Monday, December 27, 2010

நீ நீலவானம்...
நீ நீலவானம்..
நான் முழுநிலவு போலே..
அருகில் இருந்தும்..
தழுவ முடியாத ஏக்கம்..
தினம்தினம் மெலிகின்ற தேகம்..
ஒருநாள் இரவுநேர மௌனம்..
இருவர் ஒருவராகிப் போனோம்..
நாம் கொண்ட உறவுக்கு சான்றாக
விண்மீன்கள் ஏராளம்.....!


- லிங்கேஸ்வரன்.

Friday, December 10, 2010

கண் சிமிட்டாமல்...

கண் சிமிட்டாமல் உன்னை
பார்க்க வேண்டும் என நினைத்தேன்...
ஆனால் இப்போது...
கண் சிமிட்டும் நேரம் கூட
உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க
ஆசைப்படுகிறேன்...!


- ஆண்டனி லோரத்.


Saturday, November 27, 2010

ஸ்பேஸ் - இன்னும் அவிழாத ரகசியம் !
மேகங்கள் இல்லாத ஒரு பௌர்ணமி வானில் அண்ணாந்து பார்த்தால் பிசிறில்லாத வட்ட நிலவும் , நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் சிதறிக் கிடப்பது தெரியும். நாம் நிற்குமிடத்தில் இருந்து அப்படியே பறந்து சென்று நிலவில் நிற்பதாக கற்பனை செய்து கொள்வோம். நிலவில் நின்று கொண்டு மேலேயும், கீழேயும், சுற்றியும் நோக்கினால் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் கண்ணுக்கு புலனாகும். ஒரு புறத்தில் பூமியும், மற்றொரு புறத்தில் நெருப்பு பிழம்பான சூரியனும் தெரியும். இப்போது, நிலவில் இருந்து மேல்நோக்கிய திசையில் பறந்து செல்வதாக கற்பனை செய்து கொண்டால் , எண்ணிலடங்காத நட்சத்திரங்களிடையே பயணம் செய்து கொண்டே போகலாம். இந்த நட்சத்திர கூட்டங்களிடையே என்ன இருக்கிறது என்றால் , வெளிதான் (ஸ்பேஸ்) இருக்கிறது.


மேலே காணப்படும் படமானது நமது சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கிரகங்களின் அசலான , செயற்கை கோளிலிருந்து எடுக்கப்பட்ட படமாகும். அதில் காணப்படும் கோள்கள் துல்லியமான வட்டவடிவிலும், இடையில் காணப்படும் வெளியானது தெள்ளத்தேளிவான தூய பளிங்கு போன்றும், கும்மிருட்டாகவும் கண்ணுக்கு தெரிகிறது. இந்த வெளியை தற்போது ஆராய்ச்சியாளர்கள் டார்க் மேட்டர், டார்க் எனர்ஜி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். நெடுங்காலமாக ஒன்றுமில்லாத சூன்யம், வெற்றிடம், வேக்குவம் என்று கருதப்பட்டு வந்த வெளியானது இப்போது கரும்பொருள், கருப்பு ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் , வெளியில் மிக மிக நுண்ணிய அதிர்வுகளும், சலனங்களும் தென்படுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், எவ்வளவு உயர்நுட்ப கருவிகளுக்கும், பரிசொதனி முறைகளுக்கும் - வெளியில் காணப்படும் சலன அதிர்வுகள் பிடிபடவில்லை.


ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் ஒரு சோதனை கூடத்தில், பூமிக்கடியில் இருபத்தேழு கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு ட்டன்னல் அமைத்து, அதற்குள் படுபயங்கரமான வேகத்தில் சிலபல எலெக்ட்ரான்களை ஒன்றோடொன்று மோத விட்டு , அந்நிகழ்வில் வெளிப்படும் அதிர்வு அல்லது அலைவீச்சில்- வெளியைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் செலவில் நூற்றுக்கக்கான பலநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உள்ளனர். வெளியில் புலப்படும் சலன அதிர்வுகளுக்கு காரணமாக ஒருவகையான, வினோதமான, மிக நுட்பமான துகள்கள் இருக்கலாமோ என விஞ்ஞானிகள் ஒரு யூகமாக கணிக்கிறார்கள். அந்த துகள்களுக்கு காட் பார்டிகில் என பெயரும் சூட்டியுள்ளார்கள். காட் பார்டிகில் என்பதை தமிழில் மொழி பெயர்த்தால் இறை துகள் என்று வருகிறது. ஆராய்ச்சியின் முடிவில் ஸ்பேஸ் அதன் ரகசிய முடிச்சுகள் அவிழும் என நம்பப்படுகிறது. அப்துல் கலாம் அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு, இது ஒரு உருப்படியான ஆராய்ச்சிதான் என்றும், இந்த ஆராய்ச்சி இறுதியில் பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த சில அதிமுக்கிய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.


சிலநூறு வருடங்களுக்கு முன்பு , வெளியில் ஈதர் எனப்படும் ஒருவகையான துகள்கள் சஞ்சரிக்கின்றன என்றும், அவையே வெளிச்ச அலைகளை கடத்தும் ஊடகமாக செயல்படுகின்றன என்று ஒரு கொள்கை நிலவியது. பின் அது போதுமான ஆதாரமில்லாததால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மிக ஆச்சரியம் , தற்போது அதே இடத்தில் விஞ்ஞானிகள் வந்து நிற்கிறார்கள் எனபதுதான்.

Saturday, November 20, 2010

வாழ்வு உண்மையா...?
நாம் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது, கனவானது நமக்கு உண்மை போலவே தெரிகிறது. விழித்தவுடன் தான் அது உண்மையல்ல வெறும் கனவு என்று நமக்கு புலப்படுகிறது. அதே போன்றே, புலன்களை இயக்கி, அதன் வழியே இன்ப-துன்ப அனுபவங்களை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும்போது வாழ்வு ஒரு கனவு; அது நிலையற்றது; மாயை என உணர முடிவதில்லை. மனமானது தியானத்தில் ஆழ்ந்து, ஆன்ம விழிப்புணர்வு பெற்று பிரபஞ்ச உணர்வுடன் லயமாகும்போதுதான் வாழ்க்கை ஒரு கனவு எனத் தெளிவாக உணர்ந்து கொள்கிறது.


- சுவாமி பரமஹம்ச யோகானந்தர்.

Wednesday, November 17, 2010

ஒரு நாள்...ஒரு கனவு !


ஒரு நாள்.....ஒரு கனவு...
அதை நான் மறக்கவும் முடியாது...
நிஜமாய் இனிக்கிறது...
இதுபோல் கனவொன்றும்...
கிடையாது...!

- கவிஞர். பழனி பாரதி.

Saturday, November 6, 2010

பிளாக் ஹோல்ஸ் - ஓர் எளிய அறிமுகம்.
தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து ஆகிய நாளிதழ்களில் பிளாக் ஹோல்ஸ் பற்றி அவ்வப்போது ஆராய்ச்சி துணுக்குகள் கட்டங்கட்டி வெளிவரும். பிளாக் ஹோல்ஸ் என்பது அடிக்கடி கேள்விப்பட்ட பெயர்தான் என்றாலும் அதைப் பற்றி ஓரளவாவது தெளிவாக அறிந்தவர்கள் சிலர்தாம். பிளாக் ஹோல்ஸ் கட்டுரை எழுதலாம் என எண்ணி விட்டு, எழுதாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இடையில் ஒருநாள், நானும் என் சினேகிதி பூர்ணாவும் காலேஜிற்கு மட்டம் போட்டுவிட்டு எந்திரன் படம் பார்க்க சென்று விட்டோம். அதில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராய் , ரஜினியிடம் ஒரு உரையாடலில் இப்படியா காதலிக்கு பரிசளிப்பீர்கள் என கோபமாக, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம் ' என்ற நூலை காட்டிக்கேட்பார். உலகப் புகழ்பெற்ற அந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், பிக் பெங் தியரி, பிளாக் ஹோல்ஸ், லைட் கோன்ஸ் ஆகியவற்றை பற்றி எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி விவரித்திருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்கை கூட, சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் கொண்டுவர முடியுமென்றால் அது, எழுத்துலக பிதாமகன் சுஜாதாவால் மட்டுமே முடியும். சுஜாதா என்கிற நிகர்நிலை பல்கலைகழகத்தில் பாடம் பயிலும் என்னைப்போன்ற மாணவனுக்கு எந்திரன் படம் பார்த்து ரொம்ப பெருமையாக இருந்தது.


பிளாக் ஹோல்சை தமிழில் கருங்குழிகள் அல்லது கருந்துளைகள் என்கிறார்கள். சிலர் அண்டப்பாழ் என மொழிபெயர்க்கிறார்கள். பிளாக் ஹோல்ஸ் என்ற தலைப்பானது அறிவியல் ஆர்வலர்களுக்கு எப்போதும் ஒரு வசீகரமான, புதிரான, இன்னும் சரியாக புலப்படாத, ஆர்வத்தை தூண்டும் ஒரு சப்ஜெக்டாகும். கடினம் போல் தோன்றினாலும் பிளாக் ஹோல்ஸ் புரிந்து கொள்வதற்கு எளிதான ஒன்றுதான்.


ஒரு மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான், மரிக்கிறான். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் எழுபது , என்பது ஆண்டுகள். அதைப்போன்றே, ஒரு நட்சத்திரமும் பலகோடி ஹைட்ரஜன் அணுக்கள் கூடி உருண்டை வடிவமான நெபுலாவாக பிறப்பெடுத்து, பல்லாயிரம் வருடங்கள் கழித்து நெருப்பு உருண்டையாகி - பின் வெள்ளைக் குள்ளன் (ஒயிட் ட்வார்ப்) - பழுப்புக் குள்ளன் - சிகப்பு அரக்கன் (ரெட் ஜியன்ட்) - என ஒவ்வொரு வடிவமாக மாற்றம் பெற்று உருமாறி, இறுதியில் காற்று போன பாலிதீன் பை ஒட்டிப்போவதுபோல் சுருங்கி இறுகி, சூப்பர் நோவா என்ற வடிவம் பெற்று கும்மிருட்டான பேரண்ட வெளியில் சிதைந்து, கரைந்து போகிறது. இவ்வாறு நடக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஜனன-மரண சரித்திரத்தில் கடைசியாக நட்சத்திரம் சுருங்கிபோகும் நிலையில் ஏற்படும் ஒரு நிகழ்வுதான் பிளாக் ஹோல்ஸ் என்ற ஓர் அற்புதமான, புதிரான வானியல் உண்மையாகும்.


ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் உத்தேசமாக ஆயிரம் கோடி ஆண்டுகள் என கணிக்கலாம். நட்சத்திரத்தின் ஆயுளோடு ஒப்பிடும்போது ஒரு மனிதனின் ஆயுள் மிகமிக அற்பமானது. மாபெரும் நமது பிரபஞ்சத்தோடு ஒப்புநோக்கும்போது - மனித உடலின் உயர, அகல, எடையை வைத்து கணக்கிட்டால் - மனித உருவம் சிறியதிலும் சிறியது; அற்பத்திலும் அற்பமானது. இது போன்ற வானியல் உண்மைகளையெல்லாம் அனைவரும் அறிய ஆர்வம் காட்டுவதுமில்லை; தெரிந்து கொள்வதுமில்லை. அதனால்தான் என்னவோ, வாழ்க்கை சாஸ்வதமானது என்பது போலவும், தான்தான் பெரியவன் என்பது போலவும் ஆட்டம் போடுகிறார்கள்.


இங்கே ஒரு முக்கியமான குறிப்பு, கிரகம் என்பதும் நட்சத்திரம் என்பதும் சூரியன் என்பதும் மூன்றும் ஒன்றுதான். கிரகம் என்பது பொதுவான பெயர். பரிணாம நிலைகளில் அந்தந்த கட்டத்தில் ஒவ்வொரு பெயரைக் கொண்டு அவை அழைக்கப்படுகின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்தான் நாம் பார்க்கும் சூரியன். வான வெளியில் சிதறிக்கிடக்கும் கோடானுகோடி நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியன்களே. பலகோடி தொலைவில் அவை இருப்பதால் அந்த சூரியன்கள் கண்சிமிட்டி கொண்டே இருப்பதைப்போல தெரிகிறது. இவற்றைத்தவிர விண்வெளியில் விண்கற்கள், எரிகற்கள் போன்றவையும்- தூசுக்கள் சேர்ந்து உருவான கொமெட் எனப்படும் வால்மீன்கள் போன்றவைகளும் விண்வெளியில் உலாவி வருகின்றன. இவை அனைத்தும் அவற்றுக்குரிய தாய் கிரகத்திலிருந்து பிட்டுக்கொண்டு தனியாக வந்தவை. இதுவரை கூறப்பட்ட செய்திகள், அவசியம் அறிய வேண்டிய அடிப்படை வானியல் சங்கதிகள்.பிளாக் ஹோல்ஸ் - ஓர் எளிய அறிமுகம் அடுத்த பதிவிலும் தொடர்கிறது.

Saturday, October 30, 2010

என் சமீபத்திய காதலுக்கு உதவிய நாலடியார்..
கண்கயல் எனும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம்ம சிறுசிரல்-பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிந்த கல்லா ஒன்புருவம்
கொட்டிய வில்வாக்கு அறிந்து.


சிறிய மீன்கொத்தி பறவையானது என் தலைவியின் கண்களை, கயல் மீன்கள் என் நினைத்து அவற்றை கொத்தி தின்ன வந்தது. அருகில் வந்தவுடன் அவளின் வளைந்து நெளிந்த அழகான புருவங்களை வில் என நினைத்து பயந்து பறந்தோடிவிட்டது.


நாலடியாரில் கடைசி பகுதியில் வரும் காமநுதலியல் என்ற தலைப்பில் உள்ள மேற்கண்ட பாடலை, ஒரு வெள்ளை தாளில் எழுதி, பலநாட்களாக கண்கள் இரண்டால் நான் பேசிக்கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து, நாம் காதலிக்கலாமா என்று கேட்டேன். நான் அவ்வாறு கொடுத்ததை தவறாக நினைக்காமல் பெருந்தன்மையோடு அவள் என்னிடம் பேச்சை தொடர்ந்தாள்.
முதலில், என்ன இது? என்றார். இது நாலடியாரில் உள்ள ஒரு செய்யுள் என்றேன். கவிதை நன்றாக இருக்கிறது என்றார். உங்களுக்காகதான் இதை தேடி எடுத்து எழுதினேன் என்றேன். அதற்கு அவள், உங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகம் என்று கூறி பேச்சை மாற்றினார். உங்கள் கண்கள்தான் என்னை இக்கவிதையை தேட வைத்தது என்றேன். மன்னிக்கவும் என்றார். சிலநிமிடங்கள் கழித்து.....நீங்கள் மிகவும் நல்லவர்.....உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.....உங்களைப்போல் ஒருவரை நான் பார்த்ததே இல்லை.....ஆனால் ஏற்கனவே நானும் இன்னொருவரும் காதலிக்கிறோம். அதனால் உங்கள் வேண்டுகோளை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.....உங்களுக்கு என்னை விட படித்த, பொருத்தமான பெண் கிடைப்பாள் என அன்பாக கூறினார்.


கிணத்தடியில் போட்ட கல்போல, மனதின் அடியில் படிந்து விட்ட அந்த எழிலோவியம் அடிக்கடி கனவில் வந்துகொண்டே இருந்தது. மெல்ல மெல்ல சிலநாட்களில் அது நின்று போனது.....ஆனால், எப்போதும் விரிந்திருக்கும் கருப்பு வெள்ளை நிற மலர்கள் போன்ற அவளின் கண்களையும், வெண்ணெய்யில் வழுக்கி செல்லும் லாவகமான நடையுடன் நினைத்தாலே இனிக்கும் அவளின் மென்மையான குரலையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. உங்கள் குரலைப்போல் ஒரு குரலை நான் இதுவரை கேட்டதே இல்லை.....அதை நான் மறக்கவே முடியாது என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மொபைல் கால் கட்டாகி விட்டது.
அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

Sunday, October 3, 2010

அடுத்த பதிவு...பிளாக் ஹோல்ஸ்.
என்னுடைய அடுத்த பதிவு பிளாக் ஹோல்ஸ் - ஓர் எளிய அறிமுகம்.

Friday, October 1, 2010

என்னைத் தவிர ஆண்கள் எல்லாம்...
என்னைத் தவிர
ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால்கூட
உன்னைத் தவிர
இன்னொரு பெண்ணை
உச்சி நிமிர்ந்து
பார்க்கவும் மாட்டேன்...!


- கவிப்பேரரசு வைரமுத்து.

Saturday, September 25, 2010

ரஜினி...கமல்...சித்தர்கள்...
ரஜினியின் ஆன்மீக நாட்டம் உலகறிந்தது. ஆனால் யாருக்கும் தெரியாத விஷயம் அவரது ஒரு படத்தைப் பற்றியது. சுவாமி பரமஹம்ச யோகானந்தர் என்பவர் வட இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமரிக்கா உட்பட பலநாடுகளில் கிரியா யோகத்தை பரப்பியவர். ' ஒரு யோகியின் சுயசரிதம் ' என்ற புகழ்பெற்ற ஆன்மீக நூலை எழுதியவர். திகைப்பு, பரவசம் என மாறி மாறி பலவித சிலிர்ப்பூட்டும் தகவல்கள் நிறைந்த நூல் அது. இன்றும் பரவலாக விற்பனையாகும் அந்நூல் உலகின் அனேக மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆன்மாவின் அடித்தளத்தை ஊடுருவும் வாசிப்பு என்று புகழுரை சூட்டப்பட்டது. சுவாமி யோகானந்தரின் வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து தனது இமேஜிற்கு ஏற்ப ஆங்காங்கு அலங்காரம் செய்து, கிளைமாக்சில் தன் சொந்தக்கதையையும் சேர்த்து, ரஜினி ஒரு படமாக எடுத்து நடித்தார். அந்தப் படம்தான் பாபா...! படம் வெற்றிகரமாக பிளாப் ஆனது.


கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தன் நூலகத்தில் சித்தர்கள் இருப்பதாக கூறினார். அதாவது சித்தர்களின் நூல்கள். கமலின் ரசிகனாகவும், சித்தர்கள் தத்துவத்தின் மீது பற்றுள்ளவனாகவும் இருக்கும் எனக்கு அவரின் இந்த ஒரு வாக்கியம் போதுமானதாக இருந்தது. கமல் தன்னுடையை பல படங்களில் சித்தர் பாடல்களை பயன்படுத்துவதாக தெரிந்தது. ஆளவந்தான் படத்தில் ' அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே....' என்ற பட்டினத்தார் பாடலையும், ' அன்பே சிவம் ' என்ற புகழ்பெற்ற திருமூலரின் வரிகளை ஒரு படத்தின் தலைப்பாகவும், உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக ' தாயுமானவன் ' என்றும் பயன்படுத்தியுள்ளார். குணா படம் கூட 'அபிராமி அந்தாதியை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என நண்பர் சரவணா ஒருமுறை கூறினார்.


' ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
நான் என்றிருந்து நலம் அழிந்தேன் பூரணமே. ' - என்று பட்டினத்தடிகளும்,
'அன்பே சிவம்' - என்று திருமூலரும், ' சுத்த அறிவான என் தெய்வமே ' என்று தாயுமானவரும் பாடியுள்ளார்கள். திருவள்ளுவர் ' அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள்...' என்கிறார். அன்பு என்பது ஒரு தூய உணர்வு. களங்கம் இல்லாதது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இசைந்து, அன்பு செலுத்தி வாழும்போது ' கடவுளெனும் எல்லையற்ற உணர்வுக்கடலோடு ஒன்றுபடுகிறார்கள். ' தெய்வம் என்பது எங்கோ தனியாக இல்லை. மனிதனில்தான் தெய்வம் அன்பாகவும், அறிவாகவும் உறைந்துள்ள்ளது. இவ்வாறு மனிதனில் தெய்வீகத் தன்மையை கண்டுணர்ந்து, மனிதனை மனிதனாக மதித்து வாழ வலியுறுத்தும் சித்தர்களின் தத்துவமே கமல்ஹாசனை கவர்ந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

Saturday, September 18, 2010

இதயம்...


நடிகர் முரளி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. நாம் பிரியம் வைத்திருப்பவர்கள், நம்முன் உயிர் உடல்களாக நிஜமாக உலாவி வந்தவர்கள் திடீரென இல்லை எனும்போது அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே பலநாட்களாகி விடுகிறது. வேதாத்திரி மகரிஷி, சுஜாதா, தென்கச்சி.கோ. சுவாமிநாதன் இவர்களின் மரணங்கள் எல்லாம் என்னை நேரடியாக தாக்கின. கல்லூரியில் படிக்கும்போது எங்கள் நெருங்கிய நண்பரின் தாயார் கடுமையான நோயால் தாக்கப்பட்டு காலமாகிவிட்டார். இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு இரவு ரூமில் அமர்ந்திருந்தோம். மாரியப்பனும் நானும் என் ரூமில் இருந்தோம். இருவரும் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தோம். திடீரென தன்னிச்சியாக என் மனதில் உதித்த ஒரு வாக்கியத்தை நான் கூறினேன். அது இதுதான்: ' இவ்வாறு நாம் அடிக்கடி சந்திக்கும் மரணங்கள்தான் வாழ்வின் நிலையாமையை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன...'.
சிந்திக்காமல் உள்ளுணர்வில் எழுந்த வார்த்தைகள் அவை. மாரியப்பன் மிகுந்த ஆமோதிப்புடன் ஆமாம் ஆமாம் என்பது போல் தலையசைத்தார்.
திருவள்ளுவர் நிலையாமையை பற்றி :
' நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. '
நேற்று சிறப்பாக வாழ்ந்தவன் இன்றில்லை எனும் பெருமை உடைய உலகிது என்பது பொருள்.
இன்னொரு திருக்குறள்:
' உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பதும் போலும் பிறப்பு.'
சாக்காடு என்றால் சாவு.
பிறக்கும் சமயம் எதுவும் யாரும் கொண்டு வருவதில்லை. போகும்போது எதுவும் கொண்டுபோகப் போவதில்லை. வாழ்வு முடியும்போது எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்ல வேண்டியதுதான். வாழும் காலத்தில் ஒவ்வொருவருக்கும் பிறருடைய ஒத்தாசையும், உதவியும், உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த உண்மைகளெல்லாம் யாருக்கும் தெரியாததல்ல. ஆனாலும் பெரும்பாலும் அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதை தவிர்த்து விடுகிறார்கள். ஏனெனில் மரணம் நெருங்கும் தருணம், நாம் உருவாக்கிக் கொண்ட அர்த்தங்கள், கொள்கைகள், பிடிவாதங்கள் அனைத்தும் தகர்ந்து விடுகின்றன. இவையெல்லாம் விரக்தியில் பேசுபவை அல்ல. இயற்கையாக நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகள். என்னைப் பொறுத்த வரையில், மரணத்தை ஒட்டி சிந்திக்கும்போதுதான் ஒரு மனிதன் மனதில் விழிப்புநிலை பெறுகிறான். நிலையாமையை சிந்திக்கும்போது, நுகர்பொருட்களின் மீதும் , உறவினர்களின் மீதும் நாம் வைத்திருக்கும் கடும்பற்று , மனதின் இறுக்கம் குறைகிறது. மனம் லேசாகிறது.
பரந்த மனப்பான்மை, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, விட்டு கொடுத்தல் போன்ற நற்குணங்கள் இயல்பாகவே மனித மனத்தில் மலர்கின்றன.
ஒருமுறை என் வீட்டின் முன்புறமுள்ள ரோட்டைக் கடந்து வர முயலும்போது, அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. வருகிறார்....வருகிறார் என்று சத்தம் கேட்டது. நான் ஓரமாக நின்றேன். சில நொடிகளில், ஒரு வேகமாக வந்து நின்றது. நடிகர் முரளி அந்த ஜீப்பில் சிலருடன் நின்று கொண்டிருந்தார். கடந்த லோக் சபா தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். தமிழின துரோகி..........என்று தமிழக அரசியல் தலைவர் ஒருவரை வசைபாடினார். நான் மிக அருகில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை.
முரளி நன்றாக தமிழ் பேசக்கூடியவர். ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இவர்களை போலல்லாமல் ஒழுங்காக தமிழ் பேசுவார். முரளி பெங்களுரை சேர்ந்தவர் என்று யாராவது சொன்னால்தான் தெரியும். இதயம் படம் வெளிவந்தபோது நான் சிறுவன். ஆனால் படம் முழுக்க சோகம் என்றும், படம் நன்றாக ஓடுகிறது என்றும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டது நினைவில் இருக்கிறது. வளர்ந்து வாலிபனான பிறகு, எங்களுக்கு இதயம் படத்தை மிகவும் பிடிக்க போதுமான காரணங்கள் இருந்தன. மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவனுக்கும், ஒரு அழகான (ஹீரா) பெண்ணுக்கும் இடையிலான காதல், இளையராஜாவின் இசையில் முத்தான மூன்று மேலடிக்கள் பிளஸ் இரண்டு உற்சாக பாடல்கள். இவை போதாதா?
அதர்மம் படத்தில் வரும், 'முத்து மணி.....முத்துமணி.....' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. வசீகரமான ராகத்தில் அமைந்த பாடல் அது.
முரளி ஒரு பேட்டியில் தான் காதலித்து மணந்த மனைவியுடன், திருமணத்திற்கு முன் பெங்களுரு தெருக்களில் பைக்கில் சுற்றியதாக கூறியிருந்தார். மலரும் நினைவுகள் போல், மகிழ்வோடு அதை பகிர்ந்து கொண்டிருந்தார். நான் பெங்களுரு செல்லும் போதெல்லாம் தனியாக தெருக்களில் நடந்து திரிவது வழக்கம். அப்போது முரளி இந்த தெருக்களில் தானே சுற்றியிருப்பார் என கட்டாயம் நினைவுக்கு வரும்.
வினாத் தாள் போல் இங்கே
கனாக் காணும் உள்ளம்.
விடை போல அங்கே
நடை போடும் காதல்.
மௌனம் பாதி...
மோகம் பாதி... - என்ற முரளியின் இனிய கானம் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

Tuesday, September 14, 2010

தவமாய் தவமிருந்து...
ஒரு நீண்ட
காதல் கதை
முடிவுற்றது
கல்யாணத்தில்.
இனிதாய்.....

Saturday, September 11, 2010

மீன்முள் வரைபடம் - சுருக்கமான அறிமுகம்.


மேனேஜ்மென்ட் எனப்படும் மேலாண்மை இயலில் ஜப்பானியர்களின் பங்கு குறிப்படத்தக்கது. குறிப்பாக தர மேலாண்மை எனப்படும் குவாலிட்டி மேனேஜ்மென்ட் துறையில் . கேயிசன் மேனேஜ்மென்ட், டோடல் குவாலிட்டி மேனேஜ்மென்ட், டோடல் ப்ரொடக்டிவிட்டி மெயிண்டனன்ஸ், ஜஸ்ட் இன் டைம் ப்ரொடக்சன் ( உடனடியாக உற்பத்தி செய்தல்) போன்றவை ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக உலாவரும் டெக்னிக்கல் பிலாசபிக்கள்.ஜப்பானில் தயாராகும் பொருட்கள் தரத்தில் பெரும்பாலும் நூல்பிடித்தாற்போல் சரியாகவே இருக்கும். தொழில்நுட்பத்தோடு சேர்த்து தரத்தையும் பேணுவதில் ஜப்பானியர்கள் மிகுந்த கவனம் செலுத்துபவர்கள். டகுச்சி எனும் ஒரு ஜப்பானிய எஞ்சினியர் தர மேலாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதாவது, ஒரு அடி உயரமும், பத்து சென்டிமீட்டர் சுற்றளவும் உள்ள ஒரு இரும்பு உருளையை தயாரிக்க, இரும்பை உருக்கி, அச்சில் ஊற்றி, பின் குளிர வைத்து சூடு ஆறியவுடன் வெளியில் எடுக்க வேண்டும். சூடு என்றால் ஐநூறு, அறுநூறு டிகிரி செல்சியஸ். வெளியில் எடுத்தவுடன் அளந்து பார்த்தால் இரும்பு உருளை சரியாக பத்து சென்.மீ. இருக்காது. சிலபல டெக்னிக்கல் காரணங்களால் அளவு சிறிது கூடலாம்; அல்லது குறையலாம். தவிர்க்க இயலாது. இதற்காக உற்பத்தி பிரிவில் என்ன செய்வார்கள் எனில், டாலரன்ஸ் லெவல் என ஒரு அளவை நிர்ணயிப்பார்கள். அதாவது இரும்பு உருளை அதிகபட்சமாக பதினோரு சென்.மீட்டரும், குறைந்தபட்சம் ஒன்பது சென்.மீட்டரும் இருக்கலாம். இவ்வாறு கடைசி தர பரிசோதனையில் இரும்பு உருளை ஒன்பது முதல் பதினோரு சென்.மீ. வரை எந்த அளவு இருந்தாலும் ஒகே

செய்து அனுப்பி விடுவார்கள். ( மேற்கண்ட அளவுகள் உதாரணத்திற்கு மட்டும் ). சுற்றளவு பதினொன்றுக்கு மேல் சென்றாலும், ஒன்பதுக்கு கீழ் சென்றாலும் குறைபாடுள்ள பொருள் என்று லேபில் ஒட்டி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்த நடைமுறைதான் காலங்காலமாக தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.டகுச்சி இந்த நடைமுறையில் ஒரு திருத்தத்தை கூறினார். தேவைப்படும் சரியான அளவிலிருந்து, தயாரிக்கப்படும் பொருளின் அளவு ஒவ்வொரு முறை விலகும்போதும் கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட விகிதம் பண இழப்பு ஏற்படுகிறது என்றார். குறைபாடுள்ள பொருட்களை மீண்டும் சரி செய்தல், ஊழியர்களுக்கு அவ்வேளையில் கொடுக்கப்படும் அதிக சம்பளம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் குறைபாடுள்ள பொருட்களை சர்வீஸ் செய்ய ஆகும் செலவு இவை கம்பெனியின் லாபத்தை பாதிக்கும் என்றார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு குறைபாடுள்ள பொருட்களால் உண்டாகும் பண இழப்பு, மன உளைச்சல் ஆகிய சமுதாய நல கருத்தையும் தன் திருத்தத்தில் சேர்த்து கூறினார்.ரோபஸ்ட்நஷ் என்ற முக்கிய தன்மையையும் டகுச்சி வலியுறுத்தினார். எந்தவித பொருளானாலும் , சாதனமானாலும் அதன் பயன்பாட்டில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். அதாவது எல்லாவித சூழ்நிலைகளிலும் அதன் இயக்கம் / பயன்பாடு ஓரளவு சரியாகவே இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு டூவீலர் சமதளங்களில் நன்றாக ஓடுகிறது. ஆனால் மலைகளில் ஏறும்போது முக்குகிறது; பள்ளங்களில் வேகமாக உழன்டு ஓடுகிறது. அப்படியானால் அந்தவகை டூவீலர் ஸ்திரத்தன்மை இல்லாதது. ஒரு சாக்லேட் முப்பது டிகிரிக்கு கீழ் கல்போல இறுகியும், அறுபது டிகிரிக்கு மேல் உருகியும் ஓடினால் அந்த சாக்லேட் ஸ்திரத்தன்மை இல்லாதது.இவ்வாறு பொருட்கள் / சாதனங்களில் உண்டாகும் குறைகளை கண்டறிந்து சரிசெய்வதற்கும், ஸ்திரத்தன்மையை ஒரேமாதிரி பேணுவதற்கும் டகுச்சி ஓர் எளிய உத்தியை கூறினார். அந்த உத்தியின் பெயர் பிஷ் போன் டயக்ரம். தமிழில் மீன்முள் வரைபடம். ஜப்பானிய பாஷையில் இஷிகவா டயக்ரம் என அழைக்கப் படுகிறது. இதில் என்ன செய்கிறார்கள் என்றால், ஓர் குறைபாட்டிற்கு காரணமான - கண்ணுக்கு புலனாகும் சாத்தியங்களை முதலில் கிடைமட்டமான ஒரு மேற்கோட்டின் இருபுறமும் கோடுகளை வரைந்து அதில் ஒவ்வன்றாக எழுதிவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு சாத்தியக்கூறையும் தனித்தனியாக ஆராய்ந்து உட்சாத்தியங்களை அந்தந்த கோட்டின் அருகில் பட்டியலிட வேண்டும். கடைசியில் பார்த்தால், நாம் ஆராயும் குறைபாட்டிற்கான காரணங்கள் எது எது என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்து விடும். ஒருமுறை ஒரு பொருளுக்கு / சாதனத்துக்கு மீன்முள் வரைபடம் வரைந்துவிட்டால் போதும். அப்பொருளின் பாகங்கள்- அவை வேலை செய்யும் விதம், மூலப்பொருட்கள் என அனைத்து விவரங்களும் நமக்கு அத்துப் படியாகி விடும்.நாம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கால திட்டம், ஓரிரு முடிவுகளில் எந்த முடிவெடுப்பது என்ற நிலை - என நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலும் இந்த மீன்முள் உத்தியை சிற்சில திருத்தங்களோடு பயன்படுத்திக் கொள்ளலாம் எனபது உபரித் தகவல்.

Wednesday, September 8, 2010

உனக்கும்....எனக்கும்...


உனக்கும் எனக்கும்
இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ...
இது உலகில் பிறர்க்கு
எய்தும் பொருத்தமோ...!

Sunday, September 5, 2010

ஈழத்து சித்தர்கள்...அருட்செல்வி தோழி, தனது சித்தர்கள் வலைப்பூவில் சித்தர்களைப் பற்றி விடாப்பிடியாக, அயராமல் எழுதி வருகிறார். தொடர்ந்து எழுதிவரும் இவரது பணி நிச்சயம் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. சித்தர்களின் வாழ்க்கை செய்திகள், சித்தர் பாடல்களுக்கான விளக்கங்கள், சித்த மருந்துகள், சித்தர்களின் காயகற்ப முறைகள், சித்தர்களைப் பற்றிய தனித்தகவல்கள் என தொடர்ந்து அளித்து வருகிறார்.


சித்தர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, சமூகத்திற்கோ சொந்தமானவர்கள் அல்லர்; உலகத்திற்கு பொதுவானவர்கள்; மக்கள் நலனையே இலக்காக கொண்டவர்கள்; உலகம் முழுவதும் பரவலாக பயணம் செய்து தொண்டாற்றியவர்கள்; ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது திருமூலர் வாக்கு.


தோழி சில நாட்களுக்கு முன் தன் வலைப்பூவில் ஈழத்து சித்தர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஈழத்து சித்தர்களின் பாடல்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
என்னிடம் ஈழ சித்தர்களின் பாடல்கள் ஏதும் இல்லை. ஆனால் அது சம்பந்தமான சில தகவல்கள் என்னிடம் உள்ளன. மொத்தமாக அவற்றை எழுதினால் பதிவு நீண்டு விடும் என்பதால் ஒன்றை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மீதியுள்ளவற்றை இடையிடையே எழுதி விடுகிறேன். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:


பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.


- போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).


ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).


பின்குறிப்பு: மேலே படத்தில் இருப்பவர் மஹா அவதார் பாபாஜி. பாபாஜி வட இந்தியா சென்று தவம் புரியுமுன் அவர் போகரை இலங்கையில் வைத்து சந்தித்த நிகழ்வைப் பற்றியும், அகத்தியரை குற்றால மலையில் சந்தித்த நிகழ்வைப் பற்றியும் அடுத்ததொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

Friday, September 3, 2010

உளவியல் பேரறிஞர் சிக்மன்ட் பிராய்டு.நான் இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும்போது எங்களுக்கு இண்டஸ்ட்ரியல் சைக்காலாஜி என்று ஒரு பேப்பர் இருந்தது. எனக்கு சிறுவயதிலிருந்தே சைக்காலாஜியில் ஒரு ஈர்ப்பும், ஆர்வமும் இருந்ததால் அந்த பாடத்தை சற்று முனைப்புடன் படித்தேன். மற்ற பாடங்களில் எல்லாம் சுமார்தான். ஒரு செமஸ்டர் தேர்வில் சிக்மன்ட் பிராய்டு கருத்துக்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக என இரண்டு மார்க் கேள்வி கேட்டிருந்தார்கள். அதாவது ஷார்ட் நோட்ஸ். எனக்கு பிராய்டு பற்றி நன்றாக தெரிந்திருந்ததால், ஒரு பக்கம் முழுவதும் எழுதித் தள்ளி விட்டேன். அப்பாடத்தின் ப்ரொபசர் என்னைக் கூப்பிட்டு ஒரு அதட்டு அதட்டி விட்டு, நான் எழுதிய பதிலுக்கு இரண்டு மார்க் மட்டும் போட்டு அனுப்பினார்.


உளவியல் சரித்திரத்தில் பேரறிஞர் என்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் சிக்மன்ட் பிராய்டு ஆவார். ஆனால் இக்காலத்தில் பலரை பேரறிஞர் என்று கூறிக்கொள்கிறார்கள். கனவுகள், கனவுகளுக்கும் காம உணர்வுக்கும் உள்ள தொடர்பு, குழந்தைப் பருவ அனுபவங்கள் எவ்வாறு ஒரு மனிதனின் ஆளுமை (பெர்சனாலிட்டி) உருவாக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன, ஆழ்மனம், எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ், ஓடிபஸ் காம்ப்ளெக்ஸ் - இவை போன்ற முற்றிலும் எதிர்பாராத உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். மனோதத்துவ உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆழ்மனதில் ஒடுக்கப்பட்ட உணர்வுகள், எண்ணங்கள், ஆசைகள், அனுபவங்கள் இவையே மனநோய்க்கு காரணமாக அமைகின்றன என்றும்,
ஆளுமை உருவாக்கத்தில் முக்கிய தாக்கத்தை உண்டாக்குகின்றன என்றும் கூறினார். ஆழ்மனதில் மண்டிக்கிடக்கும் உணர்வுகள் பெரும்பாலும் பாலியல் உணர்வு சார்ந்தவை என்றும், அவை பெரும்பாலும் கனவின் மூலம் வெளிப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப் படுகின்றன என்றும் கூறினார். பிராய்டு தன்னுடைய அனைத்து நூல்களிலும், பாலியல் உணர்வு என்ற சொல்லை உடலுறவு எனும் குறுகிய ஒரே பொருளில் மட்டும் கையாளவில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு அம்சமாகும்.


ஆழ்மனதில் அமுக்கப்பட்ட அல்லது தானாக படிந்து கிடக்கும் - நிறைவேறாத / முறையற்ற / அறநெறிக்கு முரணான / சமுதாய கோட்பாடுகளுக்கு எதிரான ஆசைகளையும், அனுபவங்களையும் ஒருசில உத்திகள் மூலம் மனிதமனத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து அவற்றை முறையாக பைசல் செய்வதன் மூலம் மனநோய்களை தீர்க்க முடியும் என்று கூறினார். கூறியதோடல்லாமல், குணப்படுத்தியும் காட்டினார். இந்த உத்திக்கு பெயர் சைக்கோ அனாலிசிஸ். தமிழில் உளப்பகுப்பாய்வு. பிராய்டு எந்த ஒரு கருத்தையோ, கொள்கை முடிவையோ மேலோட்டமாகவோ கூறவில்லை. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நோயாளிகளிடம் தன் தொடர் ஆய்வுகளின் முடிவில்தான் தன் கருத்தை வெளியிட்டார்.


அக்காலத்தில் வாழ்ந்த உளவியல் மற்றும் தத்துவ துறையை சேர்ந்த சிந்தனாவாதிகள் பிராய்டின் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்; முகம் சுளித்தனர்; கடும் எதிர்ப்பும் காட்டினர். ஆனால் பிராய்டு சற்றும் அசரவில்லை. தன் கொள்கைகளில் உறுதியாகவும், தான் கூறியவை உண்மைதான் என்பதிலும் தெளிவாக இருந்தார். ப்ராய்டை எதிர்த்தவர்கள் வீட்டிற்கு சென்று தனிமையில் பிராய்டு கூறியது உண்மையாகத்தான் இருக்குமோ என்று யோசிக்கவும் செய்தனர்.


உள்ளம் என்பதை எளிமையாக எல்லோரும் நினைத்த அக்காலத்தில், உள்ளம் என்பது ஓர் ஆழ்கடல் என்றும், உள்ளம் ஒரு சிக்கலான அமைப்பு என்றும், உள்ளக்கடலில் எழுந்து போராடும் உணர்வும் எண்ணிலடங்காதவை என்றும் தனது புரட்சிகரமான உண்மைகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உளவியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர் சிக்மன்ட் பிராய்டு. ஆண்டுகள் செல்ல செல்ல, பிராய்டின் கருத்துகளில் உள்ள உண்மைக் கூறுகளை சிந்தனையாளர்களும் அறிஞர்களும் புரிந்துகொள்ள துவங்கினர். தற்போது அவரின் கருத்துக்களும், ஆய்வு முறைகளும் ஏற்கப்பட்டு சிற்சில மாற்றங்களோடு நடைமுறை செய்யப்பட்டுள்ளன. எல்லா மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் சோதனை முறைகளிலும் சைக்கோ அனாலிசிஸ் முறையானது ஓரளவு மறைமுகமாக பயன்பட்டே வருகிறது. தசாவதாரம் படத்தில் ஒரு பாடலில், ' விஞ்ஞானி ப்ராய்டையும் புரிந்து கொண்டாய்.....' என ஒரு வரியை வைரமுத்து எழுதியிருக்கிறார்.


மதிப்புமிக்க சிக்மன்ட் பிராய்டின் கருத்துக்கள், ஆய்வு முறைகள், கொள்கைகள் இவற்றை நான் விளங்கிக்கொண்ட வரையில் - சிறுசிறு கட்டுரைகளாக அவ்வப்போது எழுதி வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். ஏனெனில், ஒருவர் பிராய்டின் உளவியல் கருத்துக்களை தெளிவாக புரிந்துகொண்டால், அவ்வறிவு அவருக்கு தன் மனதை தானே செப்பனிட்டு - மனநலமும் உடல் நலமும் பெற உதவும். மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வைப் பெற உதவும். சமுதாயமும் ஓரளவு அமைதியாகும். தனது கடுமையான உழைப்பு, ஆய்வு, அர்பணிப்பு இவற்றின் மூலம் மனிதமனதின் ரகசியங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பேரறிஞர் சிக்மன்ட் ப்ராய்டிற்கு மனித சமுதாயம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.Wednesday, September 1, 2010

முன்பே வா...என் அன்பே வா...
ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டுக்
கவிஞன் ஆனேன்...!- தபூ சங்கர்.

Monday, August 30, 2010

எம்பெட்டட் சிஸ்டம்ஸ் - மிகச் சுருக்கமான அறிமுகம்.ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்கள் நண்பர்கள் குழாமில் ஒருவரான பாரதி எம்.டக் (எம்பெட்டட் சிஸ்டம்ஸ்) படிப்பை முடித்துவிட்டு விப்ரோவில் கைநிறைய சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் அவ்வளவு பிரபலமாகவில்லை ஆனால் தற்போது எம்.இ / எம்.டக் கவுன்சிலிங்கில் முதலில் சீட் தீர்வது எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தானாம். அந்த அளவு எ. சிஸ்டமின் பயன்பாடுகள் (அப்ளிகேஷன்ஸ்) விசாலமாகி வருகின்றன. அதனால் இப்படிப்பை முடிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும், படிப்பதற்கு போட்டியும் அதிகரித்துள்ளது.


எலெக்ட்ரானிக்ஸ் இயலின் சமீபத்திய முன்னேற்றங்களில் ஒன்றுதான், வசீகரமான இந்த எம்பெட்டட் சிஸ்டம்ஸ். எலெக்ட்ரானிக்ஸ் துறை முன்னேற்றம் அடைகிறது என்றால் அதன் பொருள், சிப்புகளும் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களும் சிறியதாகவும், பயன்கள் அதிகமாகவும்
ஆகி வருகின்றன என்று பொருளாகும். விலைகளும் கணிசமாக குறைகிறது.


எம்பெட்டட் சிஸ்டம்ஸ் என்பதை பொதுவாக கம்ப்யூட்டர் என்கிறார்கள். ஆனால் இவை பெர்சனல் கம்ப்யுட்டர் போன்றவை அல்ல. ஒரு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யுட்டரை கொண்டு நாம் பற்பல காரியங்களை செய்யலாம். ஒரு விலங்கியல் கட்டுரையை டவுன்லோட் செய்து பார்க்கலாம்; தெரியாத ஒரு சொல்லுக்கு பொருள் காணலாம்; அனுஷ்கா அழகுப் படங்களை கண்டு களிக்கலாம். ஆனால் எம்பெட்டட் சிஸ்டம் என்ற கம்ப்யுட்டர்கள் ஏற்கனவே இடப்பட்ட கட்டளைகளை (ப்ரீ-ப்ரொக்ராம்டு) கொண்டு ஒருசில குறிப்பிட்ட வேலைகளை மட்டும் திரும்ப,திரும்ப செய்யும் திறன் உள்ளவை. ஒருமுறை ப்ரோக்ராம் செய்ததை மாற்றுவது மிகக் கடினம்.


ஒரு மைக்ரோப்ராசசர் அல்லது மைக்ரோ கண்ட்ரோலர் இவற்றில் ஒன்றை தகுந்த சாப்ட்வேர் மூலம் ப்ரோக்ராம் செய்து எலெக்ட்ரிகல் உபகரணம் / எதாவது ஒரு உபகரணத்தில் பதித்து விடுகிறார்கள். அதாவது எம்பெட் செய்கிறார்கள். உதாரணமாக வாஷிங் மெஷின், டிஜிட்டல் கேமெரா, கார்கள் இது போன்ற சாதனங்களில் உள்ளே பொருத்தி விடுகிறார்கள். வெளியே தெரியாது. ஒரு தேர்ந்த வல்லுநர் மட்டுமே எம்பெட்டட் சிஸ்டம் மூலம் ஒரு உபகரணம் இயங்குகிறது எனக் கண்டறிய முடியும்.


எம்பெட்டட் சிஸ்டமில் ரியல் டைம் அப்ளிகேஷன்ஸ் என்று ஒரு விஷயம்
சொல்கிறார்கள். இதற்கு ஒரு அருமையான உதாரணம், ஒரு கார் இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். திடீரென ஒரு பாப்பா குறுக்கே வந்துவிட்டது. சடாரென ப்ரேக் போட்டால் வண்டி தலைகுப்புற கவிழ்ந்து விடும். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில், எம்பெட் சிஸ்டம்கள் - கார் இத்தனை கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும்போது ப்ரேக் போட்டால்- என்ற ப்ரோக்ராம் வரிகளை நிஜத்திற்கு கொண்டு வந்து (ரியல் டைம்) செயல்படுத்தி, ஒருநொடியில் சீட்டின் முன்புறம் ஒரு பெரிய பலூனை விடுவித்து முன்சீட்டில் உட்கார்ந்திருப்பவர்களை காயம் படாமல் காப்பாற்றுகிறது. எம்பெட் சிஸ்டம்களில் ஹார்ட் டிஸ்க் போன்றவை இல்லாததால், உள்ளீடுகள் (இன்புட்) நொடிக்கும் குறைவான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.


விரைவாக செயல்படுதல், பயன்பாட்டில் நம்பகத்தன்மை (ரிலயபிளிட்டி) போன்றவை எம்பெட் சிஸ்டமின் தனிச்சிறப்புகள். மைக்ரோ கண்ட்ரோலர் உள்ளேயே இன்புட்/அவுட்புட் டிவைசெஸ், ரோம், சி.பி.யு. இத்யாதிகள் அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளதால், மைக்ரோ கண்ட்ரோலர் ஓரளவு சிறிய கருவிகளிலும், மைக்ரோ பிராசசர்கள் தொழிற்சாலை அளவில் இயங்கும் சாதனங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.


எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளில் இருந்தே தெளிவாக புரிந்துகொள்ள முடியும். வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன், டிஜிட்டல் கேமரா, வாட்சுகள், கார்கள், போக்குவரத்து சிக்னல்கள், நியுக்ளியர் பவர் ஸ்டேஷன்கள் என எம்பெட்டட் சிஸ்டமின் பயன்பாடுகள் நீள்கிறது. எதிர்காலத்தில் ஏறக்குறைய நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் சிலிக்கான் சிப்புகளை பதித்து எம்பெடட் சிஸ்டம் மூலம் இயங்க வைத்து விடுவார்கள் என நினைக்கிறேன். மனிதனில் பதிக்காமல் விட்டால் சரி.

Sunday, August 29, 2010

மனதை வருடும் கவிதை...சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
தன் வாழ்வை
எழுதிச் செல்கிறது...!- நகுலன்.

இதுபோன்ற மனதை வருடும் கவிதையை எங்காவது படித்திருக்கிறீர்களா?
மனதில் ஒரு இனம் புரியாத உணர்வை உண்டாக்கும் அபூர்வக்கவிதை இது.

Saturday, August 28, 2010

தெய்வீக காதல் எது?

காதல் தெய்வீகமானது
என்பது உண்மைதான்.
ஆனால் எந்தக் காதல்
தெய்வீகமானது
என்பதுதான் கேள்வி...!


- கவியரசர் கண்ணதாசன்.


சேரன் இந்தக் கவிதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் ஆட்டோகிராப் படத்தை எடுத்தார்.

Friday, August 27, 2010

மறதியில் கரைந்த ஒரு மகத்தான பாடகன் !

உயிர்மை மாத இதழை தவறாமல் வாங்கிவிடுவேன். காரணம், சாரு நிவேதிதா அவ்வப்போது வெளியாகும் தமிழ், ஹாலிவுட் சினிமாக்களை போட்டுத்தாக்குவார். தவிர, திரு. ஷாஜி என்பவர் திரையிசை பாடல்களையும், பாடகர்களையும் விமர்சனம் செய்து கட்டுரை எழுதுவார். ஷாஜி ஒரு சிறந்த இசை விமர்சகர் ஆவார். மிகத் திறமையாகவும், நுணுக்கமாகவும், நடுநிலைமையோடும், அனுபவ அறிவோடும் ஆய்ந்து கட்டுரை எழுதுபவர். கேரளத்துக்காரர்.
ஆகஸ்ட் மாத இதழை வாங்கியவுடன் அதில், ' மலேசியா வாசுதேவன் - மறதியில் கரைந்த மகத்தான பாடகன் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
எஸ்.பி.பி. தான் எப்போதும் என் மனங்கவர்ந்த பாடகர். குழைவான குரல், நடிகர்களுக்கேற்றபடி குரலை மாற்றிப்பாடும் லாவகம், பாடப்படும் சூழ்நிலையை அப்படியே வெளிப்படுத்தும் குரல் பாவம், எந்தவித பாடலையும் பாடும் திறமை, பாடலின் இடையிடையே எஸ்.பி.பி. வெளிப்படுத்தும் சிரிப்புகள் முனகல்கள் இது போன்ற காரணங்களால் எப்போதும் நான் விரும்பி ரசிக்கும் குரல் எஸ்.பி.பி. யின் குரல்தான்.
காமரசம் சொட்ட சொட்ட ஒலிக்கும் பாடல்களில் அவர் கொடுக்கும் சப்தங்கள் என் வயதையொத்த நண்பர்களிடம் மிகப்பிரபலமானவை.
உதாரணமாக, காதலர் தினம் படத்தில் 'காதலெனும் தேர்வெழுதி...' என்ற பாடலை குணாலுக்கு கூட பொருந்தும்படி பாடியிருப்பார். மேலும், சத்யா படத்தில் வரும், 'வளையோசை...' என்ற பாடலிலும், மீரா படத்தில் ' ஓ பட்டர்பிளை....' என்ற இருபாடல்களிலும் உலகத்தரம் வாய்ந்த லதாமங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரின் குரல்களுக்கும் ஈடு கொடுத்து, தன் குரலின் தரமுயர்த்தி மிகுந்த முயற்சியோடு பாடியிருப்பார்.
எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு முழுமையான பாடகர் எஸ்.பி.பி. அவர்கள்.
இப்படிப்பட்ட மனநிலையில், மலேசியா வாசுதேவன் மறதியில் கரைந்த மகத்தான பாடகன் என்ற தலைப்பை பார்த்து சற்று திடுக்கிட்டேன். ம.வாசுதேவன் ஒரு சிறந்த பாடகர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஏறக்குறைய பத்து பக்க அளவு எழுதுமளவு வாசுதேவன் பாடல்களில் என்ன இருக்கிறது என்ற சிந்தனையில் அக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க என் விழிகள் வியப்பிலும், திகைப்பிலும் விரிந்தே விட்டன. படித்து முடித்தவுடன் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஷாஜி, ஏராளமான பாடல்களை உதாரணம் காட்டி , ம.வாசுதேவன் ஒவ்வொரு பாடலையும் எவ்வாறு துடிப்புடனும், உயிர்ப்புடனும், மேதைமையுடனும் பாடியுள்ளார் என்பதை அழகாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு உதாரணமும் எனக்கு சவாலாகவே தோன்றியது. நான் பாடகர்களை பற்றி முன்பு கொண்டிருந்த கொள்கைகள் அனைத்தும் உடைந்தே போயின போல தோன்றியது. அக்கட்டுரையை படித்தவுடன் என் குறுகிய ரசிக மனப்பான்மை எனக்கே நன்கு விளங்கியது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் ஷாஜியின் வரிகளிலேயே அப்படியே தருகிறேன். " சங்கர்-கணேஷ் இசையமைப்பில் வெளிவந்த மலேசியா வாசுதேவன் பாடிய ' பட்டுவண்ண ரோசாவாம்...' (கன்னிப்பருவத்திலே) பாடலையும், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடிய ' உச்சி வகுந்தெடுத்து...' என்ற இரண்டு பாடல்களையும் உன்னிப்பாக கேட்டுப் பாருங்கள். இரண்டும் ஏறக்குறைய ஒரே கிராமிய ராகத்தில் அமைந்தும், ஒரேவித ஏக்க உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் -
பாடும் பா முறையைக்கொண்டு எந்தப்பாடல் சிறப்பாக பாடப்பட்டுள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் " என்கிறார் ஷாஜி. நான் இந்த வரிகளை படித்தவுடன் ஆஹா....விடை தெரிந்துவிட்டது. என் அம்மாவிடமும், அப்பாவிடமும் இரண்டில் எது சிறந்த பாடல் என்று கேட்டேன். இருவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். நீங்களும் வேண்டுமானால் கேட்டு பாருங்கள்....!
ஷாஜி எழுதிய மலேசியா வாசுதேவனை பற்றிய அந்த அருமையான, அபூர்வ கட்டுரை உயிர்மை இணையதளத்தின் முகப்பில் தற்போது படிக்க கிடைக்கிறது. அனைவரும் கட்டாயம் படித்து விடுங்கள்...!
( நன்றி: உயிர்மை மாத இதழ்.)


Thursday, August 26, 2010

புலன் கடந்த அனுபவம்...ஈ.எஸ்.பி.


ஈ.எஸ்.பி. என்பது ஒரு ஆற்றலோ, கலையோ அல்ல. மாறாக, மனிதமனத்தில் இயற்கையாக நடக்கும் தொடர்நிகழ்ச்சியாகும். இப்பரந்த பிரபஞ்சவெளியில் உலாவும் கோடான கோடி கோள்களில் நம் பூமியும் ஒன்று. பூமியில் வசிக்கும் அனைத்து ஜீவேராசிகளின் மனங்களுக்கும் இடையே ஒரு சூட்சுமமான, பரஸ்பர தொடர்பு (அதாவது கம்யுனிகேஷன்) எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. திடீரென, அனுபவமாக நமக்கு அந்த எண்ணத் தொடர்பு புலனாகும்போது மிகவும் வியப்பளிக்கிறது.
டெலிபதி- தொலைவில் நடப்பதை உணர்தல், பொருள்களை கண்ணால் பார்த்தே நகட்டுவது/ ஸ்பூனை வளைப்பது - இவற்றை சைக்கோ கைனசிஸ் என்கிறார்கள். இவ்வித செயல்களும் ஈ.எஸ்.பி. யில் சேர்த்திதான்.
ஒருவர் வரப்போவதை சில நிமிட அல்லது நொடிகளுக்கு முன் அறிதல், நடக்கபோவதை முன்கூட்டியே அறிதல், ஒருவர் ஒன்று சொல்ல நினைப்பார் அருகிலுள்ள நண்பர் உடனே அதை கூறிவிடுவார், மனதில் ஒரு நண்பரின் எண்ணம் தோன்றும் உடனே அவர் போன் செய்வார் - இவையெல்லாம் ஈ.எஸ்பி.க்கு உதாரணங்களாகும். இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்தே இருக்கும்.
தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களுக்கு மனதின் அலைவேகம் குறைந்து மன அலை நுண்மையாகி மனதின் ஏற்பு திறன் அதிகமாகிறது.
அதேபோன்று ஒரு விடயத்தில் ஆழ்ந்து மனதை செலுத்தும்போது மன அலை நுண்மையாகி அப்போதும் மன ஏற்பு திறன் கூடுகிறது. இவ்விரண்டு சாத்தியங்களும்தான் பு.க. அனுபவத்திற்கு காரணங்களாக அமைகின்றன. ஆனால் ஈ.எஸ்.பி. ஆற்றல் கைவரவேண்டும் என நினைத்து தியானம் செய்தால் அது நடக்காது. அந்த எண்ணமே தடையாக அமைந்துவிடும்.
நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருமுறை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பும்போது என்கூட படிக்கும் சுபஸ்ரீ பஸ்ஸ்டாண்டில் இருப்பாள் என்ற எண்ணம் திடீரென பளிச்சிட்டது. அடுத்த பத்து நொடிகளில் பஸ் அவளை கிராஸ் செய்ததது. மிகுந்த வியப்பில் அவளுக்கு பஸ்ஸில் இருந்தபடியே டாட்டா காட்டினேன். என் அத்தை பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற ஆழ்ந்த எண்ணமும், விருப்பமும் பலவருடங்களுக்கு முன் எனக்கு இருந்தது. அந்த சமயத்தில், ஒரே வருடத்தில் ஐந்து முறை அவள் வருவதை முன்கூட்டியே அறிந்திருக்கிறேன். இதுபோன்ற ஏராளமான ஈ.எஸ்.பி. சம்பவங்கள் எனக்கு நண்பர்களுடனும் நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன. ஒருமுறை மனதில் பளிச்சிட்ட ஒருபாடல், அடுத்த சிலநொடிகளில் அப்படியே எப்.எம். ரேடியோவில் ஒலித்தது. இவைகளை பெருமைக்காக கூறவில்லை. அனைவருக்கும் இதேபோல் நடந்து கொண்டுதான் இருக்கும். நான் அவ்வப்போது தியானம் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Wednesday, August 25, 2010

புலன் கடந்த அனுபவம்...ஈ.எஸ்.பி.

நீண்ட பதிவாகையால் தொடர்ச்சியாக டைப் அடிக்க முடியவில்லை. இப்பதிவு மேலும் தொடர்கிறது....இன்னும் சில ஆச்சரியமூட்டும் தகவல்களுடன்.

லிங்கேஸ்வரன்.

புலன் கடந்த அனுபவம்... ஈ.எஸ்.பி.


ஈ.எஸ்.பி. என்பது அனேக பேரால் விரும்பி படிக்கப்படும் ஒரு தலைப்பாகும். ஒரு புதிரான, சுவாரசியமான, இன்னமும் முழுமையாக நிரூபிக்கபடாத, அறிவியல் ஏற்றுக்கொள்ளாத இயல் இது. ஈ.எஸ்.பி. என்றால் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன். தமிழில் புலன் கடந்த அனுபவம் என மொழிபெயர்க்கலாம். பிடிவாதமான தமிழ் ஆர்வலர்களுக்கு புலன் கடந்த கண்ணோட்டம். மறைந்த தமிழ் எழுத்தாளர் பி.சி. கணேசன் என்பவர் இது பற்றிய சில நல்ல புத்தகங்களை எழுதியுள்ளார். ஈ.எஸ்.பி.யானது ஆன்மீகத்திலும் சேராமல், சைக்காலஜியிலும் சேராமல் கடைசியில் நம்ப முடியாத கேஸ்கள் சேர்க்கப்படும் பாரா - சைக்காலஜியில் சேர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் ஈ.எஸ்.பி. என்பது மிக எளிமையான ஒன்றேயாகும். நமது உடம்பில் ஐந்து புலன்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல். இவற்றின் மூலம்
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவை மற்றும் ஸ்பரிச உணர்வுகளை உணர்கிறோம். பொதுவாக நாம் ஒரு ஒரு புலனை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். அல்லது ஒரே நேரத்தில் ஓரிரு புலன்களை இயக்குகிறோம்; உணர்வை பெறுகிறோம். இவ்வாறு புலன்களை இயக்கும்போது அல்லது புலனில் தூண்டுதல் (அதாவது வெளிச்சம், சத்தம், வாசனை, தொடல், சுவை) பெறும்போதும் - அவ்வாறு இயக்குவதற்கு தக்கவாறு, அந்தந்த உணர்வுகளுக்கு தக்கவாறு மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் அனுபவங்களாக பதிவாகின்றன. இதுவே ' புலன் அனுபவம் '.
அதாவது ஆங்கிலத்தில் சென்சரி பெர்செப்ஷன்.

மேற்கண்டவாறு அல்லாமல், புலன்கள் இயக்காமலோ-புலன்கள் தூண்டல் இல்லாமலோ நேரடியாக மனதில் எண்ணங்கள் தோன்றுவதே 'புலன் கடந்த அனுபவமாகும்'. ஆங்கிலத்தில் ஈ.எஸ்.பி. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், ஏற்கனவே நமக்குள் அனுபவங்களாக பதிந்த கற்பனையான ஆசைகள், அல்ப ஆசைகள் போன்றவையும் தானாகவே எழுச்சி பெற்று (உடல் இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதால்) மனதில் எண்ணங்களாக தோன்றும். அவைகளை புலன் கடந்த அனுபவம் என நினைத்துவிட கூடாது. நுட்பமாக, நடுநிலைமையோடு கவனித்தால்தான் எது ஈ.எஸ்.பி., எது அல்ப ஆசை என புரியும்.

ஈ.எஸ்.பி. ஆற்றலை எப்படி பெறுவது அல்லது வளர்த்து கொள்வது என்பது
பற்றி ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் யாரும் நம்பிவிட வேண்டாம். ஈ.எஸ்.பி. என்பது பயிற்சி செய்து பெற வேண்டிய கலையோ, ஆற்றலோ அல்ல...

Tuesday, August 24, 2010

கல்லூரி நாட்களும், ஆனந்த விகடனும்...


கல்லூரியில் படித்த நான்கு வருடங்களும் மறக்க முடியாதவை. இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் படிக்கிறோம் என்ற பெருமை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. அவ்வப்போது பாடபுத்தகங்களையும், அடிக்கடி ஆனந்தவிகடனையும் படிப்போம். ஆனந்தவிகடன் எங்களது ஆதர்சன பத்திரிகை. எட்டு வருடங்களுக்கு முன் அப்போது விகடனில் முத்திரை கதை, கவிதை, கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. தவறாமல் வாங்கிப் படிப்போம்.

இசையில் இளையராஜா சிறந்தவரா? ரகுமான் சிறந்தவரா? என பெரிய விவாதமே எங்களுக்குள் இரு அணியாக நடக்கும். அப்படி இப்படி என போராடி இளையராஜாவை ஜெயிக்க வைத்துவிடுவோம். கமல்ஹாசனை பற்றி பேசும்போது மட்டும் எல்லோரும் ஒரே அணிதான். தமிழ் வெறியர்களாக சிலர் காலேஜில் அலைந்தார்கள். அதில் நானும் ஒருவன். அழகான பெண்கள் எங்களை கடக்கும்போது, அவர்களுக்கு கேட்காதபடி மெல்ல விசிலடிப்போம். ஒரு மெகா சைஸ் ஆடிட்டோரியத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். பழைய நோட்டில் பேப்பர்களை கிழித்து ராக்கெட் விடுவோம். ஒருமுறை வேகமாக விட்டதில் பெண் நடுவர் மீதே ராக்கெட் பாய்ந்து விட்டது. யாருக்காவது பிறந்தநாள் வந்தால், மற்ற எல்லா பசங்களும் சேர்ந்து 'பம்ஸ்' கொடுப்பார்கள். பம்ஸ் என்றால் பப்சோ, ஸ்வீட்டோ, காரமோ அல்ல. பிறந்தநாள் கொண்டாடுபவனின் இரண்டு கைகளை இரண்டு பேரும், இரண்டு கால்களை இரண்டு பேரும் பிடித்து தூக்கிக் கொள்வார்கள். மற்றவர்கள் பின்புறத்தில் புட்பாலை உதைப்பது போல உதைத்து துவைத்து விடுவார்கள். பிறந்தநாள் நெருங்கினாலே பீதியாக இருக்கும். அப்புறம்தான் வாழ்த்து, கேக், தண்ணீர் எல்லாம். இவ்வளவு உற்சாகங்களுக்கிடையிலும், கேம்பஸ் இன்டர்வியுவில் வேலை கிடைக்க வேண்டுமென்ற கவலை எல்லோருக்கும் ஞாபகத்தில் இருந்தது.

திரும்பி வராத இனிய நாட்கள் அவை. அதுபோன்ற ஒரு நன்னாளில் எங்கள் நண்பர் மாரியப்பன் ஆனந்தவிகடன் முத்திரை கவிதை போட்டிக்கு ஒரு கவிதை எழுதியனுப்பினார். கவிதையும் தேர்வாகி விகடனில் வெளிவந்தது.
பரிசு பணமும் மணியார்டர் அனுப்பினார்கள். நான்கே வரிகளை கொண்ட அக்கவிதையை மாரியப்பன் எப்படி எழுதினார் என்று எனக்கு இன்றும் வியப்பாக இருக்கிறது. அந்த கவிதையை எழுதும் போது அவருக்கு வயது இருபத்தி ஒன்றுதான். சொல்லாத பல அர்த்தங்களை சொல்லும் அந்த கவிதையை நீங்களும் படித்து பாருங்கள்.

டைவர்ஸ்
உன்னை நானும்
என்னை நீயும்
முழுமையாக
புரிந்துகொண்ட போது.

Sunday, August 22, 2010

தமிழ்மொழி 'ழ'-வின் தனிச்சிறப்பு...


நண்பர் ம.தி.சுதா ஒரு கட்டுரையில் தமிழ் 'ழ'- வை பற்றி எழுதியிருந்தார். தமிழ், மலையாளம், மண்டரின் ஆகிய மொழிகளில் மட்டும்தான் ழ உள்ளது என எழுதியிருந்தார். குஜராத்தியிலும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிறமொழி 'ழ' க்களை பற்றி எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை.
தமிழ் 'ழ' எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதின் பின்புலத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

'ழ' வை பற்றி அறியும் முன் நம் முன்னோர்களாகிய சித்தர்களின் ஜீவசமாதி என்ற தத்துவத்தை சற்று அறிந்து கொண்டால்தான் 'ழ' -வின் மகத்துவம் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

ஜீவசமாதி: ஜீவசமாதியை பற்றி சுருக்கமாகவே இங்கு கூறுகிறேன். விரிக்கின் பெருகும் ஆதலால், மற்றொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். முற்காலத்தில் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நம் சித்தர்கள் ஜீவசமாதி அடைவதற்காக 'லம்பிகா யோகம்' என்ற முறையை கையாண்டார்கள். இந்த யோகா முறையை அவர்கள் தவளை, உடும்பு, ஓணான் முதலிய விலங்குகளிலிருந்து கற்றுக்கொண்டார்கள். அதாவது என்னவென்றால், சித்தர்கள் நாவை மடக்கி மேல் அன்னத்தில் ஓட்ட வைத்துக்கொண்டு, அப்படியே தவத்தில் அமர்ந்து விடுவார்கள். அதேசமயத்தில் ரகசியமான ஒருவித பயிற்சியை செய்வார்கள். அதைப்பற்றி இங்கு வெளிப்படையாக சொல்ல இயலாது. இவ்வாறு சிறிது சிறிதாக, மணிக்கணக்கில் பயிற்சியை கூட்டிக்கொண்டே செல்வார்கள். அப்போது என்ன ஆகுமெனில், மனிதனின் விந்துவில் உள்ள சாரமானது, பதங்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி
மூளைக்கு சென்று சேர்ந்து கொண்டே இருக்கும். கவனிக்கவும், மேலே செல்வது விந்து அல்ல. விந்துவின் சாரம்தான். இதனை எளிதாக காந்தசக்தி என அழைக்கலாம். தத்துவத்தில் இது ஓஜஸ் அல்லது தேஜஸ் எனப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து பலநாட்கள் செய்து வரும்போது, உடம்பானது சிறிது சிறிதாக மரத்துபோய், உணர்வற்றுக் கொண்டே வரும். இது கோமா நிலை போன்றது. அதாவது உடலில் உயிர் இருக்கும், உடல் இயக்கங்கள் எல்லாம் நுண்ணியதாக நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் உணர்வு இருக்காது; மனம் செயல்படாது. சீடர்கள் அப்படியே உடலை தூக்கிக்கொண்டு சென்று ஏற்கனவே தயாராக உள்ள குழியில் வைத்து மூடிவிடுவார்கள். இதுதான் ஜீவசமாதி.

தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்? நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம். மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக, விந்து சுரப்பியில் உள்ள விந்துவின் சாரமானது எப்போதும் சிறிதளவு பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம் வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம் கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ் சக்தியானது சட்டென்று ஒருவினாடியில் அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ் சக்தியானது மூளைக்கு நலமும், வளமும், அமைதியும், சீர்மையும் அளிக்கிறது. இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும். 'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும் ஏராளாமான பலன்கள் கிடைக்கும்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே மெய்ப்பொருள் சிந்தனை மிகுந்திருந்தது. இதற்க்கு சரியான உதாரணம், எந்த தமிழருடைய ஆண் பெண்ணுடைய பெயர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்...அவற்றை பிரித்துப்பார்த்தால் கடைசியில் தெய்வத்தின் பெயராகவே முடியும் (தொண்ணூறு சதவீதம்). மேலும் தமிழர்களின் பண்பாடும், இறை உணர்வும் ஒன்றாக கலந்தே இருந்தன. இதை பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, தமிழில் 'ழ' எனும் எழுத்தை மேற்கண்ட பின்புலத்தில்தான் தமிழர்களோ, தமிழ் சித்தர்களோ உருவாக்கியிருப்பார்கள் என்பது என் துணிபு.

எச்சரிக்கை: மேற்கண்ட ஜீவசமாதி முறையை யாரும் தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் உடலும், மனதும் பாதிக்கப்படுவது நிச்சயம்; பேராபத்து.Saturday, August 21, 2010

தசாவதாரம்...


தசாவதாரம் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் முடியப்போகும் நிலையில் நான் இக்கட்டுரையை எழுதினாலும், இது விமர்சனக்கட்டுரை அல்ல. ஏற்கனவே யோசித்து வைத்ததை இப்போது எழுதுகிறேன்.

தசாவதாரம் படம் பார்த்தவுடன் சிலர் சொதப்பல் கதை என்றார்கள்; சிலர் ஆஹா அற்புதம் என்றார்கள்; சிலர் சர்க்கசுக்கு சென்று வந்ததுபோல் இருந்தது என்றார்கள்; தற்போது பிரபலமாக இருக்கும் எழுத்தாளர் ஒருவர் தசாவதாரத்தை குப்பை என்றார். எனக்கு முதல்முறை பார்த்தபோது தலை வலித்தது. இரண்டாவது தடவை பார்த்த பின் தெளிவாக விளங்கியது. மூன்றாவது தடவை பார்த்தபின் மிகத்தெளிவாக விளங்கியது.

தசாவதாரத்தை படம் என்று சொல்லுவதை விட, கமல்ஹாசன் தன் மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த கேள்விகளை - ஓர் அற்புதமான திரைக்கதையாக்கி நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் என்று சொல்லுவதே சரி. சிந்தனை செறிந்த அக்கேள்விகளுக்கான விடைதேடும் வேலையை கமல் பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறார். புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அக்கேள்விகளை நாலைந்து கேள்விகளாக பிரித்து கீழே தருகிறேன்.

கேள்வி ஒன்று: கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்றால், ஆபத்து சமயத்தில் கூப்பிட்ட குரலுக்கு அவர் ஏன் வரமாட்டேன்கிறார்? கூப்பிட்ட குரலுக்கு மனிதர்கள்தானே ஓடி வருகிறார்கள்.
அப்படியென்றால், மனிதன்தான் கடவுளா?

கேள்வி இரண்டு: கடவுள் என்று ஒருவர் இல்லை....எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்திதான் இருக்கிறது என்றால் அந்த சக்தி எங்கே இருக்கிறது?
எப்படி செயல்படுகிறது? ஒன்றும் தென்படவில்லையே? இப்போதும் மனிதர்கள்தானே செயல்படுகிறார்கள். அப்படியென்றால், மனிதசக்திதான் அந்த சக்தியா?

கேள்வி மூன்று: ஒரு மனிதன் செய்யும் காரியம் சிறிது காலத்திற்கு பின் ஒரு விளைவாக வருகிறது. இதேபோல் கோடி மனிதர்கள், கோடி காரியங்கள், கோடி விளைவுகள். ஏராளமான மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த ' காரியங்கள்-காலம்-விளைவுகள் ' என்ற சங்கிலித்தொடர் ஒரு கோர்வையாக, பின்னிபினைந்து, ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த சிக்கலான சம்பவக் கோர்வைகளில் கூட ஒரு ஒழுங்கமைப்பு தெரிகிறதே? ( கமல் இதை படத்தில் கேயாஸ் தியரி என்கிறார்.)
இந்த ஒழுங்கமைப்பை நிர்வகிப்பது யார்?

கேள்வி நான்கு: எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளோ / சக்தியோ / ஒழுங்கமைப்போ - எதுவானாலும், ஒருபுறம் மனிதர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக்கொண்டும் - இன்னொருபுறம் நன்றாக வாழ்ந்து கொண்டுந்தான் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம், யார் பொறுப்பு?

கேள்வி ஐந்து: இல்லை, எல்லா சம்பவங்களும் தற்செயலாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவா?

இவ்வாறு தீவிரமான் சிந்தனையை தூண்டும் கேள்விகளை தன் படத்தின் மூலம் பார்வையாளர்கள் முன் வைக்கிறார் கமல்ஹாசன். தசாவதாரம் படத்தின் மூலம் கமல் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பது தெரிகிறது. மேற்கூறப்பட்டுள்ள கேள்விகளையும், கேள்விக்கான பதில்களையும் ஓரளவு யோசித்து விட்டு படம் பார்த்தால்- கமல்ஹாசன் தசாவதாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதும், படத்தில் அவருடைய அசாத்திய உழைப்பும், பத்து கதாபாத்திரங்களைக் கொண்டு கமல் திரைக்கதையை கோர்த்த விதமும், கதையின் ஊடாக வசனங்களில் வரும் ரசிக்கத்தக்க ஹாஸ்ய உணர்வும் - தெளிவாக விளங்கும்.

தசாவதாரம் படம் ஆஸ்கார் விருதுக்கே தகுதியானதுதான். ஆனால் கொடுக்க மாட்டார்கள். தெய்வ, அதெய்வ நம்பிக்கைகளை பாரபட்சமில்லாமல், ஒருசேர அலசி ஆராயும் இப்படத்தை நமது தேசிய விருது கமிட்டியே புரிந்துகொள்வது கடினம். பின்பு எப்படி ஆஸ்கார் கமிட்டி புரிந்து கொள்ளும்? எனவே நம்முடைய உலக நாயகனுக்கு, ரசிகர்களின் ஆஸ்காரே போதும்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை போன்ற ஒருசில குறைகள் இருந்தாலும், கமல்ஹாசனின் தசாவதாரம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்று துணிந்து சொல்லலாம்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...