிக்கத்தக்க ஹாஸ்ய உணர்வும் - தெளிவாக விளங்கும்.

தசாவதாரம் படம் ஆஸ்கார் விருதுக்கே தகுதியானதுதான். ஆனால் கொடுக்க மாட்டார்கள். தெய்வ, அதெய்வ நம்பிக்கைகளை பாரபட்சமில்லாமல், ஒருசேர அலசி ஆராயும் இப்படத்தை நமது தேசிய விருது கமிட்டியே புரிந்துகொள்வது கடினம். பின்பு எப்படி ஆஸ்கார் கமிட்டி புரிந்து கொள்ளும்? எனவே நம்முடைய உலக நாயகனுக்கு, ரசிகர்களின் ஆஸ்காரே போதும்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை போன்ற ஒருசில குறைகள் இருந்தாலும், கமல்ஹாசனின் தசாவதாரம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்று துணிந்து சொல்லலாம்.

Friday, August 20, 2010

திருவனந்தபுரம் - ஒரு மறக்க முடியாத நகரம்!திருவனந்தபுரம் இந்தியாவின் தென்கோடியிலுள்ள எழில் மிகுந்த ஒரு சிறிய நகரம். நாகர்கோயிலிலிருந்து இரண்டுமணி நேர பயணம். இருமுறை சென்றுள்ளேன். மல்டி நேஷனல் கம்பெனிகள் இன்னும் ஊரை சிதைக்காமல் விட்டுவைத்திருக்கிறார்கள்.

பச்சை பசேலென்ற தென்னந்தோப்புகள், ஏறி இறங்கும் சிறு மலைபோன்ற பாதைகள் (பெண்கள் அல்ல!), மிதமான தட்பவெப்பம், கோவளம் பீச், பத்மநாப சுவாமி கோயில், பத்மநாபபுர அரண்மனை (வருஷம் பதினாறு இங்கேதான் எடுத்தார்கள்) இவைபோன்ற அம்சங்கள் நிரம்பிய ஊர்தான் திருவனந்தபுரம்.

கோவளம் கடற்கரை, நமது மெரீனா கடற்கரை போல் அல்ல. சிறியதுதான். ஆனால் சுத்தமானது. மெரீனாவில் மணல் குப்பைகள் நிரம்பியும், கடல்நீரானது சாக்கடை தண்ணீர் கலந்து, செம்மண் கலரில் காணப்படும். கோவளம் பீச்சிலோ மணல் வெள்ளை நிறத்தில் சுத்தமாகவும், கடல்நீர் தூய்மையான நீல நிறத்திலும் காணப்படும். அருகில் ஆங்காங்கு சிறு குன்றுகளில் தென்னை மரங்களும், நடுவில் ஹோட்டல் ரிசார்ட்டுகளும் காணப்பட்டன. அழகாக இருந்தது. அதில் ஒரு ரிசார்ட்டில் கமல்ஹாசன் வழக்கமாக வந்து தங்குவார் என யாரோ ஒருவர் கூறினார். கடற்கரைக்கு நுழையும் இடத்தில், ஒரு கடையில் புத்தர் சிலைகள் விற்றுக்கொண்டிருந்தார்கள். எதிர்புறம் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை இருந்தது.

பத்மநாப சுவாமி கோயிலை சுற்றி, மாலை நேரத்தில் நடப்பதே அலாதியான அனுபவம். அதனுடன் ஒரு தேநீர் அருந்தியது மறக்க முடியாத அனுபவம்.

கேரளா பெண்களை பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறாவிட்டால் இந்த எழுத்து நிறைவடையாது. அஞ்சனம் தீட்டிய அழகு கண்கள், கொஞ்சம் எண்ணெய் பூசியது போன்ற முகம், சுருண்ட கேசம், கொஞ்சும் மலையாள மொழி. ஒரு கடைக்குள் நுழைந்து , எனக்குத்தெரிந்த மலையாளத்தில், இந்தப்பொருள் என்ன விலை என கடைக்கார பெண்ணிடம் கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கு தமிழ் தெரியாது' என்று கூறினார். அப்படியே திரும்பி வந்துவிட்டேன் !

Thursday, August 19, 2010

என்னுடைய அடுத்த பதிவுகள்...

இன்னும் ஓரிரு நாட்களில் ' தசாவதாரம்' படத்தை பற்றிய ஒருசிறு விளக்கத்தையும், தமிழ்மொழியின் 'ழ' - வின் தனிச்சிறப்பு பற்றியும், திருவனந்தபுரம் ஊரைப்பற்றிய என் அனுபவத்தையும் அடுத்தடுத்த பதிவுகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லிங்கேஸ்வரன்,

மொழியியலில் நிறைய காலியிடம் இருக்கிறது!


எனது நண்பர் பிரதீப்குமார், ஒரு மென்பொருள் எஞ்சினியராக பெங்களூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு நாலைந்து மொழிகளின் எழுத்து வடிவம் நன்றாக தெரியும். அவரின் பொழுதுபோக்கே மொழிகளை ஆராய்வது. ஒருநாள் நானும், பிரதீப்பும் எழுத்து வடிவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது பிரதீப் சில சுவாரசியமான விஷயங்களை கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் பல்வேறு மொழிகளின் சொல் அமைப்புகளை பற்றி ஒரு சிறிய கலந்தாய்வு செய்தோம். மிக ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. முடிவில், இருவரும் சேர்ந்து மொழியியலில் ஒரு ஆராய்ச்சி செய்து வெளியிடலாம் என திட்டம் போட்டுள்ளோம். அதிலிருந்து ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒன்று, சித்திர எழுத்துக்களிருந்து பிராமி எழுத்துக்களும், பிராமியிலிருந்து தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கிளைகளாக பிரிந்தன எனவும் தெரியவந்தது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவிலுள்ள அனைத்து மொழி எழுத்து வடிவங்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஒரே வியப்பு. அனைத்து வடிவங்களும் பிராமி எழுத்துக்களிலிருந்து சிறுசிறு மாற்றங்களை பெற்று உருவாகியுள்ளன என்பது தெளிவாக தெரிந்தது. சிங்கள சொல்வடிவம் கூட பிராமியிலிருந்து உருவாகிஉள்ளது எனத்தெரிகிறது. நான் கூறும் மேற்கண்ட கூற்றுகளை யாரும் மறுக்கும் முன் , ஒரு சிறு வேலை செய்துவிட்டு மறுக்கவும். பிராமி வடிவம், அனைத்து இந்திய எழுத்து வடிவங்கள், சிங்கள எழுத்து வடிவம் இவைற்றையெல்லாம் ஒன்றாக வைத்துக்கொண்டு பார்க்கவும். மிகவும் நுட்பமாக ஆராய்ந்தால் மட்டுமே, பிராமியிலிருந்து பிற எழுத்து வடிவங்கள் எவ்வாறு பரிணாமம் அடைந்தன என புரியும். ஏனெனில், ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்தவர்களின் மனநிலைக்கு தக்கவாறும், அந்தந்த கலாச்சாரத்திற்கு தக்கவாறும்- மேலும் வெவ்வேறு காலகட்டத்திலும் இந்த மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டுள்ளன.
இரண்டு, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலிருந்தும் ஏராளமான சொற்கள் ஆங்கிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. உதாரணமாக, பாதை என்ற சொல்லில் இருந்து, பாத் (வழி) என்ற ஆங்கில சொல்லும், தேதி என்ற சொல்லில் இருந்து டேட் என்ற ஆங்கில சொல்லும், அரிசி என்ற சொல்லில் இருந்து ரைஸ் ( ரிசி - ரைஸ், ஸ்பெல்லிங்கை கவனிக்கவும்), நோட்டம் என்ற சொல்லில் இருந்து நோட் ( பொருள்: கவனித்தல்) என்ற ஆங்கில சொல்லும், உருண்டை என்ற சொல்லில் இருந்து , ரவுண்டு என்ற ஆங்கில சொல்லும் உருமாறி இடம்பெயர்ந்துள்ளன. தமிழ் சமஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கே இப்படி என்றால் , உலகில் செம்மொழிகள் மொத்தம் ஐந்தோ, ஏழோ உள்ளன.
செம்மொழிகளில் மட்டும் இருந்து ஏராளமான சொற்களை கடன் வாங்கி ஆங்கிலமொழி தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது என யூகித்தோம்.
மூன்று, எந்த ஒரு மொழியும் சாஸ்வதம் இல்லை. காலநதியில் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற எழுத்து / பேச்சு வடிவம் போல ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படியே இல்லை. இன்றுள்ள எழுத்து / பேச்சு வடிவம் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் கழித்து அப்படியே இருக்க போவதில்லை. அந்தந்த காலகட்டத்திற்கு உரிய சமூக, பொருளாதார, கலாசார, உளவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த ஒரு மொழியும் உருமாற்றம் பெற்றுக்கொண்டே வருகிறது. இன்னும் சில்லாயிரம் வருடங்களுக்கு பிறகு,
உலகிலுள்ள அனைத்து மொழிகளும் ஒன்றாகி, உருகி இணைந்து, ஒரே மொழியாகவே காட்சியளிக்கும் என்பதே என் யூகம்.
இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துக்களெல்லாம் முற்றிலும் உண்மை என கூறி விட முடியாது. நீண்ட ஆராய்ச்சிக்கு பின்தான் உண்மை தெரியவரும்; ஏற்றுக்கொள்ளவும்படும். இவ்வாறு மொழியியலில் ஆராய்ச்சிக்கு நிறைய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.Wednesday, August 18, 2010

இயேசுநாதரின் 'நான் கடவுள்' !


தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில்
அவர்கள் இறைவனை காண்பர்.

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னை கைவிடுவதுமில்லை.

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே நான் உன் தேவன்.

பைபிளில் காணப்படும் இந்த புகழ்பெற்ற வாசகங்கள் பெரும்பாலும் அனைத்து சர்ச்சுகளிலும், கிறிஸ்தவ பள்ளி சுவர்களிலும் எழுதப்பட்டிருக்கும். சில வருடங்கள் முன்பு எனது அத்தைப்பெண் ஒரு கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். அக்கல்லூரி அருகில் ஒரு சர்ச்சு இருந்தது. அங்கும் மேற்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. சிலசமயங்களில், நான் அந்த கலைக்கல்லூரி அருகே நீண்டநேரம் காத்திருக்க நேரிடும். எனவே அந்த மூன்று வாக்கியங்களும் மனப்பாடமே ஆகியிருந்தன. ஆனால் ஒருபோதும், உன்னதமான அவ்வாக்கியங்களின் அர்த்தத்தை நான் யோசித்ததே இல்லை.

பின்பு சிலவருடங்களில், வேதாத்திரி மகரிஷி அவர்களின் 'பிரம்ம ஞான தத்துவத்தை' ஆழ்ந்து படிக்கும் வாய்ப்புகிட்டியது. அப்போதுதான், பைபிளில் காணப்படும் புகழ்பெற்ற அந்த வாசகங்களின் உண்மையான பொருள் எனக்கு விளங்கியது. அவைகளின் பொருள் இதுதான்:
பொதுவாக மனிதன் சிந்திக்கிறான்; செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். சிந்திக்காமலும் செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். மனிதன் அடையும் அத்தனை அனுபவங்களும் அவன் மனதை ஒரு போர்வைபோல் மூடிக்கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை ஓட்டங்களில் சுயநலம், பேராசை, காமவெறி, பிறரை தாழ்வாக மதித்தல், பிறர் மனம் புண்படும்படி பேசுதல், பொறாமை, அதிகார மமதை, அடுத்தவர் உழைப்பு/பணத்தை சுரண்டுதல் போன்ற முரணான எண்ணங்களே காணப்படுகின்றன. மனிதமனமே அழுக்கடைந்து, இருண்ட குகை போலத்தான் காட்சியளிக்கிறது.
இந்த மனமாசுக்கள் எப்போதுமே உண்மையை உணரவிடாமல் தடுக்கின்றன. மாசுக்கலானது, படிப்படியாக நீங்கி, உள்ளம் முழுத்தூய்மை பெறும்போது மனதின் அடித்தளமாக விளங்கும் இறைதரிசனம் மனிதனுக்கு உள்ளுணர்வாக கிட்டுகிறது. எல்லையற்ற மெய்ப்பொருளின் ஒரு துளியாகவே மனிதன் தன்னை உணர்ந்துகொள்கிறான். எனவே இறைவன் மனிதனை விட்டு விலகுவதுமில்லை; கைவிடுவதுமில்லை. உள்ளத்தூயமையே
இங்கு முக்கியம். உள்ளம் சுத்தமானால், செயல்களும் சுத்தமாகி விடும் அல்லவா? சுருங்க கூறுமிடத்து, தூய உள்ளம் பெற்றவன் , இறைவனை தனது உள்ளத்திலேயே தரிசிப்பான் என்பது பொருள்.
திருவள்ளுவரின்,
ஐயப் படாது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

Tuesday, August 17, 2010

நானோ டெக்னாலாஜி - ஒரு வியத்தகு தொழில்நுட்பம்.
பி.டெக் (நானோ டெக்னாலஜி), எம்.டெக் (நானோ டெக்னாலஜி ), நானோ சயின்ஸ் போன்ற படிப்புகள் வழங்கப்படுவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் பார்த்துவந்தேன். முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் ஆங்காங்கு நானோ டெக்னாலஜி என்ற வார்த்தையை கூறிவந்தார்.

சரி என்னதான் அது...என தெரிந்து கொள்ளலாமே என்று ' வையக விரிவு வலையை ' அலசினேன். சில அடிப்படை விவரணைகளும், நானோவின் பயன்பாடுகள் பற்றியும் சில தகவல்கள் கிடைத்தன. ஆனால் நிஜமாக ஒன்றுமே புரியவில்லை.


பிறகு சில மாதங்கள் கழித்து, மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் 'உயிர்மை' புத்தக ஸ்டாலில் , எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய 'நானோ டெக்னாலஜி' என்ற பெயரிட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. அப்படியே அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். (காசு கொடுத்துதான் !).


அப்புத்தகத்தை படித்தபின் மங்கலாக தெரிந்த நானோ டெக்னாலஜி சற்று பிரகாசமானது. அதில் , நானோ டெக்னாலஜியின் அடிப்படை விஷயங்கள், அதன் பயன்பாடுகள், இத்துறையில் நடைபெற்று வரும் ஆராய்சிகள் முன்னேற்றங்கள் ஆகியவற்றை பற்றி சுஜாதா ஓரளவு விரிவாக அலசியிருந்தார். தமிழில் நானோ டெக்னாலஜி பற்றிய முதல் புத்தகம் இது , சுஜாதாவினுடையது.


நான் நானோ டெக்னாலஜி பற்றி என்னளவில் அறிந்துகொண்ட விஷயங்கள் இவை:

அணு அளவில் மிகச்சிறிய பொருள்களை / கருவிகளை வடிவமைத்து நமக்கு வேண்டிய காரியங்களை செய்துகொள்வது. ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரில் ஒரு கோடியில் ஒரு பாகம். ஆனால் இந்த அளவு இன்னும் வரவில்லை, இருநூறு நானோ மீட்டர் அளவு கருவிகளை செய்திருக்கிறார்கள். நானோ டெக்கின் இறுதி நோக்கம் , எலெக்ட்ரான் வரை சென்று அந்த எலெக்ட்ரானை நம்மிஷ்டப்படி ஆட்டுவிப்பது. அவற்றை ப்ரோக்ராம் செய்து சிலபல வேலைகளை செய்விப்பது. நானோ டெக்னாலஜியின் ஒருசில பயன்பாடுகளை கூறினால் புரிந்துகொள்வது சற்று எளிது.


நானோ பாட்டுகள் : நானோ துகள்கள் நம் உடலுக்குள் சென்று மருந்தை செலுத்தி நோயை குணமாக்குவது, புற்றுநோய் செல்களை அழிப்பது , தேய்ந்துபோன செல்களை சரிசெய்வது போன்றவை.


கார்பன் நானோ டியுப்கள்: நானோ அளவிலான இத்தகைய கார்பன் திரிகளை பெயின்ட்டில் கலந்து அடித்தால் கிச்சென ஒட்டிக்கொள்ளுமாம். நுண்ணிய

எலெக்ட்ரானிக் பாகங்களை இணைக்க கார்பன் திரிகள் பயன்படுகின்றன.

இவற்றின் பயன்பாடுகள் இன்னும் அதிகமாம்.


உலோகங்கள் : இரும்பை விட வலிமையான நானோ உலோகங்கள்.


கம்ப்யுட்டர்: எதிர்காலத்தில் நூறுகோடி நுட்பமான கணினி பிராசசர்களை தயாரிக்கலாம்.


சோலார் செல்களின் ஆற்றலை நானோ நுட்பம் மூலம் அதிகமாக்குவது, கருவிகளை உற்பத்தி செய்ய மூலக்கூறு மெசின்களை பயன்படுத்துவது என நானோ டெக்னாலஜியின் பயன்பாடுகள் விரிகிறது.


நானோ துறையானது , பயலாஜி , உலோகவியில், வேதியல், ப்ரோக்ராமிங் என பலதுறை புலமைகளை தனதாக்கி பயன்படுத்திக்கொள்கிறது.


சுஜாதா தனது நூலில் வியந்து இவ்வாறு கூறுகிறார்: வியத்தகு நானோ இயலானது தனது உச்சத்தை எட்டும்போது நாம் கடவுளின் அருகில் சென்றுவிடுவோம்.


அறிவியல் ஆர்வலர்கள் , சுஜாதாவின் மேற்கண்ட புத்தகத்தை படித்துவிட்டு பின் , நானோ சம்பந்தமான ஆங்கில நூல்களுக்கு முன்னேறினால் நானோ இயலை பற்றி தெளிவாக புரிந்துகொள்ளலாம்.


கோவை அண்ணா பல்கலைகழகத்தில் இந்த மாதமோ, அடுத்த மாதமோ நானோ டெக்னாலாஜி பற்றி ஒரு ஆய்வுக்கருத்தரங்கம் நடக்கிறது. விருப்பமும், முயற்சியும் உள்ளவர்கள் அங்கு ஆராய்ச்சிக்கட்டுரை கூட சமர்ப்பிக்கலாம்.Monday, August 16, 2010

மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி - தமிழக முதல்வர் கலைஞர் புகழாரம் !

ஆகஸ்ட் பதினான்காம் தேதி சென்னையில் 'வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூறாவது ஜெயந்தி விழா மற்றும் அவரது நினைவு தபால்தலை வெளியீட்டு விழா ' தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது .

கலைஞர் பேசுகையில் ' ராமலிங்க அடிகள் அடியொட்டி - தானும் வாழ்ந்து , மற்றவர்களையும் வாழவைக்கும் வண்ணம் உயர்ந்த போதனைகளை எடுத்துக்கூறியவர்' மாமுனிவர் வேதாத்திரி மகரிஷி என புகழாரம் சூட்டினார்.

மேலும் ' நட்ட கல்லும் பேசுமோ , நாதன் உள்ளிருக்கையிலே .....' என்ற சித்தர் சிவவாக்கியர் பாடலை குறிப்பிட்ட கலைஞர் , ' கடவுள் வேறு, மனிதன் வேறு அல்ல. கடவுள் மனிதனுக்குள்ளேயே உறைந்துள்ளார். எனவே மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து , அன்பு செய்யுங்கள் போன்ற உயர்ந்த அறிவுரைகளை வழங்கியவர் வேதாத்திரி மகரிஷி எனக்குறிப்பிட்டார்.

கவியரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், நடிகர் சிவகுமார், ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு மகரிஷி நினைவு தபால்தலையை வெளியிட்டது.

தனிமனித அமைதியில் துவங்கி , பரந்து விரிந்து உலக அமைதி மலரவேண்டும் என்ற நோக்கில் , வேதாத்திரி மகரிஷி 'உலக சமுதாய சேவா சங்கத்தை ' நிறுவினார். கடந்த ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாக உலக அமைதிக்கான அடிப்படைக்கொள்கைகளையும் , யோகப்பற்சிகளையும் பரப்பி வந்த மகரிஷி அவர்கள் தனது தொண்ணூற்றி ஐந்தாம் வயதில் மகாசமாதி அடைந்தார்.
ஆனால், தற்போது 'வேதாத்திரிய தத்துவத்தை ' - தமிழகத்தில் ஏறக்குறைய பத்து பல்கலைகழகங்கள் , டிப்ளமோ / இளங்கலை / முதுகலை / ஆராய்ச்சி படிப்புகளாக வழங்கிவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள் இப்படிப்பை படித்தும், படித்து முடித்தும் வருகிறார்கள். இது வேதாத்திரிய தத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இந்த தருணத்தில் , சென்னையில் நடைபெற்ற மகரிஷியின் ஜெயந்தி விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

Sunday, August 15, 2010

ரஜினிகாந்த் உண்மையான சூப்பர் ஸ்டார் ஆவது எப்போது?

ரஜினிகாந்த் தன்னுடைய முத்து படம் முதல் தற்போது நடித்து முடித்திருக்கும் யந்திரன் படம் வரை அவர் தொடர்ச்சியாக நடிக்கும் எந்த படத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இப்படங்களில் அவர் நடிக்கவே இல்லை. சும்மாதான் வந்து போகிறார்.

அவருடைய 'புவனா ஒரு கேள்விக்குறி , எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, இளமை ஊஞ்சலாடுகிறது, படிக்காதவன், நல்லவனுக்கு நல்லவன் ...' இது போன்ற இன்னும் பலபடங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வெளியான பாட்ஷா படத்தில் தன் தங்கைக்காக மன்றாடும் காட்சியில் அவருடைய பழைய நடிப்பை பார்க்கலாம்.

ஒரு நண்பனாக, கணவனாக, தந்தையாக, ஏழையாக, பணக்காரனாக, சாதாரண மனிதனாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் நிற்பவை.
இயல்பான நடிப்பை, தங்குதடையின்றி வெளிப்படுத்தியிருப்பார். நடிப்பு போலவே இருக்காது. அவ்வளவு யதார்த்தமாக இருக்கும்.

நான் இவற்றையெல்லாம் கூற ஒரு முக்கிய காரணம் உண்டு, அது என்னவெனில், நடிகர் ரஜினிகாந்திற்கு இயற்கையாக அமைந்த முக அமைப்பே, உடல் அமைப்பே - இயல்பான, மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்த ஏற்றவாறு அமைந்துள்ளதே காரணம். இது கடவுள் அவருக்கு தந்த வரப்பிரசாதம் எனலாம்.

இதையுணர்ந்து ரஜினிகாந்த் தன் பாதையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் -
அமிதாப், மோகன்லால், மம்மூட்டி இந்த வரிசையில் அமிதாப்புக்கு முன்னோ, பின்னோ ஒரு இடத்தை பிடிக்கலாம். ஏன்...இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் (!) ஆகிவிடலாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறினார், ரஜினிக்கு அமிதாப் பச்சனை மிஞ்சும் திறமையும், தகுதியும் உண்டு என.

Friday, August 13, 2010

ஞானிகள் சில குறிப்புகள்.

ஞானிகளில் மூன்று வகை உண்டு. மக்கள் இந்த துறையில் சற்று அப்பாவிகளாக இருப்பதால் இதை எழுதுகிறேன். உஷாராக இருந்து தப்பித்து கொள்ளவும்.

முதல் வகை: இவர்கள் ஞானிகளே அல்லர். சுத்த அயோக்கியர்கள். ஞானிகள் என்ற போர்வையில் திரியும் இவர்கள் குறிவைப்பது பணம், உல்லாசம் மற்றும் பெண்போகம். பெண்கள் இவர்களிடம் மாட்டினால் தொலைந்தார்கள்.
சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள். வசியப்படுத்தும் பேச்சு பேசுவார்கள்.
இனிக்க இனிக்க பேசுவார்கள்.
உழைக்க மனமில்லாமல், சோம்பேறிகளாய் ஞானி வேடம் போட்டவர்கள் கடைசியில் மானம் அழிந்து வாழ்வு சீரழிபவர்கள்.

இரண்டாம் வகை: இந்த வகையினர் நல்லவர்தாம். ஏதேனும் ஒரு குருவிடமோ அல்லது எதோ ஒரு புத்தகத்தை படித்தோ யோகா-தியான முறைகளை கற்றவர்கள் . இவர்களிடம் என்ன பிரச்சினை எனில் , ஆர்வக் கோளாறால் மணிகணக்கில் தியானம் செய்வார்கள், கடுமையாக பிராயாணம பயிற்சி செய்வார்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அல்லது அரைகுறை குருக்களிடம் கற்பது ஆகியவற்றால் இவ்வாறு நேர்கிறது. ஆனால் விளைவு விபரீதமானது. மூளையில் ஆக்சிஜென் பற்றாக்குறை, கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தல் , செரடோனின்-டோபமைன் போன்ற வேதியல் சமாச்சாரங்கள் கூடுதல் குறைவு போன்ற நிலைமைகளால் ஒருவித பரவசநிலை பயிற்சியாளருக்கு உண்டாகிறது. ஐயோ...பரிதாபம்! இந்நிலைமையை இவர்கள் பேரின்ப நிலை என கருதிக்கொண்டு தாங்கள் ஞானம் அடைந்து விட்டதாகவும், தங்களை ஞானிகள்-சித்தர்கள் எனவும் தவறாக எண்ணிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு ஆண்ட்டி-டிப்ரஷன் மாத்திரைகளோ , குறைந்த டோஸில் ஆண்ட்டி-சைக்கொடிக் மாத்திரைகளோ கொடுத்தால் நார்மலான மனிதர்களாக மாறிவிடுவார்கள் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். டாக்டர் . சரவணகுமார் , டாக்டர். ஷாலினி போன்றோர் மேற்கண்ட
பரிதாப ஞானிகள் சிக்கினால், குணப்படுத்தி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாம் வகை: இவர்களே நாம் தேடும் உண்மையான ஞானிகள். முறையாக யோகா-தியான பயிற்சியை செய்து, பாவச்செயல்களில் இருந்து விடுபட்டு , உள்ளத்தூய்மை பெற்று , கடமையிலிருந்து வழுவாமல் (முடிந்தால் இல்லறத்திலிருந்து), அறிவில் முழுமை பெற்று ஞானம் அடைந்தவர்கள்.
யோசிக்கவே வேண்டாம் இவர்களை அடையாளம் கண்டு விட்டால். இவர்களே ஞானிகள், சித்தர்கள், குருமார்கள். இவர்களின் பொற்பாதங்களை சரணடைந்து விட வேண்டியதுதான்.


நண்பர்களும், தோழிகளும் இக்கட்டுரையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Thursday, August 12, 2010

மதராசபட்டினம் - மீண்டும் ஒரு காவியம்.

நேர்த்தியான திரைக்கதை, அழகான கதைக்களம், தென்றல்போல் வருடும் இசை, அலங்காரம் ஆர்ப்பாட்டம் இல்லாத வசனங்கள் , மிகையற்ற அபாரமான நடிப்பு, எளிமையான கலை காட்சியமைப்புகள் - இவை அனைத்தும் சேர்ந்து மதராசபட்டினத்தை ஒரு காவியமாக்கியுள்ளன.

எமி ஜாக்சனின் வயதான பாத்திரத்தில் ஒரு பாட்டி வருகிறாரே....நடிப்பு
அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சங்கூட மிகையில்லாத நடிப்பு.

எமி ஜாக்சனின் நடிப்பு....மிகப்பொருத்தமான முகபாவங்களை காட்டி அசத்தி விட்டார். இவர் அழகில் மட்டுமல்ல , நடிப்பிலும் உள்ளம் கொள்ளை போகிறது.

ஆர்யாவும் தன் பங்கிற்கு கலக்கி விட்டார்.

காதலுக்கு மரியாதை படத்திற்கு பிறகு என்னை கவர்ந்த இதமான ஒரு காதல் படம். காதலுக்கு மரியாதையை மூன்று முறை பார்த்தேன். இந்த படத்தை இரண்டு தடவை பார்த்து விட்டேன். மூன்றாவது முறை செல்ல வேண்டும்.

மொத்தத்தில், மதராசபட்டினம் ஓர் இனிமையான அனுபவம்.

பின்குறிப்பு: காதல் கண்ணை மறைத்து விட்டதால் நிறைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தன. குறைகள் தெரியவே இல்லை.

இசைஞானி இளையராஜா.

இளையராஜா இசையின் அருமை பெருமைகளை நான் சொல்ல வேண்டியதில்லை. பலபேர் அவர் இசையை டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இருந்தாலும் , இளையராஜா ரசிகன் என்ற முறையில் ஓரிரு சிறப்புகளை கூறி முடிக்கிறேன்.

ஒரு படத்தில் ஒரு காட்சி அல்லது ஒரு சூழ்நிலை உருவாகிறது. அதில் ஒரு
உணர்வு வெளிப்படுகிறது. அந்த உணர்வை அப்படியே இசையாக மாற்றம் செய்தால்- வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வேலையை நூற்றுக்கு நூறு கச்சிதமாக செய்பவர்தான் இசைஞானி இளையராஜா.
உதாரணமாக ஓராயிரம் பாடல்களை கூறலாம்.

மற்றுமொரு சிறப்பு என்னவெனில், ஒரே பாடலில் இருவித உணர்வுகளை அழகாக, உறுத்தாமல் சேர்த்து உருவாக்குவதில் இளையராஜாவுக்கு நிகர் அவரேதான்.

உதாரணமாக, தர்மத்தின் தலைவன் படத்தில் வரும் 'தென்மதுரை வைகை நதி...'
பாடலில் ஒரே ராகத்தில் சகோதர உணர்வும், காதலியை நோக்கி பாடும் உணர்வும் அழகாக பொருந்தி வரும். அந்த பாடலை சற்று கவனித்து
கேட்கும் அனைவரையும் கவரும் பாடல் அது.

அதேபோல், கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ,' பாசமுள்ள பாண்டியரே....'
பாடல் நாட்டுபுற பாடல் போல் துவங்கி இடையில் ரம்யாக்ரிஷ்ணன்-சரத்குமார் காதலை அப்படியே தொட்டுத்தவழ்ந்து கடைசியில் நாட்டுபுற பாடலாகவே முடியும். அதே படத்தில் , 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் அடுத்து நேரப்போகும் விபரீத்தயையும் , ரம்யாக்ரிஷ்ணனின் சோகத்தையும் சேர்ந்தே வெளிப்பத்தும்.

வருஷம் பதினாறு படத்தில் வரும் 'பொங்கலு பொங்கலு....' என்ற பாடலும் மேற்கண்ட பாடலை போன்றதே.

நிறைய பாடல்கள் இதேபோல் உள்ளன. சட்டென நினைவுக்கு வந்த பாடல்களை கூறியுள்ளேன். நண்பர்கள் கண்டறிந்து , இளையராஜா இசையில் மூழ்கி திளைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக முதல்வர் கலைஞர் , இளையராஜாவுக்கு வழங்கிய இசைஞானி என்ற பட்டம் எவ்வளவு பொருத்தமானது.

மீனாட்சி.

மதுரை மீனாட்சியம்மன் - சுருக்கமாக மீனாட்சி. பல பேருடைய இஷ்ட தெய்வம். நான் திருச்சி என்.ஐ.டி. யில் படித்த போது ஒரு சீனியர் பெண் , அவர் பெயர் மீனாட்சி. மதுரை மீனாட்சியை போலவே லட்சணமாக , அழகாக இருப்பார். ( அவரின் சொந்த ஊர் கூட மதுரைதான் !).

மீனாட்சி என்ற பெயரின் ஆதார சொல்லை நான் ஒருநாள் ஆராய்ந்த போது எனக்கு கிடைத்த விளக்கம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மீனாட்சி, பிரித்தால் மீன்+ஆட்சி என வருகிறது. அதாவது , நீரில் நீந்தும் மீன் அல்ல. வானில் நீந்தும் மீன். அதாவது கோள், கிரகம். நமது புழக்கத்தில் விண்மீன். திருமந்திரத்தில் ஒரு வரியில் மீன் என்ற சொல் கோள் என்ற பொருளில் வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள கோடானகோடி கோள்களையும் - அண்ட சராசரங்களையும், அதில் வாழும் உயிர்களையும் காத்து ஆட்சி செய்பவள் என்ற பொருளில் உருவாக்கி உள்ளார்கள். என்னே! நமது முன்னோர்களின் தமிழ் புலமை.

இதே போக்கில் ஆராய்ந்தால் , விசாலாட்சி என்ற சொல் நீக்கமற நிறைந்து ஆட்சி புரிபவள் என்றும், காமாட்சி என்றால் அகில உலகங்களையும், உயிர்களையும் அன்பினால் ஆள்பவள் எனப்பொருள் வருகிறது. அன்பே சிவம் ,
கடவுள் அன்பே வடிவானவன் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா?

இதே ரீதியில், அம்மன் பெயர்களை எல்லாம் யோசித்து பாருங்கள். சுவாரசியமாக , சிந்தனை விருந்தாக இருக்கும்.

Wednesday, August 11, 2010

திருவள்ளுவரும், பிரெஞ்சு கிஸ்ஸும்.

திருவள்ளுவருக்கும் ,பிரெஞ்சு முத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? அதற்கு முன் பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன என அறிய வேண்டும். அதை வெளிப்படையாக சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் அன்பர்களும்,நண்பர்களும் பிரெஞ்சு முத்தம் பற்றி இணைய தேடல் தளங்களில் அறிந்து கொள்ளவும்.

ஆய்த எழுத்து படத்தில் சூர்யா கூட ஒரு காட்சியில் ஈஷா தியொலிடம் பிரெஞ்சு முத்தம் கற்றுத்தருவாயா என கேட்பார்.
சரி...திருக்குறளுக்கு வருவோம்...அந்த குறள் பின்வருமாறு:

' பாலோடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி ஊறிய நீர் '.

வள்ளுவர் ஒரு தெய்வப்புலவர். இல்லற ஞானி . அறம், பொருள், இன்பம், வீடுபேறு என வழி காட்டியவர். ஆனால் காதல் உணர்வை கூட எவ்வளவு அனுபவித்து உணர்ந்து எழுதி உள்ளார் என்று பாருங்கள்.

மேற்கண்ட கருத்துக்களை யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம். அவை ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறத்தின் இனிமையேயாகும்.Tuesday, August 10, 2010

குடியிருந்த கோயில்.

குடியிருந்த கோயில் - அடிக்கடி கேள்விப்பட்ட வார்த்தைதான். ஆனால் இதன் பொருளைத்தான் சற்று நிதானித்து சிந்தித்திருக்க மாட்டோம்.

மனிதனாக பிறந்த அனைவரும் பிறக்கும் முன் எங்கு குடியிருந்தோம்?
அன்னையின் வயிற்றில்.

பெற்ற அன்னையை குடியிருந்த கோயில் என்று பெருமையுடனும் ,பாசத்துடனும் , தெய்வத்திற்கு ஒப்பாக வர்ணித்த ஒரே மொழி ,உலகிலேயே தமிழ் மொழியாகத்தான் இருக்கும்.

தமிழ் மொழியின் சிறப்பு இங்குதான் கம்பீரமாக வெளிப்படுகிறது.

சித்தர்களா பித்தர்களா ?

சித்தர்கள் பொதுவாக பித்தர்கள் என்றே மக்களால் கருதப்படுகின்றனர் . ஏதோ தாடி வளர்த்து கொண்டு ,பரதேசிபோல் உடை அணிந்து அலைபவர்கள் ,நோய்களுக்கு வைத்தியம் செய்பவர்கள் என நினைக்கப்படுகின்றனர் . ஆனால் உண்மை அதுவல்ல . சித்தர்கள் கீழ்க்கண்ட துறைகளில் ஆழ்ந்த அறிவும் ,மேதைமையும் பெற்றிருந்தனர். சித்தர்களின் ஆற்றலும் அறிவும் திகைப்பூட்டுபவை. பிரமிப்பில் ஆழ்த்துபவை. அவை பின்வருமாறு:

மருத்துவம் - அதாவது உடற்கூறு ,நோய்கள் மற்றும் என்ன நோய்க்கு என்ன மூலிகை என்ற விவரங்கள்.

வானசாஸ்திரம் - கோள்களின் சஞ்சாரம், அமைப்பு அதனால் மனிதனுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியான மாற்றங்கள் மற்றும் நோய்கள்.

ரசவாதம் - ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுதல். இதை மெட்டலர்ஜி என்று சொல்லலாம் அல்லவா?

உளவியல் - சித்தர்கள் மனித மனதை பற்றி மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மட்டும் அல்லாமல், நுட்மான உளவியல் உண்மைகளை அறிந்திருந்தனர் என்று கூறலாம். சித்தர்களின் மனோதத்துவ அறிவு பிரமிக்கத்தக்கது.

சமூக சீர்திருத்தம் - மூட நம்பிக்கைகளை சாடினார்கள். இறைவனோடு ஒன்றி இறைவழியில் நடக்க வலியுறுத்தினார்கள்.

மேலும் திருவள்ளுவர், போகர் போன்ற சித்தர்கள் கூறியுள்ள - அரசியல், பொருளாதாரம், இல்வாழ்க்கை , அறவுரைகள் மற்றும் காதல் கலை போன்றவற்றை பற்றி உரைத்துள்ள கருத்துக்கள் அரியவை, தேடக்கிடைக்காதவை. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை.

சிவவாக்கியர், தாயுமானவர், திருமூலர், ராமலிங்கர், தேரையர் மற்றும் வள்ளுவர் போன்றோரின் கவிகளை படித்து பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு உண்மை என புரியும்.

என் சிறிய அறிவுக்கு எட்டியவரை ,சித்தர்களை விஞ்ஞானிகள் என கூறலாம். அதற்கு மேலும் கூறலாம், வார்த்தை கிடைக்கவில்லை.


ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...